ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington moves to silence WikiLeaks

வாஷிங்டன் விக்கிலீக்ஸை மௌனமாக்க முனைகின்றது

Bill Van Auken
19 October 2016

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் இற்கான இணைய வசதிகளை இல்லாமல் செய்வது என்பது, அரசியல் சீரழிவின் அடி ஆழத்திற்கு தரங்குறைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மற்றுமொரு இழிவுமிக்க  அத்தியாயமாகும்.

நான்காண்டுகளுக்கும் மேலாக இலண்டனின் ஈக்குவடார் தூதரகத்தில் நடைமுறையளவில் சிறைபட்டுள்ள அசான்ஜ், இப்போது வெளி உலகுடனான அவர் தொடர்புகள் மேலும் மட்டுப்படுத்தப்படுவதை முகங்கொடுக்கிறார்.

அமெரிக்க அரசாங்கத்தினது அழுத்தத்தின் கீழ் அசான்ஜ் இன் இணைய இணைப்பு பயன்பாட்டைக் தடுப்பதற்கு ஈக்குவடார் உத்தரவிட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் இன் குற்றச்சாட்டுக்களை செவ்வாயன்று ஈக்குவடார் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அந்த அமைச்சகம் ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், "அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் மீது தாக்கம் ஏற்படுத்தும் பல ஆவணங்களை" விக்கிலீக்ஸ் "பிரசுரித்திருப்பதாக" தெரிவித்ததுடன், தொடர்ந்து குறிப்பிடுகையில், ஈக்குவடார் அரசாங்கம் "ஏனைய நாடுகளது உள்துறை விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் கோட்பாட்டை மதிக்கிறது" என்றும், “வேறுநாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதில்லை" என்றும் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில், இலண்டனில் உள்ள அதன் தூதரகத்தின் தொலைதொடர்பு வலையமைப்புக்கு "கட்டுப்படுத்தப்பட்ட அணுகலை" வழங்க ஈக்குவடார் அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஈக்குவடோரிய ஜனாதிபதி ரஃபேல் கோரேயாவின் (Rafael Correa) முதலாளித்துவ அரசாங்கத்திடமிருந்து வரும் இந்த அறிக்கை, பாசாங்குத்தனம் மற்றும் கோழைத்தனத்திற்கு ஒரு உதாரணமாக உள்ளது. விக்கிலீக்ஸ் மீதான அமெரிக்க அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு துணைபோய், க்வீடோ [ஈக்குவடார் தலைநகரம்] அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் சார்பாக அமெரிக்க மக்களது உரிமைகளுக்கு எதிராக அமெரிக்க தேர்தல்களில் தலையிட்டுள்ளது. “கோட்பாட்டுரீதியில் தலையிடாமல் இருப்பது" என்பதை  நிரூபிக்கவேண்டும் என எதிர்பார்த்தால், அவர் ஹொண்டூரிய ஜனாதிபதி மானுவல் ஜெலெயாவின் (Manuel Zelaya) கதியை நினைத்து பார்க்க வேண்டும், இவர் 2009 இல் அப்போது வெளியுறுவுத்துறை செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டனால் முடுக்கிவிடப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் பதவியிலிருந்து இறக்கப்பட்டவராவார்.            

கடந்த மாதம் பொகோடாவில் (Bogota) உருக்குலைக்கப்பட்ட கொலம்பிய சமாதான உடன்படிக்கை சார்ந்த "பேச்சுவார்த்தைகள் நடைபெறுகையில்" ஈக்குவடார் அரசாங்கம் அந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி கோரிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் மேற்கோளிட்டது. அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்பினது மற்றும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளது மிக விருப்பத்திற்குரியவராக உருவாகியுள்ள கிளிண்டன் பிரச்சாரத்தை சேதப்படுத்தும் எந்தவிதமான கூடுதல் அம்பலப்படுத்தல்களையும் தடுக்க அமெரிக்க அரசாங்கம் தலையிட்டது.

கிளிண்டன் பிரச்சாரத்தின் சார்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மட்டுமே ஈக்குவடார் மீது அழுத்தத்தை பிரயோகிக்கின்றதோ அல்லது வோல் ஸ்ட்ரீட் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. கிளிண்டனின் கோல்ட்மன் சாக்ஸ் உரைகளை வெளியிடப்பட்ட பின்னர் உடனடியாக, இந்த இணைய வெட்டு செய்யப்பட்டிருப்பது, தற்செயலானதாக இருக்க முடியாது.

