ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Luftwaffe joins the Syrian war

ஜேர்மன் விமானப்படை சிரிய போரில் இணைகிறது

Johannes Stern
6 January 2016

செவ்வாயன்று ஜேர்மன் விமானப்படையின் (Luftwaffe) நான்கு டோர்னாடொ போர் விமானங்கள், சிரியாவில் ISIS க்கு எதிரான போருக்கு ஒத்துழைக்க துருக்கிய விமானப்படைத்தளம் இன்செர்லிக்கிற்கு அனுப்பப்பட்டன. ஜேர்மன் ஆயுதப்படை (Bundeswehr) உத்தியோகபூர்வ வலைத் தள தகவல்படி, அந்த போர்விமானங்கள் இவ்வார இறுதியில் அவற்றின் முதல் வகை தாக்குதல்களை நடத்தும். ஜனவரி 12 இல், இன்னும் இரண்டு போர்விமானங்கள் அனுப்பப்படும்.

நிலத்தின் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கக்கூடிய மற்றும் எதிரி போர்விமானங்களைக் கண்டறியக்கூடிய அதிநவீன கேமராக்கள் இந்த டோர்னாடொக்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஊடக செய்திகளின்படி, அவை போரில் பங்கெடுத்துவரும் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் அரபு போராளிகளுக்கான இலக்குகளை அடையாளம் காண அவ்வப்போதைக்கு விபரங்களை அனுப்பும். டோர்னாடொக்களின் உத்தியோகபூர்வ வேலை உளவுபார்ப்பதாக இருந்தாலும், கண்ணுக்குப்புலனாகாத வானிலிருந்து வானில் தாக்கும் குறுகியதூர அதிநவீன IRIS-T ஏவுகணைகளும் மற்றும் தரையிலும் வானிலும் இரண்டிலுமான இலக்குகளுக்கு எதிராக பிரயோகிக்கத்தக்க 27 மி.மீ. மௌசர் விமான சிறுபீரங்களும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

வரலாற்று மற்றும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, இந்த அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை அதிகமாக விளக்கத்தேவையில்லை. இது வெறுமனே இரண்டாம் உலக போர் முடிந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கிறது. அந்த போரில், ஜேர்மன் விமானப்படை ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் மூர்க்கமாக சீறிப்பாய்ந்திருந்த நிலையில், அது நாஜி போர் எந்திரத்தின் கண்மூடித்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்துடன் அடையாளம் காணுமாறு ஆனது. சீறிப்பாயும் ஸ்டுக்கா குண்டுவீசி (Stuka dive bomber) அதன் பெருஞ்சத்தத்துடன் ஓலமிடும் சைரன்களுடன் ஜேர்மன் ஏகாதிபத்திய குண்டுமழை தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட எண்ணற்றவர்களிடையே பீதியை உண்டாக்கி இருந்தது, அது கிழக்கில் வார்சோ மற்றும் ஸ்ராலின்கிராட் இல் தொடங்கி மேற்கில் ரோட்டர்டாம் மற்றும் இலண்டன் வரையில் நகரங்களைச் சீரழித்தது.

1939 இல் ஜேர்மனியின் சரமாரியான வார்சோ அழிப்பு குண்டுவீச்சுக்கு முன்னரே கூட, ஜேர்மன் விமானப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1937 இல் கெர்னிக்கா (Guernica) நகரத்தை சாம்பலாக்குவதில் பாரிய படுகொலைக்கான ஒரு கருவியாக தன்னைத்தானே ஸ்தாபித்துக் கொண்டிருந்தது.

போருக்குப் பின்னரும் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கொடூர குற்றங்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டதற்குப் பின்னரும், ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இராணுவ வன்முறையை விலக்கி வைப்பதாக இருந்தது. இந்த வேஷம் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜேர்மன் மறுஐக்கியத்திற்கு பின்னர் அதிகரித்தளவில் அரிக்கப்பட்டுவிட்டது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஜேர்மன் முதலாளித்துவம் மற்றும் 2008 இல் வெடித்த பூகோளமயப்பட்ட நெருக்கடியின் நிர்பந்தங்களால் உந்தப்பட்டு, ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் அதன் முந்தைய கட்டுப்பாடுகளை கைவிட்டதுடன், இராணுவவாதம் மற்றும் அதன் கடந்தகால நிஜமான அரசியலுக்குத் திரும்புவதை அது அறிவித்தது.

