ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fifteen years of the war in Afghanistan

ஆப்கானிஸ்தான் போரின் பதினைந்து ஆண்டுகள்

James Cogan
7 October 2016

அக்டோபர் 7, 2001 அன்று, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தாலிபான் ஆட்சிக்கு எதிராகவும் மற்றும் அந்நாட்டின் அல் கொய்தா தளங்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஒரு முழு அளவிலான இராணுவ தாக்குதலைத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு, தொடர்ச்சியான பல படுகொலைகள் என்பதை விட ஒரு போருக்கு சற்றுக் குறைவான ஒன்றாகும். அமெரிக்க இராணுவம் பல்வேறு படுகொலை ஆயுதங்களையும் மற்றும் உத்திகளையும் பரிசோதிக்க அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தியது. சந்தேகத்திற்குரிய பதுங்குகுழி மற்றும் குகைகளின் வலையமைப்பு, ஏழு மீட்டர் கான்கிரீட்டையே ஊடுருவக்கூடிய குண்டுகளால் சிதைக்கப்பட்டன. தாலிபான் போராளிகள் நிரம்பிய பகுதிகளாக கருதப்பட்டவை, ஏறத்தாழ 1,700 மீட்டர் சுற்றளவை ஒரு பயங்கர காட்சிக்களமாக மாற்றும் “டெய்சி கட்டர்ஸ்" (Daisy Cutters) எனப்படும் மிக சக்திவாய்ந்த விமான குண்டுகளால், அல்லது கொத்தணிக் குண்டுகள் (cluster bombs) எனப்படும் பரவலாக சிதறி வெடிக்கும் குண்டுகளால் எரித்து சாம்பலாக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய சிறப்பு படைகள், குற்றஞ்சாட்டப்பட்ட அல் கொய்தா மற்றும் தாலிபான் அங்கத்தவர்களை படுகொலை செய்து, அந்நாட்டை வேட்டையாடின.

மஜர்-அல்-ஷரிப் மற்றும் குண்டூஸ் போன்ற நகரங்களில் ஆயிரக் கணக்கான தாலிபான் சிறை கைதிகள் அமெரிக்க ஆதரவிலான வடக்கு கூட்டணி போராளிகள் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள், அல் கொய்தாவுடன் தொடர்பில்லாத பலரும் கூட, குவாண்டனாமோ வளைகுடா, கியூபா அல்லது சிஐஏ இன் "இரகசிய இடங்களுக்கு" சித்திரவதைக்காக அனுப்பப்பட்டனர். புஷ் நிர்வாகம் அதனால் பாதிக்கப்பட்டவர்களை, ஜெனீவா தீர்மானங்களால் பாதுகாக்கப்படாத "சட்டவிரோத எதிரி போராளிகள்" என்று குற்றஞ்சாட்டி அதன் போர் குற்றங்களை நியாயப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் இரத்த ஆறு ஓடவிடப்பட்டதை பின்தொடர்ந்து, வடமேற்கு பாகிஸ்தானின் பழங்குடி எல்லை பிராந்தியங்களில், வாஷிங்டனால் கோரப்பட்ட, பாகிஸ்தானிய இராணுவ தாக்குதல்கள் நடந்தன. ஆயிரக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு துரத்தப்பட்டனர். அதற்கடுத்த ஆண்டுகளில், அமெரிக்க இராணுவம் டிரோன் ஏவுகணை தாக்குதல்களைக் கொண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு பாகிஸ்தான் இரண்டையும் அச்சுறுத்தியது.

முன்னர் தாலிபான்களுக்கு பிரதான ஆதரவாளராக இருந்த பாகிஸ்தானிய அரசாங்கத்தின் சம்மதம் குறிப்பாக முரட்டுத்தனமாக பெறப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் Richard Armitage செப்டம்பர் 2001 இல் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குக் கூறுகையில்: “நீங்கள் எங்களுக்கு எதிராக நின்றால், நாங்கள் உங்களது சிறிய மதிப்பற்ற நாட்டின் மீது குண்டுவீசி திரும்ப கற்காலத்திற்கு அனுப்பிவிடுவோம்—புரிகிறதா?” என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளும் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குவோரும், செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத அட்டூழியங்களுக்காக அல் கொய்தாவிற்கு நீதி கற்பிப்பதே, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மீதான மூர்க்கத்தனத்தை ஊக்குவித்ததாக இன்னமும் வாதிடுகிறார்கள். அந்த படையெடுப்பு "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" முதல் தாக்குதல் என்று ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ் அறிவித்தார். தாலிபான் அல் கொய்தாவிற்கு இடமளித்திருந்தது மற்றும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்தது என்ற குற்றச்சாட்டை புஷ் நிர்வாகம் அப்படையெடுப்பான சாக்குபோக்காக முன்னெடுத்தது.