2014 இன் இளவேனிலில், ஈக்குவடார் அரசாங்கம் எண்ணெய் விலை வீழ்ச்சியால் அதிகரித்து வந்த பற்றாக்குறையைச் சமாளிக்க பணத்தைத் திரட்டும் ஒரு முயற்சியில் கோல்ட்மன் சாக்ஸ் இன்க் குழுமம் (Goldman Sachs Group Inc) வசம் மூன்றாண்டுகளுக்கு அதன் தங்க கையிருப்புகளில் பாதிக்கும் அதிகமானதைக் கைமாற்ற ஒப்புக்கொண்டது. அது, "உயர் பாதுகாப்பு" நிதிய வகைமுறைகள் மற்றும் அதன் முதலீடு மீதான எதிர்பார்க்கத்தக்க இலாபம் ஆகியவற்றிற்கு பிரதியீடாக, கோல்ட்மன் சாக்ஸ் க்கு அப்போதைய மதிப்பின்படி 580 மில்லியன் டாலர் மதிப்பிலான 466,000 அவுன்ஸ் தங்கம் அனுப்பியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அத்தகையவொரு உறவு, ஈக்குவடார் அரசாங்கம் சம்பந்தமான விவகாரத்தில் கோல்ட்மன் சாக்ஸ் தனது செல்வாக்கை செலுத்துவதற்கான சாத்தியம் இருப்பதை நம்புவதற்கு, அதிக கற்பனைத்திறன் தேவையில்லை.

கிளிண்டனைக் குறித்து மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியலின் நிஜமான குணாம்சத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் இரகசிய மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களது முந்தைய வெளியீடுகள் பரவுவதை தடுப்பதற்கும் அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தினது பெரும்பிரயத்தனம் பெருமளவிற்கு அதிகரித்து வருகிறது என்பது எந்தவொரு விடயத்திலும் வெளிப்படையாக உள்ளது. கிளிண்டன் பிரச்சார நிர்வாகியும் மற்றும் ஸ்தாபகத்தின் உயர்மட்ட ஜனநாயக கட்சியாளருமான ஜோன் பொடெஸ்டாவின் (John Podesta) கணக்கில் இருந்து 17,000 க்கும் அதிகமான மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், இன்னும் 33,000 க்கும் அதிகமானவை வரக்கூடுமென நம்பப்படுகிறது.

கோல்ட்மன் சாக்ஸ் மற்றும் ஏனைய உயர்மட்ட வங்கியாளர்கள் மற்றும் முதலாளிமார்களது குழுக்களுக்கான கிளிண்டன் உரைகள், இந்த உரைகளுக்காக அவருக்கு ஒவ்வொரு முறையும் சராசரியாக 200,000 டாலர் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் எழுத்துப்பிரதிகள் மிகவும் குற்றத்திற்குரியதாக உள்ளன. இவை அமெரிக்காவை ஆளும் பிரபுத்துவம் வேலை செய்கின்ற விதத்தையும் மற்றும் இந்த ஆளும் அடுக்கின் நலன்களை முன்னெடுப்பதற்காக எதையும் செய்ய தயாராக உள்ள ஓர் அரசியல்வாதியின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துகின்ற அதேவேளையில், அதனோடு சேர்ந்து அவருக்காகவே அவர் சேர்த்துக் கொண்ட மிகப் பெரியளவிலான செல்வவளத்தை மற்றும் அதிகாரத்தையும் அம்பலப்படுத்துகின்றது.