சிரிய போருக்குள், சுமார் 1,200 சிப்பாய்கள் மற்றும் ஒரு சிறிய போர்க்கப்பலின் பின்புலத்துடன், ஜேர்மன் விமானப்படை நுழைவது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்எழுச்சியில் ஒரு புதிய மற்றும் அச்சுறுத்தலான அத்தியாயத்தை திறந்துவிடுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், பாதுகாப்புத்துறை மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் ஆகியோர் ஜனவர் 2014 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் "இராணுவக் கட்டுப்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக" அறிவித்திருந்தனர்.  வல்லரசு அரசியலுக்கு ஜேர்மனி திரும்புவதற்குப் பின்னால் உள்ள பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நலன்களின் அடித்தளத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், ஸ்ரைன்மையர், ஜேர்மனி "உலக அரசியலின் பக்கவாட்டில் இருந்து வெறுமனே கருத்துக்களைக் கூற" தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வதினும் "மிக பெரியதும் மற்றும் மிகவும் முக்கியமானதும்" ஆகுமென ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தார்.

முன்னணி அரசியல்வாதிகள், இதழாளர்கள் மற்றும் கல்வியாளர்களது சமீபத்திய கருத்துக்கள் இத்தகைய கருத்துக்களின் நீண்டகால தாக்கங்களை முன்பினும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. தற்போதைய ஜேர்மன் தலையீடு வெறும் தொடக்கம் மட்டுமேயாகும். அந்த முறையீடுகள் ஜேர்மன் இராணுவத்திற்கான புதிய ஆயுதங்கள் உட்பட, சிரியாவில் ஜேர்மன் தரைப்படைகளை அனுப்புவது உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் ஜேர்மன் இராணுவ தலையீடுகளின் விரிவாக்கம் மற்றும் கட்டாய இராணுவச் சேவையை மறுஅறிமுகம் செய்வது உள்ளடங்கலாக முறையீடுகளை உயர்த்தியது.

புத்தாண்டிற்கு முன்னதாக, ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள, Bild am Sonntag உடனான ஒரு நீண்ட பேட்டியில், “நிறைய நிலைநிறுத்தங்களுக்கும், ஆயுதப் படைகளுக்கான கூடுதல் நிதிகளுக்கும் மற்றும் கூடுதல் சிப்பாய்களுக்கும்", அத்துடன் ஓர் "ஐரோப்பிய இராணுவத்தை" உருவாக்குவதற்கும் அழைப்புவிடுத்தார்.

அவர் 2016 இல் ஜேர்மன் அரசாங்கத்தின் திட்டங்களை வெளியிட்டார்: “அகதிகள் நெருக்கடியையும் சேர்த்தால் மட்டுந்தான் தீர்க்க முடியுமென்ற கண்ணோட்டம் மேலோங்கும் என்பதே எனது அடுத்த ஆண்டுக்கான கணிப்பாகும். ஆனால் ஜேர்மனியைப் பொறுத்த வரையில், இந்த வழிவகை, அதாவது வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை சார்ந்த நம்மீதான கோரிக்கைகள் அனேகமாக நாம் விரும்புவதை விடவும் பெரிதாக இருக்கும். ஒரு பலமான ஐரோப்பிய இணைப்பு இல்லாமல் மத்திய கிழக்கை நம்மால் ஸ்திரப்படுத்த முடியாது. அதுவே தான் ஆபிரிக்காவிற்கும் பொருந்தும்.”

இந்த சாராம்சம் தான் ஆழ்ந்து ஆராய்ந்து ட்ரொட்ஸ்கியால், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு ஹிட்லர் அல்ல, ஆனால் ஹிட்லரின் ஒரு கூறுபாடு ஒவ்வொரு ஜேர்மன் முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதியிடமும் உள்ளமைந்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்த ஜேர்மன் இராணுவவாதத்தின் வேகமான மற்றும் மூர்க்கமான மீள்எழுச்சியை எவ்வாறு விவரிப்பது?

1930களில், உலக முதலாளித்துவத்தின் மற்றும் அது எதன்மீது அடித்தளமிட்டு இருந்ததோ அந்த தேசிய அரசு அமைப்புமுறையின் ஆழ்ந்த நெருக்கடிக்கு, ஜேர்மன் ஆளும் உயரடுக்குகள், வல்லரசு அரசியல் மற்றும் போருக்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக விடையிறுத்தன. ஆக்ரோஷமான ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உயர்வுக்கு இட்டுச் சென்ற புறநிலை உந்துசக்தியை பகுத்தாராய்ந்து, ட்ரொட்ஸ்கி 1932 இல் எழுதினார்: “ஜேர்மனியின் உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் அதிகமாக அதிகளவில் வேகமெடுக்கையில், அவை இன்னும் அதிகளவில் இயக்க சக்தியைப் பெறும்போது, ஒரு வறிய மாகாண மிருகக்காட்சிசாலையின் கூண்டு 'அமைப்புக்கு' ஒத்த ஒரு அமைப்புமுறையாக, ஐரோப்பாவின் அரசு அமைப்புமுறைக்குள் இன்னும் அதிகளவில் அவற்றின் குரல்வளை நெரிக்கப்படும்.”

