ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump wins US presidential election

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுகிறார்

By Patrick Martin
9 November 2016

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் ட்ரம்புக்கு ஒப்புதல் அழைப்பை செய்து, ஜனநாயகக் கட்சிக்கான ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவாகவும் படுதோல்வியாகவும் அமைந்த ஒன்றில், பில்லியனர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கண்டிருந்ததை ஒப்புக் கொண்டார் என்று அதிகாலை 2:45 EST அளவில் CNN செய்தி தெரிவித்தது.

ட்ரம்பின் வெற்றியுடன் கைகோர்த்து நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சியினர் படுதோல்வியைத் தழுவியிருந்தனர், குடியரசுக் கட்சி, செனட் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டதோடு பிரதிநிதிகள் சபையிலும் தனது பெரும்பான்மையில் ஒரு மிகச்சிறிய சரிவையே சந்தித்தது.

ஒப்புதல் அழைப்பு செய்யப்பட்ட சமயத்தில், பல மாநிலங்களில் இன்னும் கூட வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது, ஆனால் ட்ரம்ப் அதற்குள்ளாகவே வெற்றிக்குத் தேவையான வாக்குகளை ஈட்டி விட்டிருந்தார். தொலைக்காட்சி அலைவரிசைகளது விவரிப்பின் படி, ட்ரம்ப் ஏற்கனவே 244 வாக்குகளை ஈட்டியிருந்தார் என்பதோடு வெற்றிபெறத் தேவையான 270 ஐ அவருக்குக் கொண்டுவருவதற்கு போதுமான வாக்குகளுடன் பிற மாநிலங்களில் முன்னிலையில் இருந்தார்.

கிளிண்டனது ஒப்புதல் அழைப்பு குறித்த அறிவிப்புக்கு சுமார் 45 நிமிடத்திற்கு முன்பாக, கருத்துக்கணிப்பாளர்களாலும் ஊடகங்களாலும் கிளிண்டன் உறுதியாக வெற்றிகாணக் கூடிய தொழிற்துறை மாநிலங்களில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த பென்சில்வேனியாவில் ட்ரம்ப் வெற்றி கண்டிருந்த செய்தியை ஹில் வலைத் தளம் தெரிவித்தது.

அதற்கு சிறிதுநேரத்திற்குப் பின்னர், கிளிண்டன் பிரச்சாரத்தின் தலைவரான ஜோன் பொடெஸ்டா மன்ஹாட்டனில் கிளிண்டன் பிரச்சாரத் தலைமையகத்தில் கூடியிருந்த சோகமான கூட்டத்திடம் காலை வரை கிளிண்டன் வரமாட்டார் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் மற்றும் ஊடக வருணனையாளர்களும் கிளிண்டன் ஓரளவுக்கு கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றே ஏறக்குறைய ஒருமனதாகக் கணித்திருந்தனர் என்பதால் இந்த முடிவு ஒரு அரசியல் அதிர்ச்சியாக அமைந்தது. நிதிச் சந்தைகளில் பிரளயங்கள் ஏற்பட்டன, டோ ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி பியூச்சர்ஸ் சந்தை இரவு வியாபாரத்தில் 900 புள்ளிகள் சரிந்தது. நாஸ்டாக் சந்தை அபாய அளவு சுட்டிக்காட்டிகளுக்கு கீழே விலை வீழ்ந்ததை அடுத்து வணிகத்தை தற்காலிகமாக நிறுத்தியது.

செய்திகளது விபரிப்பின் படி, கிளிண்டன் தேசிய அளவில் மக்கள் வாக்குகளில் 1.2 மில்லியன் வரை பின்தங்கியிருந்தார். அவர் அதிக வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த பசிபிக் கரை மாநிலங்களில் பிந்திய வாக்குஎண்ணிக்கைகளின் போது அவர் மீண்டும் இதில் முன்னிலைக்கு வரலாம். ஆனாலும் ஜனாதிபதிப் பதவிக்கான முடிவைத் தீர்மானிப்பது தேர்தல் கல்லூரியே ஆகும்.