பிரச்சாரத்தின் போக்கில் கிளிண்டன் தன்னை "முற்போக்கானவராகவும்",  வோல் ஸ்ட்ரீட் இற்கு எதிராக நடவடிகைகை எடுக்க தயாராக இருப்பதாக காட்டிக்கொண்டார். ஆனால் கோல்ட்மன் சாக்ஸ் இற்கான உரைகளில், வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கான அவரது நிபந்தனையற்ற பாதுகாப்பை அவர் தெளிவுபடுத்தி இருந்தார். 2008 நிதியியல் நிலைமுறிவின் நெருக்கடிக்குள் மில்லியன் கணக்கானவர்கள் இழுக்கப்பட்டு வங்கியாளர்கள் மற்றும் அவர்கள் வகித்த பாத்திரத்திற்கு எதிராக மக்கள் சீற்றம் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், கிளிண்டன் வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்களைப் புகழ்ந்து உரையாற்றியதுடன், அவர்கள் தங்களைத்தாங்களே நெறிப்படுத்திக் கொள்ள சிறந்த முறையில் தயாராகி இருப்பதாக வலியுறுத்தினார்.  எவ்வித தாக்கத்தையும் கொண்டிராத Dodd-Frank நிதிய நெறிமுறை சட்டம் "அரசியல் காரணங்களுக்காக" நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறி, அதை ஆதரிப்பதற்காக அவர்களிடம் மன்றாடினார்.          

கிளிண்டன் அவரது வோல் ஸ்ட்ரீட் பார்வையாளர்கள் முன்னால், வெளிநாடுகளில் பாரிய படுகொலைகளை உத்தரவிடுவதில் அவருக்கு எந்த தயக்கமும் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தினார். உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக சிரியாவில் "விமானம் பறக்க தடைவிதிக்கும் பகுதியை" அவர் ஆதரிப்பதாக அவரது பொது பார்வையாளர்களுக்கு கூறுகின்ற அதேவேளையில், அத்தகையவொரு நடவடிக்கையால் "நிறைய சிரிய மக்கள் கொல்லப்படுவார்கள்" என்றும், அது “நிறைய அப்பாவி மக்களின் உயிர்பறிக்கும் ஒரு அமெரிக்க மற்றும் நேட்டோ தலையீடாக" மாறுமென்றும் அவர் அவரது கோல்டுமென் சாஸ்ச் பார்வையாளருக்கு இரகசியமாக ஒப்புதல் அளித்தார். அதே உரையில் அவர் ஈரான் மீது குண்டுவீசுவதற்கான அவரது விருப்பத்தையும் அறிவித்தார்.

இந்த மின்னஞ்சல்கள் வெளியுறவுத்துறை, கிளிண்டன் அறக்கட்டளை, அவரது பல்வேறு நடவடிக்கைகள், அவருக்கான நிதியியல் மற்றும் பெருநிறுவன நன்கொடையாளர்களின் வலையமைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான ஊழல் நிறைந்த நெருக்கமான தொடர்புகளைப் பட்டவர்த்தனமாக வெளியில் கொண்டு வந்துள்ளதோடு, இவை ஒட்டுமொத்தமாக "கிளிண்டன். நிறுவனம்" என்று சிறப்பாக வரையறுக்கக்கூடிய ஒரு திரைமறை குற்றங்கள் கொண்ட மற்றும் ஆளுமையை செலுத்தும் ஒரு நிறுவனமாக அமைகிறது.

விக்கிலீக்ஸ் ஆவணங்களில் உள்ள அம்பலப்படுத்தல்கள், பெருநிறுவன ஊடகங்களால் உதறிவிடப்படுகின்றன அல்லது குறைத்துக் காட்டப்படுகின்றன. அவை அதற்கு மாறாக கிளிண்டனுக்கு எதிரான குடியரசு கட்சி போட்டியாளர் டோனால்ட் ட்ரம்ப் இற்கு எதிராக இருக்கும் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்கள் மீது இடைவிடாமல் ஒருமுனைப்பட்டுள்ளன.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் ரஷ்ய அரசாங்கத்தால் ஊடுருவி எடுக்கப்பட்டது, ஆகவே அவற்றை நம்ப முடியாது என்று வாதிடுவதன் மூலமாக, ஆனால் அது என்னவாக இருந்தாலும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறப்படுகின்ற நிலையில், அந்த வேட்பாளர் அவர் உரைகளில் என்ன கூறினார் அல்லது அவரது நடவடிக்கைகளில் என்ன ஊழல் செயல்பாடுகள் இருந்தன என்பதைப்பற்றிய எந்தவித கேள்விகளையும் கிளிண்டன் முகாமே கூட திசைதிருப்ப முனைகின்றது.

