ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German media incites racist hysteria

ஜேர்மன் ஊடகங்கள் இனவாத விஷமப் பிரச்சாரத்தைத் தூண்டுகின்றன

Peter Schwarz
12 January 2016

கொலோன் (கேல்ன் Köln) இல் நடந்த குற்றகரமான பாலியல் தொல்லைச் சம்பவங்களை சாக்காக பயன்படுத்தி, ஜேர்மன் ஊடகங்கள் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு பீதியூட்டும், இனவாத பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

புத்தாண்டுக்கு முதல்நாள், விடுமுறையை கொண்டாட Köln மற்றும் ஜேர்மனி எங்கிலுமான ஏனைய பிரதான நகரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அதற்கடுத்த நாள் பொலிஸ் வெளியிட்ட ஒரு பத்திரிகை செய்திக்குறிப்பில் கொண்டாட்டங்களில் "விழாகால உற்சாகம்" நிரம்பி இருந்ததாகவும், அன்றைய மாலை சூழல் “ஒட்டுமொத்தமாக அமைதியாக" இருந்ததாகவும் குறிப்பிட்டது.

ஆனால் அதற்கடுத்த நாள், இரண்டாவதாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது, அது முதல்முறையாக பெண்கள் மீது குற்றகரமான தாக்குதல்கள் நடந்ததாக குறிப்பிட்டது. ஜனவரி 5 இல், Köln இன் கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி (CDU) ஆதரவிலான மேயர் ஹென்றியெட்ட ரெக்கார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், அங்கே "குற்றங்களுக்கு உடந்தையாய் இருந்தவர்களில் Köln இல் வசிக்கும் அகதிகள் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

திடீரென ஊடகங்கள், புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஒரு விஷமப் பிரச்சாரத்தை தொடங்கி, பாரிய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களுடன் வெடித்துக் கிளம்பின. ஜனவரி 7 இல், அநாமதேய பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய "பெரும்பாலானவர்களில்" புலம்பெயர்ந்தோர் இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர். ஜனவரி 8 இல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று, சந்தேகத்திற்குரிய 31 நபர்களில் 18 பேர் அகதிகள் என்று தெரிவிக்கிறது. சந்தேகத்திற்குரியவர்களில் இருவர் ஜேர்மனியராம், ஒருவர் அமெரிக்கராம்.

குற்றகரமான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களது எண்ணிக்கை ஜனவரி 8 மற்றும் ஜனவரி 10 க்கு இடையே 170 இல் இருந்து 400 க்கும் அதிகமாக உயர்ந்தது, அதுவரைக்கும் அவ்வாறு இல்லை. இதுவரையில் இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

உண்மையில் Köln இல் என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை. சில செய்திகள் ஓர் ஆத்திரமூட்டலை சுட்டிக்காட்டுகின்றன. CNN உட்பட, பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு இரகசிய பொலிஸ் உளவாளி அக்கூட்டத்திற்குள் ஊடுருவி இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளன, பின்னர் அப்பெண்மணி தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

போக்கிரித்தனமான சம்பவங்களில் அங்கே பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகும் சாத்தியம் இருப்பது உண்மைதான். துரதிருஷ்டவசமாக அதுபோன்ற நடவடிக்கை, அதுவும் புத்தாண்டுக்கு முன்நாள் என்பதால் கட்டுப்பாடின்றி மது பெருக்கெடுத்திருக்கையில், உலகெங்கிலும் ஏறத்தாழ எந்தவொரு இடத்தின் பெருந்திரளான கூட்டத்திலும் பொதுவாக நடக்காத ஒன்றல்ல. சான்றாக கடந்த ஆண்டு லூசியானா நியூ ஓர்லியன்ஸின் மார்டி கிராஸ் கொண்டாட்டத்தில், 140 க்கும் அதிகமானவர்கள், 50 பேர் தகாத செயல்பாடுகளுக்காகவும், கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு முனீச்சின் Oktoberfest இல், பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருந்தது.