இந்த நியாயப்பாடுகள் பொய்களை அடித்தளத்தில் கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானின் தாலிபான் மற்றும் அல் கொய்தாவின் பரந்த பெரும்பான்மை அங்கத்தவர்களுக்கும் 9/11 தாக்குதல்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அவை இஸ்ரேல் மற்றும் அத்துடன் சேர்ந்து மத்திய கிழக்கின் பிரதான அமெரிக்க கூட்டாளியான சவூதி அரேபிய ஆளும் உயரடுக்கு பிரதிநிதிகளின் உதவியுடன் அமெரிக்காவில் செயல்பட்டு வந்த ஒரு பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்டன. அமெரிக்க உளவுத்துறை முகமைகள் நடைமுறையளவில் கண்டும்காணாமல் இருந்ததாலேயே அத்தாக்குதல்களை நடத்த முடிந்திருந்தது, அவை, நன்கறியப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புபட்டவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்திருந்த போதினும், அத்தகையவர்கள் வணிகத்திற்கான விமானங்களை கடத்துவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 9/11 இல் நடத்தப்பட்ட படுகொலை நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தானிலும், 18 மாதங்களுக்குள், ஈராக்கிலும் நீண்டகால திட்டத்திலிருந்த அமெரிக்க படையெடுப்புகளுக்கு சாக்குபோக்குகளாக பயன்படுத்தப்பட்டன.

அக்டோபர் 9, 2001 இல் உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்த "ஆப்கானிஸ்தான் போரை நாம் ஏன் எதிர்க்கின்றோம்" என்ற தலையங்க அறிக்கை, 9/11 ஐ தொடர்ந்து வந்த பரபரப்பான சம்பவங்கள் குறித்து பரப்பப்பட்ட முதலாளித்துவ கருத்துரைகளின் மேலோட்டத்தன்மை மற்றும் இரத்ததாகத்திற்கு எதிராக, அரசியல் மற்றும் சமூக அபிவிருத்திகளை மார்க்சிச அணுகுமுறையில் தெளிவுபடுத்தியதற்கு ஒரு சான்றாகும்.

அந்த அறிக்கை தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தியது: “அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நீண்ட நோக்குடைய சர்வதேச நலன்களின் பேரில் இவ் யுத்தத்தை முன்னெடுத்துள்ளது. இவ் யுத்தத்தின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சோவியத் யூனியனின் உடைவானது மத்திய ஆசியாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இப்பிரதேசம் உலகத்தின் எண்ணெய் வளத்தையும், இயற்கை வாயுக்களையும் கொண்டுள்ள இரண்டாவது பாரிய பிரதேசமாகும்.”

1991 இல் சோவியத் ஒன்றியமே கலைக்கப்பட்டு, கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகள், சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவில் முதலாளித்துவ சொத்துறவுகள் மீட்டமைக்கப்பட்டதன் உலக-வரலாற்று தாக்கங்களைக் குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பகுப்பாய்வில் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அந்த மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டது.

உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் 2006 இல் 9/11 ஐந்தாம் நினைவாண்டில் அளித்த உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகளால், சவாலுக்கிடமின்றி அமெரிக்காவின் உலகளாவிய புவிசார்மூலோபாய மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க ஒரு முன்னுதாரணமற்ற சந்தர்ப்பமாக விளங்கப்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியம் இல்லாததால், உலகில் எந்தவொரு இடத்திலும் அமெரிக்க இராணுவ பலத்தைக் காட்டுவதற்கு அங்கே நடைமுறையளவில் எந்தவொரு தடையும் இல்லை. அமெரிக்காவின் உலக பொருளாதார அந்தஸ்தில் ஏற்பட்டிருந்த நீண்டகால வீழ்ச்சியை சரிகட்ட, மூர்க்கமான இராணுவ பலத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் அதிகரித்தளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முடியுமென அமெரிக்க ஆளும் உயரடுக்கு நம்பியது.” (டேவிட் நோர்த்தின் ஒரு கால் நூற்றாண்டு போர், மெஹ்ரிங் புக்ஸ், 2016, பக்கம் 375)

ஈராக்கிற்கு எதிரான 1990-1991 வளைகுடா போர், மத்திய கிழக்கில் நிரந்தர அமெரிக்க இராணுவத் தளங்களின் ஸ்தாபகம், ஆபிரிக்க மற்றும் பால்கன்களில் அமெரிக்க தலையீடுகள், மற்றும் சேர்பியாவிற்கு எதிரான 1999 போரில் இருந்து இன்னமும் விளங்கப்படுத்தப்படாத 9/11 சம்பவங்கள் வரையிலான நெடிய ஒன்றோடொன்று சங்கிலித்தொடர் போன்ற அபிவிருத்திகளின் பாகமாக அல்லாமல், ஆப்கானிஸ்தான் படையெடுப்பை புரிந்து கொள்ள முடியாது.

