ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A remembrance of veteran Trotskyist Bill Brust, twenty-five years after his death

மரணமடைந்த இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியான பில் பிரஸ்ட் குறித்த ஒரு நினைவுகூரல்

By Fred Mazelis 
15 September 2016

ஒரு புரட்சிகர சோசலிஸ்டாக 53 ஆண்டுகள் நீண்ட அரசியல் போராட்டத்தை செய்திருந்த பழம்பெரும் ட்ரொட்ஸ்கிஸ்டான பில் பிரஸ்ட் மறைந்த இருபத்தியைந்தாவது நினைவு தினமாகும் இன்று. 1919 ஆம் ஆண்டு பிறந்த தோழர் பிரஸ்ட் கணையப் புற்றுநோயால் தனது 72 ஆம் வயதில் மரணமானார்.

ஜீன் மற்றும் பில் பிரஸ்ட், 1989

பில்லின் வாழ்க்கை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் அதனை ஒரு சோசலிச சமூகத்தை கொண்டு மாற்றீடுசெய்வது ஆகியவற்றுடன் பிணைந்திருந்தது. பில் மற்றும் அவரது மனைவியும் தோழருமான ஜீன் (1921-1997), சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஜேம்ஸ். பி. கனனால் தலைமை கொடுக்கப்பட்டபோது கொண்டிருந்த மிகச்சிறந்த பாரம்பரியங்களின் உருவடிவாயிருந்தனர். பில், 1930களின் பெருமந்தநிலையால் தீவிரமயப்பட்ட ஒரு இளம்தலைமுறையின் பகுதியாக இருந்தார். மினெயபோலிஸ் ரீம்ஸ்டர்ஸின் போராட்டம் அவருக்கு ஊக்கமளித்ததாக இருந்தது. 1934 இல் அவர்களது வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம் தொழிற்துறை தொழிற்சங்கவாதத்தின் பாரிய போராட்டங்களைத் தூண்டுவதில் ஒரு பெரும் பாத்திரம் வகித்தது.

இரண்டாம் உலகப் போர் முடிவடையும் மாதங்களில் பில், ஐரோப்பாவில் ஒரு சிப்பாயாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கு அவரது அனுபவம் அவரது சர்வதேசக் கோட்பாடுகளையும் மனிதகுலத்தை இரண்டாம் உலகப் போருக்குள் மூழ்கடித்த ஏகாதிபத்திய ஒழுங்கின் மீதான அவரது வெறுப்பையும் மேலும் உறுதிப்படுத்தியது.

போரைத் தொடர்ந்து, பில் இறைச்சி பதப்படுத்தும் துறையில் நுழைந்தார். போருக்குப் பிந்திய சக்திவாய்ந்த ஆனால் குறுகியகாலமே நீடித்த தொழிலாள-வர்க்க போர்க்குண எழுச்சியின் பகுதியாக இருந்த இறைச்சி பதப்படுத்தும்துறை தொழிலாளர்களின் 1946 மற்றும் 1948 இரண்டு வேலைநிறுத்தங்களிலுமே அவர் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்தார். போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியானது உயர் வாழ்க்கைத் தரங்களுக்கு இட்டுச் சென்ற அதேசமயத்தில், பனிப் போரானது தொழிற்சங்கங்களிலும் பிறவெங்கிலும் வேட்டையாடும் ஒரு காலகட்டத்திற்கு கட்டியம் கூறியது.

இந்த புறநிலைமைகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக சுயமாக திருப்திப்பட்டுக்கொள்ளும், பழமைவாத மற்றும் ஐயுறவுவாத நிலைப்பாடுகளின் வளர்ச்சிக்கும், சர்வதேச அளவில் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோராலும், அமெரிக்காவில் பேர்ட் கோக்ரான் மற்றும் ஜோர்ஜ் கிளார்க் ஆகியோராலும் தலைமை கொடுக்கப்பட்ட ஒரு திருத்தல்வாதப் போக்கின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களித்தன. இது “புதிய உலக யதார்த்தம்” என்ற பெயரில் அரசியல்ரீதியாக இயக்கத்தை நிராயுதபாணியாக்க முனைந்தது. “பழைய ட்ரொட்ஸ்கிசத்தை விட்டொழிப்போம்!” என்பதுதான் கோக்ரான் மற்றும் கிளார்க்கின் சுலோகமாய் இருந்தது.

