ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The end of liberal Europe

தாராளவாத ஐரோப்பாவின் முடிவு

Peter Schwarz
23 January 2016

வரலாற்றாளர் ஹென்ரிச் ஆகஸ்ட் வின்க்லர் ஜேர்மனியின் வரலாறை "மேற்கை நோக்கிய நீண்ட பாதை" என்று வர்ணிக்கிறார். “மேற்கு" என்பதை, அந்த சமூக ஜனநாயகவாதி —அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகளில் வரையறுக்கப்பட்டதைப்போல்— நாடாளுமன்ற ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் மக்கள் உரிமைகள், வர்க்க சமரசம் மற்றும் சமூக சமநிலையை குறிக்கிறார்.

ஒரு நீண்டகால பிரத்தியேக பாதைக்கு (Sonderweg) பின்னரே, 1949 அரசியலமைப்பு, 1991 வன்முறையற்ற மறுஐக்கியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருங்கிணைப்பு என இறுதியில் ஜேர்மனி இவற்றை அடைந்தது, இவை முடிவாக ஐரோப்பிய கண்டத்தை சமாதானத்திற்கு இட்டுச் சென்றது என விங்லர் விளங்கப்படுத்துகிறார்.

“மேற்கு" குறித்த விங்லரின் கருத்துரு எப்போதுமே முக்கியமாக சித்தாந்தரீதியில் உந்துதலளிக்கப்பட்டு, யதார்த்தத்தை பூசிமெழுகுவதாக இருந்தது. ஆனால் சமீபத்திய சம்பவங்களை அவரது அளவுகோலின் அடிப்படையில் மதிப்பிட்டால், பின் ஜேர்மனியும் ஐரோப்பாவும் சமீபத்திய மாதங்களில் அந்த "மேற்கை நோக்கிய பாதையில்" வேகமாக எதிர்திசையில் தான் பயணித்துள்ளன. ஏறத்தாழ ஒரேயிரவில், அரசியல் கலாச்சாரம் பலவந்தமாக மாற்றப்பட்டுள்ளது. சமூக ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஐரோப்பா பொறிந்து போயுள்ளன.

ஆளும் உயரடுக்குகள் எங்கெங்கிலும் கூர்மையாக வலதிற்கு நகர்ந்து வருகின்றன. பேரினவாதம், வெளிநாட்டவர் மீதான விரோதம், இராணுவவாதம் மற்றும் ஒரு பலமான அரசுக்கான அழைப்பு என இவை அதிகரித்துள்ளன. இது பிரெஞ்சு தேசிய முன்னணி, ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany), ஆஸ்திரிய சுதந்திர கட்சி, ஹங்கேரிய Fidesz மற்றும் போலந்தின் PiS போன்றவற்றிற்கு மட்டுமல்ல, மாறாக இடது என்று கூறப்படுபவை உள்ளடங்கலாக ஒவ்வொரு ஸ்தாபக கட்சிக்கும் கூட பொருந்தும்.

பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் International Viewpoint போன்ற போலி-இடது பிரசுரங்கள், பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பிற்காக என்ற பெயரில் அரசு தலையீடு மற்றும் ஏகாதிபத்திய போருக்கு அழைப்புவிடுக்கும்  கூக்குரல்களில் முன்னணி குரல்கொடுப்பவர்களாக உள்ளனர்.

ஜேர்மனியில் நாஜிக்களின் யூத-விரோத பிரச்சாரங்களை நினைவுபடுத்தும் வகையில், புத்தாண்டுக்கு முந்தைய கொலோன் சம்பவங்கள் ஓயாது பரவலாக மிகைப்படுத்தப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அகதிகளுக்கு எதிராக இனவாதம் தூண்டிவிடும் ஒரு பிரச்சாரத்தைப் பரப்புகின்றன. அரசாங்கமும் எதிர் கட்சிகள் கூடுதல் பொலிஸ் மற்றும் கடுமையான சட்டங்களுக்கு அழைப்புவிடுப்பதில் போட்டிப்போட்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. இவ்விடயத்தில் இடது கட்சி தலையாய இடத்தில் உள்ளது.

