ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France’s Jean-Pierre Chevènement hails US President-elect Trump

பிரான்சின் ஜோன்-பியர் செவெனுமோ அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் ட்ரம்ப்பை புகழ்கிறார்

By Kumaran Ira
22 November 2016

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது, பிரான்சில் “இடது” என்ற பேரில் கடந்து செல்லும் பரந்த அடுக்குகளின் நச்சுத்தனமான சீரழிவை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூக ஜனநாயகத்தில் இருந்து நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) சுற்றுவட்டத்திற்கான அவர்களின் பல தசாப்த கால பரிணாமவளர்ச்சியானது அமெரிக்காவில் ஒரு அதி-வலது ஆட்சி தேர்வாகியிருப்பதை வெற்றியாகப் பாராட்டுவதற்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

1971 இல் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை (PS) ஸ்தாபித்தவர்களில் ஒருவராய் இருந்த ஜோன்-பியர் செவெனுமோ (Jean-Pierre Chevènement) இன் பரிணாம வளர்ச்சியில் இது குறிப்பாக வெறுப்பூட்டும் ஒரு வடிவத்தை எடுக்கிறது. அதன் பின்னர் PS இல் முறித்துக் கொண்ட அவர், 2003 இல் குடியரசு மற்றும் குடிமக்கள் இயக்கத்தை (Mouvement républicain et citoyen - MRC) ஸ்தாபித்தார், அதன்பின் 2015 ஜூனில் MRC இல் இருந்து அவர் இராஜினாமா செய்தார்.

FN இன் தலைவரான மரின் லு பென், ட்ரம்ப்பின் தேர்வு ஒரு “அரசியல் புரட்சி” என்று அறிவித்தார் என்றால், செவெனுமோ இவ்வாறு குதூகலித்தார்: “டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி நிச்சயமாக ஸ்தாபகத்திற்கான ஒரு தோல்வியாகும். பிரெக்ஸிட்டுக்கு அடுத்தபடியாக, தடையில்லா வாணிப உலகமயமாக்கத்திற்கு எதிராய் விழுந்த இன்னொரு அடியாகும் இது.”

வெள்ளை-மேலாதிக்கவாத ஆலோசகர்களை வெள்ளை மாளிகையின் முக்கியமான பதவிகளில் அமர்த்துகின்ற ஒர் வாய்வீச்சு பில்லியனரை தேர்ந்தெடுத்திருப்பதானது அமெரிக்க ஜனநாயகத்தின் பயங்கர உருக்குலைவே ஆகும். இது ஆழமான சமூக சமத்துவமின்மை, ஜனநாயகக் கட்சியின் போர் மற்றும் சிக்கன நடவடிக்கையினது கொள்கைகள் மற்றும் அதன் இனவாத மற்றும் பால் அடையாள அரசியலின் —இவை தொழிலாள வர்க்கத்தின் கவலைகளுக்கு முற்றிலும் அக்கறை காட்டாதவையாக இருந்தன— திவால்நிலை ஆகியவற்றின் மீதான வெகுஜன கோபம் மற்றும் பிரமைவிலகலின் விளைபொருளாகும். இதேபோன்றதொரு நிகழ்முறை பிரான்சிலும் செயல்பாட்டில் இருக்கிறது, PS மீது தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துச் செல்லும் கோபத்தில் பிரதானமாக ஆதாயமடையும் கட்சியாக FN எழுந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சி, ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், மற்றும் அவற்றின் கூட்டாளிகளில் இருந்து சுயாதீனமாகவும் மற்றும் அவற்றுக்கு எதிராகவுமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிவலதின் எழுச்சியை எதிர்ப்பதற்கான ஒரே வழியாகும். இந்த சக்திகளின் பெரும் பிரிவுகள் அதி-வலது சக்திகளுடனான கூட்டணிகளை தழுவிக் கொள்ள நன்கு தயாரிப்புடன் இருக்கின்றன. தேசியவாதக் கொள்கைகளை பின்பற்ற FN உள்ளிட்ட பரந்த அரசியல் கூட்டணி ஒன்றை திரட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாக செவெனுமோ இப்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

மார்ச்சில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், செவெனுமோ இடம் MRC இன் முன்னாள் உறுப்பினர்கள் ஏராளமானோர் இப்போது FN இல் செயலூக்கத்துடன் இயங்கி வருவது குறித்துக் கேட்கப்பட்டது. “பலரும் என்னைப் பின்பற்றி வந்ததாகக் கூறுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்” என்று அவர் பதிலளித்தார். “ஒவ்வொருவர் கூறுவதையும் நான் கட்டுப்படுத்த முடியாது. அதிவலது முதல் மையத்தைக் கடந்து அதிஇடது வரையிலும் பல தரப்பான மக்களும் இருக்கிறார்கள்.” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “என்னைப் பின்பற்றி வந்ததாகக் கூறுகின்றவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்க்கலாம்.”