1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட இட்டுச்சென்ற ஒரு போராட்டமான, இந்த கலைப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், கனன் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) பெரும்பான்மைக்கு ஆதரவாக பில் நின்றார்.

அதற்குப் பின் ஒரு தசாப்த காலத்திற்குள்ளாக, SWP தலைமையானது பப்லோவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதை நோக்கி நகர்ந்தது. பில் மற்றும் ஜீன் SWP வலது நோக்கியும், தொழிலாள வர்க்கத்திலான அவசியமான  போராட்டத்தில் இருந்து விலகியும் நகர்வதை எதிர்க்கும் நிலையில் தாங்கள் நிற்பதைக் கண்டனர். 1963 இல் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழக (Socialist Labour League - SLL) தலைமையுடன் பில் தொடர்பை உருவாக்கினார். அடுத்த சிறிதுகாலத்தில் அவரும் ஜீனும் நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழுவில் இணைவதற்கு இது இட்டுச் சென்றது. SWP, பப்லோவாதிகளுடன் மறுஇணைவு கண்டதையும், அதனைத்தொடர்ந்து சிலோன் பப்லோவாதிகள் ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்ததையும் எதிர்த்தற்காக, SWP இல் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டிருந்த அமைப்பாக அது இருந்திருந்தது.

பில் பிரஸ்ட் 1966 இல், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு ஸ்தாபக உறுப்பினர் ஆனார். அடுத்து வந்த 25 ஆண்டுகளில் SWP, காஸ்ட்ரோவாதம், கறுப்பு தேசியவாதம் மற்றும் நடுத்தர வர்க்க ஆர்ப்பாட்ட அரசியலின் பிற வடிவங்களை ஏற்றுக் கொண்டு மார்க்சிசத்தை மிக அவமதிக்கும் வகையில் கைவிட்டிருந்ததற்கு எதிராக மார்க்சிசத்தின் பதாகையையின் கீழ் அவர் மிகப்பெரும் பங்களிப்பு செய்தார்.

நான் முதன்முதலில் பில் பிரஸ்ட்டை, 60களின் மத்தியில், வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிக்கப்படுவதற்கு சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சந்தித்தேன். வயதிலும் அரசியல் அனுபவத்திலும் சுமார் இரண்டு தசாப்தங்கள் இடைவெளி இருந்தாலும், நாங்கள் இருவருமே SWP க்குள்ளாக ட்ரொட்ஸ்கிசத்தை கட்சித் தலைமை கைவிட்டதற்கு இருந்த எதிர்ப்பின் பக்கத்தில் இருந்ததை கண்டோம். ஆயினும், SWPக்குள் இருந்த அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் –அதில் நானும் ஒருவனாய் இருந்தேன்- வெளியேற்றப்படும் வரை, நாங்கள் சந்தித்ததில்லை. அந்தக் கணத்தில் இருந்துதான் பில்லும் ஜீனும் தொழிலாளர் இயக்கத்திலும் SWPயிலும் தங்களுக்கிருந்த அறிவு மற்றும் அனுபவத்தை பெருமளவு இளைஞர்களாகவும் குறைந்த அனுபவத்துடனும் இருந்த வேர்க்கர்ஸ் லீக்கின் உறுப்பினர்களுக்கு புகட்டினர்.

1986 ஆம் ஆண்டில் பில் மற்றும் ஜீன் உடன் நீண்டதொரு காலத்திற்கு நான் நெருக்கமாய் பணியாற்ற வாய்ப்பு கிட்டியது, எனக்கு ஒரு மிக உயர்ந்த தருணமாக இருந்தது.  தொழிற்சங்க காட்டிக்கொடுப்புக்கு எதிரான Hormel இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர் வேலைநிறுத்தம், –இந்த வேலைநிறுத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கமே சதிசெய்தது- மற்றும் மினசோட்டோ ஆளுநருக்கான வேர்க்கர்ஸ் லீக்கின் வேட்பாளராக பில்லின் பிரச்சாரம் ஆகியவையே இருவருடனும் இணைந்து வேலைசெய்த அந்த சந்தர்ப்பங்களாகும்.

