ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

WTO buries Doha Round: Another rupture in the post-war order

உலக வர்த்தக அமைப்பு தோஹா சுற்று பேச்சுவார்த்தைகளைக் கைவிடுகிறது: போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் மற்றுமொரு முறிவு

Nick Beams
22 December 2015

உலக வர்த்தக அமைப்பு (WTO) கென்யாவின் நைரோபியில் அதன் வாரயிறுதி கூட்டத்தில் தோஹா சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் என்றழைக்கப்பட்டதைக் கைவிட எடுத்த முடிவு, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கமைப்பின் சிதைவில் மற்றொரு படியாகும்.

ஒரு நீண்டகால தொடர்ச்சியான பேரம்பேசல்களின் விளைவாக வேளாண் ஏற்றுமதிகள் மீதான ஏற்றுமதி மானியங்களை நிறுத்த அக்கூட்டம் முடிவெடுத்திருந்ததாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற விவசாய-ஏற்றுமதி சார்ந்த நாடுகளது பத்திரிகைகளில் உயர்த்திக்காட்டப்பட்டு வந்த நிலையில், தோஹா தீர்மானத்தை முறைப்படி அறிவிப்பதில்லை என்ற முடிவே மிக முக்கிய இறுதிவிளைவாக இருந்தது.

“வளர்ச்சிக்கான" பேச்சுவார்த்தைகள் என்ற கணிசமான ஆரவாரத்திற்கு இடையே, 2001 இல் தொடங்கிய தோஹா சுற்று பேச்சுவார்த்தைகள், ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இழுபறியில் முடங்கி இருந்தது. ஆனால் அது, அதை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவமான முடிவிலிருந்து திசைதிரும்பிவிடவில்லை. அது அதில் பங்குபற்றிய நாடுகள் கடைபிடிக்கும் பன்முகச்சார்பிய உடன்பாடுகள் (multilateral agreements) முடிவுறுவதைக் குறிக்கிறது. பல நாடுகளுக்கு இடையே, ஏனைய சில நாடுகளைத் தவிர்த்து, இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் அல்லது உடன்பாடுகளைக் கொண்டு அவை பிரதியீடு செய்யப்படுகின்றன.

இந்நகர்வின் பிரதான காரியதாரி அமெரிக்கா ஆகும், அதை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஏனைய பிரதான பொருளாதாரங்களும், ஆஸ்திரேலியா போன்ற சிறிய சக்திகளும் ஆதரித்தன. ஏனைய வறிய பொருளாதாரங்களுடன், சீனா மற்றும் இந்தியா, பிரதான எதிர்ப்பாளர்களாக இருந்தன.

அமெரிக்கா இந்த நைரோபி தீர்மானத்தை, “உலக வர்த்தக அமைப்பிற்கான ஒரு புதிய சகாப்தத்திற்குப் பாதை" திறந்துவிடப்படுவதாக பாராட்டியது. பிரதானமாக தோஹா கட்டமைப்பிற்கு விடாப்பிடியாக வக்காலத்து வாங்கிய இந்தியா, பெயர்களைக் குறிப்பிடாமல், “சில அங்கத்தவர்கள்" அதை தொடர்வதைத் தடுத்திருப்பதாகவும், அது "ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் WTO இன் அடிப்படை கோட்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு விலகுவதாகவும்" குறிப்பிட்டது.

அப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வெளியான அறிக்கை, “பல அங்கத்தவர்கள் தோஹா தீர்மானத்தை முறைப்படி ஏற்க விரும்பவில்லை", அதேவேளையில் ஏனையவர்கள் அவ்வாறில்லை, அந்த அங்கத்தவர்கள் "பேரம்பேசல்களை எவ்வாறு நடத்துவதென்பதில் வேறுபட்ட கண்ணோட்டங்களைக்" கொண்டுள்ளனர் என்று அறிவித்து, ஒரு பெரும் அலறலின்றி அதிக சிணுங்கலோடு அதன் இறுதிமரணத்தை அறிவித்தது. சிலர் விவாதித்து ஏனைய பிரச்சினைகளை அடையாளம் காண விரும்புகிறார்கள், ஆனால் "ஏனையவர்கள் அதை விரும்பவில்லை,” என்றது குறிப்பிட்டது.