இந்த வாதமுறையின் போக்கு, விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு மட்டும் சேவையாற்றவில்லை, மாறாக ட்ரம்ப் இன் சார்பாக கிரெம்ளின் தலையிடுகிறது என்ற கிளிண்டன் பிரச்சாரத்தின் நவ-மக்கார்த்தியிச கூற்றுக்களை மேற்கொண்டு முன்னெடுக்கவும் மற்றும் ரஷ்யா உடனான ஒரு நேரடியான இராணுவ மோதலுக்கு மக்கள் மனோநிலையை தயார் செய்யும் நோக்கில் ஒரு பிரச்சார நடவடிக்கையை முன்னெடுக்கவும் சேவையாற்றுகிறது.

அங்கே விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரு பெரும்பிரயத்தன முயற்சி நடக்கிறது. கிளிண்டனுக்கு வெளிப்படையான ஆதரவாளரான CNN செய்தி ஆசிரியர் கிறிஸ் கொமொ, அவர்கள் மின்னஞ்சலை அணுகியது சட்டவிரோதமானது என்று கூறியும், மற்றும் பெருநிறுவன ஊடகங்களது வழிமுறையினூடாக மட்டுமே அவர்கள் எந்தவொரு தகவலையும் பெறலாம் என்று வலியுறுத்தியும், அவர் அவரது பார்வையாளர்களுக்குப் பொய்யுரைக்கும் அளவிற்குச் சென்றார்.

ஜனநாயகக் கட்சி சம்பந்தமான ஆவணங்கள் வெளியாவதற்கு முன்னரே, விக்கிலீக்ஸை ஒடுக்குவதென்ற ஆளும் வட்டாரங்களின் தீர்மானம் அடுத்தடுத்த மற்றும் வன்முறையான வெளிப்பாட்டைக் கண்டிருந்தது. 2010 இல், உலகெங்கிலுமான அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய வெளியுறவுத்துறை கடித தொடர்புகளைப் பாரியளவில் விக்கிலீக்ஸ் வெளியிட்டதற்கு இடையே, அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கிளிண்டன், அவர்களது சக நிர்வாகிகளிடம், “இவர் மீது ட்ரோனை பிரயோகிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பியது குறித்த ஓர் அறிக்கையுடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்நகர்ந்தனர். அந்த கருத்தைக் குறித்து தனக்கு நினைவில்லை என்று அவர் சமீபத்தில் கூறினாலும், பின்னர் அதுவொரு கேலிக்கூத்து என்றவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் அதே காலக்கட்டத்தின் போது, கிளிண்டன் ஆதரவாளரும் நீண்டகால ஜனநாயக கட்சியின் பிரச்சார நடவடிக்கையாளருமான பாப் பெக்கெல் அசான்ஜ் சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அறிவிக்கையில், “ஜீவனில்லாத ஒருவர் முக்கியமான எதையும் கசியவிட முடியாது. அவர் ஒரு தேசத்துரோகி, அவர் தேசத்துரோகம் செய்துள்ளார், அவர் அமெரிக்காவின் ஒவ்வொரு சட்டத்தையும் உடைத்துள்ளார்… இதை கையாள்வதற்கு ஒரேயொரு வழி தான் இருக்கிறது: சட்டவிரோதமாக அந்த வேசி மகனை சுட்டுத் தள்ள வேண்டும்,” என்றார்.

ஊடங்கள் மற்றும் போலி-இடது ஆகிய இரண்டிற்குள் இருக்கும் பெரும்பாலான பிரிவுகள் ஒன்று அசான்ஜ் க்கு எதிரான வேட்டையிலோ அல்லது அவரை பலியாக்குவதைக் குறைத்துக் காட்டுவதிலோ இணைந்துள்ள நிலையில், அவற்றிற்குள் இருக்கும் அதன் சேவகர்களின் உதவியைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஆளும் வர்க்கம் இதுவரையில், தன்னைத்தானே நீதித்துறை கட்டமைப்புக்குள் மற்றும் குணத்தை இழிவுபடுத்திக் காட்டுவதுடன் மட்டுப்படுத்தி இருந்தது.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களுடன் அணிசேர்ந்து செயல்படும் ஸ்விடிஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து வருகின்ற ஜோடிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களே, தண்டிக்க வேண்டுமென்ற இப்பிரச்சாரத்தின் பிரதான வாகனமாக இருந்தன. இந்தாண்டின் தொடக்கத்தில், எதேச்சதிகார கைது நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்குழு, “எதேச்சதிகார முறையில் அவரது [அசான்ஜின்] சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதாக" அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது, அதாவது ஸ்வீடன் வழக்கு அரசியல்ரீதியில் உந்தப்பட்ட ஜோடனை என்ற முடிவுக்கு அந்த அமைப்பு வந்திருந்தது.

