ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s appointment of Stephen Bannon: A new stage in the crisis of American democracy

ட்ரம்ப் இன் ஸ்டீபன் பானன் நியமனம்: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்

Joseph Kishore
15 November 2016

ப்ரைய்ட்பார்ட் செய்தி ஸ்தாபனத்தின் தலைவர் ஸ்டீபன் பானனை அவரது "தலைமை மூலோபாயவாதியாக" நியமிப்பதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள-ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் அறிவிப்பும், மற்றும் ஜனநாயகக் கட்சியிடமிருந்து அதற்கு எந்தவித குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இல்லாதிருப்பதும், பரந்த அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பாசிசவாத, இனவாத மற்றும் வெள்ளையின மேலாதிக்க அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு வைத்துள்ள ஒரு மனிதர், அரசு கொள்கைகளை தீர்மானிக்கும் பெரும் அதிகாரத்துடன் ஜனாதிபதியின் வலது கரமாக இருக்கப் போகிறார்.

ட்ரம்ப் பதவிக்கு மேலுயர்ந்திருப்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் வேகமாக நடந்துவரும் அரசியல் மறுஅணிசேர்க்கையைக் குறிக்கிறது. ஒபாமா வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த செவ்வாய்கிழமை வெளியான முடிவு, ஆளும் வர்க்கத்தினுள் நடக்கும் "உள்குழப்பத்தின்" விளைபொருளாகும். இந்த குழப்பத்திலிருந்து ஒரு புதிய நிலைநோக்கு தீர்மானிக்கப்படுகிறது.

மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் ஜனநாயக கட்சிக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பது ட்ரம்ப் க்கு நன்றாக தெரியும் என்பதால், பானன் நியமனத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியுமென அவர் முடிவெடுத்துள்ளார். ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனில் இருந்து பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் வரையில், முன்னணி ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து அவரது நியமனத்திற்கு கிடைத்துள்ள பணிவான விடையிறுப்பானது, அதீத அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு அதிதீவிர வலது அரசாங்கத்தை கட்டமைப்பதில் அவர் மேற்கொண்டு முன்னேறலாம் என்று அவர் தீர்மானிப்பதற்கு இட்டுச் செல்கிறது.

அலட்சியம், சுயதிருப்தி மற்றும் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அளவு, திங்களன்று ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிந்தைய ஒபாமாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துக்காட்டப்பட்டது.

ஒபாமாவிடம் பானன் நியமனம் குறித்து கேட்கப்பட்டபோது, "ஒரு குழுவை அமைப்பது அவரை [ட்ரம்ப்] பொறுத்தது" என்றும், "எங்களைப் பொறுத்த வரையில் அவர் முடிவுகளை அவர் எடுப்பதே முக்கியம்" என்றும் கூறி, கருத்துக்கூற மறுத்துவிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியுடன் அவரது "சுமூகமான கலந்துரையாடலை" பாராட்டுமளவிற்கு சென்ற ஒபாமா, ட்ரம்ப் ஜனாதிபதியாக இருக்க அமெரிக்க மக்கள் "தங்களைத்தாங்களே இணக்கப்படுத்திக்கொள்ள" வேண்டும் என்று தெரிவித்தார். “நாம் செய்துள்ள முன்னேற்றத்தை முன்னோக்கி எடுத்துக் செல்வதிலும் மற்றும் கட்டமைப்பதிலும் அவருக்கு எந்தளவிற்கு உதவிகரமாக இருக்க முடியுமோ அந்தளவிற்கு" அவரது சொந்த வேலைகளில் உதவியாக இருப்பேன் என்பதையும் ஒபாமா சேர்த்துக் கொண்டார்.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பானது, தேர்தல் நடந்த சூழ்நிலைகளுக்கிடையே இன்னும் அதிக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பதினாறு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, அமெரிக்காவினது ஒரு தேர்தல் மக்களின் வாக்குகளால் அல்லாமல், ஜனாதிபதி தேர்வு சபையால் (Electoral College) தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டதற்கு 112 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒருபோதும் நடந்திராத, இந்த விளைவு ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து எந்த ஆட்சேபனையையும் தூண்டவில்லை.

அவரது பத்திரிகையாளர் சந்திப்பில் ஒபாமா கூறுகையில், மக்களின் வாக்குகளில் ஏறத்தாழ இரண்டு மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் ட்ரம்ப் தோற்றுள்ளார் என்ற உண்மையையோ, அல்லது அந்நாட்டின் பொருளாதாரரீதியில் இரண்டு மிக முக்கிய மாநிலங்கள் பரந்த வாக்கு வித்தியாசத்தில் அவருக்கு எதிராக வாக்களித்ததையோ குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர், ட்ரம்ப் அனேகமாக 2012 இல் மிட் ரோம்னி ஒபாமாவிடம் தோற்றபோது பெற்ற வாக்குகளை விட குறைவாக பெறக்கூடும் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக, வரவிருக்கும் ஜனாதிபதி திட்டமிட்டுவரும் வலதுசாரி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அவருக்கு மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

