ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Syriza government assaults Greek retirees

கிரேக்க ஓய்வூதியதாரர்கள் மீது சிரிசா அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது

By Katerina Selin
5 October 2016

திங்கட்கிழமையன்று, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் உடன் சந்திக்க வேண்டி ஏதென்ஸ் நகர மையத்தின் வழியாக ஊர்வலம் சென்ற ஓய்வூதியதாரர்களின் ஒரு சிறிய குழுவின் மீது போலி-இடது கட்சியான சிரிசாவின் (தீவிர இடதுகளின் கூட்டணி) தலைமையிலான அரசாங்கம் போலிசைக் குவித்து மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியது. நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செல்லும் பாதையை போலிஸ் வாகனங்களைக் கொண்டு மறித்திருந்த போலிசார், ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாய் கலைந்தோடச் செய்தனர்.

கோபமடைந்த ஓய்வூதியதாரர்கள் தடையரணை உடைத்து ஒரு போலிஸ் வாகனத்தைக் கவிழ்க்க முயற்சி செய்த போது, கலகத் தடுப்புப் போலிஸ் பிரிவுகள் கூட்டத்தின் மீது மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். வயதான ஆண்களும் பெண்களும் - இவர்களில் சிலர் ஊன்றுகோல்களை பயன்படுத்துவோர் - மூச்சுத்திணறலால் பின்வாங்க வேண்டியதானது. இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னரும் கூட, ஓய்வூதியதாரர்கள் ஒரு சிறிய ஊர்வலத்தை நடத்தினர். “வாழுவதற்கும், ஓய்வூதியங்களை மீட்பதற்கும், கட்டணமில்லாத பொது ஆரோக்கிய சேவை கோருவதற்குமான போராட்டம்” என்று ஒரு பெரிய சுவரொட்டி காட்டியது.

சிரிசா அரசாங்கம் அறிமுகம் செய்த புதிய அதிரடியான வெட்டுகளால் சுமார் 25,000 கிரேக்க ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற சிக்கன நடவடிக்கைப் பொதியின் பகுதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஓய்வூதிய வெட்டுகள், சமீப மாதங்களில், ஏற்கனவே அமலாக்கப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை முதலாக, ஊடக தொழில்நுட்ப பணியாளர்கள்,  மாலுமிகள், வழக்கறிஞர்கள், நொத்தாரிசுகள் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கூடுதல் துறைகளும் தமக்கான துணையளிப்பு ஓய்வூதியங்களில் 40 சதவீதம் வரை வெட்டப்படுவதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. கிரீஸில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த துணையளிப்பு ஓய்வூதியங்களை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நிராதரவான ஓய்வூதியதாரர்கள் மீது பொறுப்பற்ற வகையிலும் மிருகத்தனமாகவும் நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதலானது போலி-இடது சிரிசா அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தன்மையை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்துகின்றது. அகதிகளுக்கு எதிரான போலிஸ் வன்முறை - இது இந்த ஆண்டில் ஒரு புதிய உச்சத்தை எட்டியது - உண்மையில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் ஏவப்பட்டதாகும் என்று உலக சோசலிச வலைத் தளம் விடுத்திருந்த எச்சரிக்கையை இந்த அபிவிருத்தி ஊர்ஜிதம் செய்கிறது.

ஏதென்ஸ் போலிஸ் சிரிசாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுப் பாதுகாப்பிற்கான அமைச்சருமான நிகோஸ் டோஸ்காஸ் இன் உத்தரவின் கீழ் செயல்படுகிறது. இராணுவத் தளபதியாக பதவி வகித்திருந்த இவர், சமூக ஜனநாயக PASOK இன் ஒரு உறுப்பினராக இருந்த சமயத்தில் 2009 முதல் 2011 வரையான காலத்தில் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சர் அலுவலகத்தின் தலைமைப் பதவியிலும் இருந்திருந்தார். முதல் சிரிசா அரசாங்கத்தின் போது, 2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில், இவர் பாதுகாப்புத் துறையில் இணை அமைச்சராக பதவியில் இருந்திருந்தார்.