1958 இல் அல்ஜீரியப் போரின் சமயத்தில் பிரான்சின் சமூக-ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக்கு எதிரான ஒரு இராணுவக் கவிழ்ப்பின் மத்தியில், ஜெனரால் சார்ல்ஸ் டு கோலை சுற்றி பிரான்சின் ஆளும் உயரடுக்கு திரண்டதை அவர் ஒரு உதாரணமாக தூக்கிப் பிடித்தார். அவர் கூறினார்: “குறிப்பிட்ட சமயத்தில், தேசிய முன்னணியின் எழுச்சியானது நமது அரசியல் தலைவர்கள் பலரின் நடத்தையில் ஏராளமான மாற்றங்களைத் தூண்டிவிடும். 1958 போன்ற ஒன்றை, ஜெனரால் டு கோலின் மீள்வரவு போன்ற ஒன்றை, நான் சிந்தித்துப் பார்க்கிறேன். ஆனால் இன்றைக்கு, என்னைத் தவிர்த்து, ஜெனரால் டு கோலுக்கு நிகர் சொல்லக் கூடியவராக ஒருவரும் இல்லை....”

அதிவலதை செவெனுமோ தழுவிக் கொண்டதென்பது ஒரு விபத்தோ அல்லது தப்புக்கணக்கோ அல்ல. ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான விதத்தில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் இல்லாமலேயே முதலாளித்துவ அரசியல்வாதிகளின் மூலமாகவே சோசலிசம் ஸ்தாபிக்கப்பட்டு விட முடியும் என்ற ஒரு பிற்போக்குத்தனமான பொய்யை அவிழ்த்து விட்டு முதலாளித்துவ அரசியலில் அவர் நீண்டகாலமாக நடத்தி வந்திருந்த பிழைப்புவாத அரசியலின் விளைபொருளாகும் அது.

1960கள் மற்றும் 1970களில் தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்கான பதிலிறுப்பாக, PS ஐ ஸ்தாபிப்பதில் செவெனுமோ ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தார். 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தமானது, பிரான்சில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டி, டு கோலின் அரசாங்கத்தை மண்டியிடச் செய்தது. ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, டு கோல் அரசாங்கத்தை காப்பாற்றி விட்டது என்றபோதிலும், இந்தக் காட்டிக்கொடுப்பானது தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் கட்சியாக இருந்த PCF ஐ மதிப்பிழக்கச் செய்தது. இடதை நோக்கி ஒரு அரசியல் இயக்கம் உருவாகி விடாமல் தடுப்பதற்காக ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கு பிரெஞ்சு முதலாளித்துவம் பிரயத்தனம் மேற்கொண்டது.

உயரடுக்கின் தேசிய நிர்வாகப் பள்ளியில் (l'École Nationale Supérieure d'Administration - ENA) ஒரு மாணவராக ஏற்கனவே சோசலிச ஆய்வுகள், ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மையத்தை (Centre d'études, de recherches et d'éducation socialiste - CERES) ஸ்தாபித்திருந்த செவெனுமோ, PS இன் பிரதான ஸ்தாபகரான பிரான்சுவா மித்திரோனை ஆதரித்து CERES ஐ PSக்குள் கொண்டுவந்தார். ஆரம்பத்தில் இருந்தே நிதி மூலதனத்தின் ஒரு கட்சியாகவே இருந்து வந்திருந்த PSக்குள்ளாக, முன்னாளில் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியில் தலைமை நிர்வாகியாக இருந்திருந்த, மித்திரோனை அவர் ஆதரித்தார். 1970களில் PS உடன் PCF கொண்டிருந்த இடதுகளின் ஐக்கியம் என்ற கூட்டணிக்கான அடிப்படையாக அமைந்த PS மற்றும் PCF இன் பொது வேலைத்திட்டத்தை (Programme commun) வரைவு செய்வதில் செவெனுமோ உதவினார்.

“சுய-மேலாண்மை” (l'autogestion) என்ற மத்தியதர வர்க்க “இடது” வட்டாரங்களில் பிரபலமாக இருந்த ஒரு கருத்தாக்கத்திற்கு CERES ஆலோசனையளித்தது. தொழிலாளர்களும் மேலதிகாரிகளும் தங்களது விவகாரங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்வதன் மூலம் சமூக ஒடுக்குமுறையை கடக்க முடியும் என்று கூறும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு குரோதமான ஒரு தத்துவமாக அது இருந்தது. இந்த அடிப்படையில், PS க்குள் இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் —1971 இல் PSக்குள் செயல்படுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டு விட்டிருந்த Organisation Communiste Internationaliste (OCI)— லியோனல் ஜோஸ்பன் போன்ற ட்ரொட்ஸ்கிச-விரோத சக்திகளுடன் செவெனுமோ இணைந்து வேலைசெய்தார்.