கிளிண்டனின் ஒப்புதல் அழைப்பை CNN அறிவித்த சமயத்தில், 20 வாக்குகள் கொண்ட பென்சில்வேனியா, மிச்சிகன் (16), விஸ்கான்சின் (10), இவற்றுடன் நியூ ஹாம்ப்சைர் (4) மற்றும் அரிசோனா (4) ஆகியவற்றின் முடிவுகளை செய்திகள் கணக்கிட்டிருக்கவில்லை. தேர்தல் வாக்குகள் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மூலமாகவும் அத்துடன் மாநிலரீதியாகவும் வழங்கப்படக் கூடிய நெப்ராஸ்கா மற்றும் மேயின் ஆகிய மாநிலங்களிலும் இரண்டு முடிவுதெரியாத வாக்குகள் இருந்தன.

ட்ரம்ப் செவ்வாய்கிழமை இரவு 11 மணி வரையில்,  ஃபுளோரிடா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா, ஒஹியோ மற்றும் அயோவா ஆகிய நெருக்கமான போட்டி இருந்த “யுத்தக்கள” மாநிலங்களில் ஐந்தில் வென்றிருந்தார். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் அரிசோனாவில் கணிசமான முன்னிலையில் இருந்தார். ஹிலாரி கிளிண்டன் வெர்ஜினியா, கொலராடோ மற்றும் நெவெடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே வெற்றி கண்டிருந்தார், நியூ ஹாம்ப்சைரில் சிறிய முன்னிலை பெற்றிருந்தார்.

ட்ரம்ப், வெர்ஜினியா தவிர்த்து - இங்கு அவர் குறுகிய வித்தியாசத்தில் தோல்வி கண்டார் - ஒவ்வொரு தெற்கு மாநிலத்திலும் வெற்றி கண்டார், அத்துடன் கொலரோடோ, நியூ மெக்சிகோ மற்றும் நெவெடா தவிர்த்து பெரும் சமவெளிகள் மற்றும் மேற்கு மலைப் பிராந்தியத்தின் குறைந்த மக்கள்தொகை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் வெற்றி கண்டிருந்தார். மிட்வெஸ்ட் பகுதியில் ஒஹியோ, இண்டியானா, மிசௌரி மற்றும் அயோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டிருந்தார். விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் முன்னிலையில் இருந்தார். கிளிண்டன் இலினோய் மற்றும் மினசோட்டாவில் மட்டுமே திட்டவட்டமான வெற்றியைப் பெற்றிருந்தார்.

மிட்வெஸ்ட் மற்றும் பென்சில்வேனியாவில், பாரம்பரியமாக குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக விழக் கூடிய கிராமப்புற பகுதிகளுடன் சேர்த்து 2008 மற்றும் 2012 இல் பராக் ஒபாமாவிற்கு வாக்களித்திருந்த சிறிய தொழில் நகரங்களிலும் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் முன்னதாக ஜனநாயகக் கட்சி வலுவாக இருந்த இடங்களை ட்ரம்ப் உடைத்திருந்தார். விஸ்கான்சினில் Eau Claire மற்றும் La Crosse ஆகிய நகரங்கள், மிச்சிகனில் Saginaw, Bay City மற்றும் Battle Creek ஆகிய நகரங்கள், பென்சில்வேனியாவில் Erie, Scranton மற்றும் Wilkes-Barre ஆகிய நகரங்களும் இதில் அடங்கும்.

“வெள்ளை இனத் தொழிலாளர்கள்” என்று ஊடகங்களால் காட்டப்படுகின்ற கல்லூரிப் படிப்பு படிக்காத வெள்ளை இனத்தவர் - இவர்களில் பல தொழிலாளர்களுக்கு கல்லூரிப் பட்டம் இருக்கிறது என்றாலும் கூட - ஜனநாயகக் கட்சிக்கு எதிராக இன்னும் அதிகமாய் நகர்ந்தது தேர்தலில் ட்ரம்பின் முன்னிலைக்கு கூடுதலாய் உதவி செய்தது. இந்த பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் 2008 இல் பராக் ஒபாமாவுக்கு வாக்களித்திருந்தனர், தெற்குப் பகுதிக்கு வெளியே அவர்களது வாக்குகளின் மூலமாகவே அவர் பெரும்பான்மையை வென்றிருந்தார் என்ற நிலையில், அவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்திருந்தனர்.

