ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What is behind the anti-Russia campaign in the US?

அமெரிக்காவின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குப் பின்னால் இருப்பது என்ன?

Andre Damon
22 October 2016

இணைவழி போர்முறை மூலமாக இத்தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா உள்நோக்கம் கொண்டுள்ளதாக சித்தரிக்கும் பிரச்சாரமே, 2016 ஜனாதிபதி பிரச்சாரத்தின் பிரதான கருத்துருவாக உள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இவ்வார இறுதி விவாதத்தில், “ரஷ்யா அமெரிக்கர்களுக்கு எதிராக உளவுவேலையில் ஈடுபட்டிருப்பதாகவும்", மற்றும் "இணையத்தில் வெளியிடுவதற்காக விக்கிலீக்ஸ் க்கு தகவல்களை அளித்திருப்பதாகவும்" அறிவித்தார். இந்நடவடிக்கை "நமது தேர்தல் மீது ஆளுமை செலுத்தும்… ஒரு முயற்சியில், புட்டினிடம் இருந்தே… வந்துள்ளது" என்று அப்பெண்மணி அறிவித்தார். குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு "கைப்பாவையாக" இருந்து வருகிறார் என்றவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனநாயகக் கட்சியின் மற்றும் கிளிண்டனின் கணினி நடவடிக்கைகளை ஊடுருவி எடுத்து, விக்கிலீக்ஸ் இல் பிரசுரிக்க அத்தகவல்களை பரிமாறியதற்கு ரஷ்யா அரசாங்கமே பொறுப்பாகிறது என்பதில் “அமெரிக்க உளவுத்துறை சமூகம்" “உறுதியாக" உள்ளதாக அறிவித்த தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் இன் அக்டோபர் 7 அறிவிப்பே ஆதாரம் என்பதாக மேற்கோளிட்டு, கிளிண்டன் அவரது குற்றச்சாட்டுக்களை சர்ச்சைக்கிடமற்ற உண்மைகளாக முன்வைத்தார்.

ரஷ்ய ஊடுருவல் என்ற வாதங்களை நிரூபிக்க அமெரிக்க அரசாங்கமோ அல்லது வேறெந்த ஆதாரநபர்களோ பொதுமக்களின் முன்னால் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அந்த அரசாங்கம் தனியார் தொலைத்தொடர்புகள் மீது பாரியளவில் உளவுபார்ப்பை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று அவரிடம் 2013 மார்ச்சில் நேருக்கு நேராக கேட்கப்பட்ட போது, அமெரிக்க செனட் நீதித்துறை கமிட்டி உறுதிமொழியை மீறி அவர் பொய் சாட்சியம் வழங்கிய ஒரு பொய்யர் ஆவார்.

கிளிண்டனும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் உட்பட அவரது கைக்கூலிகளும், அமெரிக்க "உளவுத்துறை சமூகத்தின்" பொய் உரைகளை அமெரிக்க மக்கள் மறந்துவிட்டதாக நினைப்பதாக தெரிகிறது. இன்று ரஷ்ய-விரோத சொல்லாடல்களை விற்பனை செய்து வருகின்ற இதே ஊடக நிறுவனங்கள் தான், 2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னர் ஈராக்கில் பாரிய பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக விமர்சனமின்றி ஊக்குவித்து வந்தன.

இறுதியாக, கிளிண்டனின் ஊழல் மற்றும் நேர்மையின்மையை அம்பலப்படுத்தும் மின்னஞ்சல்களை கசியவிடுவதில் ரஷ்யா சம்பந்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது இரண்டாதரப் பிரச்சினையாகும். கிளிண்டன், ஜனநாயக கட்சி மற்றும் ஊடகங்கள் இந்த கதையை பற்றிக்கொண்டு, தீர்க்கமான அரசியல் முடிவுகளுக்கு அது சேவையாற்றுவதால் 2016 தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் அதை கொண்டு வந்துள்ளன.

