ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France’s sale of Rafale jets to India stokes Indo-Pakistani war tensions

இந்தியாவுக்கு ரஃபால் ஜெட் விமானங்களை பிரான்ஸ் விற்றல் இந்தோ–பாக்கிஸ்தானிய போர் பதட்டங்களுக்கு எரியூட்டுகிறது

By Senthooran Ravee 
5 October 2016

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய 36 ரஃபால் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பதென்ற பிரான்சின் முடிவானது, தெற்காசியாவிலும் உலகரீதியாகவும் யுத்த அபாயத்தை தூண்டி விடுவதற்கான ஒரு பொறுப்பற்ற செயல் ஆகும்.

இந்தியாவுக்கும் அதன் கடும்போட்டியாளர் பாக்கிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில், பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோனும் அவரது சமதரப்பான இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்காரும் செப்டம்பர் 23 அன்று புதுடெல்லியில் 7.75 பில்லியன் யூரோவுக்கான (8.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ரஃபால் பேரத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

“கடும் சேதத்தை விளைவித்ததாக” பீற்றிக்கொள்ளும் இராணுவத் தாக்குதல்களை செப்டம்பர் 28-29 இரவு பாக்கிஸ்தானுக்குள் இந்தியா மேற்கொண்டதன் காரணத்தினால் இந்த நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. நான்கு தசாப்தங்களில் முதன் முறையாக இந்தியா பாக்கிஸ்தானுக்குள் நடத்தப்பட்டது என்று தானே ஒப்புக் கொண்ட இந்த தாக்குதல்கள், தெற்காசிய அணுவாயுதப் போட்டி அரசுகளை போரின் விளிம்பிற்குள் தள்ளியுள்ளது.

ரஃபால் ஒப்பந்தமானது இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரும் ஆயுத கொள்வனவில் ஒன்றாக இருப்பதுடன் மற்றும் அது பாரிசுக்கும் புதுடெல்லிக்கும் நீண்டகாலமாக நடைபெற்று வந்த, காலத்தே நிரூபிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விடயமாக இருந்தது. இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கம் இவ் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை விரைவுபடுத்த முடிவெடுத்தது அல்லது குறைந்தபட்சம் அதன் அறிவிப்பு மற்றும் சம்பிரதாயபூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடல் என்பது பாக்கிஸ்தானுக்கு ஒருபோர்க் கூச்சல் செய்தியாகும்.

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உரி இராணுவ தளத்தில் நடந்த தாக்குதலுக்காக, பாக்கிஸ்தானை எப்படித் “தண்டிப்பது” என்பது தொடர்பாக இராணுவ, புலனாய்வு மற்றும் ராஜீய பிரதிநிதிகளுடன் இந்திய அரசாங்கம் திட்டங்களை விவரித்துக் கொண்டிருந்தபொழுது, செப்டம்பர் 21 அன்று கையொப்பமிடப்படவிருந்த ரஃபால் பேரம் பற்றி அது அறிவித்தது.

மேம்போக்கான ஒரு விசாரணை என்ற அளவு கூட இல்லாமல், பிஜேபி அரசாங்கமானது உரி தாக்குதலுக்கு பாக்கிஸ்தானை குற்றம் சாட்டியதோடு அதில் இறந்த 18 சிப்பாய்களுக்காக தான் பழிவாங்கப் போவதாகவும் சபதம் பூண்டது.

ரஃபால் கொள்வனவின் முக்கியத்துவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 23 ஒப்பந்தம் கையெழுத்திடலை அறிவிக்கும் அதன் கட்டுரையில் துணைத் தலைப்பிட்டு வெளியிட்டதன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது: “அணு ஆயுதங்களை வழங்குவதற்கான அவர்களின் மூலோபாய பங்கிற்காக இந்திய விமானப் படையில் ரஃபால் போர் விமானங்களை சேர்த்துக்கொள்ள இந்தியா கண்ணும் கருத்துமாயிருக்கிறது.”

இந்த ஜெட் போர் விமானத்தின் உற்பத்தியாளர் டஸ்ஸோ அவியஷியோன் (Dessault Aviation), தரை மற்றும் கடற் தாக்குதல்களில் உயர் துல்லியமான தாக்குதல்கள், இராணுவப் புலனாய்வு செய்தல் என்ற அளவில் —மிகவும் குறிப்பிடத்தக்கவகையில்— அணுவாயுத தாக்குதல்கள் உள்பட, பரந்த அளவில் நீண்ட தூர குறுகிய தூர பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டிருப்பதாக சந்தைப்படுத்தியது.

தங்களின் பங்கிற்கு, இந்திய அதிகாரிகள், ரஃபால் போர்விமானங்களைச் சேர்த்துக் கொள்ளும் உந்துதலானது, பாக்கிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக இந்தியவிற்கு அணுவாயுத தாக்குதல் திறன்களை வழங்கும் என்று வெளிப்படையாகவே பெருமைபேசிக் கொண்டார்கள்.