இந்த முறிவின் முக்கியத்துவத்தை அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் பார்த்தால் மட்டுமே உள்ளீர்த்துக் கொள்ள முடியும். உலக வர்த்தக அமைப்பு (WTO), 1948 இல் நிறுவப்பட்ட வரி மற்றும் வர்த்தகத்திற்கான பொது உடன்படிக்கை (GATT) எனும் முந்தைய அமைப்பை கலைத்து, 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டது. 1930 களின் அனுபவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் GATT நிறுவப்பட்டது, அப்போது உலகம் போட்டி வர்த்தக அணிகளாக, இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்ற நிலைமைகளை தீவிரப்படுத்தி, துருவமுனைப்பட்டிருந்தது.

வர்த்தக விட்டுக்கொடுப்புகள் பன்முகச்சார்பியத் தன்மையில் இருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு நாடும் எடுக்கும் முடிவுகள் பாரபட்சமாகவோ, ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ மட்டும் பொருந்தியதாகவோ இருக்கக்கூடாது, மாறாக பங்குபற்றியிருக்கும் அனைவருக்கும் ஏற்ப விரிவாக இருக்க வேண்டுமென்ற கோட்பாட்டை GATT அடித்தளத்தில் வைத்திருந்தது.

GATT ஐ பின்னாலிருந்து நகர்த்திய முக்கிய சூத்திரதாரி அமெரிக்கா தான். “சுதந்திர சந்தைக்கான" அதன் விசுவாசம், அத்தகையவொரு கோட்பாட்டுக்கான அதன் கடமைப்பாட்டிலிருந்து உந்தப்படவில்லை. அது 1930 களின் அனுபவத்திலிருந்து வரைந்த படிப்பினைகளின் அடிப்படையில் இருந்தது, அக்காலத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்காக அதன் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்குத் திறந்த ஓர் உலகம் அவசியப்பட்டது. பிரிட்டிஷ் முதலாளித்துவம் பொருளாதாரரீதியில் உலகில் மேலாதிக்கம் செலுத்திய 19 ஆம் நூற்றாண்டில் சுதந்திர சந்தை கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்ததைப் போலவே, அமெரிக்காவினது நிலைப்பாடும் அதன் பெருகிய பொருளாதார மேலாளுமையின் அடிப்படையில் அமைந்திருந்தது. உலக போருக்குப் பிந்தைய உடனடி காலக்கட்டத்தில், அமெரிக்கா உலக தொழில்துறை வெளியீட்டில் 50 சதவீதத்தைக் கணக்கில் கொண்டிருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

உலக முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய விரிவாக்கத்திற்கான நிலைமைகளை ஸ்தாபித்த ஒரு சர்வதேச பொருளாதார கட்டமைப்பின் பாகமாக GATT இருந்தது. ஆனால் இந்த விரிவாக்கமே ஓர் ஆழ்ந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தது. உலக சந்தையின் வளர்ச்சி மற்றும் ஏனைய முதலாளித்துவ அதிகாரங்களது மீட்சி மற்றும் வளர்ச்சி, அவை அமெரிக்க பொருளாதார செழுமைக்கு அவசியமாக இருந்தாலும், அதன் பொருளாதார மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்தின.

இந்த முரண்பாடுகளின் முதல் வெடிப்பார்ந்த வெளிப்பாடு 1971 இல் ஏற்பட்டது, அப்போது தான் அமெரிக்கா, தங்கத்திற்கான ஆதரவை அமெரிக்க டாலரிலிருந்து நீக்கியதன் மூலம் 1944 பிரெட்டன் உட்ஸ் நாணய உடன்படிக்கையை முறித்தது. இப்போதோ வர்த்தக பேரம்பேசல்களில் பன்முகச்சார்பியக் கோட்பாட்டை அழிப்பதில் அமெரிக்கா முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

அத்தீர்மானம் வெறுமனே தோஹா பேரம்பேசல்களது தோல்வியின் விளைவல்ல. அது ஆழ்ந்த நிகழ்வுபோக்குகளைப் பிரதிபலித்தது. அத்தகைய பிரச்சினைகளில் சில, நைரோபி பேச்சுவார்த்தைத் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட முதன்மை அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர் மிக்கெல் ஃப்ரோமெனின் ஒரு கருத்துரையில் வெளிவந்திருந்தன.