முதலாவதாக ரஷ்ய உளவுவேலை குறித்த இந்த குற்றச்சாட்டானது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை தண்டனைக்குரியதாக ஆக்காமல் பெரிதும் சமாதானப்படுத்துவதற்குரிய விதத்தில் குறைத்துக் காட்டுவதற்கு கிளிண்டன் பிரச்சாரத்தையும், அத்துடன் சேர்ந்து பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடங்களின் பெரும் பகுதிகளையும் அனுமதிக்கிறது. வோல் ஸ்ட்ரீட் க்கான அவரின் பணிவான உரைகள் மற்றும் வேட்பாளர் தேர்தலில் பேர்ணி சாண்டர்ஸ் இன் சவாலைத் தோற்கடிக்க ஜனநாயகக் கட்சி தலைமையுடன் சேர்ந்து அவர் செய்த இரகசிய உதவிகள் மற்றும் வெளியுறவுத்துறையின் உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு அவரது தனிப்பட்ட மின்னஞ்சலை சட்டவிரோதமாக பயன்படுத்தியதன் மீதான உத்தியோகபூர்வ விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கான அவர் முயற்சிகள், கிளிண்டன் அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான ஊழல் நிறைந்த உறவுகள், இன்னும் இதர பிற விடயங்களும் அந்த மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களில் உள்ளன.

செய்தியை வெளியிட்டவரை தாக்குவதன் மூலமாக செய்தியை மழுங்கடிக்க முயற்சிப்பதற்கு இது சரியானதொரு உதாரணமாகும்.

ஆனால் ரஷ்யாவைக் கடிந்துரைப்பதில் இன்னும் அதிக அடிப்படையான விடயங்கள் உள்ளன. யுரேஷியா மீதான அதன் மேலாதிக்க முனைவில் வாஷிங்டன் ரஷ்யாவை ஒரு தடையாக கருதுகிறது. அனைத்திற்கும் மேலாக மாஸ்கோ உடனான பதட்டங்களை அதிகரிப்பதானது, மேற்கு ஐரோப்பாவின் அமெரிக்க கூட்டாளிகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார திட்டநிரலுக்குப் பின்னால் வரிசைப்படுத்த சேவையாற்றுகிறது. ஐரோப்பாவில், அமெரிக்க அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்ட, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் கிழக்கு பக்கத்தில் ஒரு வெளிப்புற அச்சுறுத்தலை வளர்த்துக்கொண்டதே  பனிப்போர் காலத்தின் ஒரு பிரதான செயல்பாடாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதோடு, இந்த பாத்திரம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத சக்தியாக இன்னமும் விளங்கும் முதலாளித்துவ ரஷ்யாவிடம் மாறியது.

சோவியத் ஒன்றியம் கியூபாவில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது என்றும், கியூபாவிற்கு செல்லும் அனைத்து ரஷ்ய கப்பல்களை இடைதடுத்து சோதனையிடுவதற்கான ஒரு தடையாணையை அமெரிக்க அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி உரையாற்றிய 54வது நினைவுநாளை இன்று குறிக்கிறது என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். கியூப ஏவுகணை நெருக்கடி மனித நாகரீகத்தையே அணுஆயுத பேரழிவுக்கு மிக நெருக்கத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

அமெரிக்காவின் பொறுப்பற்ற மற்றும் கலகம் தூண்டும் போர் திட்டம், 1962 இன் அந்த 13 நாட்களுக்குப் பின்னர் வேறெந்த காலத்தையும் விட இன்று அணுஆயுத நிர்மூலமாக்கலுக்கு மிக நெருக்கத்திற்கு உலகைக் கொண்டு வந்துள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க பினாமிப் போர் மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய இரத்தந்தோய்ந்த தலையீடுகள், மற்றும் அமெரிக்க தலைமையிலான கிழக்கு ஐரோப்பிய இராணுவமயமாக்கல் ஆகியவை மீண்டுமொருமுறை வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவை அபாயகரமாக போருக்கு நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கு முன்னணியில் உள்ள கிளிண்டன் புட்டினை தற்போது அரக்கத்தனமாக சித்தரிப்பது இந்த அபாயத்தை அதிகரிக்க மட்டுமே செய்கிறது.

