ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India launches military attacks against Pakistan

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களைத் தொடங்கியது

By Keith Jones
30 September 2016

புதனன்று இரவு ஐந்து மணி நேரத்திற்கு அதிகமாக பாகிஸ்தானுக்குள் இந்தியா பல்வேறு "அதிநுட்பமான" இராணுவ தாக்குதல்களை நடத்தியமை, தெற்காசியாவை சாத்தியமான அளவிற்கு பேரழிவுரமான விளைவுகளுடன் முற்றுமுதலான போருக்கு நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஒரு போர் முன்பில்லாத வகையில் அணுஆயுதமேந்திய நாடுகளுக்கிடையிலான முதல் போர் என்பது மட்டுமல்ல; இது விரைவாக அமெரிக்கா மற்றும் சீனாவை எதிரெதிர் பக்கங்களுக்கு இழுத்து வரக்கூடியதாகும்.

பாகிஸ்தானிய எதிர்தாக்குதலை அனுமானித்து (அல்லது இந்திய போர் தயாரிப்புகளுக்கு மூடிமறைப்பை வழங்குவதற்காக), வியாழனன்று இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீரின் பாகிஸ்தானிய எல்லையோரம் 10 கிலோமீட்டருக்குள் வசிப்பவர்களை இந்திய அதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டனர்.

பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் அந்த புதன்கிழமை இரவு தாக்குதலை "தூண்டுதலற்ற அப்பட்டமான" இந்திய "ஆக்கிரமிப்பு தாக்குதல்" என்று கண்டித்ததுடன், இஸ்லாமாபாத்தின் விடையிறுப்பைக் குறித்து விவாதிக்க இன்று அவசரமாக மந்திரிசபை கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்-வசமிருக்கும் காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் பகுதியில் இருந்த ஏழு "பயங்கரவாத குண்டு செலுத்தும் இடங்களை" (terrorist launching pads) தாக்கியதாகவும்; பாகிஸ்தானிய பகுதிக்குள் 3 கிலோமீட்டர் வரையில் அதன் படைகள் ஊடுருவியதாகவும்; "பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முயன்றவர்கள்" மீது அவர்கள் "கணிசமான பாதிப்புகளை" ஏற்படுத்தியதாகவும் இந்தியா கூறுகிறது.

அந்நடவடிக்கை குறித்து இராணுவம் வாய் திறக்கவில்லை. ஆனால் உத்தியோகபூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் இந்திய ஊடக செய்திகள் குறிப்பிடுகையில், தரை வழியாகவும் மற்றும் துப்பாக்கி தாங்கிய ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் இரண்டு விதமாகவும் இந்திய கமாண்டோக்கள் ஆசாத் காஷ்மீர் அல்லது பாகிஸ்தான்-ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவியதாகவும், அவர்களால் "கொல்லப்பட்டவர்களின்" எண்ணிக்கை “இரட்டை-இலக்கம்" என்றும் குறிப்பிட்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த கால்-நூற்றாண்டுக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் போர் நெருக்கடிகளினூடாக வந்துள்ளன, மற்றும் 1999 இல் இந்தியா-வசமிருக்கும் காஷ்மீரின் தொலைதூர கார்கில் பகுதியில் ஓர் அறிவிக்கப்படாத போரை நடத்தின. ஆனால் பாகிஸ்தானுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது துரிதமாக ஒரு போராக, அணுஆயுத போராக கூட, தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தில் புது டெல்லி தசாப்தங்களாக இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளது.

இமயமலை ஒட்டிய ஜம்மு & காஷ்மீர் மாநில இந்திய இராணுவ தளத்தை இந்திய-விரோத இஸ்லாமிய போராளிகள் தாக்கியதில் பதினெட்டு இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பத்து நாட்களுக்கு பின்னர், நேற்றைய தாக்குதல் நடந்தது. ஒரு அவசர விசாரணை கூட இல்லாமல், இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் அத்தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை பொறுப்பாக்கியதுடன், பாகிஸ்தானை தண்டிக்கவும் சூளுரைத்தது.