தோஹா சுற்று பேச்சுவார்த்தைகள் "உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை", மேலும் உலகம் அதன் "தளைகளிலிருந்து" தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றவர் எழுதினார். இரு-தரப்பு உடன்படிக்கைகள் வேலைக்காகின்றன, பிராந்திய உடன்படிக்கைகளும் வேலைக்காகின்றன, “பன்முகச்சார்பியம் (multilateralism) மட்டுந்தான்"—ஓர் உலகளாவிய உடன்படிக்கைக்கான முயற்சி—"சிக்கலுக்கு உள்ளாகி விடுகிறது” என்றார்.

இந்த வரிகள், தெளிவாக, ஓராண்டுக்கு முன்னர், முன்னணி அமெரிக்க வெளியுறவு கொள்கை இதழான Foreign Affairs இன் நவம்பர்-டிசம்பர் 2014 பதிப்பில் பிரசுரிக்கப்பட்ட ஃப்ரோமெனின் ஒரு கட்டுரையில் அமைக்கப்பட்ட, ஒரு தீர்க்கமான நிகழ்ச்சிநிரலை அடிப்படையாக கொண்டிருந்தன.

போருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக முறையின் அண்மித்த ஏழு தசாப்தங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தனர் என்பதுடன், அக்காலக்கட்டம் "அமெரிக்க மண்ணில் வேலைகளையும், உலகெங்கிலுமான நாடுகளுக்குச் சமாதானத்தையும் செல்வசெழிப்பையும் கொண்டு வந்ததாக" அவர் அதில் குறிப்பிட்டார். அவர் எழுதினார், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தின் "அடித்தள மாற்றங்கள்", இக்கட்டமைப்பு மாற்றப்பட வேண்டுமென்பதை அர்த்தப்படுத்துகிறது. இது, ஏன் மாற்றப்பட வேண்டும் என்ற கேள்வியைத் தான் உடனடியாக எழுப்பியது.

ஃப்ரோமென் பதிலைக் குறிப்பிட்டார். அவர் கூறினார், “வர்த்தக கொள்கை வடிவமைப்பதில் வாஷிங்டன் முன்னொருபோதும் இல்லாதளவில் முரண்பாடுகளை முகங்கொடுக்கிறது. அமெரிக்கா, இரண்டாம் உலக போரின் முடிவில் இருந்ததைப் போல உலகளாவிய பொருளாதாரத்தில் இனியும் செல்வாக்கான அந்தஸ்தில் இல்லை, அது ஒருமித்த நிலைப்பாடுகளை நோக்கி இயங்க விரும்பும் வர்த்தக கூட்டணிகளைக் கட்டமைக்க வேண்டும்,” என்றார்.

அக்டோபர் தொடக்கத்தில் உத்தியோகப்பூர்வமாக எட்டப்பட்ட உடன்படிக்கையான, பன்னிரெண்டு அங்கத்த நாடுகளது பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP), அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பொருளாதார உறவுகளை உள்ளடக்கிய அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மை (TTIP) ஆகியவை இரண்டு முக்கிய வர்த்தக கூட்டணிகள் ஆகும். பன்முகச்சார்பியக் (multilateralism) கோட்பாடுகளைக் கைவிட்ட இத்தகைய உடன்பாடுகள், அதில் கையெழுத்திட்ட மற்றும் அமெரிக்காவினது கோரிக்கைகளுக்கு உடன்பட்ட நாடுகளுக்கு மட்டும் அமெரிக்க சந்தைகளைப் பரந்தளவில் அணுகவும் மற்றும் விட்டுக்கொடுப்புகளையும் வழங்குகின்றன. இந்த உடன்பாடுகளின் நோக்கம், ப்ரோமென் அவரது Foreign Affairs கட்டுரையில் தெளிவுபடுத்தியதைப் போலவே, "உலகளாவிய பொருளாதாரத்தின் அண்மித்த மூன்றில் இரண்டு பங்கை கட்டுப்பாடின்றி அணுக வழிவகை செய்யும் உடன்பாடுகளின் வலையமைப்பின் மையமாக" அமெரிக்காவை நிலைநிறுத்துவதாகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பன்முகச்சார்பிய முறையின் கீழ் பெரிதும் அதன் பொருளாதார செல்வாக்கு அந்தஸ்தை இழந்துள்ள அமெரிக்கா ஏனைய வழிவகைகளைக் கொண்டு அதனை மீட்டுப்பெற போராடி வருகிறது. ஆனால் அந்த வழிவகைகள், 1930 களில் மேலோங்கியிருந்த மற்றும் அதேபோன்ற பேரழிவுகரமான விளைவுகளை உருவாக்கிய ஒருவித வர்த்தக அணிகள் மீண்டும் உருவாவதையும் உள்ளடக்கி உள்ளது, இது உலக போருக்கு வழிவகுக்க உதவுகிறது.