பிரான்சில் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடிநிலைமையை நடைமுறைப்படுத்தியுள்ள சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், விச்சி ஆட்சி பாரம்பரியத்தில், குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டாலே வெளிநாட்டினரின் குடியுரிமையைப் பறிக்க அச்சுறுத்தி உள்ளது.

ஐரோப்பா எங்கிலும் எல்லைகள் கொண்டு வரப்படுகின்றன மற்றும் செங்கென் முறை கிட்டத்தட்ட உயிரிழந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் எச்சரிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் "மிக குறுகிய காலத்திலேயே உடையக்கூடும்" என்றார். அவரது டச் சமபலம் Mark Rutte, அகதிகள் நெருக்கடியைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு "ஆறில் இருந்து எட்டு வராங்களே" இருப்பதாக தெரிவித்தார். பழமைவாத Frankfurter Allgemeine Zeitung எழுதுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு இன்று போல இந்தளவுக்கு யதார்த்தமாக ஒருபோதும் இருந்ததில்லை,” என்றார்.

இராணுவ திறனை அதிகரிப்பது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் போர் தொடுப்பது மற்றும் உள்நாட்டில் இராணுவத்தை நிலைநிறுத்துவதென்று வருகையில், ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்குகள் உடன்படுகின்றன. ஆனால் இவ்விடத்திலும் கூட, ஐரோப்பாவிற்குள் ஐக்கியம் இருப்பதாக எடுத்துக் கொள்ள கூடாது. தேசிய பகைமை அதிகரித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான எல்லைகளில் டாங்கிகளை நிலைநிறுத்துவது வெறும் காலம் சார்ந்த ஒரு விடயம் மட்டுந்தான். இரண்டாம் உலக போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பாவின் இதயதானத்தில் போர் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த 508 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 0.2 சதவீதமான கடந்த ஆண்டு ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ள அண்ணளவிலான 1 மில்லியன் அகதிகள், வலதை நோக்கிய அரசியல் மாற்றத்திற்கான சாக்குபோக்கே தவிர நியாயமான காரணமல்ல. ஊடகங்கள் அவ்வாறு காட்ட முயல்வதைப் போல, இந்த மாற்றம் பொது மக்களின் பரந்த உணர்வுகளின் விளைவல்ல, மாறாக ஆளும் உயரடுக்குகளது எதிர்ப்பின் வெளிப்பாடாகும். அவை ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கட்சிகளைப் பயன்படுத்தி, அமைப்புரீதியில் பிற்போக்குத்தனமான உணர்வுகளைத் தூண்டிவிட்டு வருகின்றன.

சோவியத் ஒன்றியம் மற்றும் பரந்த சோவியத் அணி 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிந்ததற்குப் பின்னர், மிகவும் குறிப்பாக 2008 சர்வதேச நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் கட்டமைந்த வெடிப்பார்ந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளே அனைத்திற்கும் மேலாக இந்த எதிர்ப்பிற்கான நிஜமான காரணமாகும். இத்தகைய அபிவிருத்திகளில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

ஜேர்மனி ஐரோப்பா எங்கிலும் அதன் போட்டியாளர்களைத் தடுக்க மற்றும் மேலாதிக்கத்தைப் பெற அவற்றை நிர்பந்திப்பதில் அதன் பொருளாதார பலத்தை ஈவிரக்கமின்றி பயன்படுத்தி உள்ளது. பலவீனமான தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மீது ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளை திணிப்பற்காக அது யூரோவைப் பயன்படுத்திக் கொண்டது--இத்தகைய நடவடிக்கைகள் அந்நாடுகளது பொருளாதாரங்களை சீரழித்ததுடன், மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் தள்ளி, இளைஞர்களுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லாதவாறு சூறையாடின.

ஐரோப்பாவை முதலாளித்துவ அடிப்படையில் சமாதானமான ரீதியில் ஒன்றுசேர ஐக்கியப்படுத்த முடியும் என்ற யோசனையின் கற்பனை தன்மையை எடுத்துக்காட்டுவதற்கு ஐரோப்பிய பொருளாதார புள்ளிவிபரங்களைக் குறித்த ஒரு மேலோட்டமான பார்வையே போதுமானது.

