ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests against unemployment erupt across Tunisia

துனிசியா எங்கலும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கின்றன

By Alex Lantier
23 January 2016

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் துனிசியாவில் ஒரு பட்டதாரி காய்கறி விற்பனையாளரான மொஹமத் புவாசிசி (Mohamed Bouazizi) தன்னைத்தானே எரித்துக்கொண்டமை வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக பாரிய போராட்டங்களை தூண்டிவிட்டு, துனிசிய ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியை பதவிலிருந்து கீழிறக்கிய புரட்சிகர போராட்டங்களை தீவிரப்படுத்தியது, ஐந்தாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துனிசியா எங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

தெற்கு துனிசியாவில் உள்ள காசெரைன் (Kasserine) நகருக்கு ஓர் ஆசிரிய வேலை தேடிவந்த இளைஞர் Ridha Yahyaoui கடந்த சனியன்று போராட்டம் ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து, தெற்கு மற்றும் மேற்கு துனிசியா எங்கிலும், தலைநகர் துனிஸ் வரையில், மற்றும், வியாழக்கிழமை வாக்கில், ஒட்டுமொத்த நாடெங்கிலும் போராட்டங்கள் பரவின. 2011 மேலெழுச்சியின் போது துனிசிய பாதுகாப்புப் படைகள் டஜன் கணக்கான போராட்டக்காரர்களை கொன்ற காசெரைன் நகரில், வியாழனன்று நடந்த மோதல்களின் போது ஒரு பொலிஸ்காரர் வாகனம் கவிழ்ந்ததில் அவர் உயிரிழந்தார், விபரங்கள் தெரியாத எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.        

“நான் கல்வித்தகுதி கொண்ட மின்சார பொறியாளன், ஆனால் 13 ஆண்டுகளாக வேலையின்றி இருக்கிறேன். நாங்கள் கையளிப்புகளை எதிர்பார்க்கவில்லை, எங்களது வேலை உரிமையைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்,” என்று காசெரைன் போராட்டம் ஒன்றில் மின்சார பொறியாளர் மொஹமத் மிதினி ராய்டர்ஸிற்கு தெரிவித்தார்.

வேலைகளுக்கும் மற்றும் துனிசிய ஆட்சியைக் கலைக்கவும் அழைப்புவிடுத்து, துனிஸில் வியாழனன்று நடந்த வேலையற்ற பல்கலைக்கழக பட்டதாரிகளின் ஒரு பேரணி நடந்தது, அதற்குப் பின்னர் அரசு நேற்று துனிசியா எங்கிலும் மாலை 8.00 மணி முதல் காலை 5.00 மணி வரையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. போராட்டங்கள் "பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம்" விளைவிப்பதாக துனிசிய உள்துறை மந்திரி எச்சரித்தார். அந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுமென அது எச்சரித்தது, இருப்பினும் காசெரைன் போராட்டக்காரர்கள் ஏற்கனவே இவ்வார தொடக்கத்தில் அவர்களது பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த ஓர் உள்ளூர் ஊரடங்கு உத்தரவை மீறியிருந்தனர்.

துனிசியாவில் பாரிய போராட்டங்கள் வெடித்திருப்பது, முதலில் துனிசியாவில் பென் அலி சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், பின்னர் எகிப்தில் முபாரக் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகர போராட்டத்திற்குள் இழுத்துவந்த மனக்குறைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அமெரிக்காவும் பிரதான ஐரோப்பிய சக்திகளும் லிபியாவில் தொடங்கி மாலி வரையில் அப்பிராந்தியத்தை சீரழித்த போர்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. அதேநேரத்தில், நேட்டோ அதிகாரங்களும் துனிசிய முதலாளித்துவ வர்க்கமும் உழைக்கும் மக்களின் அத்தியாவசிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கவோ தவறியுள்ளன.

ஒரு சிறிய காலத்திற்கு இஸ்லாமிய என்னாஹ்டா கட்சி (Ennahda party) பதவியிலிருந்தது, அதற்குப் பின்னர் பென் அலியின் கட்சியான ஜனநாயக அரசியலமைப்புக் கட்சி (Constitutional Democratic Rally – RCD), Nidaa Tounes என்று புதிதாக பெயர் மாற்றிக்கொண்டு, துனிசியாவின் ஊழல்பீடித்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நடுத்தர வர்க்க "இடது" குழுக்களின் ஆதரவுடன் 2014 இல் மீண்டும் பதவிக்கு வந்தது.

