ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US backs India’s military strikes on Pakistan

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ தாக்குதல்களை அமெரிக்கா ஆதரிக்கிறது

By Keith Jones
1 October 2016

பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரில் புதனன்று இரவு நடத்தப்பட்ட இந்தியாவின் "அதிநுட்பமான" எல்லை தாண்டிய இராணுவ தாக்குதல்களுக்கு ஒபாமா நிர்வாகம் அதன் ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது.

இந்திய தாக்குதல் அப்பட்டமாக சட்டவிரோதமானது மற்றும் பெரிதும் ஆத்திரமூட்டக்கூடியதாகும். அமெரிக்க மூலோபாய சிந்தனை குழாம்கள், பிரச்சினைக்குரிய காஷ்மீரை உலகின் மிகவும் அபாயகரமான "அணுஆயுத வெடிப்புப்புள்ளியாக" அடிக்கடி குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு இருக்கின்ற போதினும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலின் முண்டுகோலாக உள்ளதும் மற்றும் அதன் "உலகளாவிய மூலோபாய பங்காளியாக" இருப்பதுமான இந்தியா மீது, எவ்வித விமர்சனமும் வைப்பதை வேண்டுமென்றே அமெரிக்க அதிகாரிகள் தவிர்த்துள்ளனர்.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பிஜேபி அரசாங்கம் தெற்காசியாவை முழுமையான போர் விளிம்பின் நெருக்கத்தில் தள்ளுகின்ற போதிலும், பல்வேறு இராணுவ-மூலோபாய சிந்தனை குழாம்களில் இப்போது செயல்பட்டு வரும் ஒபாமா மற்றும் புஷ் நிர்வாகத்தினது முன்னாள் அதிகாரிகளின் ஒரு கூட்டம், இந்திய நடவடிக்கையை புகழ்ந்துரைத்து வருவதுடன், புது டெல்லி அதன் "நிதானத்தை" கடைபிடிப்பதற்காக அதை பாராட்டி வருகின்றனர்.

ஆசாத் காஷ்மீர் அல்லது பாகிஸ்தான்-ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் மூன்று கிலோமீட்டர் வரையில் ஒரு டஜனுக்கும் அதிகமான இடங்களுக்கு இந்தியா தரைப்படைகளையும், துணைப்படை பிரிவுகள் மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர்களையும் அனுப்பியதாக அது கூறுகிறது. அது "பலமாக" ஊடுருவியதாகவும், “பயங்கரவாதிகள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க முயன்றவர்களின்" உயிரிழப்புகள் "இரட்டை இலக்கம்" என்றும் அது பெருமை பீற்றுகிறது.

சம்பவங்களின் இந்திய விவரிப்பைப் பாகிஸ்தான் எதிர்க்கின்ற அதேவேளையில், புதனன்று இரவு அதன் இரண்டு சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் ஒப்புக் கொள்கிறது.

இத்தாக்குதல்கள் பாகிஸ்தானை நோக்கிய இந்திய மூலோபாயத்தில் ஓர் அபாயகரமான புதிய திருப்பத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இது இந்தியாவின் தீவிரமான வலது சாரி பிஜேபி அரசாங்கத்தால் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றன என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது. “மூலோபாய கட்டுப்பாட்டு" தளைகளை உடைத்தெறிந்துள்ள ஒரு பலமான, துணிச்சலான இந்தியாவை மெய்பித்திருப்பதாக இத்தாக்குதல்கள் பெருமைப்படுத்தப்படுகின்றன.

நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலமாக, இந்தியா பாகிஸ்தானுக்குள் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி இருக்கவில்லை. அல்லது, இன்னும் துல்லியமாக கூறுவதானால், போருக்கு மற்றும் விரைவாக அணுஆயுத மோதலுக்குமே கூட இட்டுச் செல்லக்கூடும் என்பதால், தாக்குதல்கள் மற்றும் எதிர்தாக்குதல்கள் தீவிரப்படுவதை தவிர்க்கும் நோக்கில் அது நடத்திய எந்தவொரு நடவடிக்கைகளும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் புதிய ஆக்ரோஷமான நிலைப்பாட்டை ஆமோதிக்க வாஷிங்டன் தயாராக இருப்பது, முற்றிலும் பொறுப்பற்றுள்ளது. இது இன்னும் அதிக இராணுவ-மூலோபாய அபாயங்களை ஏற்க மட்டுமே புது டெல்லியை ஊக்குவிக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் "ஆசிய முன்னிலை", தெற்காசியாவில் பெரிதும் நிலைகுலையச் செய்யும் பாத்திரம் வகித்து வருகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சீனாவைச் சுற்றி வளைத்து அதற்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்யும் அதன் அத்துமீறலில் இந்தியாவை ஒரு "முன்னணி" நாடாக ஆக்குவதற்கான வாஷிங்டனின் உந்துதல் தான் குறிப்பாக கேடுவிளைவிக்கக் கூடியதாக உள்ளது.