பனிப்போருடன் ஒரு வெறித்தனமான கம்யூனிச-விரோத சித்தாந்தமும் சேர்ந்திருந்தது, அது அமெரிக்க அரசியல் மற்றும் சமூகத்தின் சகல அம்சங்களையும் பாதித்தது. சோவியத் ஒன்றியத்தின் தொடர்ச்சியான இருப்பு, அது எந்த விதத்தில் சிதைவுற்றதாக இருந்திருந்தாலும் கூட, புரட்சிகர சோசலிசத்தின் மரபியத்தை வெளிப்படுத்தியதற்காக சோவியத் ஒன்றியம் மீதான அமெரிக்க ஆவேசமானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெறுப்பு மற்றும் அச்சத்தால் உந்தப்பட்டிருந்தது. ஆனால் நேட்டோ மற்றும் ஏனைய அமைப்புகள் மூலமாகவும், நேரடியாக வாஷிங்டனின் ஏகாதிபத்திய கூட்டாளிகள் மூலமாகவும், அமெரிக்காவின் உலகளாவிய புவிசார்அரசியல் ஒழுங்கமைப்பில் அதன் மேலாதிக்க அந்தஸ்தைப் பாதுகாக்கும் விதத்தில் பனிப்போர் அமைந்திருந்தது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தன்னைத்தானே ஒரே அளப்பரிய அசகாய சக்தியாக பிரகடனப்படுத்திக் கொண்டதோடு, அதன் மேலாதிக்கத்திற்கு எந்தவித உலகளாவிய, ஆகக்குறைந்தது பிராந்திய சவாலைக் கூட சகித்துக் கொள்ளாது என்பதை அறிவித்தது. இருந்த போதினும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய 25 ஆண்டுகளில், 1991 இல் முதல் வளைகுடா போருடன் தொடங்கி, அமெரிக்கா தொடர்ச்சியான மூலோபாய இழப்புகளைக் கண்டுள்ளதோடு, அதன் சொந்த மேலாதிக்கத்தின் கீழ் இருந்த மத்திய கிழக்கின் அரசு கட்டமைப்புகளை மாற்றாமல் அப்பிராந்தியத்தை ஒரு கொலைக்களமாக மாற்றியதற்கு இடையே, அது அமெரிக்காவிற்கான ஏதேனுமொரு தெளிவான மூலோபாய ஆதாயத்தையும் கூட உருவாக்க தவறியுள்ளது.

இதற்கிடையே சீனா மற்றும் ஏனைய ஆசிய பொருளாதாரங்களது வளர்ச்சி, அத்துடன் உலகின் மிகப் பெரிய மூலதன ஏற்றுமதியாளராக ஐக்கிய ஜேர்மனி மாறியமை ஆகியவை உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை இன்னும் கூடுதலாக பலவீனப்படுத்தி உள்ளது, அதுவும் அந்நாட்டின் பொருளாதார வாழ்வு அதிகரித்தளவில் பல்வேறு ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிக வடிவங்களால் மேலாதிக்கம் பெற்றுள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அமெரிக்கா அதன் மிக நெருக்கமான நேட்டோ கூட்டாளிகளுடன் சேர்ந்து அதிகரித்த பதட்டங்களை முகங்கொடுக்கிறது. இத்தகைய பதட்டங்கள் வணிகம், வரிமுறை மற்றும் இராணுவ கொள்கை மீதான தொடர்ச்சியான பிரச்சினைகளில் எழுந்துள்ளன. இதில், அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மை மீதான பேரம்பேசல்களின் முறிவு மற்றும் அமெரிக்காவின் மிகப் பெரிய பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 13 பில்லியன் டாலர் முந்தைய வரிகளைச் செலுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையீடு ஆகியவையும் உள்ளடங்கும்.

2008 நிதியியல் நெருக்கடியில் ஜேர்மனியின் நலிந்த டோச்ச வங்கி வகித்த பாத்திரத்திற்காக அது 14 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமென்று கோரியதன் மூலமாக அமெரிக்கா பதிலடி கொடுத்தது, இந்நகர்வில் ஒரு உயர்மட்ட ஜேர்மனி அதிகாரி கூறுகையில், அது "ஒரு பொருளாதார போருக்குரிய தன்மையைக் கொண்டிருப்பதாக" தெரிவித்தார். இத்தகைய பொருளாதார பதட்டங்கள், அமெரிக்கா மேலாதிக்கம் கொண்ட நேட்டோவிற்கு துணையாக, அல்லது அதை புறந்தள்ளுவதற்காக கூட, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ கூட்டணியாக மாற்றும் நகர்வுகளோடு பிணைந்துள்ளன.