எப்படி பார்த்தாலும், உள்ளபடி ஆதாரங்கள் இல்லாமல், இந்த புள்ளியில், வெறும் குற்றச்சாட்டுக்கள் என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்ற நிலையில், பத்திரிகை பிரதிபலிப்பின் ஆக்ரோஷத்தை அரசியல் வார்த்தைகளில் மட்டுமே விளங்கப்படுத்த முடியும். அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பல தசாப்தங்களாக ஜேர்மனியில் சாத்தியமில்லை என்று கருதப்பட்ட ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

மூன்றாம் குடியரசு பொறிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஊடகங்கள் வேறுவிதத்தில் அதே கேவலமான இன பேதங்களை ஒரேமாதிரியாக பிரயோகிப்பதுடன், நாஜிக்களது சிறப்புத் தகுதிவகையான, பாலியல் தொல்லை மன நோய்களுக்கு பகிரங்கமாக முறையிடுகின்றன. வெட்கங்கெட்ட ஜேர்மன் ஊடகங்கள், மீண்டுமொருமுறை, கறுத்த இராட்சகர்கள் (untermenschen) வெள்ளையின நோர்டிக் பெண்களை இரையாக்குவதைப் போன்ற படங்களை வெளியிடுகின்றன.

சனியன்று Focus இதழ், கறுப்பு கைரேகைகள் மூடிய ஒரு நிர்வாண பெண்ணின் ஒரு படத்தை அதன் அட்டைப்படமாக பிரசுரித்தது. Süddeutsche Zeitung இன் வாரயிறுதி பதிப்பு, ஒரு வெள்ளையின பெண்ணின் பிறப்புறுப்புகளை ஒரு கறுப்பு கரம் பிடித்திருப்பதைப் போன்ற ஒரு படத்தைத் தாங்கி வந்தது. அந்த பத்திரிகை பேஸ்புக்கிலும் அப்படத்தைப் பரவலாக விதைத்தது.

ஒரு போராட்ட அலை வெடித்ததும், Süddeutsche மன்னிப்பு கோரியது. ஆனால் Focus இன் தலைமை பதிப்பாசிரியர் Ulrich Reitz, “துரதிருஷ்டவசமாக என்ன நடந்து வருகிறதோ அதைத் தான் நாங்கள் சித்தரிக்கிறோம்" என்ற அடிப்படையில் வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர் கூறினார், அந்த அட்டைப்படத்தை இனவாதமாக யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்கள் "உண்மைக்கு பயப்படுகிறார்கள்" என்றார்.

இங்கே இந்த இனவாத அருவருப்பைப் பரப்பிக் கொண்டிருப்பது வெறுமனே சீரழிந்த இதழாளர்கள் மட்டுமல்ல. முன்னணி ஜேர்மன் கல்வியாளர்களும் இந்நடவடிக்கைக்குள் இறங்கி இருக்கிறார்கள். பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி தீவிர-வலது Basler Zeitung க்கான ஒரு கட்டுரையில், “புத்தாண்டுக்கு முன்நாள், நூற்றுக் கணக்கான அரபு ஆண்கள் Köln இன் கத்தோலிக்க சதுக்கத்தில் பெண்களைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சூறையாடியும்", “ஜேர்மனியின் முன்னணி ஊடகங்கள்" மவுனமாக இருந்து வருகின்றன என்று குற்றஞ்சாட்டினார்.

இந்த இனவாத பிரச்சாரத்திற்குப் பாரியளவில் மக்கள் ஆதரவு கிடையாது. இது அரசியல் உயரடுக்குகளால் தூண்டிவிடப்பட்டு, திருப்பிவிடப்பட்டுள்ளது.

Der Spiegel இன் புதிய பதிப்பு குறிப்பிடுகிறது: “ஓராண்டுக்கு முன்னர், 2014 புத்தாண்டுக்கு முன்நாள், இதுபோன்ற தாக்குதல்கள் (துரதிருஷ்டவசமாக) வெறுமனே உள்ளூர் பத்திரிகையின் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம்.” “எந்தவொரு தாக்குதலும் தேசிய கொந்தளிப்புக்கு ஒரு ஆதாரமாக இருந்துவிட முடியும்—அதாவது நகர பூங்காவில் ஒரு குழந்தை படுகொலை அல்லது பிரதான அச்சங்கள் குவியப்பெற்ற, ஒரே மாதிரியாக ஒருங்கிணைந்த, ஏதோவொரு வடிவத்தில் வெளிநாட்டவர் சம்பந்தப்பட்ட ஏனைய பிற குற்றம் போன்றவை,” என்பதையும் Der Spiegel சேர்த்துக் கொண்டது.