இந்திய ஊடகங்கள், எதிர்கட்சிகள், மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் ஒரு நீண்ட பட்டியலில் இருக்கும் அனைவரும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இரத்த வெறி கூச்சலில் இணைந்தனர்.

வெற்றிக் களிப்பான நேற்றைய பத்திரிகையாளர் கூட்டத்தில், இராணுவ நடவடிக்கைகளுக்கான இந்திய தரைப்படையின் இயக்குனர் ஜெனரல் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறுகையில், இந்தியாவுக்குள் "தாக்குதல் தொடங்க" எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி நிலைநின்றிருந்த “பயங்கரவாத குழுக்களை" இலக்கில் வைத்து அந்த “அதிநுட்பமான இராணுவ தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேற்கொண்டு எல்லை-தாண்டிய நடவடிக்கைகள் நடத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று சிங் குறிப்பிட்டார். “ஆனால்", அவர் தொடர்ந்து அச்சுறுத்தும் விதத்தில் கூறுகையில், “எந்தவித திடீர் நடவடிக்கை வந்தாலும், அவற்றை கையாள இந்திய இராணுவப் படைகள் முழுமையாக தயாராக உள்ளன,” என்றார்.

இதற்கிடையே பாகிஸ்தானிய இராணுவம், எந்தவிதமான "நுட்பமான" எல்லை கடந்த தாக்குதலையும் இந்தியா நடத்தவில்லை என்று பலமாக மறுத்துள்ளதுடன், அக்கூற்றுகள் “பொய்யாக நன்மதிப்புகளை உருவாக்க" இந்தியா உருவாக்கிய "ஒரு பிரமை" என்றும், "உண்மை போல காட்டுவதற்கான இட்டுக்கட்டல்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானிய இராணுவம் புதனன்று இரவு அதன் இரண்டு சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், ஏனைய ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒப்புக் கொள்கிறது, ஆனால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (LoC) வழமையாக நடக்கும் எல்லை தாண்டிய பீரங்கி குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இறந்ததாக அதை சாட்டுகிறது. இந்தியாவின் வாதங்களைச் சவால்விடுத்த அதன் அறிக்கையில், இராணுவம் குறிப்பிடுகையில் "பாகிஸ்தானிய மண்ணில் நுட்பமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால்,” அதுவும் "பலமாக விடையிறுக்கும் என்பதை பாகிஸ்தான் தெளிவுபடுத்தி இருப்பதாக" தெரிவித்தது.

நிலைமை எவ்வளவு அபாயகரமாக உள்ளது என்பதற்கு கூடுதல் அறிகுறியாக, இரண்டு தரப்புகளுமே தெளிவாக பொய் தகவல்களைப் பரப்பி வருகின்றன.

இந்தியாவிற்குள் உடனடியாக வரவிருந்த பயங்கரவாத படைகளை தடுக்கும் நோக்கில் நேற்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக புது டெல்லியின் வாதத்தை எடுத்துப்பார்த்தால், அது ஆக்ரோஷமான பொறுப்பற்ற ஒரு நடவடிக்கைக்கு வெளிப்படையான, ஜோடிக்கப்பட்ட சாக்குபோக்காக உள்ளது.

பாகிஸ்தானிய மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிதித்து நசுக்கி உள்ள, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியாளராக சேவையாற்றி உள்ள பாகிஸ்தானின் பிற்போக்குத்தனமான, வகுப்புவாத ஆளும் உயரடுக்கையோ மற்றும் அதன் இராணுவத்தையோ உலக சோசலிச வலைத் தளம் ஆதரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அதன் இரகசிய போரில் இளைய பங்காளியாக இஸ்லாமாபாத்தை உடனிறுத்தி இருந்த சிஐஏ இன் தந்திரங்களில் இருந்து படித்து வந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய விரோதங்களைப் பின்தொடர்வதில், குறிப்பாக காஷ்மீரின் இந்திய ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை வகுப்புவாத திசையில் திசைதிருப்ப மற்றும் அரசியல்ரீதியில் ஒடுக்குவதற்காக, இஸ்லாமிய பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி உள்ளது.