கல்வித்துறை அமைச்சகத்தால் வேலைகளைக் குறித்து கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்த நிலையில், Ridha Yahyaoui இந்த வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களது பேரணி ஒன்றில் உரையாற்ற ஒரு கம்பத்தின் மீதேறிய போது மின்சாரம் தாக்கி இறந்ததார், அதற்கு ஒரு வாரத்திற்கு பின்னர் போராட்டங்கள் தொடங்கின. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழு வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளில் Yahyaoui உம் ஒருவராக இருந்தார், முன்னதாக இவர்கள் கடந்த ஆண்டு ஒரு மறியல் போராட்டத்தைச் செய்திருந்தனர், இந்தாண்டு தொடக்கத்தில் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து முறையீடுகளையும் வைத்திருந்தனர்.

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சலீம் அயாரி Huffington Post-Maghreb க்கு கூறுகையில், “அவர்களது நிலைமையைச் சீராக்க பிரதம மந்திரியிடம் சமர்பிக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பதை" Yahyaoui “சமீபத்தில் கண்டறிந்தார். … அப்பட்டியல் மேயருடன் அல்லது அவ்விடயத்தைக் கவனித்து வந்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமலேயே மாற்றப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டது,” என்றார். 

புவாசிசி போலவே Yahyaoui இன் துயரகரமான மரணமும், நலிந்து போயுள்ள தொழில்துறை மற்றும் சுரங்கத்துறையை இதயதானத்தில் கொண்டுள்ள தெற்கு துனிசியா எங்கிலும் போராட்டங்களை தூண்டிவிட்டது, அங்கேதான் காசெரைன் மற்றும் சிதி புசிட் ஆகிய நகரங்களும் அமைந்துள்ளன.   

Béja இல் கட்டுமானத்துறை தொழிலாளர்களும் மற்றும் நாளாந்த கூலித்தொழிலாளர்களும் ஆவணங்கள் மற்றும் வழமையான வேலையிட நிலைமைகள் கோரி போராட்டங்களில் இணைந்தனர், அந்த போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்று Meknassi மற்றும் Sousse உட்பட தெற்கு மற்றும் மத்திய துனிசியா எங்கிலுமான நகரங்களில் முனிசிப்பல் கட்டிடங்களை ஆக்கிரமிக்க முயன்றதுடன், சாலைகளையும் மறித்தனர். காசெரைன்க்கு விட்டுக்கொடுப்புகளை வழங்குவதாகவும் மற்றும் ஒருசில ஆயிர வேலைகளை உருவாக்க வாக்குறுதி அளித்தும் புதனன்று அரசாங்கம் அந்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முயன்றபோது, துனிசியா எங்கிலுமான ஏனைய நகரங்களின் தொழிலாளர்களும் அந்த இயக்கத்தில் இணைந்தனர். Sidi Bouzid, Béja, Kébili, Meknassi, Mazouna, Gabès, Sfax, மற்றும் Sousse ஆகிய அனைத்தும் போராட்டங்களால் அதிர்ந்தன.

Jendouba மற்றும் Tozeur உட்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் வேலைகள் கோரிய மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துனிசின் தொழிலாள வர்க்க மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன, அங்கெல்லாம் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், ஒரு பொலிஸ் நிலையத்தை தீயிட்டு கொளித்தியதாகவும் செய்திகள் குறிப்பிட்டன.

வாரயிறுதியில் போராட்டங்கள் பரவும் என்று அரசாங்கம் எச்சரிக்கை அடைந்ததால், ஜனாதிபதி Béji Caïd Essebsi, முன்னாள் பென் அலி ஆட்சியின் அதிகாரியான இவர், நேற்றிரவு தொலைக்காட்சியில் துனிசிய மக்களுக்கு உரையாற்றினார். பெருந்திரளான மக்களுக்கு அனுதாபமாக இருப்பதாக சிறிது காட்டிக்கொண்ட Essebsi, “வேலைவாய்ப்பற்றோர் காலாகாலத்திற்கும் காத்துக் கொண்டிருக்க முடியாது" என்பதை ஒப்புக்கொண்ட பின்னர், அடையாளம் தெரியாதவர்கள் போராட்டங்களை "தூண்டிவிட உதவுவதாகவும், நாசவேலை மற்றும் கொள்ளை நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவதாகவும்" தெரிவித்தார்.