இந்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேலதிகமான ஆர்ப்பாட்டங்களுக்கு எண்ணெய் வார்க்கக் கூடும் என்ற கவலை அரசாங்கத்திற்கு வெளிப்படையாக இருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்கின்ற தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக இனி எந்த கண்ணீர்ப்புகைத் தாக்குதலும் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு அரசியல் பொறுப்பை ஏற்பதற்கும் சிப்ராஸ் டோஸ்காஸிடம் அறிவுறுத்தியதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. சிரிசாவின் தரப்பில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருந்தும் போலிஸ் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானவையாக இருக்கின்றன. ஓய்வூதியதாரர்களுக்கு எதிராய் இவ்வாறு கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டமையானது, ஏதோ தவறிப் போய் நடந்து விட்ட ஒன்றல்ல, மாறாக முதலாளித்துவ அரசின் ஒரு சாதனமாக போலிசின் உண்மையான செயல்பாட்டையே அது வெளிப்படுத்தியது. உண்மையாகப் பார்த்தால், ஆளும் வர்க்கத்திற்கு தனது சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை பலவந்தமாய் திணிப்பதற்கும் ஒரு மூர்க்கமான போலிஸ் படை அவசியமாக இருக்கிறது.

சென்ற வாரத்தில், அரசால் இயக்கப்படும் எரிபொருள் மற்றும் நீர் சேவைகளை தனியாருக்கு விற்கத் திட்டமிடுகின்ற ஒரு புதிய தனியார்மயமாக்கல் நிதியத்தை உருவாக்குவதற்கு கிரேக்க நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக ஒப்புதலளித்தது. செப்டம்பர் 27 அன்று, ஆளும் கட்சிகளான சிரிசா மற்றும் Anel (சுதந்திர கிரேக்கர்கள்) கட்சிகளைச் சேர்ந்த 152 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அதாவது நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தால் பங்கேற்காத ஒரே ஒருவரைத் தவிர்த்த அனைவரும் - இந்த பொதிக்கு ஆதரவாய் வாக்களித்தனர், எதிர்க்கட்சியின் 141 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இந்நாட்டிற்கு அடுத்த நிதியுதவித் தவணையான 2.8 பில்லியன் யூரோக்கள்  கொடுக்கப்படுவதற்கு முன்பாக தனியார்மயமாக்கல் திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று சர்வதேச கடன்கொடுப்பாளர்கள் கோரியிருந்தனர். ஏதென்ஸில் தனியார்மயமாக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இருந்தன, Thessaloniki மற்றும் ஏதென்ஸில் நீர்ப்பணித்துறை தொழிலாளர்கள் வாக்களிப்பு அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போதைய சிக்கன நடவடிக்கைகள் 2015 இல் சிரிசா அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (முக்கூட்டு என்று அழைக்கப்படுவது) ஆகியவற்றுக்கும் இடையில் ஏற்பட்ட மூன்றாவது புரிந்துணர்வு உடன்பாட்டின் பகுதியாக நடத்தப்படுவதாகும். அக்டோபர் மாதத்தின் மத்தியில், நாட்டின் சிக்கன நடவடிக்கைகளின் “முன்னேற்ற”த்தை சோதிப்பதற்காக முக்கூட்டின் பிரதிநிதிகள் மீண்டும் ஏதென்ஸ் சென்றனர்.

கிரேக்க அரசாங்கம் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2017 ஆம் ஆண்டிற்கான அதன் நிதிநிலை அறிக்கை, 2.7 சதவீதம் வளர்ச்சியையும் 1.8 சதவீதம் முதனிலை உபரியையும் இலக்காக வைக்கிறது. 2017 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் யூரோ அளவுக்கான (2016 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் சேர்த்தால் மொத்தம் சுமார் 3-4 பில்லியன் யூரோக்கள்) பாரிய வெட்டுகள் மற்றும் வரி அதிகரிப்புகளின் மூலமாக இந்த இலக்குகள் எட்டப்பட இருக்கின்றன. அக்டோபர் 15 அன்று, புதிய விலை அதிகரிப்புகளும் (சூடுபடுத்தும் எண்ணெய் மற்றும் மின்சாரம் மீது சுங்க வரி) செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. 2017 இல், பெட்ரோல் விலை அதிகரிக்கப்படுவதுடன் சேர்த்து தொலைபேசிகளுக்கான ஒரு சிறப்புக்கட்டணமும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அத்துடன் சிகரெட்டுகள் மற்றும் காப்பி போன்ற பொருட்களின் மீது சிறப்பு வரிகளும் விதிக்கப்படுகின்றன.