“பிரெஞ்சு விமானப்படையின் (L’Armee de l’Air), ஆணு ஆயுத தாக்குதல் வசதிகளுக்காக இந்த ஆண்டு மிராஜ் ரக விமானத்திலிருந்து ரஃபாலுக்கு மாறியிருக்கிறது” என்று இந்திய அதிகாரி குறிப்பிட்டார். “அவர்கள் ஏற்கனவே அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார்கள், மற்றும் நமது அணுவாயுத விநியோகமுறை அவர்களிலிருந்து வேறுபட்டதாயினும், அந்தப் பணியைச்செய்வதற்கு ரஃபால் பொருத்தமானது என்று அது நமக்குக் கூறுகிறது.”

இராணுவத்திலிருந்து கொடுக்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு, திங்களன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் “இந்தியாவின் ரஃபால் பேரம், சீனாவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது: ஏனெனில் இதோ” என்ற தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரை வந்தது. ரஃபாலை இந்தியா வாங்குதல் “வான்வெளியில் ஏவுணைகளைக் கண்டறியும் தொலைவிற்கு அப்பால்” பெறும் திறனுள்ளதாக்கும் என்று அக்கட்டுரை குறிப்பிட்டது. இந்த வசதி அவர்களை 150 கிமீ தொலைவிலிருந்து, அதுவும் எதிரியின் எல்லைக்குள் நுழையாமலே ஏவுகணைகளால் தாக்க அனுமதிக்கும்.

ஜோன்-ஈவ் லு திரியோன் அவரது இந்திய சமதரப்புடனான சந்திப்புடன் சேர்த்து அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடலில் ஒரு மணிநேரம் செலவழித்தார். அவர்களது பேச்சின் முடிவில், லு திரியோன் ஆயுத பேரத்தை “எமது உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் ஒரு வரலாற்று முடிவு” என்று புகழ்ந்தார், அதேவேளை மோடி, பிரான்சிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்தப் பங்காண்மை நடைப்பயிற்சி வேகத்தில் முன்னேறி வந்தது. அது இப்போது ரஃபாலின் வேகத்தில் முன்னேறிச் செல்லும்” என்றார்.

இந்த ஒப்பந்தமானது, இந்தியாவையும் பிரான்சையும் போர்விமானத்தைக் கட்டுவதில் நெருக்கமுடன் ஒத்துழைப்பதற்கு அழைப்புவிடுகின்றது, ஆனால் புதுடெல்லி பெரியளவிலான தொழில்நுட்ப பரிமாற்றங்களை பெற்றுக்கொள்வதில் வெற்றிபெறவில்லை என்பதுபோல் தெரிகிறது.

பேரத்தின் மதிப்பில் அரைப்பகுதி, ரஃபால் ஜெட் விமானங்களுக்கான விநியோக பற்றாக்குறை எதுவும் இல்லாமல் அடுத்த 40 ஆண்டுகளுக்கு அதனை இயங்குமாறு வைக்கக்கூடிய ஏவுகணைகளுக்கும் உதிரிப்பாகங்களுக்குமான ஒப்பந்தங்களாகும். Safran, Thales மற்றும் இதர பிரெஞ்சு நிறுவனங்களும் ஜெட் விமானங்களுக்கான முக்கிய பாகங்களைச் செய்வதில் பங்கேற்கும்.

மில்லியன் கணக்கான, பல பத்து மில்லியன் கணக்கான மக்களை அணுவாயுதத்தால் அழிப்பதைச் செய்யும் குண்டு வீசும் போர்விமானங்களில் செலவிடப்படவுள்ள பெரும் தொகையானது இந்தியாவில் உள்ள தொழிலாளர்களும் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களும் வறுமையை எதிர்கொள்ளும் நிலைமையில் மிகவும் வெறுப்பூட்டுவதாக உள்ளது. ஐநா புள்ளிவிவரமானது, 27 மில்லியன் இந்தியர்கள், அல்லது நாட்டின் 1.2 பில்லியன் மக்கட்தொகையில் சுமார் 22 சதவீதத்தினர் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டிற்கும் கீழ், அதாவது 2012ல் ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் பெறும் நிலைக்குக் கீழ் வாழ்கின்றனர். பல மில்லியன் கணக்கான இந்தியக் குழந்தைகள், குழந்தை உழைப்பில் ஈடுபடுகின்றனர், அதேவேளை இந்திய கிராமங்கள் முறையான சாலையின்றியும், முறையான கழிவகல் கட்டமைப்பு வசதி இன்றியும் மற்றும் சில இடங்களில் மின்சார வசதி கூட இன்றியும் இருக்கின்றன.