பொது வேலைத்திட்டத்தில் முதலில் செய்யப்பட்டிருந்த மோசடியான தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் 1981 இல் மித்திரோன் ஆட்சிக்கு வந்தார், பின்னர், ஒரு வருடம் கூடக் கடந்திராத நிலையில், தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில், செலவின வெட்டுக்களையும் உருக்கு மற்றும் வாகன உற்பத்தித் துறையில் பாரிய வேலையிழப்புகளையும் திணித்தார்.

மித்திரோனின் 1981-85 ஜனாதிபதி பதவிக் காலத்தில் அமைச்சரவை பதவிகளை பெற்ற செவெனுமோ, PS இன் கொள்கைகள் மீது தேசியவாத விமர்சனங்களைச் செய்து மீண்டும் மீண்டும் இராஜினாமா செய்துகொண்டுமிருந்தார். மித்திரோனின் ஆரம்பகட்ட “சிக்கன நடவடிக்கை திருப்ப”த்தின் சமயத்தில், ஐரோப்பிய பண அமைப்புமுறைக்குள்ளாக ஜேர்மனியின் வரிசையில் பிரான்சை வைத்திருப்பதற்கு சிக்கன நடவடிக்கை அவசியம் என்று மித்திரோன் கூறியதை விமர்சித்து, செவெனுமோ இராஜினாமா செய்தார். பின்னர் மித்திரோனின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செவெனுமோ ஈராக்குக்கு எதிரான வளைகுடாப் போரை மித்திரோன் ஆதரித்ததால் 1991 இல் இராஜினாமா செய்தார்.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து முதலாளித்துவத்தை மீட்சி செய்த பின்னர், அதிலிருந்து PCF அந்திம கால உருக்குலைவுக்குள் சென்றதன் பின்னர், PS மீதான செவெனுமோவின் விமர்சனங்கள் ஒரு மாறுபட்ட இயல்பைப் பெற்றன. PS இன் வலது-சாரிக் கொள்கைகள் குறித்து, PS க்குள் பிளவுபட்டுக் கிடப்பதாகவும் அது ஏதோவொரு விதத்தில் மாறுபட்ட பாதையை எடுக்க முடியும் என்பதுமான பிரமைகளை ஊக்குவிப்பதற்கே ஆரம்பத்தில் அவை சேவை செய்து வந்தன. இந்த பொய்களைக் கூறி தொழிலாளர்களையும் இளைஞர்களையும் PS உடன் முறித்துக் கொண்டு விடாமல் வைத்திருப்பதே செவெனுமோ இன் நோக்கமாய் இருந்தது.

2000களில், அவரது விமர்சனங்கள் இன்னும் வெளிப்படையான வலது-சாரி வண்ணங்களைப் பெற்றது. ஜோஸ்பனின் 1997-2002 பன்மை இடது அரசாங்கத்தில் சேர்ந்து செவெனுமோ உள்துறை அமைச்சராக ஆனார், ஆனால் கோர்ஸிகாவுக்கு அதிகமான தன்னாட்சி அதிகாரம் அளிப்பதற்கு ஜோஸ்பன் ஆதரவளித்ததை விமர்சனம் செய்து 2000 இல் அவர் இராஜினாமா செய்தார். 2002 ஜனாதிபதித் தேர்தலில் செவெனுமோ போட்டியிட்டார், PS இன் வேட்பாளராக அல்ல, மாறாக Pôle Républicain என்று அழைக்கப்பட்ட Nouvelle Action royaliste (NAR) குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு கூட்டணியின் சார்பாக போட்டியிட்டார்.

அதன்பின்னர், 2002க்குப் பின்னரும் இன்னும் குறிப்பாக 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும், ஆளும் உயரடுக்கு இன்னும் வலதுநோக்கிப் பரிணாம வளர்ச்சி கண்டதில், இந்த சக்திகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. புலம்பெயர்ந்த மக்களையும், முஸ்லீம்களையும் குறிவைக்கின்ற, அத்துடன் அதிகரித்துச் செல்லும் சமூக கோபத்தை தேசியவாத, ஐரோப்பிய-விரோதப் பாதைகளில் திருப்புகின்ற அதி-வலது கொள்கைகளுக்கு ஒரு “ஜனநாயக” முகத்தைக் கொடுப்பதற்கு இவை முனைந்தன. ஒரு “ஸ்தாபக விரோத” கட்சியாக காட்டிக் கொண்டு FN மேலெழுவதற்கு இது அனுமதித்தது.

