ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France creates National Guard targeting the working class

தொழிலாள வர்க்கத்தை குறிவைத்து பிரான்ஸ் தேசிய காவல்படையை உருவாக்குகிறது

By Anthony Torres
17 October 2016

தேசிய காவல்படை (Garde nationale) உருவாக்கம் குறித்த நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) முன்மொழிவை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) —இந்த முன்மொழிவை புதன்கிழமையன்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உத்தியோகபூர்வமாய் அங்கீகரித்தார்— பிரான்சுக்குள்ளாக பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. இத்தகையதொரு தேசிய காவல்படையில், பெரும் எண்ணிக்கையில் கையிருப்பு படையினர் (reservists) அமைவதானது, இப்படையின் நோக்கம் பிரான்சின் பயங்கரவாத தாக்குதல்களின் போது பயங்கரவாதிகளது சிறு குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதல்ல, மாறாக சமூகப் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் ஒடுக்குவதற்கே அது நோக்கம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

PS இன் முன்மொழிவால், இப்போது இராணுவக் கையிருப்புப் படையாக இருக்கும் 63,000 ஆண்கள் படை, 84,000 ஆண்கள் மற்றும் பெண்கள் கொண்ட ஒரு அலகாக மாறவிருக்கிறது. பிரான்ஸ் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்கும் துருப்புகளின் எண்ணிக்கையை இப்போதைய 5,500 இல் இருந்து 9,250 ஆக அதிகரிப்பதற்கு இது அனுமதிக்கும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளில் பங்குபற்றிய அமெரிக்காவின் தேசிய காவல்படையை போன்று வெளிநாட்டுப் போர்களிலும் இந்த அலகு பங்குபெற முடியும்.

ஜீஸெல் ஜூர்டா (PS) மற்றும் ஜோன்-மரி புக்கெல் (ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சுயேச்சைகளின் ஒன்றியம் - UDI) ஆகியோர் வழங்கிய செனட் அறிக்கை ஒன்றின்படி, தேசிய காவல்படையானது பிரான்சுக்குள்ளான பெரிய அளவு நடவடிக்கைகளில் இராணுவத்திற்கு உதவி செய்யும். “இது வலிமையானதாக, மேம்பட்ட கட்டமைப்பு கொண்டதாக, எண்ணிக்கை பெரியதாக, இப்போது இராணுவ நடமாட்டமில்லாததாக இருக்கக் கூடிய பகுதிகள் உள்ளிட பிரான்சின் ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் பிரசன்னம் கொண்டதாக ஆகுமானால், இராணுவக் கையிருப்புப் படையானது ஒரு திறம்பட்ட தேசிய காவல்படையாக ஆக முடியும். நமது பிராந்தியத்தின் புதிய தேவைகளுக்கு தக்க மட்டத்திற்கு செயலூக்கமான இராணுவ நடவடிக்கை உதவியை அது வழங்கும்.”

“முந்தைய இராணுவ அனுபவம் கொண்ட அல்லது இல்லாத” தன்னார்வலர்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக இராணுவத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் படையினர்கள் ஆகியோரைக் கொண்டு தேசிய காவல்படை உருவாக்கப்படவிருக்கிறது. அதற்கான நிதியாதாரமானது இப்போதைய கையிருப்புப் படைக்கான 211 மில்லியன் யூரோவில் இருந்து 311 மில்லியன் யூரோவாக அதிகரிக்கும்.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களையடுத்து - சிரியாவிலான போருக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளால் அணிதிரட்டப்பட்டிருந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அங்கத்தவர்களால் இவை நடத்தப்பட்டிருந்தன என்பது வெளிப்படை - ஒரு அவசரகால நிலையை திணித்ததற்குப் பின்னர் ஹாலண்ட் இப்போது தேசிய காவல்படையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்குமான ஒரு பகிரங்க மோதலாக தீவிரப்பட அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற சிரியாவிலான போரும், அத்துடன் PS இன் தொழிலாளர் சட்டம் போன்ற ஹாலண்டின் மக்கள்வெறுப்பை சம்பாதித்த சிக்கன நடவடிக்கைகளும் பிரான்சில் சமூகப் பதட்டங்களை முன்கண்டிராத உயரங்களுக்கு கொண்டுவந்திருக்கிறது.

பலமுறை FN தலைவரான மரின் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து நவ-பாசிசக் கட்சியை ஊக்குவித்திருந்த ஹாலண்ட், இப்போது மீண்டும், ஒரு போலிஸ் அரசின் கட்டுமானத்தை துரிதப்படுத்துவதற்கான FN இன் வேலைத்திட்டத்தில் இருந்து இன்னொரு அம்சத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில், தேசிய குடியுரிமை பறிப்பு என்ற நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியுடன் தொடர்புடைய கொள்கையை பிரான்சின் அரசியல்சட்டத்தில் பொறிப்பதற்கு முயற்சி செய்திருந்தார்.