மூலோபாய ரீதியில் சீனாவை தனிமைப்படுத்தி அதனுடன் ஒரு போருக்கு தயார்செய்வதை நோக்கமாகக் கொண்ட, அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்ற உள்ளடக்கத்தில், ரஃபால் பேர ஒப்பந்தத்தில் கையெழுத்திடலானது, ஆசியாவில் பெருகிவரும் புவிசார் மூலோபாயப் பதட்டங்களின் உற்பத்தி ஆகும்.

மோடியின் கீழ், இந்தியாவானது சீனாவிற்கெதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலுக்குள் என்றுமிராதளவு ஆழமாய் தன்னையே இணைத்துக் கொண்டுள்ளது, அதேவேளை, அது தெற்காசிய பிராந்திய மேலாதிக்கக்காரராகவும், இந்திய பெருங்கடலில் ஒரு முன்னணி வல்லமை சக்தியாகவும் தன்னைத்தானே உறுதிப்படுத்துக்கொள்ள விழைகிறது.

மோடியின் அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு எதிரான ஆத்திரமூட்டும் நகர்வுகளை வரிசையாய் செய்து வருகிறது. அது சீனாவுடனான தனது எல்லைகளில் இந்திய இராணுவ இருப்பை அதிகரித்துள்ளது, தென் சீனக் கடல் மீதான அமெரிக்காவின் ஆத்திர மூட்டும் பிரச்சாரத்தை ஆதரித்து வருகிறது, ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது, அது அமெரிக்க இராணுவம் மறு எரிபொருள் நிரப்புதற்கும், மறுவினியோகம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் இந்திய தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்கிறது.

இது, இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் நீண்டகால மூலோபாய பங்காளர்களுள் ஒருவரும் பாரம்பரியமாக முதன்மை ஆயுத வினியோகஸ்தருமான ரஷ்யாவுடனான இந்திய உறவை குறுக்கே வெட்டிச்செல்கிறது. 1947ல் இந்திய துணைக் கண்டம், வெளிப்படையாய் முஸ்லிம் பாக்கிஸ்தான் மற்றும் இந்து மேலாதிக்கம் கொண்ட இந்தியா என பகைமை உடைய வகுப்புவாத முதலாளித்துவ அரசுகளாகப் பிரிவினை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவும் ரஷ்யாவும் அல்லது 1991க்கு முந்தைய சோவியத் ஒன்றியமும், பரந்த இராணுவ மற்றும் வணிக உறவுகளை கொண்டிருந்தன.

குளிர் யுத்தத்தின்பொழுது, 1971ல் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் “நட்புறவு உடன்படிக்கை”யில் கையெழுத்திட்டது மற்றும் அதன் பெரும்பாலான விமானங்கள் மற்றும் ஏனைய நவீன ஆயுதங்களுக்கும் அதையே சார்ந்திருந்தது.

எவ்வாறாயினும், இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தன்னை இணைத்துக் கொள்கையில், ரஷ்யா, சீனா இருநாடுகளும் சிரியா, உக்ரேன், தென் சீனக் கடல் அல்லது மற்றைய மோதல் பிரதேசங்களில் அமெரிக்காவால் ஒரு போர் அச்சுறுதலுக்கு ஆளாகி இருப்பதால், ரஷ்யா சீனாவுடன் என்றுமிராத வகையில் நெருக்கமான மூலோபாயக் கூட்டுக்குள் நகர்ந்துள்ளது. இந்த சூழ்நிலைமைகளில், ஒரு யுத்தம் மூண்டால் இந்தியாவானது, உயர் தொழில்நுட்ப ஆயுதத்தளவாடங்களுக்கான அதன் முதன்மை வழங்குனரான ரஷ்யாவிடம் இருந்து அவை திடீரெனக் கிடைக்காமற் போகலாம் என்று அஞ்சி, அதன் மீது தங்கியிருப்பது தொடர்பாக அதிகரித்த அளவில் அச்சம் கொண்டுள்ளது.

கடந்த காலத்தில் அடிக்கடி நிகழ்ந்ததுபோல, பிரான்ஸ் இந்திய நலன்களோடு மிகவும் நெருக்கமாக கூட்டு வைத்து, தன்னை மிகவும் நம்பத்தகுந்த ஒரு இராணுவப் பங்காளராக காட்டிக்கொள்வதன் மூலம், அத்தகைய பதட்டங்களிலிருந்து இலாபம் காண முயன்று வருகிறது.

ரஃபால் பேரத்தால் பெறப்படும் இலாபத்தில் பெரும்பகுதி டஸ்ஸோ அவியஷியோன் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரும், 20 பில்லியன் யூரோக்களுடன் பிரான்சின் ஐந்தாவது மிகப் பணக்காரராக உள்ள சேர்ஜ் டஸ்ஸோ (Serge Dassault) இனை சென்றடையும்.