Pôle Républicain ஐ 2003 இல் MRC என்று பெயர்மாற்றி, செவெனுமோ, இப்போது FN இன் உயர்தலைமையில் இருக்கும் பல அரசியல்வாதிகளுடன் சேர்ந்து வேலைசெய்தார். FN இன் இரண்டாமிடத் தலைவராகவும் தலைமை மூலோபாயவாதியாகவும் இருக்கும் ஃபுளோரியான் பிலிப்போ (Florian Philippot), அத்துடன் பல்கலைக்கழகங்களிலும் தொழிற்சங்கங்களிலும் FN இன் வேலைகளில் தலைமைப் பாத்திரங்களை இப்போது வகித்து வருகின்ற Valérie Laupies, Alain Avello, Yannick Jaffré மற்றும் Gilles Lebreton போன்ற மனிதர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர்.

செவெனுமோ —FN, இராணுவம் மற்றும் போலிஸ் வட்டாரங்களுடன் இவர் கொண்டிருக்கும் ஐயத்திற்கிடமற்ற தொடர்புகளைக் கொண்டு— Debout la France இன் நிக்கோலா டுபோன்-எய்னியோன் (Nicolas Dupont-Aignan) போன்ற அதி-வலது தேசியவாதிகளுடன் நெருக்கமாய் வேலைசெய்து வருகிறார். சென்ற ஆண்டில் நடந்த அதன் மாநாட்டில் “தேசப்பற்றுள்ள அத்தனை பேரையும் ஒன்றுதிரட்டுவதன்” முக்கியத்துவத்தை செவெனுமோ வலியுறுத்தினார்.

Public Senate சனலுக்கு, FN உள்ளிட்ட “இறையாண்மைவாதிகளின் கூட்டணி” ஒன்றின் யோசனையை அவர் மிதக்க விட்டார்: “எல்லாரையும் போலவே, மரின் லு பென்னும், நான் சரியாகக் கூறும் போது என்னுடன் இணைந்து கொள்ள வேண்டும்... மறுபக்கத்தில் சோசலிஸ்டுகளையும் குடியரசுவாதிகளையும் நான் அழைக்கிறேன். மக்களை ஒன்றுபடுத்துவதே தீர்வு என்று நான் கருதுகிறேன். தேசிய முன்னணியின் வாக்காளர்கள் ரொம்பவும் திரவத்தன்மையானவர்கள், தேசிய நலனைக் காணுமிடத்தில் வந்து சேருவதற்கு அவர்கள் அறிவார்கள்.”

மரின் லு பென், தன் பங்காக, 2014 இல் ஒரு “பெரும் தேசப்பற்றுக் கூட்டணி”யை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். “ஜோன்-பியர் செவெனுமோ இன் கட்சி இருக்கிறது, நிக்கோலா டுபோன்-எய்னியோன் இன் கட்சி இருக்கிறது, பிலிப் டு வில்லியே இன் கட்சி இருக்கிறது, பிரான்சில் தேசப்பற்றுக் கட்சிகள் இருக்கின்றன, நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் அதன் பாதுகாப்பையும் செழிப்பையும் உறுதி செய்வதற்காகவும் நாளை இந்த அத்தனை கட்சிகளுமாய் ஒன்றுகூடி நிற்பதென்பது சாத்தியமானதே.”

இந்த சக்திகள், முஸ்லீம்-விரோத மனோநிலையை ஊக்குவிப்பதும், நவ-பாசிசத்தை இயல்பானதாக்க வேலைசெய்வதும், அத்துடன் சென்ற ஆண்டில் பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னர் PS ஆல் திணிக்கப்பட்ட காலவரையற்று நீட்டக்கூடியதாக இருக்கின்ற அவசரகால நிலைக்கு எழுகின்ற எதிர்ப்பினை மட்டுப்படுத்துவதற்கு சட்டம்-ஒழுங்கு மனோநிலையை ஊக்குவிப்பதுமாய், ஒரு குரூரமான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கின்றன. FN அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ட்ரம்புக்கு இவர்களது விண்ணப்பங்கள், திவாலாகிப் போன முதலாளித்துவ ஒழுங்கின் மீது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திடையே பெருகிச் செல்லும் கோபத்தை வாய்மூடச் செய்வதற்கு அதன் மீது சர்வாதிகாரத்தையும் போரையும் திணிப்பதற்கான ஒரு முயற்சியின் பகுதியே என்பதன் மறுபேச்சுக்கு வழியற்ற நிரூபணங்களாகும்.