சமீபத்திய நாட்களில், ட்ரம்ப் அவரது நிர்வாகத்தின் அரசியல் போக்கை வரையத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையின் “60 நிமிடங்கள்" என்றவொரு நேர்காணலில், அவர் "இரண்டு மில்லியன், இது மூன்று மில்லியனாக கூட இருக்கலாம்" புலம்பெயர்ந்தவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய சூளுரைத்தார். கருக்கலைப்பு உரிமையை புரட்டிப் போடக்கூடிய "உயிர்களைக் காக்கும்" அதிதீவிர நீதிபதிகளால் உச்ச நீதிமன்றம் நிரப்பப்படும், தேர்தல்களில் அவரது முன்னாள் எதிர்ப்பாளரான ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மீது ஒரு குற்ற விசாரணையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறையும் வெளிப்படையாக கொண்டுள்ளார்.

இதில் எதுவுமே ஜனநாயகக் கட்சியிடமிருந்து ஒரு துளி எதிர்ப்பையும் தூண்டவில்லை. “முறையான அதிகார மாற்றத்தை" உறுதிப்படுத்துவதில் மட்டுமே ஜனநாயகக் கட்சியினர் இப்போது கவலைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த மாற்றம் எதை நோக்கி இருக்கும்?

அமெரிக்க அரசியலில் ஏதோ புதியவொன்றை ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும், அவர் கடந்த காலத்திலிருந்து முற்றிலும் முறித்துக் கொள்ளவில்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சேர்ந்து, ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிக காலமாக அடியில் நடந்து வந்துள்ள முற்றிலும் ஜனநாயக விரோத நிலைநோக்கை ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தவாதிகள் "வரலாறு முடிந்துவிட்டதாக" பிரகடனப்படுத்தினார்கள். முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது, அது சமாதானம் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின் விரிவாக்கத்திற்குரிய ஒரு காலகட்டத்தை அதனுடன் கொண்டு வரும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. நடந்தது என்னவென்றால், இருபத்தைந்து ஆண்டுகளாக முடிவில்லா போர், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, வரலாற்றுரீதியில் முன்பில்லாதளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் மிக அடிப்படையான ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அழிப்பு ஆகியவையே.

டிசம்பர் 2000 இல், புளோரிடாவின் மறுவாக்கு எண்ணிக்கையை தடுத்து, தேர்தலை ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வசம் ஒப்படைத்த புஷ்ஷூக்கும் கோர் க்கும் இடையிலான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக, உலக சோசலிச வலைத் தளம் எழுதுகையில் இந்த முடிவு "அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தளவிற்கு பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை உடைப்பதற்கு முன்செல்ல தயாராக இருக்கிறது" என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டது. ஓர் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒத்த ஒன்றை —அதாவது ஒரு தேர்தல் களவாடலை— ஜனநாயகக் கட்சி நிறுத்த மறுத்தமை, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆளும் வர்க்கத்திற்குள் எந்த குறிப்பிடத்தக்க அரசியல் தளமும் இல்லை என்பதை எடுத்துக்காட்டியது.

அதற்குப் பின்னர் நடந்த ஒவ்வொன்றும் இந்த உண்மையை நிரூபித்துள்ளன. புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்து ஓராண்டுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், அது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதைத் தொடங்க செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை சாதகமாக்கிக் கொண்டது—உண்மையில் இது வெளிநாடுகளில் முடிவில்லா போருக்கும் மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும் ஓர் அரசியல் நியாயப்பாடாக பயன்படுத்தப்பட்டது.

2008 இல் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அவர் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். கொள்கை கோட்பாடுகளிலும் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிலும், ஒபாமாவின் வெள்ளை மாளிகையானது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் அமெரிக்க பிரஜைகளை படுகொலை செய்ய ஜனாதிபதி அதிகாரத்தைப் பிரயோகித்தது. புஷ் நிர்வாகத்தின் சித்திரவதைகளும் மற்றும் போர் குற்றவாளிகளும் தண்டிக்கப்படாமல் விடப்பட்டனர், அதேவேளையில் இராணுவ-உளவுத்துறை-பொலிஸ் எந்திரத்தின் அதிகாரம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது.

ஒபாமாவின் கீழ், பகுதியாக திரைக்குப் பின்னால், பெரிதும் என்ன நடந்து வந்ததோ, அது ட்ரம்ப் இன் கீழ் மிக நேரடியான வடிவில் நடக்கும். அமெரிக்க பாசிசத்தின் நிஜமான வடிவம் உருவாகி வருகிறது —அது தொழிலாள வர்க்க போராட்டத்தை அதிகரித்தளவில் வன்முறையாக ஒடுக்குவதில் திருப்பிவிடப்படும்.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஆளும் வர்க்கம் கத்திகளைக் கூர்மையாக்கி அவற்றை பிரயோகிக்க தயாரிப்பு செய்து வருகிறது. அதே நேரத்தில், ட்ரம்ப் இன் பொருளாதார தேசியவாதம், இராணுவவாத வன்முறையிலிருந்து பின்வாங்காமல், மூன்றாம் உலக போருக்கான ஒரு முன்னேற்பாடாகும். ஒரு நீடித்த உலகளாவிய நெருக்கடியை முகங்கொடுத்துள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம், முன்பினும் அதிக அப்பட்டமான ஆக்ரோஷம் மூலமாக உலக மேலாதிக்கத்திற்கான அதன் இடத்தைப் பேணுவதற்கு முனையும்.

