ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Haiti’s hurricane devastation: A tragedy rooted in capitalist oppression

ஹைட்டி சூறாவளி பேரழிவு: முதலாளித்துவ ஒடுக்குமுறையில் வேரூன்றிய ஒரு துயரம்

Bill Van Auken
13 October 2016

ஹைட்டியின் தென் கடற்கரை பகுதியை மாத்தியூ சூறாவளி (Hurricane Matthew) தாக்கி ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்த வறுமைப்பட்ட கரீபிய தேச மக்கள் மீது சுமத்தப்பட்ட முழு அளவிலான பேரழிவும் இன்னும் வரவிருப்பதன் ஆரம்பம் மட்டுமேயாகும்.

உத்தியோகபூர்வமற்ற உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டி உயர்ந்துள்ளது. பத்தாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதுடன், மருத்துவமனைகள் மற்றும் வைத்தியசாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாலும், வலிநிவாரணிகள் மற்றும் தடுப்புமருந்துகள் போன்ற அடிப்படை பொருட்கள் இல்லாததாலும் மருத்துவ உதவி பெற முடியாத நிலை உள்ளது, மின்சாரம் மற்றும் குடிநீர் குறித்து கூற வேண்டியதே இல்லை. அந்த புயலால் 2.1 மில்லியன் ஹைட்டி மக்கள் —அந்நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்— பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 1.4 மில்லியன் பேருக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.

இன்னும் என்ன வரவிருக்கிறதோ அது ஏறத்தாழ நிச்சயமாக இன்னும் மோசமாகவே இருக்கும். ஹைட்டியின் தென்கடலோர பயிர்கள் அழிக்கப்பட்டதால், அங்கே பஞ்சம் ஏற்படுவதற்கான எச்சரிக்கைகளும் உள்ளன. காலரா நோய்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் "அமைதிப்படை" துருப்புகளால் இந்நோய் அந்நாட்டிற்குள் உள்கொண்டுவரப்பட்ட பின்னர் இதனால் ஏற்கனவே 10,000 க்கும் அதிகமான ஹைட்டி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.

மாத்தியூ சூறாவளியின் இந்த கடுமையான பாதிப்பு, 2010 பூகம்பம் ஏற்பட்டு ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் வந்துள்ளது. அந்த பூகம்பத்தில் 230,000 பேர் கொல்லப்பட்டனர், 300,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் நாம் எழுதியதைப் போலவே, ஹைட்டி மக்கள் "… வெறுமனே இயற்கை பேரழிவால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கிடையாது. உள்கட்டமைப்பின்மை, Port-au-Prince இல் தரங்குறைந்த கட்டுமானம் மற்றும் அதற்கான எந்தவொரு விடையிறுப்பையும் ஒழுங்கமைப்பதற்கான ஹைட்டி அரசாங்கத்தினது திராணியற்ற தன்மை ஆகியவை இத்துயரத்தில் தீர்மானகரமான காரணிகளாக உள்ளன.”

“1915 இல் தொடங்கி அடுத்து அண்ணளவாக 20 ஆண்டுகளாக அத்தீவு நாட்டை அமெரிக்க கடற்படைகள் ஆக்கிரமித்து, அதை நடைமுறையளவில் ஒரு காலனி காபந்து அரசாக கையாண்டதில் இருந்து, ஹைட்டி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு நீடித்த உறவின் விளைபொருளே இத்தகைய சமூக நிலைமைகள்.”

மாத்தியூ சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களின் படுகோரமான தாக்கங்களில், ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் இந்த கசப்பான பாரம்பரியம் இன்றியமையாத காரணியாக தங்கியுள்ளது.

2010 பூகம்பத்தை அடுத்து, சர்வதேச நன்கொடையாளர்கள் ஹைட்டிக்கு 10.4 பில்லியன் டாலர் வழங்க உறுதியளித்தார்கள், அதில் அமெரிக்காவினது 3.9 பில்லியன் டாலரும் உள்ளடங்கும். இந்த நிவாரண முயற்சிகளை மேற்பார்வையிட்ட பிரதான நபர் பில் கிளிண்டன் ஆவார். அமெரிக்க அரசாங்கத்தின் மானியத்துடன் அமெரிக்காவிலிருந்து அரிசி இறக்குமதிகளுக்கான கட்டணங்களை நீக்கிய ஓர் வர்த்தக உடன்படிக்கையே, ஹைட்டி மக்களுக்கான இவரது முந்தைய "அன்பளிப்பாக" இருந்தது, அது ஹைட்டியின் சொந்த அரிசி உற்பத்தியாளர்களை திவாலாக்கி, அந்நாடு சுயமாக தனக்கான உணவை உற்பத்தி செய்ய முடியாதவாறு செய்துள்ளது.