1950கள் மற்றும் 1960களின் போது, பில் தனது கல்வியை தொடர முடிந்தது, அவர் ஜேர்மன் இலக்கியத்தில் ஒரு உயர் பட்டப்படிப்பை பயின்றார். அதனைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியராக பல வருடங்கள் பணியாற்றினார். இந்த கல்வித்துறை வாழ்க்கை அவரது அரசியல் வேலைகளை முன்னெடுப்பதில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தனது கருத்துகளுக்காக போராடுவதில் இருந்தும் அவரை ஒருபோதும் தடுத்துநிறுத்தியதில்லை.

பில் பிரஸ்டின் அரசியல் வாழ்க்கை, இரண்டாம் உலகப் போர் மற்றும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் மீது ஸ்மித் சட்டத்தின் கீழ் அரசாங்கம் வழக்கு தொடுத்தமை, போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சி, தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவமயமாகல் மற்றும் மெக்கார்த்தியின் சிவப்பு பயங்கரம்; ஜிம் குரோ பிரிப்பு மற்றும் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டம், அத்துடன் 1960களில் தொழிலாள வர்க்கத்திலான போர்க்குணத்தின் எழுச்சி; ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி பதவிக் காலத்தின்போது இரண்டு முதலாளித்துவக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றைக் கண்டிருந்தது.

இந்த தசாப்தங்கள் முழுமையிலும் பில் எல்லாவற்றுக்கும் மேல் மார்க்சிசத்திற்கான போராட்டத்தையே தனக்கான அடிப்படையாகக் கொண்டிருந்தார். தொழிலாள வர்க்கத்திலான அவரது செயல்பாடுகள் புரட்சிகர நடைமுறைக்கான தத்துவார்த்த மற்றும் வரலாற்று அடித்தளங்கள் மீது கொண்ட தீவிர அக்கறையினால் வழிநடத்தப்பட்டதாக இருந்தன. தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்த தீர்மானகரமான அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்தவும், இந்த அடிப்படையில் எதிர்வரவிருந்த போராட்டங்களுக்கான தலைமையை வென்றெடுப்பதற்கும் மற்றும் பயிற்சியளிப்பதற்கும் அவர் போராடினார்.

இந்த ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட 25 வது ஆண்டும் ஆகும். பில் தனது வாழ்க்கையை எந்தப் போராட்டத்திற்காய் அர்ப்பணித்திருந்தாரோ அதன் சரியான தன்மையை கடந்த கால் நூற்றாண்டு ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஸ்ராலினிசத்தை ஒரு அரசியல்புரட்சியின் மூலமாக தொழிலாள வர்க்கம் தூக்கிவீசத் தவறினால் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதற்கு ஸ்ராலினிசம் இட்டுச் செல்லும் என்று ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்வைத்த எச்சரிக்கைகள் சரியென நிரூபணமாயின.

ஸ்ராலினிசத்தின் இறுதியான நிலைகுலைவையும் அதன்பின்னர் துயரகரமான வகையில் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதையும் காண பில் உயிருடன் இருக்கவில்லை. 1991 இன் ஆரம்பத்தில் உடல்நலம் குன்றிய அவர் புற்றுநோயென கண்டறியப்பட்ட ஆறு மாதங்களின் பின்னர் மரணமானார். அவர் இறந்த போது அவரது மனைவி, (இவர் ஆறு வருடங்களுக்குப் பின்னர் இறந்தார்) சிந்தியா, லியோ மற்றும் ஸ்டீவ் ஆகிய மூன்று பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் அவருக்கு இருந்தனர்.

தோழர் பில் பிரஸ்ட் இறந்து ஆறு வாரங்களின் பின்னர், 1991 அக்டோபர் 27 அன்று மினெயபோலிஸ் நகரில் அவரது நினைவுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நினைவுக் கூட்டத்தில் டேவிட் நோர்த் வழங்கிய உரை தனியாகப் பதிவிடப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட அஞ்சலிகளின் தொகுப்பும் அத்துடன் வேர்க்கர்ஸ் லீக்கில் அவர் இயங்கிய காலத்திலான அவரது எழுத்துக்களும் கோட்பாடுகளைப் பாதுகாத்தல்: பில் பிரஸ்டின் அரசியல் மரபு என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலதிக வாசிப்புகளுக்கு:

பில் பிரஸ்டுக்காக நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டத்தில் டேவிட் நோர்த் வழங்கிய உரை.
27 அக்டோபர் 1991