உக்ரேனில் 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதி, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அழுத்தம், மற்றும் ரஷ்ய எல்லை மீதான நேட்டோ கட்டமைப்பு உட்பட, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவ ஆத்திரமூட்டல்கள் ஒரு நெருக்கடி சூழலை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளன, இதில் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் இராணுவ பதிலடிகளை முகங்கொடுக்கும் சாத்தியக்கூறுகளுடன், அமெரிக்காவுடன் இராணுவ மற்றும் பொருளாதார கூட்டணியை மேற்கொண்டுள்ளன.

ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ தீவிரப்பாடு அடுத்த நிர்வாகத்தின் போது தீவிரமடையும் என்பதற்கு அங்கே எல்லா அறிகுறியும் உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் அதிசயமான நேர்மையோடு வியாழனன்று எழுதிய செய்தியில், “வெளியுறவு கொள்கை உயரடுக்கை அமைக்கும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினர், சாத்தியமாகக்கூடிய கிளிண்டன் வெள்ளை மாளிகையில் உயர்மட்ட பாத்திரம் வகிக்கக்கூடிய அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட ஆரவார அறிக்கை மூலமாக, இன்னும் ஆணவமான அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்,” என்று குறிப்பிட்டது.    

“நாடு ஒருபோதும் இந்தளவிற்கு துருமுனைப்பட்டிராத ஒரு காலக்கட்டத்தில் வருகின்ற, இருகட்சிகளுக்கும் ஒத்த சமீபத்திய பரிந்துரைகளின் இயல்பானது" ரஷ்யா மற்றும் சிரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் தீவிரப்பாட்டுக்கு "வெளியுறவு கொள்கை உயரடுக்கில் குறிப்பிடத்தக்க கருத்தொற்றுமை இருப்பதைப் பிரதிபலிக்கிறது,” என்று போஸ்ட் குறிப்பிட்டது.

இத்தகைய அபிவிருத்திகள், பனிப்போர் முடிவுக்குப் பின்னர் மனித நாகரீகத்திற்கு மிகப் பெரிய அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. கடந்த மாதம், ரஷ்யா அமெரிக்க போர்விமானங்களை சுட்டுவீழ்த்துவதற்கு நேரடியாக அச்சுறுத்தியதோடு மட்டுமின்றி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நேரடியாக அச்சுறுத்தும் விதத்தில், அதன் மேற்கு பகுதியின் விளிம்பில் உள்ள கலினின்கார்டுக்குள் அணுஆயுத தகைமை கொண்ட ஏவுகணைகளை நகர்த்தியதன் மூலமாக அமெரிக்க தீவிரப்பாட்டிற்கு விடையிறுத்தது.

முன்னணியில் உள்ள ஹிலாரி கிளிண்டனின் நிர்வாகம் ரஷ்யாவுடனான வாஷிங்டன் மோதலின் கணிசமான தீவிரப்பாட்டை பின்தொடரும் என்பதற்கு எல்லா அறிகுறியும் இருப்பதோடு, சமீபத்திய பல கொள்கை ஆய்வறிக்கைகள் முன்கணிப்பதைப் போல, வாஷிங்டனின் அபாயகரமான இராஜதந்திர நடைமுறைகளின் விளைவாக ரஷ்யாவுடன் முழுமையான அணுஆயுதமில்லா போர் அல்லது அணுஆயுத போர் ஏற்படுவதற்கான நிஜமான சாத்தியக்கூறு நிலவுகிறது.

இதற்கிடையே, ஊடகங்களும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் போர் அச்சுறுத்தல் மீது முற்றிலும் மவுனமாக இருக்கின்றன. உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போர் அபாயம் குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பி வருகின்றன. உலக சோசலிச வலைத் தள வாசகர்கள், நவம்பர் 5 இல் நடைபெறவுள்ள "முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" மாநாட்டில் கலந்து கொண்டு, போருக்கு எதிராக மற்றும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைக்க உதவுமாறு நாம் அழைப்புவிடுக்கிறோம்.