ஆனால் பாகிஸ்தானை விட ஆறு மடங்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட மற்றும் ஏழு மடங்கு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடான இந்தியாவிற்கும் அதற்கும் இடையிலான இராணுவ-மூலோபாய இடைவெளி குறித்து தொடர்ந்து அபாயக் குரலை எழுப்பியுள்ள பாகிஸ்தான், ஏற்கனவே புது டெல்லி போர் முனைப்பில் இருக்கையில் எதற்காக அதை தாக்குவதற்காக பயங்கரவாதிகளை ஒன்றுதிரட்டும்?

2010 க்குப் பின்னர் இருந்து வளர்ச்சி விகித வீழ்ச்சியால் கதிகலங்கி போயுள்ள இந்திய முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தவும் மற்றும் உலக அரங்கில் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளை வலியுறுத்தவும் நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிரமான வலதுசாரி பிஜேபி ஐ அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. இரண்டாவது நோக்கத்தைப் பின்தொடர்வதற்காக, இந்தியா வாஷிங்டனின் சீனாவிற்கு எதிரான போர் உந்துதலில் முன்பினும் அதிகமாக முழுமையாக ஒருங்கிணைந்துள்ளதுடன், அமெரிக்க ஆதரவினால் பலம் பெற்று, தன்னைத்தானே பிராந்திய மேலாதிக்க சக்தியாக காட்ட முனைந்துள்ளது.

இந்திய உயரடுக்கு, பாகிஸ்தானிய "பயங்கரவாதத்தால்" பாதிக்கப்பட்ட அப்பாவி நாடாக அதை காட்டிக்கொள்கின்ற அதேவேளையில், பிஜேபி அரசாங்கமோ பாகிஸ்தானுடன் மோதலை நடத்துகிறது. அது பதவியேற்ற பின்னர் உடனடியாக, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை ஏற்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியதால், 2015 இல் ஒரு தசாப்தத்தில் மிகவும் நீண்ட நாட்கள் நீடித்த எல்லை தாண்டிய குண்டுவீச்சு நடந்தது. ஊரி தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், பாகிஸ்தானை நடைமுறையளவில் துண்டாட அச்சுறுத்தி மோடி அறிவிக்கையில், இஸ்லாமாபாத்திற்கு எதிராக பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன-தேசியவாத கிளர்ச்சியை இந்தியா ஊக்குவிக்கும் என்று அறிவித்தார்.

நேற்றைய தாக்குதல், புது டெல்லி அதன் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதில் இன்னும் அதிக அபாயங்களை எடுக்க தயாராக உள்ளது என்பதையும் மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் அது இனியும் "மூலோபாய கட்டுப்பாட்டு" கொள்கை என்பதில் கட்டுப்பட்டு இருக்காது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

எல்லை கடந்து தாக்குதல்கள் நடக்கவில்லை எனும் பாகிஸ்தானின் கூற்றுகளைப் பொறுத்த வரையில், அவை மேலோட்டமாக கூட நம்பத்தகுந்தவையாக இல்லை. பல்வேறு பாகிஸ்தானிய அரசு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அளித்த அறிக்கைகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ சம்பவங்களைக் குறித்த இராணுவத்தின் விபரங்களுடன் முரண்படுகின்றன. அவற்றில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மத் ஆசிப் இன் அறிக்கையும் உள்ளடங்கும், “இந்தியா மீண்டும் இதை செய்ய முயன்றால், நாங்கள் மிகவும் பலமாக விடையிறுப்போம்,” என்றவர் அறிவித்தார்.

இந்தியா பாகிஸ்தானுக்குள் ஓர் இராணுவ தாக்குதலை நடத்தியதை மறுப்பதன் மூலமாக, இந்தியாவின் எந்தவொரு எல்லை தாண்டிய வேட்கைக்கும் அதன் சொந்த இராணுவ தாக்குதலைக் கொண்டு பதிலளிக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் அது அச்சுறுத்துவது வெற்றியளிக்காது என்று அவமானகரமாக ஒப்புக்கொண்டு, அதை பகிரங்கப்படுத்தாமல், பிற்போக்குத்தனமான முதலாளித்துவ புவிசார் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து இஸ்லாமாபாத் கூடுதல் தீவிரப்பாட்டைத் தவிர்க்க முயல்கிறது.