ஆனால் இது ஊடக பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதிலிருந்து Der Spiegel ஐ தடுத்துவிடவில்லை. Köln இல் நடந்த சம்பவங்கள் “நமது புனிதமான மதிப்புகளைப்" பாதுகாப்பதற்கு பொலிஸை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அது அறிவிக்கிறது.

அரசியல் முதுகெலும்பில்லாததற்கு ஓர் அடையாளமாக விளங்கும் இடது கட்சியே கூட, ஒரு ஏதேச்சதிகார அரசுக்கான அழைப்புகளை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு ஜேர்மனியின் அரசியல் ஆதாரக்கூறுகள் வலதிற்கு நகர்ந்துள்ளன. உண்மையில் அரசியல் ஸ்தாபகத்தின் சகல பிரிவுகளும் வலதிற்கு திரும்பியிருக்கும் இந்த மொத்த மாற்றத்திற்கும் மற்றும் Köln இல் நடந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக இது ஒட்டுமொத்தமாக ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்எழுச்சியுடன் பிணைந்துள்ளது.

ஜனாதிபதி கௌவ்க் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரிகள் வெளியுறவு கொள்கை கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்தும், மற்றும் சமூக ஜனநாயக வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்மனி “பக்கவாட்டில் இருந்து மட்டுமே வெளியுறவு கொள்கைகள் மீது கருத்துரைப்பதைக் காட்டிலும் மிக வலிமையானது" என்று குறிப்பிட்டதில் இருந்தும் இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்து அந்த அரசாங்கம் கியேவ் இல் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்துள்ளது மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவின் நிலைநிறுத்தத்தில் பங்கெடுத்தது, மாலிக்கு துருப்புகளை அனுப்பியது, ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகளை மீளப்பலப்படுத்தியது. சமீபத்தில் ஜேர்மன் டோர்னாடொ போர்விமானங்கள் சிரியாவில் குண்டுவீச்சு நடவடிக்கையிலும் இணைந்துள்ளன.

ஆனால் விடாப்பிடியான முயற்சிகளுக்கு இடையிலும், இராணுவவாதத்திற்கு எதிரான பரந்த சமூக அடுக்குகளின் உள்ளார்ந்த எதிர்ப்பை ஆளும் உயரடுக்குகள் இதுவரையில் முறிக்க தவறியுள்ளன. பரந்த பெரும்பான்மை ஜேர்மானியர்கள் இன்னமும் வெளியுறவு நடவடிக்கைகளை மற்றும் ஜேர்மன் இராணுவப்படையின் (Bundeswehr) போர் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். இப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த பிரச்சினை இந்த எதிர்ப்பைக் கடந்து வருவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தப்படுகிறது. Köln சம்பவங்கள் இதற்காக பற்றிக்கொள்ளப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பூசிமொழுகிய இனவாத பிரச்சாரம், மத்திய கிழக்கில் இராணுவ தலையீட்டின் விரிவாக்கத்திற்கு தயாரிப்பு செய்வதற்கான ஒரு வழிவகையாகும்.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் இனவாதத்தில் தங்கியிராமல் மற்றும் ஓர் ஏதேச்சதிகார ஆட்சியைக் கட்டமைக்காமல் போர் நடத்த முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த துன்பியலான மற்றும் பேரழிவுகரமான அனுபவமும் நிரூபிக்கின்றன.

சமீபத்திய மாதங்களில், ஜேர்மனியின் மிக பிரபலமான திரைப்படம், Erist wieder da (அவர் திரும்பவும் வந்துவிட்டார்) என்பதாகும். அது இரண்டாம் உலக போர் புதைக்குழியிலிருந்து மீண்டு உயிர்த்தெழுந்து வந்த ஹிட்லர், நவீன ஊடகங்களின் உதவியுடன் எவ்வாறு அவரது அரசியல் வாழ்க்கையை மீளக்கட்டமைக்கிறார் என்பதைக் கற்பனை செய்யும் ஒரு நையாண்டி அரசியல் கற்பனை கதையாகும். கடந்த வாரத்தின் போது, அந்த திரைப்படைப்பாளியின் நையாண்டி, மொத்தத்தில் யதார்த்தத்தின் மிகவும் தொந்தரவூட்டும் ஒரு கூறுபாடாக ஆகியிருந்தது.