இந்திய தாக்குதல்களை நோக்கிய வாஷிங்டனின் மனநிலை குறித்து வியாழனன்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் மீண்டும் மீண்டும் நேரடியாக பதிலளிப்பதை தட்டிக்கழித்தனர். அதற்கு மாறாக அவர்கள் இரண்டு தரப்பும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென்றும் பொதுவாக, சம்பிரதாயமாக அழைப்பு விடுத்தனர். அதேவேளையில் எல்லை தாண்டிய "பயங்கரவாதத்தை" தடுக்க பாகிஸ்தான் இன்னும் அதிகம் வேலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி, இந்திய இராணுவ தாக்குதல்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதில் மிகவும் அக்கறை காட்டியதுடன், பத்திரிகையாளர் சந்திப்பின் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் வெளிப்படையாகவே பதட்டமானார். இந்திய தாக்குதல்கள், “வெளியுறவுத்துறை செயலர் கெர்ரி எச்சரிக்கை செய்திருந்ததற்கு மாறாக" “தீவிரமடைந்த" வகையா என்றவொரு கேள்வியை அவர் பிழையாக அர்த்தப்படுத்திக் கொண்டு, இந்தியா வசமிருக்கும் காஷ்மீரில் ஊரி இராணுவ தளம் மீதான செப்டம்பர் 18 பயங்கரவாத தாக்குதலைக் குறித்து கேட்பதாக அவர் எடுத்துக் கொண்டார்.

இந்திய தாக்குதல்கள் "தீவிரப்படுத்துவதற்காகவா" என்று அழுத்தமளித்ததும், கெர்பி மீண்டும் அக்கேள்வியை மழுப்பினார், அதேவேளையில் புது டெல்லி கூறுவதைப் போலவே, “பயங்கரவாதம்" தான் இந்தோ-பாகிஸ்தான் பதட்டங்களுக்கான மூலக்காரணம் என்று குறிப்பிட்டார். “[பயங்கரவாத] அச்சுறுத்தலைக் கையாள பேச்சுவார்த்தைகளை அதிகரிக்குமாறு அவர்களை ஊக்குவிப்பதையும் மற்றும் பதட்டங்களைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதையும் பொறுத்த வரையில்,” “இரண்டு தரப்புகளுக்குமே எங்களின் சேதி ஒன்று தான். மேலும் அங்கே நடக்கும் விடயத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கமளிக்க… நான் இறங்கப் போவதில்லை” என்று கெர்பி அறிவித்தார்.

பாகிஸ்தானை இந்தியா தாக்கப் போகிறது என்பது முன்கூட்டியே வாஷிங்டனுக்கு எச்சரிக்கை கிடைத்திருக்கக் கூடும் என்பதற்கும், அது புது டெல்லிக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கலாம் என்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புதனன்று இரவு தாக்குதலுக்கு முன்னதாக, அங்கே உயர்மட்ட அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையே பரபரப்பான தொலைபேசி அழைப்புகள் இருந்தன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் அவரது இந்திய சமதரப்பான சுஷ்மா சுவராஜ் க்கு இடையேயும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் அவரது இந்திய சமதரப்பான அஜீத் தோவல் க்கு இடையிலான உரையாடல்களும் அதில் உள்ளடங்கும்.