நிச்சயமாக இந்த சூழ்நிலை 1930 களில் இருந்து மிகவும் வேறுபட்டது தான், மேலும் இன்று நிறுவப்படும் பிரத்யேகவாத உடன்பாடுகள் (exclusivist agreements) 80 ஆண்டுகளுக்கு அதிகமான காலத்திற்கு முன்னர் செய்யப்பட்டதைப் போல அதே வடிவத்தை எடுக்காது தான். ஆனால் அவற்றின் பிற்போக்குத்தனமான மற்றும் இராணுவவாத உள்ளடக்கம் அதேவிதத்தில் உள்ளது. ஃப்ரோமென் அவரது Foreign Affairs கட்டுரையில் இதை தெளிவுபடுத்தினார், அதில் அவர், “வர்த்தகத்தின் மூலோபாய தர்க்கத்தையும்", “நாடுகள் பலத்தை அளவிடுவதற்கும் மற்றும் பிரயோகிப்பதற்கும்" ஒரு வழிவகையாக அது வகிக்கும் முக்கிய பாத்திரத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்த உள்ளடங்கிய இராணுவவாத மற்றும் ஆக்ரோஷ நிகழ்ச்சிநிரல், TPP இல் திடமான வெளிப்பாட்டைக் காண்கிறது, அதை தான் ஃப்ரோமென் குறிப்பாக முன்னோக்கிய பாதையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக மேற்கோளிடுகிறார். இது மிகச் சரியாக, சீனாவை மண்டியிடச் செய்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தைப் பலப்படுத்தும் நோக்கங்கொண்ட—போருக்கு இட்டுச் செல்கிற ஒரு நிகழ்ச்சிநிரலான—ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" பொருளாதார அங்கமாக வர்ணிக்கப்படுகிறது.

சுதந்திர வர்த்தகம் மற்றும் பன்முகச்சார்பியத்திற்கு உதவிய உற்பத்திய சக்திகளின் பூகோளமயப்பட்ட வளர்ச்சி, இலாபகர அமைப்புமுறையில் வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் உலக பொருளாதாரத்திற்கும் இடையிலான முரண்பாடுகளின் தீவிரம் ஒரு புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. முதலாளித்துவ வல்லரசுகள் ஒவ்வொன்றும், இதில் அமெரிக்கா முன்னணி பாத்திரம் ஏற்பதுடன், அதன் சொந்த பொருளாதார மற்றும் இராணுவ சக்திகளை அதிகரிக்கவும் மற்றும் "இச்சூரிய மண்டலத்தில்" அதன் சொந்த "இடத்தை" உறுதிப்படுத்தி வைக்கவும் போராடுவதன் மூலமாக அதன் நலன்களுக்கிணங்க இந்த முரண்பாட்டைத் தீர்க்க முயல்கின்றன, அவ்விதத்தில் 1930 களின் பொருளாதார பிரத்யேகவாதம் (exclusivism) செய்ததைப் போலவே அதே வழியில் போருக்கான நிலைமைகளுக்கு எரியூட்டுகின்றன.

இந்த முரண்பாட்டை, காலங்கடந்த இந்த இலாபகர மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழித்து, பூகோளரீதியில் அபிவிருத்தியடைந்த உற்பத்தி சக்திகளை மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதற்காக, ஒரு முற்போக்கான அடிப்படையில் உலக சோசலிச புரட்சிக்கான தொழிலாள வர்க்க போராட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கவியலும்.