எவ்வாறிருப்பினும் இந்த நிலைப்பாடு, பாகிஸ்தான் எந்தளவிற்கு பலவீனமாக உள்ளது என்பதற்கு ஆதாரமாக அதை தூக்கிப்பிடிக்க மட்டுமே மோடி அரசாங்கத்தையும் மற்றும் இந்திய உயரடுக்கின் மிகவும் போர்வெறி கொண்ட பிரிவுகளையும் ஊக்குவிக்கும். நேற்று, காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்கலாக பிஜேபி கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்ரோஷ தாக்குதலைக் கொண்டாட ஒன்று சேர்ந்தன. இதற்கிடையே அத்தாக்குதல்கள் ஒரு தைரியமான, மிகவும் பலமான இந்தியாவிற்கான ஆதாரங்களாகும் என்ற அரசாங்கத்தின் கூற்றுகளை ஊதிப்பெரிதாக்கி, இராணுவத்தை உண்மையான மாவீரர்கள் என்று தம்பட்டமடித்து, அந்த இராணுவத் தாக்குதல்களை பாராட்டுவதற்கு ஊடகங்கள் களைப்படையும் அளவிற்கு வேலை செய்தன.

இன்று தெற்காசிய மக்களை ஒரு அணுசக்தி பேரழிவைக் கொண்டு அச்சுறுத்துகின்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூலோபாய போட்டி, முதலாளித்துவ ஆட்சியின் தோல்விக்கு சான்றாகும். இது, 1947 இல் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்கள் துணைக்கண்டத்திலிருந்து வெளியேறுகையில், தெற்காசிய முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்விரோத கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லீம் லீக் ஆல் மிக பகிரங்கமாக கருத்தொருமித்து நடத்தப்பட்ட முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்து மேலாதிக்க இந்தியா என்ற வகுப்புவாத தெற்காசிய பிரிவினையில் வேரூன்றியுள்ளது.

இன்னும் கூறுவதென்றால், சீனாவைத் தனிமைப்படுத்தி, சுற்றி வளைத்து, அதற்கு எதிராக போருக்கு தயாரிப்பு செய்யும் வாஷிங்டனின் மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக, வாஷிங்டனின் தசாப்தத்திற்கு அதிகமான காலத்திய உந்துதலே, இந்த போர் அபாயத்தைத் தூண்டுவதில் ஒரு முகப்பெரிய காரணியாக உள்ளது. மோடியின் கீழ், இந்தியா, தென் சீனக் கடல் பிரச்சினையில் அமெரிக்காவுடன் அணி சேர்ந்துள்ளதுடன், அமெரிக்காவின் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான மூலோபாய இருதரப்பு மற்றும் முத்தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளது. அமெரிக்க போர்விமானங்களும் போர்க்கப்பல்களும் இந்திய இராணுவ தளங்களை வழமையாக பயன்படுத்துவதை அனுமதிக்க கடந்த மாதம் மோடி உடன்பட்டார்.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ், அமெரிக்கா இந்தியாவிற்கு "மூலோபாய பரிசுகளை" வாரி வழங்கியுள்ளது, அது அதிநவீன ஆயுத தளவாடங்களை இந்தியா பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளதுடன், புது டெல்லி அதன் அணுஆயுத அபிவிருத்தி மீதான உள்நாட்டு அணுசக்தி திட்டங்களுக்கு மூலவளங்களைத் ஒன்றுதிரட்டுவதற்கு நடைமுறையளவில் அதை அனுமதிக்கும் விதத்தில், உலக அணுசக்தி ஒழுங்கமைப்பு முறையில் அதற்கு சிறப்பு அந்தஸ்தை உருவாக்கி அளித்துள்ளது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தோ-அமெரிக்க கூட்டணியை பலப்படுத்துதல் என்பது, பனிப்போர் முழுவதிலும் தெற்காசியாவில் பிரதான அமெரிக்க கூட்டாளியாக இருந்துள்ள பாகிஸ்தான் உடனான வாஷிங்டனின் உறவுகளைக் கீழறுப்பதுடன் தொடர்புபட்டுள்ளது.