சர்ச்சைக்கு இடமின்றி இருப்பது என்னவென்றால், பாகிஸ்தானை தாக்குவதற்காக, தனது "மூலோபாய கட்டுப்பாட்டை" இந்தியா கைத்துறந்த பின்னர், ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல்களை பகிரங்கமாக ஆமோதித்து, ஆப்கானிஸ்தானின் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பைப் பேணுவதற்கு பாகிஸ்தானின் படைத்தளவாட பரிவர்த்தனை உதவிகளைப் பெண்டகன் சார்ந்திருக்கும் நிலைமைகளின் கீழ், ஆவணங்களில் இல்லாத வகையில் சாமர்த்தியமாக, அதன் ஆதரவைச் சமிக்ஞை காட்டியுள்ளது.

முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரிகள் அத்தகைய கட்டுப்பாடுகளின் கீழ் இல்லை என்பதால், அவர்கள் இந்தியாவினது புதிய மற்றும் இன்னும் ஆக்ரோஷமான இராணுவ-மூலோபாய தோரணைக்கு ஆதரவாக குரல் கொடுக்க அணிதிரண்டனர்.

நீண்டகால சிஐஏ பகுப்பாய்வாளரும் ஒபாமா நிர்வாகத்திற்கான முன்னாள் ஆப்கான்-பாகிஸ்தான் போர் ஆலோசருமான புரூஸ் ரெடெல், ஹிந்துஸ்தான் டைம்ஸ் க்கு கூறுகையில், வாஷிங்டனின் சட்டவிரோதமான குண்டுவீசும் டிரோன் தாக்குதல்களையும் மற்றும் பாகிஸ்தான் இறையாண்மை மீதான ஏனைய அத்துமீறல்களையும் ஒரு உதாரணமாக காட்டி, பாகிஸ்தானை தாக்க இந்தியாவுக்கு அதன் உரிமை இருப்பதாக தெரிவித்தார். ரெடெல் கூறுகையில், “ஒசாமா பின்லேடன் மற்றும் முல்லா மன்சூர் (கடந்த மே மாதம் விசாரணையின்றி கொல்லப்பட்ட ஆப்கான் தாலிபான் தலைவர்) உட்பட பயங்கரவாதிகளைக் கொல்ல, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக அமெரிக்கா பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தியிருப்பதை இந்தியா சுட்டிக்காட்ட முடியும்,” என்றார்.

ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகத்தில் இருந்த, 2008 இந்தோ-அமெரிக்க சிவில் அணுசக்தி உடன்படிக்கையை பேரம்பேசுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வந்த அஸ்லி டெல்லிஸூம் இந்திய தாக்குதலை உறுதியாக ஆதரிப்பதில் குறைந்து விடவில்லை. இந்திய பிரதம மந்திரி மோடி, “ஊரி அட்டூழியத்திற்குப் பதிலளிக்காமல் விட்டுவிடக் கூடாது,” என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு அவர் தெரிவித்தார்.

இந்திய நடவடிக்கையை "மிகவும் கவனமாக அளவிடப்பட்டிருந்ததாக" டெல்லிஸ் பாராட்டினார். பாகிஸ்தான் எல்லை தாண்டி தீவிரவாத படைகளை அனுப்ப இருந்தது என்ற, அத்தாக்குதலுக்கு புது டெல்லியினது வெளிப்படையான, இட்டுக்கட்டப்பட்ட சாக்குப்போக்கை கையிலெடுத்து, டெல்லிஸ் தொடர்ந்து கூறுகையில், “பயங்கரவாத குண்டுவீசும் தளங்களைத் தாக்கியமை, இந்தியா பதிலடி கொடுக்கும் அதன் சுதந்திரத்தை இழந்துவிடவில்லை என்பதற்கு சமிக்ஞை காட்டுவதுடன், மேற்கொண்டு தீவிரப்படுத்தும் பொறுப்பை பாகிஸ்தான் மீது விட்டுவிடுகிறது,” என்றார்.

அமெரிக்க செனட் வெளியுறவுத்துறை கமிட்டியின் ஒரு முன்னாள் தெற்காசிய கொள்கை ஆலோசகரும் மற்றும் தற்போது ராண்ட் பெருநிறுவன பகுப்பாய்வாளருமான ஜோன் பிளாங் கூறுகையில், “(பாகிஸ்தானின்) அபோட்டாபாத்தில் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக" அது அதன் சொந்த "நுட்பமாக தாக்குதலை" நடத்தி இருப்பதால், “இந்த எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இந்தியா மீதான எந்தவொரு (அமெரிக்க) விமர்சனமும் பாசாங்குத்தனமாக பார்க்கப்படும்,” என்றார்.