இந்த "கூண்டுகளது அமைப்பை" உடைப்பதற்கான ஜேர்மன் உயரடுக்குகளின் முயற்சியின் விளைவுகள் நன்கு தெரிந்ததே. 1933 இல், ஹிட்லர் சான்சிலராக ஆக்கப்பட்டார், அதனையடுத்து "உலகையே ஆள்வதற்காக ஐரோப்பாவை கைப்பற்றுதவற்கான" நாஜி ஜேர்மனியின் முயற்சி ஒட்டுமொத்த நாடுகளையும் நாசமாக்கியதுடன், மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது.

நாஜி ஜேர்மனியின் இராணுவ தோல்விக்கு எழுபது ஆண்டுகாலத்திற்குப் பின்னர், போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பு, இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்ற முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளில் எதையும் தீர்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

ஜேர்மனி தற்போது நேட்டோ கட்டமைப்பிற்குள் மீள்-இராணுவமயமாகி, ஜேர்மன் விமானப்படை ISIS க்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் பாகமாக நடவடிக்கை எடுத்து வந்தாலும் கூட, மத்திய கிழக்கின் மறு-பங்கீட்டிற்கான தீவிரமயப்பட்ட போரும், கிழக்கு ஐரோப்பா மற்றும் யுரேஷியாவின் கட்டுப்பாட்டுக்கான மோதல்களும் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு இடையே அதிகரித்த பதட்டங்கள் மற்றும் மோதல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு அங்கே எந்த சந்தேகமும் இல்லை.

ஜேர்மன் ஆளும் உயரடுக்கு அதன் சொந்த தேசிய நலன்களைப் பின்தொடர்வதற்கான திட்டங்களை நீண்டகாலமாக விஸ்தாரப்படுத்தி வருகிறது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தை சேர்ந்த கொர்னார்ட் அடினோவர் அறக்கட்டளை 2001 இல் பிரசுரித்த ஒரு மூலோபாய ஆவணத்தில், மத்திய கிழக்கில் "அடிப்படை ஜேர்மன் நலன்களைப்" பின்வருமாறு வரையறுத்தது: “இது [ஜேர்மனியின்] பாதுகாப்பு மற்றும் அதன் பங்காளி ஐரோப்பிய நாடுகளது ஆபத்து வளையத்தை தடுப்பதற்காக பாதிக்கப்பட்ட நாடுகளை ஸ்திரப்படுத்துவதை நோக்கி, தடையற்ற மூலப்பொருள் வினியோகங்களை பாதுகாப்பதற்காக, மற்றும் ஜேர்மன் வணிகங்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இருக்கிறது.”

அந்த ஆய்வு "அப்பிராந்தியத்தின் முக்கிய அரசுகளது (எகிப்து, துருக்கி, ஈரான்) ஏற்றுமதி சந்தைகளின், மற்றும் அனைத்திற்கும் மேலாக" ஜேர்மனியின் ஏற்றுமதி-உந்தப்படும் பொருளாதாரத்திற்கு "கடன்தீர்க்கும் வகையுடைய வளைகுடா நாடுகளது" முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியது. “ஆகவே விற்பனை சந்தைகளைப் பாதுகாக்க, சாத்தியமான அளவிற்குச் சந்தைகளைத் தடைகளின்றி அணுகுவதற்கு, மற்றும் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் கிழக்கு ஆசிய தொழில்துறை நாடுகள் போன்ற போட்டியாளர்களை கையாள ஒரு பங்களிப்பு அளிப்பதற்கு" பொருத்தமாக உள்ளது.

சமீபத்திய மாதங்களில், ஜேர்மன்-மேலாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் போலாந்தின் வலதுசாரி தேசியவாத அரசாங்கத்திற்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டங்கள் வல்லரசுகளுக்கு இடையிலான பிளவுகளைக் கூடுதலாக வெளிப்படுத்தி உள்ளன. அந்த போலாந்து அரசு ரஷ்யாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கமான கூட்டணியை நோக்கி திரும்பியுள்ளது. “ரஷ்யா மற்றும் ஜேர்மனிக்கு எதிர்பலமாக, ஐரோப்பாவின் ஒரு புதிய மேலாதிக்க சக்தியாக பால்டிக் கடலில் இருந்து கருங்கடல் வரையில் நீண்ட நாடுகளது ஒரு கூட்டணியாக இன்டர்மரியம் (Intermarium)” என்ற போலாந்தின் "தொலைநோக்குப் பார்வையை" சமீபத்தில் Frankfurter Allgemeine Zeitung குறைகூறி இருந்தது.

சிரிய போரில் ஜேர்மன் விமானப்படை நுழைவதென்பது உலக முதலாளித்துவத்தின் இராணுவமயமாக்கலில் ஓர் அபாயகரமான புதிய கட்டத்தை திறந்துவிடுகிறது.