ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US “pivot to Asia” in disarray

குழப்பநிலையில் அமெரிக்காவின் "ஆசிய முன்னிலை"

Peter Symonds
26 October 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் அதன் இறுதி நாட்களில் நுழைந்துள்ள நிலையில், சீனாவை வளைத்து அடிபணியச் செய்யும் நோக்கத்திலான ஒபாமா நிர்வாகத்தினது "ஆசிய முன்னிலை" தோல்வியடைந்து வருவதாக வாதிடும் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடக கருத்துரைகள் அதிகரித்து வருகின்றன. எவ்விதத்திலும் அப்பிராந்தியத்திலிருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, வாஷிங்டனின் பிரதிபலிப்பு ஆசிய பசிபிக்கில் அதன் இராஜாங்கரீதியிலான சூழ்ச்சிகள் மற்றும் ஆத்திரமூட்டும் இராணுவக் கட்டமைப்பைத் தீவிரப்படுத்துவதாகவே இருக்கும்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற இன் பெய்ஜிங்கிற்கான கடந்த வார அரசு விஜயத்தால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, அவரது சீனாவை நோக்கிய திடீர் திருப்பம், ஐயத்திற்கிடமின்றி ஆசியாவில் அமெரிக்க மூலோபாயத்திற்கு ஒரு அடியாகும். பைனான்சியல் டைம்ஸ் வெளியுறவு விவகாரங்களுக்கான கட்டுரையாளர் கீடியன் ராஹ்மன், அமெரிக்காவிடமிருந்து ஒரு "பிரிவு" மற்றும் சீனாவுடனான ஒரு புதிய சிறப்பு உறவு என்ற டுரேற்ற இன் பெய்ஜிங் அறிவிப்பை எடுத்துக்காட்டி, அம்மாற்றத்தை "ஒரு முக்கிய மூலோபாய திருப்பமாக" குணாம்சப்படுத்தினார்.

டுரேற்ற ஜூனில் பதவியேற்றதில் இருந்தே, ஜனாதிபதி ஒபாமாவை "வேசி மகன்" என்று விளாசியதோடு, தெற்கு பிலிப்பைன்சின் மின்டானோ தீவிலிருந்து அமெரிக்க சிறப்பு படைகளை வெளியேற்ற அழைப்புவிடுத்ததுடன், தென் சீனக் கடலில் அமெரிக்க-பிலிப்பைன் கூட்டு இராணுவ பயிற்சிகளையும் நிறுத்தினார், மற்றும் அமெரிக்காவுடனான அந்நாட்டின் இராணுவத் தள உடன்படிக்கையை மீளாய்வு செய்ய முன்மொழிந்தார். ஹேக்கில் உள்ள மத்தியஸ்த்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் மணிலாவிற்கு சார்பான மற்றும் பெய்ஜிங்கின் உரிமைகோரல்களுக்கு எதிரான தீர்ப்பை கவனத்திற்கு எடுக்காதுவிடுவது என்ற அவரின் முடிவு, தென்சீனக் கடலில் சீனா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கு அத்தீர்ப்பை சாதகமாக்கிக் கொள்வதென்ற அமெரிக்க திட்டங்களை குழப்பத்திற்கு உட்படுத்தி உள்ளது.

ஓர் அமெரிக்க கூட்டாளியான தாய்லாந்து, சீனாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு திரும்பியதோடு, மேற்கினால் திணிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய பிரதம மந்திரி நிஜீப் ரஜாக் தவிர்க்க முயன்று வருகின்ற நிலையில் அந்நாடு ஆதரவிற்காக பெய்ஜிங்கை நோக்கி திரும்பியிருப்பதால், அமெரிக்கா ஏனைய பின்னடைவுகளையும் முகங்கொடுத்திருப்பதாக ராஹ்மன் குறிப்பிட்டார்.

ரூபேர்ட் முர்டோஹிகின் ஆஸ்திரேலியன் இல் வெளியுறவுத்துறை ஆசிரியர் கிரெக் ஷெரிடன் நேற்று எழுதுகையில், “டுரேற்ற இன் சீனாவை நோக்கிய திடீர் திருப்பம், சைகோன் (Saigon) வீழ்ச்சிக்குப் பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்,” என்றார். இந்த திருப்பம், ஆசியாவில் அமெரிக்க கூட்டணி முறையை மரணகதியில் பலவீனப்படுத்தி உள்ளது என்று அறிவித்த அவர், ஒபாமாவின் வெளியுறவு கொள்கையை "ஏறத்தாழ மொத்த தோல்வியாக" முத்திரை குத்தினார். அது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் அவற்றின் செல்வாக்கெல்லையை "அபாயகரமாக விரிவாக்குவதற்கு" அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.