அல் கொய்தா மற்றும் தாலிபானின் தோற்றுவாய்களே கூட, சோவியத் ஒன்றியத்தைப் பலவீனப்படுத்த மற்றும் நிலைகுலைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முந்தைய சூழ்ச்சிகளில் தங்கியுள்ளது, அந்நடவடிக்கையானது முதலாளித்துவத்தை மீட்டமைப்பதன் மூலமாக அதன் தனிச்சலுகை அதிகாரத்துவ ஜாதியின் நிலையைப் பேணுவதென்ற ஸ்ராலினிச ஆட்சியின் முடிவை விரைவுபடுத்தியது. 1978 இல் இருந்து, கார்ட்டர் நிர்வாகத்தினது உத்தரவுகளின்படி, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா உடனான ஒத்துழைப்புடன் சிஐஏ காபூலில் இருந்த சோவியத் ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதியுதவி வழங்கி ஆயுதமேந்த செய்தது, இது நீண்டகாலத்திற்கு சோவியத் படைகளை எதிர்த்து கிளர்ந்தெழ செய்தது. அமெரிக்க அரசாங்கம் ஆதரித்தவர்களில் ஒருவர்தான், சவூதி மில்லியனரான பின் லேடன், மேலும் அல் கொய்தா —"பயிற்சி களம்" (The Base)— எனப்பட்ட பாகிஸ்தானிய முகாம்களில் பயிற்சியளிக்க உலகெங்கிலும் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் தான் வஹாபிஸ்ட் தீவிரவாதிகள்.

1980 கள் பூராவும், இஸ்லாமிய முஜாஹதீனை ரீகன் நிர்வாகம் "சுதந்திர போராளிகளாக" புகழ்ந்ததுடன், வாஷிங்டனால் வேண்டுமென்ற தூண்டிவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பை ஆப்கான் மக்களுக்கு எதிரான ஒரு குற்றமாக கண்டித்தது. கடந்த 15 ஆண்டுகளில், வாஷிங்டன் எந்தளவிற்கு ஆப்கான் மக்களுக்கு எதிராக வன்முறை நடத்தியுள்ளதென்றால் அது சோவியத் ஒன்றிய ஏதேனும் நடத்தியிருந்தால் அதைவிட மிக மிக அதிகமாகும். இப்போது 38 ஆண்டுகளுக்கு நீளும் ஒரு காலகட்டத்தில் ஆப்கான் துயரத்தின் மத்திய தூண்டுதல்தாரியாக அமெரிக்கா இருந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும். ஆறு மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியதால், உலகிலேயே மிக அதிகளவிலான அகதிகளை-உருவாக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் ஆகியுள்ளது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அமெரிக்காவிற்குள்ளேயே கூட பரந்த தாக்கங்களைக் கொண்டுள்ளது. 2001 தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு, நடைமுறையளவில் கண்காணிப்பின்றி அரசின் உளவுவேலைகள் செய்வதற்கு, காலவரையின்றி சிறையிலடைக்க, இராணுவ தீர்ப்பாயங்கள் அமைக்க, பொலிஸ் அமைப்புகளை அதிகளவில் இராணுவமயப்படுத்த மற்றும் முஸ்லீம் பின்புலத்தை கொண்ட அமெரிக்கர்களை ஒட்டுமொத்தமாக தொல்லைக்கு உட்படுத்த அது சாக்குபோக்காக மாறியது. இந்த நடவடிக்கைகளின் நிஜமான நோக்கம் பயங்கரவாதிகளை அதைரியப்படுத்துவது கிடையாது, மாறாக அதிகரித்து வரும் சமூக மற்றும் வர்க்க எதிர்விரோதங்களை ஒடுக்குவதற்காக அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதற்காகும். அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், உலகெங்கிலும் அதேபோன்ற கொள்கைகளுக்கு முன்மாதிரியாக மாறியது.