இந்தியா மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர்களுக்கு இடையிலான புதன்கிழமை மாலை தொலைபேசி அழைப்பின் முக்கியத்துவத்தை பிளாங் சுட்டிக்காட்டினார். “அஜீத் தோவல் மற்றும் சூசான் ரைஸ் க்கு இடையிலான தொலைபேசி உரையாடல்… ஒரு பாகிஸ்தானிய எதிர்-தாக்குதலைத் தடுக்க அமெரிக்க உதவியை உள்ளடக்கி இருந்தது,” என்றார்.

பனிப்போர் காலத்தில், பாகிஸ்தான் ஒரு முக்கிய அமெரிக்க கூட்டாளியாக இருந்தது. அதன் இராணுவத்தை வாஷிங்டன் ஆயுதமேந்த செய்ததுடன், இந்தியாவுடனான அதன் பிற்போக்குத்தனமான இராணுவ-மூலோபாய விரோதத்தை அது ஊக்குவித்தது. இந்தியாவோ, 1971 க்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்துடன் "சமாதானம், நட்புறவு மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை" மூலமாக அதன் உத்தியோகபூர்வ கூட்டாளியாக இருந்தது.

1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தை இரத்தம் சிந்த வைக்கும் ஒரு பினாமிப் போரில் அது பயன்படுத்திய ஆப்கான் முஜாஹிதீன்களையும், அதனுடன் கூட்டு சேர்ந்திருந்த அரபு அடிப்படைவாத சக்திகளையும் பயிற்றுவிப்பதை அமெரிக்கா பாகிஸ்தானிய உளவுத்துறைக்கு துணை ஒப்பந்தமாக அளித்திருந்தது, அதேவேளையில் இஸ்லாமிய சர்வாதிகாரி ஜியா உல்-ஹக்கை கருவியாக பிரயோகிக்க அவரை ஆதரித்தது.

ஆனால் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் இருந்து, வாஷிங்டன் இந்தியாவை சீனாவிற்கு எதிர்பலமாக கட்டமைக்க முனைந்துள்ளதோடு, 2011 இல் ஒபாமா "ஆசியாவை நோக்கிய முன்னிலை" தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா அதன் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பக்கவாட்டில் ஒரு சீன-விரோத கூட்டணியின் நான்காவது தூணாக இந்தியாவை ஆக்க முனைந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்திய இந்தோ-அமெரிக்க "உலகளாவிய மூலோபாய பங்காண்மையை" கட்டமைக்கும் விதத்தில், 28 மாதகால பழமையான பிஜேபி ஆட்சி, வாஷிங்டனுக்கு களிப்பூட்டும் வகையில், வேகமாக அந்த "முன்னிலைக்குள்" இந்தியாவின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தி உள்ளது. தென் சீனக் கடல் விவகாரத்தில் ஒபாமா நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது உட்பட, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு உறவுகளை விரிவாக்கியமை மற்றும் அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் இந்திய இராணுவத்தளங்களில் எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் பழுது பார்த்துக் கொள்வதற்கும் மற்றும் போர் தளவாடங்களை முன்னோக்கி நிலைநிறுத்துவதற்கும் அவற்றை வழமையாக பயன்படுத்த அனுமதிப்பதற்கு ஒப்புக்கொண்டமையும் இதில் உள்ளடங்கும்.

இந்த மாற்றத்திற்கு இணைந்த விதத்தில், தெற்காசியாவில் பாகிஸ்தானும் சீனாவும் பரந்த பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்துள்ள நிலையில், மோடி அரசாங்கம் இவற்றிற்கு எதிராக மிகவும் ஆக்ரோஷ கொள்கை ஒன்றை பின்தொடர்கிறது. மோடியின் கீழ், இந்தியா தன்னைத்தானே பிராந்திய மேலாதிக்க சக்தியாக பலப்படுத்தி வருகிறது. இது இராஜாங்க மற்றும் அரசியல் வேட்களையும் அத்துடன் மிகப் பெரியளவில் புதிய ஆயுத கொள்முதல்கள் மற்றும் அதன் எல்லையில் ஆக்ரோஷமான இராணுவ ஆயத்தப்படுத்தல்களையும் உள்ளடக்கியதாகும்.