ஒபாமா நிர்வாகத்தினது "முன்னிலையானது", ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்த இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயமாகும். எவ்வாறிருப்பினும் அப்பிராந்தியம் எங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள், ஆசியாவிற்கான வாஷிங்டனின் கடமைப்பாடு மீது அதிகரித்தளவில் குறைவில்லாமல் கேள்வியெழுப்பி உள்ளனர், ஏனென்றால் அமெரிக்க ஜனாதிபதி போட்டியாளர்கள் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் இருவரது எதிர்ப்பையும் மற்றும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் இரண்டினது சட்டமன்ற பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் முகங்கொடுத்து, இப்போது அதன் மத்திய பொருளாதார நடவடிக்கையான பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இந்த "முன்னிலையில்" TPP மையத்தில் உள்ளது என்பது அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர் ஆல் கடந்த ஆண்டு எடுத்துக்காட்டப்பட்டது, அவர் அந்த பொருளாதார உடன்படிக்கைக்கும் பெண்டகனின் போர் திட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் விதத்தில், அந்த உடன்படிக்கை "மற்றொரு விமானந்தாங்கி போர்க்கப்பல் அளவிற்கு எனக்கு முக்கியமானதாகும்" என்று அறிவித்திருந்தார். ஆகஸ்டில் சிங்கப்பூரின் பிரதம மந்திரி Lee Hsien Loong, ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு நிலைத்திருக்க  வேண்டுமென வலியுறுத்தியதுடன், TPP ஐ ஏற்றுக்கொள்வதென்பது "உங்களது நம்பகத்தன்மை மற்றும் நோக்கத்தின் தீவிரத்தன்மை மீதான பரிசோதனை" என்று எச்சரித்தார்.

ஆசிய பசிபிக்கின் ஆளும் உயரடுக்குகளது கவலைகள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பகட்டாராவாரம் மற்றும் இழிவார்ந்த காட்சிப்படுத்தலாலும் மற்றும் அடுத்த நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கையைச் சுற்றி நிலவும் தெளிவின்மையாலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ள, அமெரிக்காவின் ஆழ்ந்த அரசியல் நெருக்கடி மீது அதிகரித்துவரும் அறிகுறிகளால் சூழப்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை செயலராக கிளிண்டன் தான் அந்த "முன்னிலை" இன் பிரதான வடிவமைப்பாளராக இருந்தார் மற்றும் சீனாவிற்கு எதிராக அதிக இராணுவவாத மூலோபாயத்தின் ஆதரவாளராக இருந்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் க்கான அவரது உரைகளில் 2013 ஆம் ஆண்டு உரை ஒன்றில் அவர் அறிவிக்கையில், “நாங்கள் சீனாவை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொண்டு சுற்றி வளைக்கப் போகிறோம். நாங்கள் எமது கடற்படையின் பெரும்பான்மையை அப்பகுதியில் நிறுத்தவிருக்கிறோம்,” என்றார்.

ஆசியாவை நோக்கிய ட்ரம்ப் இன் கொள்கை தெளிவாக இல்லை, ஆனால் அவரது "தலைசிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம்" முழக்கம் சீனாவை நோக்கி முன்பினும் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அறிவுறுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக இதில், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற அதன் கூட்டாளிகள் அதிக சுமையை ஏற்க வேண்டுமென வாஷிங்டன் வலியுறுத்தக்கூடும்.

அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களோடு சேர்ந்து அமெரிக்க தேர்தல் உருவாக்கியுள்ள நிச்சயமற்றத்தன்மைகளும் மற்றும் மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார கண்ணோட்டமும், ஆசிய பசிபிக்கின் ஆளும் வர்க்கங்களை அவர்களது பேரங்களை நிறுத்துவதற்கு ஊக்குவித்து வருகின்றன. அமெரிக்க "முன்னிலையின்" இரண்டு மத்திய தூண்களான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இரண்டுமே, அமெரிக்காவுடன் முரண்படும் கொள்கைகளைப் பின்தொடர்ந்து வருகின்றன.

பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, வாஷிங்டனால் ஒரு "சட்டவிரோதமாக்கப்பட்ட அரசாக" அதிகரித்தளவில் முத்திரை குத்தப்படும் ஒரு நாட்டுடன் உறவுகளை ஜோடிக்கும் ஒரு முயற்சியில் குரில் தீவுகள் விவகாரத்தில் ரஷ்யாவுடனான ஜப்பானின் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டங்களை இப்போது அறிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து ஆணித்தரமான அழுத்தங்களுக்கு இடையிலும், ஆஸ்திரேலிய அரசாங்கம் தென் சீனக் கடலில், சீன கடல் எல்லை உரிமைகோரல்களைச் சவால்விடுப்பதற்கான "சுதந்திர கடல் போக்குவரத்து" நடவடிக்கையை தொடங்க ஒப்புக் கொள்ளவில்லை, இது அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியை எதிர்கொள்ளும் ஆபத்தின் மீது ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்குக்குள் நடந்து வரும் விவாதத்தைப் பிரதிபலிக்கிறது.

வாஷிங்டனின் ஆசிய வெளியுறவு கொள்கையின் குழப்பநிலை, அதன் அடியிலுள்ள பித்துபிடித்த நோக்கத்திலிருந்து, அதாவது உலகளாவிய மேலாதிக்கத்தை எட்டுவதற்கான சாத்தியமற்ற பணியிலிருந்து பெருக்கெடுக்கிறது. பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை சுற்றியுள்ள நெருக்கடியால் எடுத்துக்காட்டப்பட்டதை போல பொருளாதாரரீதியில் உலகிற்கு கட்டளையிட இயலாமல், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதிகரித்தளவில் பொறுப்பற்ற இராணுவ ஆத்திரமூட்டல்களிலும் மற்றும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலுக்குள் உலகை மூழ்கடிக்க அச்சுறுத்தும் தலையீடுகளுக்குள்ளும் தஞ்சமடைய நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டுரேற்ற சீனாவில் இருந்தபோது, அமெரிக்க கடற்படை தென் சீனக் கடலின் பாராசெல் தீவுகளில் சீன கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் சவால்விடுக்க ஒரு நான்காவது "சுதந்திர கப்பல் போக்குவரத்து" நடவடிக்கையை நடத்துவதற்காக ஏவுகணை தாங்கிய விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது. அந்நடவடிக்கை சீனாவுடனான ஒரு கடற்படை மோதல் அபாயம் மீதான வாஷிங்டனின் விருப்பத்தை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக அமெரிக்க கடற்படையின் மூன்றாவது கடற்படை சீனாவிற்கு எதிராக மேற்கு பசிபிக்கில் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்காக அதன் 100 போர்க்கப்பல்கள் மற்றும் நான்கு விமானந்தாங்கி போர்க்கப்பல்களுடன் உள்நுழைந்திருப்பதற்கும் சமிக்ஞை காட்டியது.

இந்த விடையிறுப்பு போரை நோக்கி உந்திச் செல்லும் அபாயகரமான இயக்கவியலை அடிக்கோடிடுகிறது: அதாவது வாஷிங்டன் அதன் உலகளாவிய அபிலாஷைகளுக்கு அதிகமான எதிர்ப்பை மற்றும் தடைகளை எதிர்கொள்கையில், அதன் நடவடிக்கைகளும் அதிகமாக பொறுப்பின்றி இராணுவமயப்பட்டதாக இருக்கிறது. அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில், சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெர்ரி வைட் மற்றும் நைல்ஸ் நிமுத் மட்டுமே போர் அபாயங்களைக் குறித்து எச்சரித்து வருகிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் “முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" என்ற நவம்பர் 5 மாநாட்டில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மற்றும் சோசலிசத்திற்காக போராட்டத்திற்கான அரசியல் அடித்தளத்தை விவாதிக்கும். ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் அனைவரும் மற்றும் அதை எதிர்த்து போராட ஒரு வழியைத் தேடுபவர்களும் அதில் கலந்து கொள்ள பதிவு செய்யலாம்.