நிதிப் பொறிவும் ஒபாமா நிர்வாகத்தின் பெருநிறுவன ஆதரவுக் கொள்கைகளும், வெள்ளைத் தொழிலாளர்களின் ஏழ்மையான பிரிவுகளின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்கள் மீது ஏற்படுத்திய பாதிப்பு, அத்துடன் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் நிலைக்கும் ஜனநாயகக் கட்சி காட்டிய முற்றுமுதலான அலட்சியம் இரண்டையும் பிரதிபலிப்பதாக இது இருக்கிறது. கிளிண்டனது பிரச்சாரம் அடையாள அரசியலின் அடிப்படையில் கறுப்பின மற்றும் பிற சிறுபான்மைத் தொழிலாளர்களிடையே வாக்குவங்கியைத் திரட்ட முயற்சி செய்ததே தவிர்த்து, ஒரு வர்க்கமாக தொழிலாளர்களுக்கு பயனளிக்கத்தக்க எந்தவொரு கொள்கைகளையும் வழங்கவில்லை.

பல மாநிலங்களிலும் வாக்களிப்பும் கூட சாதனை அளவுகளைத் தொட்டது - புளோரிடாவில் மட்டும் 2012 இல் பதிவான வாக்குகளை விடவும் ஒரு மில்லியன் கூடுதல் வாக்குகள் பதிவாகியிருந்தன - அத்துடன் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இரண்டிலுமே வாக்களிப்பு மையங்களில் நீண்ட வாக்களிப்பு வரிசைகள் இருந்தன.

அமெரிக்க செனட்டை கட்டுப்படுத்துவதற்கான போட்டியிலும் - இதில் குடியரசுக் கட்சி தனது 54-46 பெரும்பான்மையைத் தொலைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது, ஏனென்றால் குடியரசுக் கட்சி தனது 24 ஆசனங்களை தக்கவைக்கப் போராடும் நிலையில் இருந்த வேளையில் ஜனநாயகக் கட்சியின் 10 ஆசனங்களுக்கு மட்டுமே அத்தகைய நிலை இருந்தது - ஜனநாயகக் கட்சியானது ஜனாதிபதிக்கான போட்டியில் போலவே படுதோல்வியை சந்தித்தது. இக்கட்டுரை எழுதப்படுகின்ற சமயத்தில், இலினோய் இல் டாமி டக்வொர்த் மட்டுமே அங்கு முன்னர் குடியரசுக் கட்சி வென்றிருந்த ஆசனத்தைக் கைப்பற்றியிருந்தார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் செனட்டில் குறைந்தபட்சம் 51 ஆசனங்களை தக்கவைத்து, மேல்சபை தொடர்ந்து அக்கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உத்தரவாதம் செய்வார்கள் என்பதை செய்திகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் அதி-வலது கன்னையின் சித்தாந்தத் தலைவராக இருந்த அண்டோனின் ஸ்காலியாவுக்கு - இவர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறந்தார் - அடுத்து வரவிருப்பவரை முடிவு செய்யக் கூடிய ஒரு நிலையை இது ட்ரம்ப்பின் நிர்வாகத்திற்கு அளித்திருக்கிறது.

விஸ்கான்சின் மற்றும் இண்டியானாவில் வெற்றிபெறுவார்கள் என்று கருதப்பட்ட ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செனட்டர்களான Russ Feingold மற்றும் Evan Bayh தோல்வியைத் தழுவினர். அத்துடன் நியூ ஹாம்ப்சைர், பென்சில்வேனியா மற்றும் மிசௌரி ஆகிய நெருக்கமான போட்டியிருந்த இன்னும் மூன்று இடங்களிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். குடியரசுக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ட்ரம்பை எதிர்த்து முன்னர் போட்டியிட்டிருந்த செனட்டர் மார்கோ ருபியோ புளோரிடாவில் தனது ஆசனத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

பிரதிநிதிகள் சபையில், 60 ஆசனங்களுடனான குடியரசுக் கட்சியின் அறுதிப் பெரும்பான்மைக்கு ஜனநாயகக் கட்சியினர் எந்த குந்தகமும் விளைவிக்க முடியவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமான அரை டசின் இருக்கைகளை மட்டுமே அவர்கள் கூடுதலாய் வென்றுள்ளனர்.