இந்தோ-அமெரிக்க கூட்டணியிலிருந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தலை முகங்கொடுத்து, பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத் அவற்றின் சொந்த நீண்டகால மூலோபாய உறவுகளைப் பலப்படுத்தி உள்ளன.

ஏற்கெனவே மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த முதல் நினைவுதினத்தன்று, முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள ரெடெல் குறிப்பிடுகையில் "தெற்காசியாவில் இருதுருவ கூட்டணி முறை இறுக்கமாகி உள்ளது... அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக உள்ளன, சீனாவும் பாகிஸ்தானும் இன்னும் அதிக நெருக்கமாக வந்துள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் முக்கிய கூறுபாடாக இருப்பது சீன பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் (CPEC) என்பதாகும். இது பாகிஸ்தானின் அரேபிய கடல் துறைமுகமான குவாடாரை மேற்கு சீனாவுடன் இணைக்கும் 46 பில்லியன் டாலர் இரயில்வழி, சாலைவழி, எரிகுழாய் மற்றும் எரிசக்தி திட்டங்களது வலையமைப்பாகும்.

CPEC திட்டம், பாகிஸ்தானின் கரங்களுக்குத் தேவைப்படும் ஒரு மிகப் பெரிய மற்றும் மிக பலமான பொருளாதார அடியை வழங்கக்கூடும் என்பதால், இந்தியா இந்த CPEC திட்டத்திற்கு எதிராக மிகவும் வெளிப்படையான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. மேலும் குவாடார் இறுதியில் சீன கடற்படைக்கான இந்திய பெருங்கடல் இராணுவத் தளமாக சேவையாற்றும் என்றும் அது அஞ்சுகிறது.

முன்னாள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சமஸ்தான அரசான இந்தியா உரிமை கொண்டாடும் ஜம்மு & காஷ்மீர் பகுதியின் வழியாக CPEC திட்டம் செல்கிறது என்ற அடித்தளத்தில், CPEC திட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதை அமெரிக்கா இந்தியாவிடம் விட்டுள்ளது. ஆனால் CPEC திட்டத்தை வாஷிங்டனும் ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக பார்க்கிறது என்பதில் எந்த கேள்வியும் இல்லை, ஏனென்றால் ஒரு போர் அல்லது போர் நெருக்கடி சம்பவத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள திணறடிக்கும் முனைகளைப் பிரயோகித்து சீனாவிற்கு ஒரு பொருளாதார முற்றுகை ஏற்படுத்தும் அமெரிக்க திட்டங்களைத் தந்திரமாக தோற்கடிக்க அது பெய்ஜிங்கிற்கு உதவக்கூடும் என்பதால் ஆகும்.

பாகிஸ்தான் மீதான புதன்கிழமைய இந்திய தாக்குதல்களுக்கு வாஷிங்டனின் ஆதரவு, இந்தியாவுடன் அதன் கூட்டணியைப் பலப்படுத்தும் விருப்பத்திற்கும் கூடுதலானதை உள்ளடக்கி உள்ளது. பாகிஸ்தான் உடனான அதன் உறவுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகரித்தளவில் கசப்புணர்வு மற்றும் ஐயப்பாட்டால் குணாம்சப்பட்டுள்ளது, பகுதியாக இது ஏனென்றால் தாலிபானின் பிரிவுகளுடன், குறிப்பாக ஹக்கானி வலையமைப்புடன் உறவுகளை நீடித்து கொண்டிருப்பதன் மூலமாக ஆப்கான் போர் மீதான எந்தவொரு அரசியல் தீர்விலும் பெரிதாக குரல் எழுப்ப தன்னைத்தானே உறுதிப்படுத்திக் கொள்ள இஸ்லாமாபாத் முயல்கிறது. ஆனால் இன்னும் அதிக அடிப்படையானது என்னவென்றால் யூரேஷியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பிரதான தடையாக வாஷிங்டன் அடையாளம் காணும் சக்தியான சீனாவுடனான பாகிஸ்தானின் நெருக்கமான உறவுகளாகும்.