சான்றாக 2014 இல் 3 ட்ரில்லியனுக்குச் சற்றே குறைவாக இருந்த ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதை விட அண்மித்து அரைவாசி மக்கள்தொகையைக் கொண்ட அண்டைநாடான போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட ஏழு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. ஜேர்மனியின் ஏற்றுமதிகள் போலந்தை விட ஏழு மடங்கு அதிகமாக இருந்தது; ஜேர்மனியின் 220 பில்லியன் யூரோ ஏற்றுமதி உபரி மட்டுமே கூட போலந்தின் 163 பில்லியன் யூரோ மொத்த ஏற்றுமதிகளை விட அதிகமாகும்.

2014 இல் ஜேர்மனியை விட பாதியளவுக்குக் குறைவாக ஏற்றுமதி செய்திருந்ததும் மற்றும் 71 பில்லியன் யூரோ வர்த்தக பற்றாக்குறை கொண்டதுமான பிரான்சில், மற்றும் 134 பில்லியன் யூரோ வர்த்தக பற்றாக்குறை கொண்ட இங்கிலாந்தில் கூட, ஜேர்மனியின் நிழல் படிந்திருந்தது.

சமூக புள்ளிவிபரங்களின் முரண்பாடு இன்னும் அதிகளவில் அப்பட்டமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் முழுநேர தொழிலாளர்களின் சராசரி மாதாந்தர மொத்த வருவாய், பல்கேரியாவில் 306 யூரோ, போலந்தில் 902 யூரோ, ஜேர்மனியில் 3,106 யூரோ மற்றும் டென்மார்க்கில் 4,217 யூரோ என வேறுபடுகின்றன.

இத்தகைய சராசரிகள் தனித்தனி நாடுகளுக்குள் நிலவும் பெரும் சமூக இடைவெளியை மறைக்கின்றன. சான்றாக ஜேர்மனி அதன் பரவலான குறைந்த-கூலி துறையுடன் அதன் பொருளாதார மேலாதிக்கத்தைக் குறைவின்றி வைத்துள்ளது. இந்த குறைந்த-கூலி துறை ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக கட்சி-பசுமை கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 2010 “சீர்திருத்த" திட்டத்தின் விளைவாக உருவானதாகும். அங்கே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பாதாரத்தின் விளிம்பில் வாழ்ந்து வருவதுடன், அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவே பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது.

இத்தகைய கூர்மையான சமூக முரண்பாடுகள் தான் ஐரோப்பிய உயரடுக்குகளின் வலதை நோக்கிய திருப்பத்திற்கான நிஜமான காரணம். மேற்புறத்திற்குக் கீழே, ஒரு பரந்த சமூக வெடிப்பு உருவாகிக் கொண்டிருப்பதும், அதற்கான தயாரிப்பு செய்ய அவற்றிற்கு மிக சிறிய அவகாசமே இருக்கிறது என்பதும் அவற்றிற்கு நன்றாக தெரியும். 1930 களைப் போலவே, அவை சமூக பதட்டங்களை வலதுசாரி தடங்களுக்குள் திருப்ப, பொலிஸ் எந்திரங்களைக் கட்டமைக்க, மற்றும் 1930 களில் அவை நாஜி அதிரடி படையினரைக் (SA) கொண்டு செய்ததைப் போலவே அதே விதத்தில் சமூக போராட்டங்களுக்கு எதிராக உபயோகிக்கக்கூடிய ஒரு வலதுசாரி இயக்கத்தை ஸ்தாபிக்க, பேரினவாதம் மற்றும் வெளிநாட்டவர் மீதான விரோதத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன.

இராணுவவாதத்தின் அதிகரிப்பும் அதே நோக்கத்திற்கே சேவையாற்றுகிறது. அங்கே சமீபத்திய வரலாற்றில் உள்நாட்டு பதட்டங்களை வெளிநோக்கி திருப்பிவிட சேவையாற்றாத எந்தவொரு போரும் இருந்திருக்கவில்லை. அதேநேரத்தில், வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மிகவும் உண்மையானவை. அதன் உலகளாவிய பொருளாதார நலன்களை இராணுவ வழிவகைகளைக் கொண்டே பாதுகாக்க முடியுமென்ற கருத்து ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்திற்குள் நீண்டகாலமாக மேலோங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக, அது "புதிய சக்தி, புதிய பொறுப்புகள்" என்ற முழக்கத்தின் கீழ் ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையைத் தீவிரமாக மேலெழுப்பி உள்ளது.