அசான்ஜ் ஐ மவுனமாக்கும் இப்போதைய முயற்சிக்கு இடையே, இன்னும் அதிக இயல்புக்கு மீறிய மற்றும் அருவருப்பான ஜோடிப்பு இட்டுக்கட்டப்பட்டுள்ளது. அவர் ரஷ்ய பணத்தைப் பெறுவதுடன் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களுடன் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அவமதிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.   

இக்குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இருப்பது, Toddandclare.com என்ற மிகக் குறைவாகவே அறியப்படும் இணையவழி டேட்டிங் சேவையாகும். அத்தளத்திற்கான ஒரு விளம்பரத்தில் நடிக்கும் உடன்படிக்கைக்குள் அசான்ஜை முதலில் அது கவர்ந்திழுந்ததாகவும், அதற்காக ரஷ்ய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 1 மில்லியன் டாலர் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முற்றும் முரணான ஆத்திரமூட்டலை விக்கிலீக்ஸ் நிராகரித்த போது, பஹாமாவிற்கு வந்த ஒரு எட்டு வயது கனேடிய குழந்தையுடன் அசான்ஜ் அத்தளத்தின் மூலமாக முறைகேடான தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி அதே தளம் வாதிட்டது. அசான்ஜ் மீதான வழக்கை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற ஐ.நா. சபை முறையீட்டைக் கைவிடுவதற்கு அதற்கு அழுத்தமளிக்கும் ஒரு முயற்சியில் பின்னர் இக்குற்றச்சாட்டு பயன்படுத்தப்பட்டது.

ஒரு சம்பிரதாயமான விசாரணையே கூட இத்தகைய குற்றச்சாட்டுக்கள் கோமாளித்தனமான இட்டுக்கட்டல்கள் என்பதை தெளிவுபடுத்திவிடும். பஹாமாவில் எந்த குற்றச்சாட்டுக்களோ அல்லது அசான்ஜ் க்கு எதிரான எந்தவித வழக்கோ இல்லையென பஹாமிய பொலிஸ் குறிப்பிடுகிறது. அந்த டேட்டிங் சேவைக்கு எந்த வியாபார முகவரியோ, செயல்பாட்டில் இருக்கும் தொலைபேசி எண்ணோ அல்லது அமெரிக்காவில் எந்தவொரு இடத்திலும் பெருநிறுவன பிரசன்னமோ எதுவும் கிடையாது, அசான்ஜை வேட்டையாடும் நோக்கில் அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட ஒரு போலி நிறுவனம் என்பதற்கான குறியீடுகளைத் தான் அது கொண்டுள்ளது.

இதுபோன்ற தந்திரோபாயங்களை பயன்படுத்துவதானது, இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு எதிராக மற்றும் அவற்றின் இரண்டு வெறுக்கத்தக்க வேட்பாளர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாரிய எதிர்ப்பின் முன்னால் அமெரிக்க ஆளும் வர்க்கம் எவ்வாறு பீதியடைந்துள்ளது என்பதற்கு ஒரு மதிப்பீடாகும். செல்வந்தர்களின், செல்வந்தர்களால் மற்றும் செல்வந்தர்களுகான ஓர் அரசாங்கத்தின் உள்இயக்கவியல் இடைவிடாமல் அம்பலமானால், இப்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறைக்கு மக்களிடையே உள்ள கொஞ்சநஞ்ச சட்டப்பூர்வத்தன்மையையும் அது சூறையாடி விடும் என்பதும் மற்றும் அது நவம்பர் 8 இல் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஓர் அரசியல் தீவிரமயப்படல் மற்றும் சமூக மேலெழுச்சிகளுக்கான நிலைமைகள் உருவாக்கிவிடும் என்பதுமே அவர்களின் கவலையாகும்.