Essebsi, எரிச்சலூட்டும் விதத்தில், கூடுதல் பணம் செலவு செய்யாமலேயே அவரால் வேலைகளை உருவாக்க முடியுமென தெரிவித்தார். அரசால் "ஏனைய திட்டங்களிலிருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியமின்றி, தேவைப்படும் தொகையைத் திரட்ட முடியும்,” என்று அவர் உணர்வதாக தெரிவித்தார். ஆனால் அவர் அரசாங்கம் என்ன செய்தாலும், "அதன் வெளிநாட்டு பங்காளிகளுடனான", அதாவது ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பிரதான வங்கிகள் மற்றும் அரசாங்கங்களுடனான "நடவடிக்கைகளை, நிதியியல் மற்றும் ஏனைய அனைத்தையும்" மதிக்கும் என்று சூளுரைத்தார்.  

Essebsi இன் பிதற்றல் வாக்குறுதிகள் என்னவாக இருந்தாலும், அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான உழைக்கும் பெருந்திரளான மக்களது கோரிக்கைகள், வட ஆபிரிக்காவின் முதலாளித்துவ ஆட்சியுடனும் குறிப்பாக ஏகாதிபத்திய சக்திகளின் தீவிரமடைந்துவரும் இராணுவ தலையீடுகளுடனும் பொருந்தாது என்பதையே கடந்த ஐந்தாண்டுகள் திட்டவட்டமாக எடுத்துக்காட்டுகின்றன. முதலீடு மற்றும் வேலைகளுக்காக துனிசியா தவித்து கொண்டிருக்கிறது, நேட்டோ மற்றும் அதன் இஸ்லாமிய கூட்டாளிகள் ஓர் இரத்தந்தோய்ந்த போரில் கேர்னல் மௌம்மர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த பின்னர் அண்டைநாடான லிபியாவிலிருந்து இரத்தஞ்சிந்திய பரவல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.     

துனிசியாவில் வேலைவாய்ப்பின்மை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது (இதில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக இளைஞர் வேலைவாய்ப்பின்மை உள்ளடங்கும்), முறைசாரா பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 சதவீதத்திற்கு இணையாக உள்ளது, புரட்சி தொடங்கியதிலிருந்து நுகர்வு சக்தி 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று Tuniscope குறிப்பிட்டது.    

அனைத்திற்கும் மேலாக பென் அலி வெளியேற்றப்பட்டதற்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், எந்தவொரு சமூக போராட்டமும், அது எந்தளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சி தலைமையின்றி வெற்றியடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. துனிசியா மற்றும் எகிப்தின் 2011 மேலெழுச்சிகள் பெருந்திரளான தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய மிகவும் பலம் வாய்ந்த புரட்சிகர போராட்டங்களாக இருந்தன, அவை, முன்பு தோற்கடிக்க முடியாததாக பார்க்கப்பட்ட, அஞ்சிநடுங்கிய சர்வாதிகாரங்களது பாதுகாப்பு படைகளின் எதிர்ப்பைத் துரிதமாக தகர்த்தெறிந்தன.

ஆனால் துனிசியா, எகிப்து மற்றும் அதற்கப்பால் உள்ள நாடுகளில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்குத் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தி போராடுவதற்கு ஒரு புரட்சிகர கட்சி இல்லாததால், அவ்விரு நாடுகளது ஆட்சிகளால் இறுதியில் அவற்றை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடிந்தது. அதிகாரம் சிறிது காலத்திற்கு இஸ்லாமியவாதிகளின் கரங்களுக்கு மாற்றப்பட்ட பின்னர்—துனிசியாவில் Essebsi, எகிப்தில் தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி போன்ற—முன்னாள் ஏதேச்சதிகாரிகளது பரிவாரங்களின் ஆட்களே, இறுதியில், பல்வேறு குட்டி-முதலாளித்துவ "இடது" அமைப்புகளின் ஆதரவுடன் மீண்டும் வெற்றிகரமாக அதிகாரத்திற்கு வந்தனர்.      