தற்போது இத்தகைய திட்டங்கள், சர்வதேச கூட்டணிகளின், குறிப்பாக நேட்டோவின் கட்டமைப்பிற்குள் நடக்கின்றன. ஆனால் இது நீண்டகாலத்திற்கு தொடராது. வல்லரசுகளது நலன்களுக்கு இடையிலான மோதல், உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவை தவிர்க்கவியலாதபடிக்கு ஒரு மூன்றாம் உலக போருக்குள் உந்தப்பட்டு வருகிற அளவுக்கு ஆழமானவை.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு மட்டுமே அத்தகையதொரு பேரழிவைத் தடுக்க முடியும். ஆளும் உயரடுக்குகளுக்கு முரண்பட்டரீதியில், பெருந்திரளான மக்களின் மனோபாவம் இடது சாரியாக மேலோங்குகிறது. ஆனால் இந்த உணர்வு உத்தியோகபூர்வ அரசியலில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. கிரீஸில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பில் தொடங்கி கூடுதல் அரசு அதிகாரங்களுக்கான அழைப்புகளை ஜேர்மனியின் இடது கட்சி ஆதரித்த வரையில், கடந்த ஆண்டின் அனுபவங்கள், உத்தியோகபூர்வ கட்சிகளின் பதவிகளிலிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்பார்க்க முடியாது என்பதையே பலமாக எடுத்துக்காட்டுகிறது.

போர், இனவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம், அத்துடன் அகதிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆகியவை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்தும் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச தொழிலாளர்களின் கட்சியைக் கட்டமைப்பதிலிருந்தும் பிரிக்க முடியாதவை ஆகும். இதற்கு ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகிறது.

முதலாளித்துவ அடிப்பைடயில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியாது என்பதையும், முதலாளித்துவம் தூக்கியெறியப்படாவிட்டால் புதிய போர்கள் தவிர்க்கவியலாதது என்பதையும் எச்சரித்த ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலம் மட்டுமே ஆகும்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி முதலாம் உலக போர் முடிவில் எச்சரிக்கையில், “ஒரு பாதி தான் முடிந்துள்ளது, முதலாளித்துவ அரசாங்கங்களின் ஓர் உடன்படிக்கையை கொண்டு மேலிருந்து ஐரோப்பாவின் ஓர் ஒருமித்த பொருளாதார ஐக்கியம் என்பது படுமோசமான கற்பனையாகும்,” என்றார். அந்த பகுப்பாய்வு இன்று நிரூபணமாகி வருகிறது. ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளாக அதன் மக்கள் நலன்களுக்காக ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவது மட்டுந்தான் ஒரே சாத்தியக்கூறாகும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதைய WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் முதல் வளைகுடா போர் தொடங்குவதற்கு முன்னதாக வழங்கிய உரையில் பின்வருமாறு எச்சரித்தார், “முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போர் போலவே எதிர்விரோத ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டியாளர்கள் ஒருவரையொருவர் முந்திச்செல்ல முற்படுகையில், மூன்றாம் உலக போருக்கான அடித்தளம் தயாரிக்கப்படுகிறது. ஈராக்கிய மக்களுக்கு எதிராக இப்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் வருங்காலத்தில் இன்னும் அதிக இரத்தந்தோய்ந்த மற்றும் பயங்கர மோதல்களில் பயன்படுத்தப்படும்,” என்றார். (1)

அதற்குப்பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மத்திய கிழக்கின் பெரும் பகுதிகளை அழித்துள்ளனர், அப்பகுதி ஒரு புதிய உலக மோதலுக்கான ஆதாரக்களமாக மாறும் அச்சுறுத்தலுடன் நிற்கிறது.

 (1) டேவிட் நோர்த் ஜனவரி 20, 1991 நியூ யோர்க் நகரில் ஆற்றிய "இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்று” எனும் உரை. இடம் பெற்றிருப்பது: “பாலைவன படுகொலை. ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய போர்,” டெட்ராய்ட் 1991, பக்கம் 246 நூலில்.