ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation workers defy government to continue protests

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்தினை எதிர்த்து போராட்டத்தினைத் தொடர்கின்றனர்

By M. Thevarajah
13 October 2016

செப்டம்பர் 27, தங்களின் நாளாந்த சம்பளத்தினை 1,000 ரூபாவாக ($US6.86) அதிகரிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தினை ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தொடர்கின்றார்கள். அக்டோபர் 5 அன்று அவர்களது நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தினாலும் தொழிற்சங்கங்களினாலும் விடுக்கப்பட்ட அழைப்பினை தொழிலாளர்கள் நிராகரித்தனர். கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் நாட் சம்பளமானது கொடுப்பனவுடன் சேர்த்து தற்பொழுது வெறும் 620 ரூபாவாகும்.

ஹட்டன் மேஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் இருப்பு போராட்டத்தில்  

மறியல்களும் ஆர்ப்பாட்டங்களும் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாநகரங்களிலும் போக்குவரத்துக்களை தடுத்து நிறுத்தியிருந்தன. மேல் மாகாணத்தின் அவிஸ்சாவலை மற்றும் மத்துகம இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் இரண்டு மணித்தியாலங்களாக பிரதான வீதியை மறித்திருந்தார்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் எழுச்சிகள், வாழ்க்கை நிலமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான பெருகிவரும் தாக்குதல்களுக்கு விரோதமாக மற்றைய பிரிவு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் எதிர்ப்புக்களை ஊக்குவிக்கும் என்ற பீதியில், அரசாங்கம் போராட்டக்காரர்களை கலைக்கவும் மற்றும் தடை செய்யவும் பொலிஸ் எந்திரத்தினை தயார்படுத்தியது.

தொழிற்சங்கங்கள் மற்றும் சில தோட்டக் கம்பனிகளின் பின்னணியுடன் தொழில் அமைச்சர் W.D.J. செனவிரட்ணவினால் வழங்கப்பட்ட ஒரு சம்பள உயர்வு திட்டத்தினை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எதிர்த்தார்கள். சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் படி, ஒரு வாரத்தில் மூன்று நாட்களுக்கு 730 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் அதேவேளை, ஒரு நாளைக்கு கொழுந்து பறிக்கும் இலக்கு 18 – 20 கிலோவில் இருந்து முதுகைமுறிக்கும் 24 கிலோகிராமாக அதிகரிக்கப்படும்.

மற்றைய மூன்று நாட்களுக்கு, தினசரி 15 கிலோ கொழுந்து பறிக்கும் இலக்குடன், நாட்கூலி 500 ரூபாவாக அப்படியே இருக்கும். மேலதிக அறுவடைக்காக, தொழிலாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூபா 26 வீதம் கொடுக்கப்படும். 

அவர்களுடைய சம்பளத்துக்கு என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் தோட்டத் தொழிலாளர்கள் இருட்டிலே வைக்கப்பட்டிருக்கின்றார்கள். தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துக்கும் இடையில் மூடிய கதவுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகள், அதிக வேலைச் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கான தயாரிப்பு மேற்கொள்ளப்படுவதையே சுட்டிக்காட்டுகின்றன. தொழிற்சங்கங்களும் மற்றும் முதலாளிகளும் இதில் கையொப்பமிட்ட பின்னரே, ஒப்பந்தத்தின் உட்கூறுகள் தொழிலாளர்களுக்கு தெரியவரும். இது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

தொழிலாளர்களில் சிறிய தொகையினர் மட்டுமே எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள், கூடுதலானவர்கள் தொழிற்சங்கங்களுக்கு கீழ்படிந்து நடக்கின்றார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். மாறாக, தொழிற்சங்கங்களுக்கு எதிராக மலையக மாவட்டங்களில் உள்ள பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

ஹட்டன் Fruit Hill சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்

போராட்டத்தினை நிறுத்துமாறு விடுத்த கோரிக்க்கைக்கு எதிராக அக்டோபர் 4 தொடக்கம், பொகவந்தலாவ தோட்டங்களில் 2,500 தொழிலாளர்களும், கொட்டியாகல தோட்டத்தில் 1,500 தொழிலாளர்களும், பொகவான தோட்டத்தில் 500 தொழிலாளர்களும் மற்றும் செல்வகந்தை தோட்டத்தில் 500 தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வெறுமனே 1,000 ரூபா நாள் சம்பளத்தை கோரவில்லை, மாறாக கடந்த கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நாளில் இருந்து நிலுவைச் சம்பளத்தையும் கிழமைக்கு ஆறு நாட்கள் வேலையையும் கோருகின்றனர்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மீதான தங்களின் கோபத்தினை வெளிப்படுத்தியதோடு, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச,க,) “இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்; நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காக போராடு!” என்ற அறிக்கை பற்றியும் கலந்துரையாடினார்கள்.

கொட்டியாகல தோட்டத்தினைச் சேர்ந்த பாலகுமார், இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) என்பன அவரது தோட்டத்தில் கிளைகளைக் கொண்டுள்ளன என்றும், அவர்கள் போராட்டத்தினை கைவிடுமாறு கோரினார்கள் என்றும் கூறினார். அவர் மேலும் கூறும்போது, “வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து செல்கின்ற நிலமையில், இந்த 1,000 ரூபா கூட போதுமானது அல்ல. இந்த தொழிற்சங்கங்கள் எமது கோரிக்கைகளை நிராகரித்து, இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் தொழிற்சங்கங்களுக்கான எமது சந்தாப் பணத்தினை நிறுத்துவோம்” என்றார்.