மரின் லு பென், 2014 இல் தேசிய காவல்படை உருவாக்கம் குறித்த யோசனையை (இராணுவ நிதிநிலையை அதிகரிப்பது மற்றும் அனைவருக்குமான இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவது) முன்வைத்தபோது, அவர் மனதில் இருந்தது வெளிநாட்டு எதிரிகள் மட்டுமல்ல உள்நாட்டு எதிரி அதாவது தொழிலாள வர்க்கமும் தான். அவர் கூறினார்: “குறிப்பாக தகவல் தெரிவித்து 24 மணிநேரத்திற்கும் குறைவான காலத்தில் அணிதிரட்டப்படக் கூடியதாக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களாலான 50,000 கையிருப்புப் படையினர் கொண்ட ஒரு தேசிய காவல்படையை உருவாக்குவதன் மூலமாக ... தேசிய பிராந்தியத்தின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் அதற்கு முன்னுரிமையளிப்போம்.”

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு பயங்கரவாதத்தைப் பார்த்து அஞ்சவில்லை —இன்னும் சொல்லப் போனால் பயங்கரவாதம் அதன் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளைத் தீவிரப்படுத்துவதற்கும் உள்நாட்டில் அதன் ஒடுக்குமுறை சக்திகளுக்கு வலுவூட்டுவதற்குமான ஒரு சாதனமாக இருக்கிறது— மாறாக அதன் சிக்கன நடவடிக்கை அத்தோடு போர் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் இருக்கக் கூடிய எதிர்ப்பைக் கண்டே அஞ்சுகிறது.

ஐரோப்பாவெங்கிலும் வெடிப்பான இராணுவ மற்றும் சமூகப் பதட்டங்கள் நிலவி வருவதன் மத்தியில் தான் பிரான்ஸ் தனது தேசிய காவல்படையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இச் சூழலில், ஏராளமான நாடுகளில் முதலாளித்துவ வர்க்கமானது சற்று கூடவோ குறையவோ அதி வலது சக்திகளுடன் தொடர்புடைய துணைஇராணுவப் போராளிப் படைகளை கட்டுமானம் செய்வதில் இறங்கியிருக்கிறது. உக்ரேனில், போலந்தில், செக் குடியரசில் மற்றும் இவற்றைத் தாண்டிய நாடுகளிலும், ஆளும் உயரடுக்குகள் தேசியவாத, அல்லது இன்னும் வெளிப்படையாய் நாஜி-ஆதரவு துணைஇராணுவ அலகுகளைக் கட்டியெழுப்புவதற்கு நெருக்குதலளித்துக் கொண்டிருக்கின்றன.

உக்ரேனில், அமெரிக்க ஆதரவு தேசிய காவல்படையானது, 2014 இல் கியேவில் நேட்டோ ஆதரவுடனான ஆட்சிக்கவிழ்ப்பில் இருந்து உருவாகியிருந்த பாசிச மற்றும் நவ-நாஜி தன்னார்வலர்களை எடுத்துக் கொள்கிறது. 1,000 படையினர்களுக்கு மேல் கொண்டிருக்கக் கூடிய “Azov” படையணியானது நவ-நாஜி தலைவரான Andriy Biletsky ஆல் உருவாக்கப்பட்டு தலைமை கொடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதான SS இன் அலகுகளில் இருந்து நகலெடுக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்ட ஸ்வாஸ்திகா சின்னத்தைக் கொண்ட பதாகைகளை ஆங்காங்கே இடம்நிறுத்தியிருக்கும் இது, கியேவில் இருந்த அதி-வலது ஆட்சிக்கு எதிராக ரஷ்யமொழி பேசும் கிழக்கு உக்ரேனில் இருந்து எழுந்த எதிர்ப்பை நசுக்குவதில் உதவியது.

பிரான்சின் தேசிய காவல் படை குறித்த விவாதங்களில் உக்ரேன், போலந்து அல்லது செக் போராளிக் குழுக்கள் விடயத்தை முன்கொண்டுவருவதை பிரெஞ்சு ஊடகங்கள் தவிர்த்திருக்கின்றன. ஆயினும், அவை மேற்கோளிடும் மற்ற தேசிய காவல் படைகளை ஆய்வு செய்தாலும் கூட, உள்நாட்டிலான ஒடுக்குமுறைதான் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் சிந்தனையோட்டங்களின் இருதயத்தானத்தில் இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. அமெரிக்காவிலிருக்கும் தேசிய காவல்படை நகர்ப்புறக் கலகங்களுக்கு எதிராகவும் போலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகவும் துருப்புகளை பயன்படுத்துகிறது.