என்ன நடந்துள்ளதோ அதன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஊழல்பீடித்த அமெரிக்க ஊடகங்கள் புதிய அதிதீவிர வலது ஆட்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு வருகின்றன. தேர்தல் முழுவதிலும் கிளிண்டனுக்காக பிரச்சாரம் செய்த நியூ யோர்க் டைம்ஸ், அதன் வெளியிட்ட செய்திகளுக்காக ஒரு பணிவான அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தை ஆதரிக்காத எவரொருவரையும் முன்னர் வசைபாடி வந்த அதன் கட்டுரையாளர்கள், இப்போது, இவர் என்ன செய்வாரென்று பார்க்க "ட்ரம்ப்க்கு வாய்ப்பு கொடுப்பது" அவசியமென ஆலோசனை வழங்குகிறார்கள்.

இத்தகைய துயிலூட்டும் வசனங்கள் எல்லாம் கோழைத்தன மற்றும் வஞ்சக நடைமுறைகளாகும்.

அரசியல் பிற்போக்குத்தனம், போர் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு உள்ளேயோ, அல்லது அதனுடனோ அல்லது அதன் எந்தவொரு கன்னையுடன் சேர்ந்தோ நடத்த முடியாது என்ற அடிப்படை படிப்பினையை எடுத்தாக வேண்டும். ட்ரம்ப் பாசிசவாத சக்திகளுடன் சேர்ந்து வோல் ஸ்ட்ரீட் இன் ஒரு கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியோ வோல் ஸ்ட்ரீட் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட, சுயதிருப்தி கொண்ட மற்றும் சுயநலமான பிரிவுகளின் ஓர் அரசியல் கூட்டணியாக உள்ளது.

ட்ரம்ப் உடனான எந்தவொரு தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் குறித்த கவலைகளை விட, ஜனநாயகக் கட்சியினர் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் எதிர்ப்பு குறித்தே அதிக கவலை கொண்டுள்ளனர். இரண்டு அரசியல் கட்சிகளை நோக்கியும் நிலவும் மக்களின் பாரிய எதிர்ப்பு மட்டங்கள் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும், இந்த எதிர்ப்பு அரசியல் வெளிப்பாட்டை காண்பதற்கான எந்தவொரு பாதையையும் தடுக்க அவர்கள் பெரும்பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஜனநாயகக் கட்சியின் எந்தவொரு முக்கிய நிர்வாகி கூட ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது மீதான போராட்டங்களுக்கு தனது ஒற்றுமை உணர்வை பகிரங்கமாக அறிவிக்கவில்லை அல்லது, ஆர்ப்பாட்டக்காரர்களோடு இணைவது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களுக்காக அனுதாபத்தைக் கூட வெளியிடவில்லை.

ட்ரம்ப் இன் வெற்றி, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வலதை நோக்கிய ஒரு மிகப்பெரும் திருப்பத்தை குறிக்கின்ற அதேவேளையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியலின் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவு எண்ணிக்கை பொதுவாக குறைந்திருந்த நிலைமைகளின் கீழ் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் ஆழ்ந்த விரோதம் நிலவுகின்ற நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால்நிலையின் காரணமாகவே ட்ரம்ப் ஆல் சமூக கோபத்தை சாதகமாக்கிக் கொள்ள முடிந்தது. எவ்வாறிருப்பினும் ட்ரம்ப் க்கு வாக்களித்த பரந்த பெரும்பான்மையினர் ஒரு பாசிச ஆட்சிக்காக வாக்களிக்கவில்லை, அவரது நிர்வாகத்தின் தன்மை தெளிவாகும்போது, சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு அதிகரிக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களான ஜெர்ரி வைட் மற்றும் நைல்ஸ் நிமூத் உம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்திற்கான அரசியல் அஸ்திவாரத்தை வழங்க 2016 தேர்தலில் பங்குபற்றினர். நமது பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கம், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அல்லது கிளிண்டன் யார் இருந்தாலும், வரவிருக்கின்ற போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு தலைமையை கட்டமைப்பதற்காக இருந்தது.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இப்பணியின் உடனடி அவசியத்தை அடிக்கோடிடுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அது பின்தொடர இருக்கின்ற கொள்கைகளுக்கான எதிர்ப்பு, நாடெங்கிலும் அபிவிருத்தி செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். போராடுவதற்கு ஒரு வழியைத் தேடி வரும் சகல தொழிலாளர்களும் இளைஞர்களும் 2016 தேர்தல்களில் இருந்து அவசியமான தீர்மானங்களை பெற்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைய மற்றும் அவற்றை கட்டமைக்க முன்வர வேண்டும்.