நாட்டின் தேசிய கடனின் அளவானது, எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் 318.6 பில்லியன் யூரோக்களாக அதிகரிப்பும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதத்தில் பார்த்தால் 178.9 சதவீதத்தில் இருந்து 174.8 சதவீதத்திற்கு என இலேசான குறைவையும் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரம்புபட்ட சமூக செலவினங்களுக்காக பெரிய சேமிப்புகளை செய்ய அவசியமிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது. “சமூக ஒற்றுமை வருமானம்” (Social solidarity income - KEA) என்ற, இப்போது சில நகராட்சிகளில் மட்டுமே இருக்கும் ஒரு விடயம், ஜனவரி 2017 முதலாக கிரீஸ் முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது, இது சுமார் 700,000 பேர்களை பாதிக்கவிருக்கிறது.

ஆயிரக்கணக்கான கிரேக்கக் குடும்பங்களின் பரிதாபகரமான சமூக நிலையைக் கொண்டு பார்த்தால் KEA என்பது சொற்பமான ஒன்றாகும். ஜேர்மனியில் ஹார்ட்ஸ் IV சட்டங்களைப் போல இது உழைப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க நோக்கம் கொண்டுள்ளது. இரண்டு மூத்தவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு மாதத்திற்கு 400 யூரோக்கள் கிடைக்கும், பெற்றோரின் வருவாய்க்குத் தக்கபடி இந்தத் தொகை கணக்கிடப்படும். ஒரு குழந்தை கொண்டிருக்கும் வேலைவாய்ப்பற்ற ஒற்றைப் பெற்றோருக்கு 300 யூரோக்கள் கிடைக்கும். தங்கள் வருவாய்க்கும் கூடுதலாக 100 யூரோக்களுக்கும் அதிகமாய் சமூக உதவிகளைப் பெறுகின்ற எந்தவொரு மனிதரும் பாதிப் பணத்தை மட்டுமே ரொக்கமாய் பெறமுடியும், பாக்கித் தொகையை கடைகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு சமூக ரசீதின் வடிவத்தில் மட்டுமே பெற முடியும். 65 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் வேலையளிப்புத் திட்டங்களில் கட்டாயம் பங்குபெற்றாக வேண்டும்.

கிரீஸில் மேலதிகமான மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை துரிதமாக அமலாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நெருக்குதலளித்துக் கொண்டிருக்கிறது. செவ்வாயன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கிரேக்க பொருளாதாரக் கொள்கை தொடர்பான ஒரு விவாதத்தில், வருகின்ற திங்கட்கிழமைக்குள்ளாக ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபனங்களின் அத்தனை கோரிக்கைகளையும் கிரேக்க அரசாங்கம் பூர்த்தி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நாணய விவகார ஆணையரான பியர் மொஸ்கோவிச்சி அழைப்பு விடுத்தார்.