அப்படையெடுப்புக்கு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் சூறையாடும் நோக்கங்களில், எதையேனும் சாதித்திருந்தால், அது மிக மிக சொற்பமானதே என்ற யதார்த்தத்தை அது முகங்கொடுக்கிறது. இதைவிட அமெரிக்க சண்டையிட்ட மிக நீண்ட போர் ஆப்கானிஸ்தான் போராகும். இதில் 800 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான அமெரிக்க மற்றும் கூட்டுப்படை துருப்புகள் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளன, ஆனால் பார்வைக்கு எட்டிய தூரம்வரை அங்கே முடிவே தெரியவில்லை. தோற்கடிக்கப்படுவதற்கு பதிலாக, தாலிபானும் மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு போராளிகள் குழுக்களும் அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு படைகளுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை தொடர்ந்து தொடுத்து வருகின்றனர். தெற்கு ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த பகுதியும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்திய வாரங்களில், வடக்கு நகரமான குண்டூஸ் மீது கட்டுப்பாட்டை பெற கடுமையான சண்டை நடந்துள்ளது.

ஆளும் அடுக்கு இன-பிரிவினைவாத பிரிவுகள் மீது அதன் தனிச்சலுகைகளை அமைத்திருப்பதுடன், சர்வதேச உதவிகளை களவாடுவது மற்றும் ஹெராயின் வியாபாரம் ஆகியவற்றோடு சேர்ந்து, ஆப்கான் அரசாங்கம் உலகிலேயே மிகவும் ஊழல் மிகுந்த ஒன்றாகும். பெருந்திரளான ஆப்கான் மக்களால் வெறுக்கப்படும் அமெரிக்க ஆதரவிலான அந்த ஆட்சி, தொடர்ந்து 15,000 அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய துருப்புகளின் உதவி இல்லையென்றால், பொறிந்து போகுமென பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மத்திய ஆசிய எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பொறுத்த வரையில் அதன் ஆதாயம் அதிகமாக இன்னமும் ரஷ்யாவிற்கே செல்கிறது என்றாலும், புதிய எரிவாயு குழாய்கள் கட்டமைக்கப்படுகின்ற நிலையில் அவை அதிகரித்தளவில் சீன எரிசக்தித்துறை பெருநிறுவனங்களின் அதிகாரத்தின் கீழ் வந்து கொண்டிருக்கின்றன. Diplomat இல் வெளியான சமீபத்திய கருத்துரை ஒன்று குறிப்பிட்டதாவது: “தற்போதைய போக்கு தொடர்ந்தால், 2020 வாக்கில் அப்பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 50 சதவீதம் வரையில் சீனா இறக்குமதி செய்யக்கூடுமென சர்வதேச எரிசக்தித்துறை அமைப்பு மதிப்பிடுகிறது, இது மத்திய ஆசியாவின் எரிசக்தி பரிவர்த்தனை மேற்கில் இருந்து கிழக்கிற்கு மாறும் ஒரு தீர்க்கமான மாற்றத்தை சமிக்ஞை செய்கிறது,” என்றது.

ஆப்கானிஸ்தான் மீதான அதன் பிடியை விடுவிக்க அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்கு எந்த விருப்பமும் கிடையாது, அது அணுஆயுதமேந்திய சீனாவும் ரஷ்யாவும், உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முன்னிறுத்துவதாக உணரப்படும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதில் இன்று அதிகரித்தளவில் ஒருமுனைப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் யுரேஷியாவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அந்த பரந்த பெருநிலத்தில் புவியியல்ரீதியிலும், அரசியல்ரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் மேலாதிக்கம் கொண்டுள்ள அந்த இரண்டு நாடுகளிலும் வாடிக்கையாளர் அரசுகளை அது நிறுவ வேண்டியிருப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் தீர்மானித்துள்ளனர். முன்பினும் அதிக சுமையேறிய நிலைமைகளில் ஒவ்வொரு சக்திகளும், அது சிறியதோ பெரியதோ, அதன் ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பலப்படுத்த முனைந்துள்ள நிலையில், ஒவ்வொரு இடத்திலும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மனிதயினத்தின் மீது மூன்றாம் உலக போருக்கான சாத்தியக்கூறு அதிகரித்து வருகிறது.

ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கால் வழிநடத்தப்படும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதையே எதிர்காலம் சார்ந்துள்ளது. நவம்பர் 5 இல் டெட்ராய்டில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்த உள்ள “முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" எனும் மாநாடு, அதுபோன்றவொரு இயக்கத்திற்கான போராட்டத்தில் ஒரு தீர்மானகரமான படியாக இருக்கும். போர், சிக்கனத் திட்டங்கள் மற்றும் ஒடுக்குமுறையை எதிர்க்க ஒரு வழி கிடைக்காத எனும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், இன்றே அம்மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்யுங்கள்.