சர்வதேச அளவில் முதலாளித்துவ வர்க்கம் இத்தகைய சக்திகள் வகிக்கும் பாத்திரம் குறித்து மிகவும் நனவுபூர்வமாக இருப்பதுடன், அவற்றிற்குக் கணிசமான அளவுக்கு வெகுமதியும் அளித்துள்ளது. துனிசிய பொது தொழிலாளர் சங்கம் (UGTT) மற்றும் துனிசிய மனித உரிமைகள் கழகம் (LTDH) பல்வேறு வியாபார மற்றும் தொழில்வல்லுனர் குழுக்களுடன் சேர்ந்து 2015 நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டன. “துனிசியாவில் ஒரு பன்முக ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதில்" அவற்றின் "தீர்க்கமான பங்களிப்பை" நோபல் கமிட்டி பாராட்டியது.

துனிசிய போராட்டங்கள் இப்போது எடுத்துக்காட்டுவதைப் போல, UGTT மற்றும் LTDH ஒரு ஜனநாயகத்தைக் கட்டமைக்கவில்லை, மாறாக பழைய சர்வாதிகாரம் திரும்பி வருவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பின் மீது ஆழ்ந்த பொருளாதார ஒடுக்குமுறை மற்றும் அடக்குமுறையைக் கட்டமைப்பதற்கும் ஒரு புதிய வேஷத்தைக் கட்டமைத்திருந்தன. அவற்றின் ஜனநாயக பாசாங்குத்தனங்கள் என்னவாக இருந்தாலும், அவை இப்போது போராட்டங்களின் குரல்வளையை நெரிக்க முயன்று வருவதுடன், போராட்டக்காரர்களுக்குள் லிபிய பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திகிலூட்டும் கட்டுக்கதைகளைப் பரப்புவதன் மூலமாக பொலிஸ் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த உதவி வருகின்றனர்.

பென் அலி ஆட்சியின் ஒரு தூணாக விளங்கிய UGTT, ஆர்ப்பாட்டங்களின் கோரிக்கைகளை "நியாயமானதென" சிறியளவில் குறிப்பிட்ட ஓர் அறிக்கை வெளியிட்ட பின்னர், போராட்டக்காரர்களிடமிருந்து அரசு கட்டிடங்களைப் பாதுகாக்க அவற்றைச் சுற்றி UGTT அங்கத்தவர்களை நிறுத்துவதற்கு முன்மொழிந்தது. ஓர் அறிக்கையில், அது "சமூக போராட்டத்தை மோசடியாக்க முயலும் குற்றகரமான குழுக்கள் நடத்தும் கொள்ளை மற்றும் திருட்டைக் கண்டிப்பதாகவும் … பொதுத்துறை ஆலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களைப் பாதுகாக்க அதன் அங்கத்தவர்களைப் பொதுவாக ஒன்றுதிரட்டுவதற்கு முறையிடுவதாகவும்" அது தெரிவித்தது.

2014 தேர்தல்களுக்கு முன்னர் Nidaa Tounes உடன் கூட்டு சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க "இடது" குழுவான மக்கள் முன்னணியின் ஒரு முக்கிய கூறுபாடான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஹம்மா ஹம்மாமியும், அவரது கட்சி மீண்டும் துனிசியாவில் ஒரு புரட்சியை தடுக்க விரும்புவதாக தெளிவுபடுத்தி உள்ளார். Mosaïque, FM வானொலியில் அவர் பேசுகையில், மக்கள் முன்னணி அங்கத்தவர்கள் "போராட்டங்களில் இணைய அனுமதிக்கப்பட்டாலும்,” இது "அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் நோக்கத்திற்காகவே ஆகும், அதன் மூலமாக அவை ஒரு தன்மையான குணாம்சத்தை ஏற்கும், அதற்காக தான்,” என்றவர் தெரிவித்தார்.