வாஷிங்டன் தெற்காசியாவில் அதிகார சமநிலையை மாற்றிவிட்டதாகவும், புது டெல்லி உடனான அதன் முன்பினும் நெருக்கமான மூலோபாய பங்காண்மை இந்தியாவைப் பலப்படுத்தி வருவதாகவும், ஆயுத போட்டி மற்றும் அணுஆயுத போட்டிக்கு எரியூட்டி இருப்பதாகவும் இஸ்லாமாபாத் எச்சரித்துள்ள போதினும், ஏறத்தாழ முழுமையாக நடைமுறையில் ஒன்றும் மாற்றமில்லை.

மூலோபாயரீதியில் தனிமைப்படுவதைக் குறித்து அஞ்சி, பாகிஸ்தான் அதன் நீண்ட-கால கூட்டாளியான சீனாவுடன் நெருக்கத்தை உண்டாக்கி கொண்டுள்ளது. ஆனால் இது வாஷிங்டன் உடனான அதன் கருத்துவேறுபாடுகளை அதிகரித்து, இந்தியாவுடனான அதன் விரோதத்தை எரியூட்ட மட்டுமே செய்துள்ளது.

புது டெல்லியை சாந்தப்படுத்தும் விருப்பத்தில், வாஷிங்டன் பாகிஸ்தானை "தண்டிக்க" அதற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கலாம், இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு முக்கிய படைத்தளவாடங்களை வழங்க இன்னமும் பாகிஸ்தானையே சார்ந்துள்ளதால், ஒபாமா நிர்வாகம் அதை மறுக்கிறது.

ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், இந்தியாவின் "நுட்பமான இராணுவ தாக்குதலுக்கு" சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவரது இந்திய சமதரப்பான அஜித் தோவல் ஐ புதனன்று மாலை அழைத்து, ஊரி தாக்குதலுக்கு உள்நோக்கம் கொண்ட வருத்தத்தை தெரிவித்திருந்தார் மற்றும் இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டைக்கு ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார். ஊரி தாக்குதலுக்கு பாகிஸ்தானை பொறுப்பாக்கி முத்திரை இடத் தவறியமை உட்பட வாஷிங்டன் போதுமானளவிற்கு ஆதரவாக இல்லை என இந்தியாவில் அதிகரித்துவரும் குற்றச்சாட்டுகள் மீதான கவலைகளால் ரைஸ் இன் அழைப்பு உந்தப்பட்டிருந்ததாக பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டன.

சர்ச்சைக்கு இடமின்றி இருப்பது என்னவென்றால், நேற்றைய "நுட்பமான தாக்குதல்கள்" அப்பட்டமாக சட்டபூர்வமற்றவை என்பதுடன் அதிகளவில் ஆத்திரமூட்டுபவை என்றபோதினும், அமெரிக்க அரசு அதிகாரிகள் பாகிஸ்தான் மீதான நேற்றைய அந்த "நுட்பமான தாக்குதல்களைக்" கண்டிக்க மறுத்துள்ளனர். அதற்கு மாறாக அவர்கள் இரண்டு தரப்பும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறும், பேச்சுவார்த்தையை நோக்கி நகருமாறும் சம்பிரதாயமான அழைப்புகளை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா மிகவும் அபாயகரமான மற்றும் கேடுவிளைவிக்கும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. புது டெல்லியுடன் சேர்ந்து அதன் சீன-விரோத கூட்டணியை முன்னெடுப்பதில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமாக, ஆனால் "திறமையான நடவடிக்கை" என்று கருதப்படும் இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ கொள்கையைப் பின்பற்ற இப்போது அது வகுப்புவாத நஞ்சு நிறைந்த பிஜேபி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை ஊக்குவித்து கொண்டிருக்கிறது. நான்கு போர்களை நடத்தியுள்ள ஒரு நாடான பாகிஸ்தானோ, சமீபத்தில் அது நிலைநிறுத்திய "போர்க்கள" அல்லது தந்திரோபாய அணுஆயுதங்களை துரிதமாக பிரயோகித்தாவது எந்தவொரு பெரியளவிலான இந்திய தாக்குதலையும் எதிர்கொள்ள அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.