அந்த பூகம்பத்தின் உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளை, இன்னும் கூடுதலாக முதலாளித்துவ இலாபம் ஈட்டுவதற்குரிய ஒரு பொன்னான வாய்ப்பாக வரவேற்று, அந்த முன்னாள் ஜனநாயக கட்சி ஜனாதிபதி சூளுரைக்கையில், ஹைட்டியை "மீண்டும் சிறப்பாக கட்டமைக்கப்பட" இந்த நிவாரணப் பணம் உதவும் என்றார். அண்மித்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன, ஹைட்டி மக்கள் அனைவராலும் “அந்த பணம் என்ன ஆனது?” என்று தான் கேட்கப்படுகிறது.

இன்றும், 2010 ஐ போலவே, ஹைட்டி மேற்கத்திய அரைகோளத்தில் மிகவும் வறிய மற்றும் சமூகரீதியில் மிகவும் சமநிலையற்ற நாடாக உள்ளது. ஹைட்டியின் பெருந்திரளான மக்கள் வறுமை சேற்றில் சிக்கியிருக்கையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் 2016 ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளரான அவர் மனைவி ஹிலாரி கிளிண்டனும் அவர்களது சொந்த சொத்துக்கள் அதிகரித்துள்ளதை காண்கிறார்கள். பில் கிளிண்டன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் வருவாயில் 230 மில்லியன் டாலர் திரண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்தம்பதியினர் தமது வாழ்க்கையில் “பொது சேவைக்காக" தமது உயிரை பணயத்தில் வைத்ததாக கூறி உயர்மட்ட 0.1 சதவீத வருவாய் பெறும் பிரிவுகளுக்குள் உள்ள உயர்மட்ட செல்வசெழிப்பான அமெரிக்க அடுக்கிற்குள் நுழைந்தனர். இந்த பரந்த செல்வத்திரட்சிக்கு ஆதாரமாக இருந்தது ஒரு அரசியல் எந்திரமாகும், அதை "கிளிண்டன் நிறுவனம்" என்று தான் சரியாக கூற வேண்டியிருக்கும். கிளிண்டன்களின் அரசியல் அபிலாஷைகளுடன் சேர்ந்து, அவர்களது தனிப்பட்ட சொத்துக்களுக்கு பெரு வணிக ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக இன்றியமையாத ரீதியில் ஒரு ஈனத்தனமான பண-மோசடி நடவடிக்கையும் இதில் உள்ளடங்கும். வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஃபார்சூன் 500 பார்வையாளர்களுக்காக பேசும் சொற்பொழிவாளர்களுக்கும், பெருநிறுவன பிரச்சார பங்களிப்பாளர்களுக்கும் மற்றும் அறப்பணி வேடம் தரித்த கிளிண்டன் அறக்கட்டளைக்கான நன்கொடைகளுக்கும் பணம் வாரியிறைக்கப்பட்டமை, அந்த நடவடிக்கையின் அடிப்படை அம்சங்களாகும்.

இந்த அறக்கட்டளை அமைப்புத்தான், 2010 பூகம்பத்திற்கு பின்னர் ஹைட்டியில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தது. தொழிலாளர்களை அடிமைப்படுத்த வன்முறை மற்றும் பீதியூட்டலை பிரயோகிப்பதாக நன்கறியப்பட்ட ஒரு தென்கொரிய நிறுவனம் நடத்தும் ஒரு மலிவுக்கூலி ஜவுளி ஆலை, மற்றும் மிக கொடூரமாக சுரண்டப்படும் ஹைட்டி தொழிலாள வர்க்கம் மீதான ஒடுக்குமுறையிலிருந்து இலாபங்களை கறக்க வாய்ப்பு தேடிவரும் வணிக பெருமக்களுக்கு சேவையாற்றும், அதன் அருகாமையில் அமைந்த ஒரு ஜோடி ஆடம்பர தங்கும்விடுதிகள் ஆகியவை அதன் மிகவும் வெளிப்படையாக கண்ணுக்குப் புலனாகும் பாரம்பரியமாகும்.