கடுமையான உற்பத்தி சார்ந்த சம்பளத் திட்டம் என்பது, சில தோட்ட முகாமைத்துவங்களால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கொட்டகல டிரேய்டன் தோட்டத்தினைச் சேர்ந்த கே. சாந்தகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “நாங்கள் மிகவும் கொடூரமான வேலை நிலமைகளுக்கு மத்தியில் வேலை செய்கின்றோம். கடந்த மூன்று மாதங்களாக, 14 கிலோகிராம் என்ற இலக்கினை அடைய முடியாத காரணத்தினால், பல தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன”, என்றார்.

“நாங்கள் குறித்த இலக்கினை அடைய முடியாவிட்டால், அந்த வேலை நாள் அரை நாளாக கணிக்கப்படும். இந்த முறைக்குள் நிர்வாகம் நாட்களை வெட்டுகின்ற காரணத்தினால், ஒரு மாத்தில் 19 வேலை நாட்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இது ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கு தேவையானதாகும். இதன் விளைவாக, கடந்த மாதம் நான் 3,400 ரூபாவை இழக்க வேண்டி ஏற்பட்டது. தொழிற்சங்கங்கள் இந்தக் கொடூரமான வெட்டுக்களை எதிர்க்காமல், அவர்கள் தோட்ட முகாமைத்துவங்களுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்கின்றனர்.

“கடந்த வருடம், தொழிற்சங்கங்கள் 1,000 ரூபாவை வலியுறுத்திய போதிலும் கம்பனி 800 ரூபா வழங்குவதாக உடன்பட்டதாக, இ.தொ.க. தெரிவித்தது. தற்பொழுது அவர்கள் அந்தக் கோரிக்கையை கைவிட்டதோடு 18 மாதங்களுக்குப் பின்னர் 730 ரூபாய்க்கு உடன்பட்டுள்ளார்கள்.

“NUW, ஜ.தொ.கா. மற்றும் ம.ம.மு. இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி, அக்டோபர் 6 ஒரு ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. ஆனால் தொழில் அமைச்சர் 730 ரூபா நாட் சம்பளம் என அறிவித்த பின்னர் தங்களின் போராட்டத்தினை இரத்துச் செய்தது. சகல தொழிற்சங்கங்களும் எங்களை ஏமாற்றுகின்றன.”

சோ.ச.க.யின் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! சோசலிச வேலைத் திட்டத்துக்காக போராடு! என்ற கோரிக்கை சம்பந்தமாக சாந்தகுமார் கருத்துக் கூறுகையில், “இப்பொழுது தலைமைகள் அற்ற நிலையில், தோட்டத் தொழிலளார்கள் தங்களின் சம்பளப் போராட்டத்துக்காக வீதிக்கு வந்துள்ளார்கள். தொழிற் சங்கங்களில் இருந்து பிரிந்து தங்களின் போராட்டத்தினை தொடர்வதற்காக நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்ப எனது பூரண ஆதரவினைத் தருகின்றேன். நடவடிக்கை குழுவின் தலைமை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதையிட்டு எனது பூரண உடன்பாட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்றார்.

தோட்ட உரிமையாளர்கள், ஊடகங்களினதும் மற்றும் அரசாங்த்தினதும் ஆதரவுடன், விசேடமாக மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்களால் எதுவித சம்பள அதிகரிப்பினையும் வழங்க முடியாது என ஒரு எதிர் பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார்கள். மாறாக, விளைச்சலுடன் கட்டிப் போடுவதற்காக அவர்கள் புதிய முறைக்காக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தோட்ட உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் போகலியத்த ஊடகங்களுக்கு கூறியதாவது: “அவர்கள் [தோட்டக் கம்பனிகள்] சம்பள அதிகரிப்புக்கு [தொழில் அமைச்சருடன்] உடன்பட்டுள்ளார்கள். இருந்தபோதிலும், உற்பத்திப் பண்டங்களின் விலைகள் குறைந்து வருகின்ற நிலையில் இவ்வாறான அதிகரிப்புக்களை வழங்கமுடியாது. அவர்கள் உற்பத்தியை அடித்தளமாக கொண்ட சம்பள சூத்திரத்தினை நோக்கிய முதல் அடியை காண்பதற்கு நகர்கின்றார்கள்.”

ரூபாயின் பெறுமதி குறைந்து வருதல் மற்றும் அதிகரித்த வரிச் சுமைகள் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் கஸ்டமான வாழ்க்கைக்கு முகம் கொடுக்கின்றனர். ஆகவே இந்த எழுச்சி தோட்டக் கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்களுக்கு எதிரானதாகும்.

கொட்டகல, மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த எஸ். சந்திரகாந்தன், இவர் ஹட்டனில் உள்ள மல்லியப்பு சந்தியில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். “கம்பனியால் முன்மொழியப்பட்ட நாட் சம்பளமான 730 ரூபாய் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கின்றோம். அரசாங்கம் எமது கோரிக்கையில் இருந்து மிகவும் வெகுதூரத்தில் உள்ளது. எங்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபா வேண்டும். தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு மத்தியில் இந்த தொகை கூட எமக்கு போதுமானது அல்ல,” என அவர் கூறினார்.

“சகல தொழிற்சங்கங்களும் எம்மை ஏமாற்றுகின்ற நிலையில், நாங்கள் பட்டினிக்கு முகம் கொடுக்கின்றோம். இந்தச் சம்பளத்துடன் எமது பிள்ளைகளை நாங்கள் படிப்பிக்க முடியாது. நாங்கள் வாக்களித்தே இந்த அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டுவந்தோம் ஆனால் அது எங்களை நிராகரிக்கின்றது. சகல தொழிற்சங்கங்களும் எம்மைக் காட்டிக் கொடுத்த காரணத்தினால், தொழிற்சங்களில் இருந்து வெளியேறுவதற்கு எமது தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள்” என சந்திரகாந்தன் மேலும் கூறும்போது, “நாங்கள் இனிமேல் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை” என்றார்.