1930களுக்குப் பிந்தைய மிகப்பெரும் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடியின் சூழலில், அரசியல் வாழ்க்கை வடிவங்கள் மேலும் மேலும் லியோன் ட்ரொட்ஸ்கியாலும் நான்காம் அகிலத்தினாலும் 1938 இல் நான்காம் அகில ஸ்தாபகத்தின் சமயத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டதை ஒத்திருக்கின்றன. அச்சமயத்தில் அவர்கள் விடுத்த எச்சரிக்கையில், ’அதீத வர்க்கப் பதட்டங்களின் மத்தியில், முதலாளித்துவத்திற்கு அவசியமான ஒடுக்குமுறையை நடத்துவதற்கு போலிசும் இராணுவமும் இனியும் அதற்குப் போதுமானதாக இல்லை. ஆகவே ஆளும் வர்க்கமானது கூடுதல் சட்டபூர்வமாகவோ அல்லது குறைந்த சட்டபூர்வமாகவோ துணைஇராணுவ அலகுகளை கட்டுவதை நோக்கித் திரும்புகின்றன’ என்று கூறியிருந்தனர்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தின் போதான இடைமருவு வேலைத்திட்டம் விளக்கியது: “எங்குமே முதலாளித்துவம் உத்தியோகபூர்வ போலிஸ் மற்றும் இராணுவத்துடன் திருப்தி அடைந்து விடவில்லை. அமெரிக்காவில் ‘அமைதியான’ காலங்களிலும் கூட முதலாளித்துவ வர்க்கம், இராணுவமயமாக்கப்பட்ட கருங்காலிகளின் படைகளையும், தொழிற்சாலைகளில் தனியார் ஆயுதமேந்திய குண்டர்களையும் பராமரித்து வருகிறது. அமெரிக்க நாஜிக்களின் பல்வேறு குழுக்களையும் இதனுடன் சேர்த்துக் கூறியாக வேண்டும். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அபாயம் முதன்முறை நெருங்கிவந்தபோது பாதி-சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான பாசிச படையணிகளை அணிதிரட்டியது. இப்போதைய சகாப்தத்தில் வர்க்கப் போராட்டமானது தவிர்க்கமுடியாமல் உள்நாட்டுப் போராக உருமாற்றம் காண விழைகிறது என்ற உண்மையை முதலாளித்துவ வர்க்கம் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறது. இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் மற்ற நாடுகளின் உதாரணங்கள் பாட்டாளி வர்க்கத்தின் உத்தியோகபூர்வ தலைவர்களைக் காட்டிலும் மூலதனத்தின் அதிபர்களுக்கும் அடிமைகளுக்கும் கணிசமாகக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.”

1930கள் போலவே, பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் ஜனநாயகத்திற்கான ஒரே சமூக அடிப்படையாக இருப்பது தொழிலாள வர்க்கம் மட்டுமே. ஒரு எதேச்சாதிகார அரசைக் கட்டியெழுப்புவதற்கு தொழிலாளர்களிடையே ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொழிலாளர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது மட்டுமே அத்தகையதொரு ஆட்சி அமர்த்தப்படுவதை தடுப்பதற்கான ஒரே வழியாகும். இன்று, முதலாளித்துவத்தின் அத்தனை வெவ்வேறு கட்சிகளுமே ஏதேனும் ஒரு விதத்தில் அரசு ஒடுக்குமுறையை வலுப்படுத்துவதற்கே முனைந்து கொண்டிருக்கின்றன.

காலவரையற்று நீண்டு செல்கின்ற ஒரு அவசரகாலநிலை ஆட்சி PS ஆல் திணிக்கப்பட்டதானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து எழுகின்ற எதிர்ப்பை நசுக்குவதற்கு, நிலவுகின்ற ஒடுக்குமுறை சக்திகள் கொண்டிருக்கக் கூடிய திறனின் எல்லைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான இந்த ஆண்டின் போராட்டங்களின் சமயத்தில், FN தொடர்புடைய போலிஸ் தொழிற்சங்க கூட்டானது, (Alliance police trade union) தங்களது “வேலைச்சுமை” மற்றும் “போலிஸ்-விரோத மனோநிலை” மீதான கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்காகவும், மற்றும் கூடுதல் நிதியாதாரமும், வளங்களும் கோருவதற்காகவும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தது, PS மற்றும் ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) ஆகியவை இதற்கு ஆதரவளித்தன.

அரசியல் மற்றும் சமூக நிலைமை ஆழமாய் ஸ்திரமற்று இருப்பதும் உள்நாட்டுப் போரின் சாத்தியமும் பிரெஞ்சு உளவு முகமைகளுக்குள் பரவலாய் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரான்சின் உள்நாட்டு உளவுப் பிரிவு தலைவரான பாட்ரிக் கல்வார் கூறினார்: “உள்நாட்டுப் போரின் விளிம்பில் நாம் நிற்கிறோம். ஆகவே ஏதேனும் குழுக்கள் ஏதேனும் ஒரு தருணத்தில் சமூகங்களுக்கு இடையில் மோதல்களைத் தூண்டி விடலாம் என்பதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.”

இவையே, இராணுவம், சிவில் சட்ட அமலாக்க அதிகாரம்கொண்ட ஒரு இராணுவ அங்கம் (gendarmerie), மற்றும் போலிசுக்கு துணையளிப்பாக புதிய தேசிய காவல்படையை உருவாக்கியளிக்க PS ஐ தள்ளிக் கொண்டிருக்கும் அரசியல் நிலைமைகள் ஆகும்.