உழைப்புச் சந்தையில் சீர்திருத்தம் செய்யப்படுவதற்கு, கடனளிப்பவர்கள் வலியுறுத்துகிறார்கள். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் மீதான சட்டரீதியான கட்டுப்பாடுகள் ஆகியவை தொடர்பான ஏராளமான ஆலோசனைகளை “கிரேக்க தொழிலாளர் சந்தை ஸ்தாபனங்களை மீளாய்வு செய்வதற்கான நிபுணர்களின்” சுதந்திரமான குழு ஒன்று இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் திறனாய்வு செய்து வருகிறது. இரண்டு ஜேர்மன் பேராசிரியர்கள் உள்ளிட்ட இந்த “நிபுணர்கள்” செப்டம்பர் 27 அன்று தங்களது பரிந்துரைகளை வெளியிட்டனர், அத்துடன் கிரேக்க தொழிலாளர் துறை அமைச்சர், கிரேக்க தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளின் கூட்டமைப்புகள் ஆகிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறு ஆண்டு கால சிக்கன நடவடிக்கைகள் கிரீசில் முன்கண்டிராத ஒரு சமூக வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. மக்கள்தொகை வளர்ச்சியில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதில் இதன் ஒரு வெளிப்பாடு காணப்படுகிறது. 2011 முதல் 2015 வரையான காலத்தில் இருந்து பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக கிரேக்க புள்ளிவிவர அமைப்பான ELSTAT இன் சமீபத்திய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நாட்டின் மக்கள்தொகை சுமார் 90,000 பேர் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது. இது ஒரு பெரிய கிரேக்க நகரத்தின் மக்கள்தொகைக்கு நிகரான ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டின் சமயத்தில், பிறப்புகளை விடவும் கூடுதலாய் 4,671 இறப்புகள் பதிவாகின. 2015க்குள்ளாக, பிறப்பை விடவும் அதிகமாய் 29,365 பேர் கூடுதலாய் மரணமடைந்திருந்தனர். 2016க்கான தரவுகள், மக்கள்தொகை மேலும் வீழ்ச்சி கண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த அபிவிருத்தி சிக்கன நடவடிக்கைகளின் ஒரு நேரடி விளைவாகும். இளையோர் குடும்பத்தைத் தொடங்குவதற்கு எந்த நிதிப் பாதுகாப்பும் இல்லாதிருக்கின்றனர், முதியவர்களோ ஆரோக்கியப் பராமரிப்புப் பற்றாக்குறையால் முன்கூட்டி இறக்கின்றனர். இந்த நெருக்கடியினால் நாட்டின் தற்கொலை வீதம் வியத்தகு முறையில் அதிகரிப்பைக் கண்டிருக்கிறது.

சமூகப் பிளவு அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதும் அதிகரிக்கிறது. வர்க்க நீதியின் ஒரு அதிர்ச்சியூட்டுகின்ற சம்பவம் செப்டம்பர் 15 அன்று லரிசா நகரத்தில் நடந்தேறியது. மோசடிப் புகாரிலும் அரசின் பணத்தைக் கையாடல் செய்ததாகவும் கூறி 51 வயதான பெண்மணி ஒருவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், 150,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. இருபதாண்டுகளுக்கு முன்பாய் அரசாங்க மழலையர் பள்ளிகளில் துப்புரவாளர் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக தனது பள்ளிச் சான்றிதழ்களை அவர் மோசடியாக உருவாக்கியிருந்தார்.

இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்பாக இருக்கக் கூடிய இந்தப் பெண்மணிக்கு எதிரான வழக்கு, ஒரு இடது அரசாங்கமாக சொல்லப்படுகின்ற ஒன்றின் கீழ், கிரீசில் சமூக நிலைமை எப்படியிருக்கிறது என்பதின் மேல் வெளிச்சம் பாய்ச்சுவதாக இருக்கிறது. சமீப ஆண்டுகளில் அரச எந்திரத்தில் அல்லது நிதிச் சந்தைகளில் கிரிமினல் நடவடிக்கைகளை மூலம் தங்களை வளமாக்கிக் கொண்ட மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாய் இருந்தவர்களான வங்கியாளர்கள், வர்த்தகர்கள் அல்லது அரசியல்வாதிகளில் ஒரேயொருவரும் கூட சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை என்பதைக் கூட விடுங்கள், அவர்களுக்கு எதிராக வழக்கும் கூட தொடுக்கப்பட்டது கிடையாது.

இந்த வர்க்கப் பதட்டங்கள், அத்தனை முதலாளித்துவக் கட்சிகளின், குறிப்பாக சிரிசாவின், மீதான பரவலான நிராகரிப்பாக வெளிப்பாடு காண்கிறது. சிரிசாவுடன் தொடர்புடைய செய்தித்தாளான Avgi இல் ஞாயிறன்று வெளியான Public Issue மூலமான ஒரு கருத்துக்கணிப்பில், பதிலளித்தவர்களில் 90 சதவீதம் பேர் தாங்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருப்பதாய் தெரிவித்தனர், 80 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகள் மீது அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தனர். மாசிடோனியா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஒரு தேர்தல் கருத்துக்கணிப்பில், சிரிசா வெறும் 16 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது, பழமைவாத புதிய ஜனநாயகம் (ND) 28.5 சதவீத வாக்குகளைப் பெற முடிந்திருந்தது.