ஹைட்டியில் அந்த அறக்கட்டளையின் நடவடிக்கைகளைக் குறித்த ஓர் ஆய்வில், ABC News குறிப்பிடுகையில், அந்த ஜவுளி ஆலை "கொடுக்கப்பட்ட வேலைகளை விட குறைவாக செய்தளித்திருந்ததாக" குறிப்பிட்டது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “நிர்வாகிகள் பயமுறுத்துவதாகவும் மற்றும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் ஹைட்டி தொழிலாளர்கள் அவர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும்… உலகளாவிய உதவியுடன் 400 மில்லியன் டாலரில் கட்டப்பட்ட ஹைட்டி தொழில்துறை பூங்காவில் அதன் ஆலையை தொடங்கிய பின்னர், அந்த கொரிய நிறுவனம் கிளிண்டன் அறக்கட்டளையின் நன்கொடையாளராக ஆனது மற்றும் ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் தலைமை நிர்வாகிக்குச் சொந்தமான ஒரு புதிய நிறுவனத்தில் அதன் உரிமையாளர் முதலீடு செய்தார்,” என்று குறிப்பிட்டது.

நிவாரண நடவடிக்கைகள் பெருந்திரளான ஹைட்டி மக்களை விட “பில் இன் நண்பர்களுக்கு” நிறையவே செய்தது என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது, மேலும் கிளிண்டன் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை வாரி வழங்கியவர்களுக்கு ஹைட்டியில் இலாபகரமான நிறுவனங்கள் அமைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வெளியுறவுத்துறையில் இருந்த ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் தலைமை நிர்வாகிக்கு கூடுதலாக, ஜனநாயகக் கட்சியின் அந்த வேட்பாளரது இளைய சகோதரர் Tony Rodham உம் ஹைட்டியில் கிளிண்டன் உடனான தொடர்பால் பணத்தை குவித்துக் கொண்டார், ஓர் அரை நூற்றாண்டில் முதல்முறையாக 2012 இல் அந்நாட்டில் வழங்கப்பட்ட முதல் தங்கச் சுரங்கத்திற்கான அனுமதியை பெற்ற ஓர் அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் அவர் பதவி வகித்ததன் மூலம் கிடைத்த ஆதாயங்களும் இதில் உள்ளடங்கும். பின்னர் ஹைட்டியின் செனட் அந்த சர்ச்சைக்குரிய அனுமதிக்கு தடைவிதித்தது.

ஏகாதிபத்திய "மனிதாபிமானம்" வகித்த பாத்திரத்திற்கு கிளிண்டன் அறக்கட்டளை ஒரு அடையாளச் சின்னமாகும். அந்த அரைகோளத்தின் ஏனைய இடங்களைப் போலவே, அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கம் சீன வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சியால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ், வாஷிங்டனின் அரை-காலனித்துவ மேலாதிக்கத்தை அதிகரிப்பதற்கான ஒரு கருவியாக, ஹைட்டியில், அந்த அறக்கட்டளை சேவையாற்றுகிறது. சிரியாவில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள ஒரு பினாமி போருக்கு அது சாக்குபோக்குகளை வழங்குகிறது.

ஹைட்டி உடனான கிளிண்டன்களின் நிஜமான உறவு, ஹைட்டி அகதிகளைத் திரும்ப அனுப்பத் தொடங்குவது என்ற உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் முடிவால் மேற்கொண்டு அம்பலப்படுகிறது. இந்த திருப்பி அனுப்பும் நடைமுறை இந்த சூறாவளி காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதினும், சாத்தியமானளவிற்கு விரைவிலேயே தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, அகதிகள் தடுப்புக்காவல் முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

ஹைட்டியின் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாக கூறி இந்நடவடிக்கையை ஒபாமா நிர்வாகம் நியாயப்படுத்துகின்றது. என்றாலும், ஆதாரங்களின்படி பார்த்தால் அமெரிக்க-மெக்சிக்கன் எல்லையில் ஆயிரக்கணக்கான ஹைட்டி அகதிகள் வந்திறங்கும் வடிவத்தில் நிலைமை அதற்கு நேரெதிராகவே உள்ளது. அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பது ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதியாகும் முயற்சியை பலவீனப்படுத்தும் என்ற அச்சத்தின் பெரும் பாகமாக அம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

ஹைட்டியில் நிலைமைகள் மீது கோபம் அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் பான் கீ மூன் திங்களன்று எச்சரிக்கையில், “மக்கள் உதவிக்காக காத்திருக்கையில், பதட்டங்கள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன,” என்றார். ஹைட்டியில் ஆயுதமேந்திய "அமைதிப்படைகளை" நிலைநிறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையின் (MINUSTAH) உத்தரவாணையை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பது என்பது ஐ.நா. இன் முதல் நகர்வுகளில் உள்ளடங்குகிறது. அமெரிக்க கடற்படையும் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் அது "கொள்ளையர்களுக்கு" எதிராக ஹைட்டி தேசிய போலீஸ் உடன் செயல்பட்டு வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஹைட்டியில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் பாரம்பரியத்தை கடந்து வருவதென்பது, அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஹைட்டி தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படுவோரின் புரட்சிகர போராட்டங்கள் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.