ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French right’s presidential primary highlights shift far to the right

பிரெஞ்சு வலதின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல், தீவிர வலதுக்கு மாறுவதை எடுத்துக்காட்டுகிறது

By Alex Lantier and Alice Laurençon
25 November 2016

2017 ஜனாதிபதி தேர்தல்களுக்கான, பிரெஞ்சு வலதின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலின் இரண்டாம் சுற்றில் ஞாயிறன்று போட்டியிட உள்ள பிரான்சுவா ஃபிய்யோன் மற்றும் அலன் யூப்பே வியாழனன்று இரவு அவர்களது இறுதி விவாதத்தை நடத்தினர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்ப் இன் திகிலூட்டும் வெற்றிக்குப் பின்னர், முதலாளித்துவ அரசியல் தற்போது ஒரு பிரதான வரலாற்று திருப்பத்தில் தீவிர வலதை நோக்கி சென்று கொண்டிருப்பதை, முதல் சுற்றில் ஃபிய்யோனின் திடீர் வெற்றி எடுத்துக்காட்டியது. முன்னர் முன்னிலையில் இருந்த அலன் யூப்பே, “மக்களை ஒருங்கிணைக்க" சூளுரைத்ததன் மூலமாக அவரது கடுமையான சிக்கனத் திட்டம், போர் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளது வேலைத்திட்டத்தை மறைக்க முயன்ற நிலையில், ஒரு அவமானகரமான தோல்வியைச் சந்தித்தார். இரண்டாம் சுற்றில் தற்போது ஃபிய்யோன் 65 சதவீத வாக்குகளைப் பெற இருப்பதாக Odoxa கருத்துக்கணிப்பு குறிப்பிட்டது.

ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஆழமாக செல்வாக்கிழந்துள்ள நிலையில், அனேகமாக அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) மரீன் லு பென்னுக்கு எதிராக போட்டியிடக் கூடிய வேட்பாளராக ஃபிய்யோன் இருக்கலாம். ஃபிய்யோன் தன்னைத்தானே யூப்பே இன் வேலைத்திட்டத்தில்தான் அமைத்துள்ளார் என்றாலும் சில குறிப்பிட்ட கொள்கைகளை கூடுதலாக முன்நோக்கி நகர்த்துகிறார். அனைத்திற்கும் மேலாக, அவர் தீவிர வலதின் கொள்கைகளையே எதிரொலிக்கும் விதத்தில் —கருக்கலைப்புக்கு எதிர்ப்பு, ஓரின திருமணத்திற்கு எதிர்ப்பு, அல்லது முஸ்லீம்-விரோதத்தை அல்லது யூதயின-எதிர்ப்பு தப்பெண்ணங்களை தூண்டுவது என— பல்வேறு நிலைப்பாடுகளுடன் அவற்றை நியாயப்படுத்தி வருகிறார்.

இப்பிரச்சாரம் தொழிலாள வர்க்கம் மீதான பரந்த தாக்குதலின் ஒரு தீவிரப்பாட்டையும் மற்றும் நேட்டோ தலைமையிலான பல்வேறு போர்களில் பிரான்சின் அதிகரித்த பங்கெடுப்பையும், அத்துடன் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் மிக கூர்மையான வர்க்க மோதல்கள் வெடிக்க இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ஃபிய்யோன் மற்றும் யூப்பே இன் வேலைத்திட்டங்கள் முறையே ஏற்கனவே பிரெஞ்சு மக்களில் 56 மற்றும் 52 சதவீதத்தினரிடையே பரந்த வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கிறது.

ஃபிய்யோனின் வேலைத்திட்டத்தை "பிற்போக்கானதென்றும்" “மிகப்பெரிய சமூக காட்டுமிராண்டித்தனத்தை அடிப்படையாக கொண்டுள்ளது" என்றும் யூப்பே செவ்வாயன்று குறிப்பிட்டபோது, அவரது குடியரசு கட்சியின் (LR) ஏனைய அங்கத்தவர்களிடம் இருந்து விமர்சனங்களைத் தூண்டியது. பொதுமக்களிடையே LR கட்சியின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக, அவர்களது கருத்து வேறுபாடுகளில் மௌனமாக இருந்து, ஒரு சுமூகமான விவாதத்தை நடத்துவதென்ற அவ்விரு வேட்பாளர்களது முடிவும், அவ்விரு வேட்பாளர் முன்மொழியும் கொள்கைகளுக்கு இடையிலான நெருக்கமான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக்காட்டும் தாக்கத்தைக் கொண்டிருந்தன.

பிரான்சில் ஓராண்டுக்கும் மேலாக இப்போதும் நடைமுறையில் உள்ள அவசரகால சட்ட நிலையை குறித்தோ, அல்லது சிரியாவிலும் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் நேட்டோ தலைமையிலான ஏகாதிபத்திய போர்களை எதிர்ப்பதில் ரஷ்யாவுடனான அல்லது ஏனைய பிரதான சக்திகளுடனான போர் அபாயம் குறித்தோ எவரொருவரும் குறிப்பிடவில்லை. உண்மையில் இத்தகைய கொள்கைகளுக்கான ஆதரவு சகல அரசாங்க கட்சிகளது வேட்பாளர்களிடையேயும் ஒருமனதாக நிலவுகிறது.

அந்த விவாதம், மக்களுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு வருகின்ற வரவு -செலவு திட்டத்தில் வெட்டுக்கள் மீதும் மற்றும் சமூக சேவைகள் மீதான தாக்குதல்கள் மீதும், வாழ்க்கை முறை பிரச்சினைகள் மீதான ஃபிய்யோனின் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகள், அத்துடன் பிரான்சின் வெளியுறவு கொள்கை அணிசேர்க்கை மீதும் குவிந்திருந்தது.

ஃபிய்யோன் மற்றும் யூப்பே இருவருமே (முறையே 500,000 மற்றும் 200,000) பொதுத்துறை வேலை வெட்டுக்களை முன்மொழிகின்றனர், ஓய்வூதிய வயதை திரும்ப 65 க்குக் கொண்டு வர, மூலதனத்தின் இலாபங்கள் மீது வரி சலுகைகள், செல்வந்தர்கள் மீதான ISF வரி வெட்டு, மற்றும் முறையே 100 பில்லியன் யூரோ மற்றும் 85 பில்லியனுக்கு அதிகமான யூரோ என வரவு-செலவு திட்டக் கணக்கில் ஆழ்ந்த வெட்டுக்களை முன்மொழிகின்றனர்.

இரண்டாம் உலக போர் முடிந்த பின்னர் பிரான்சில் வழங்கப்பட்ட அடிப்படை சமூக உரிமைகள் மீதான அவரது மனோபாவம் பற்றிய இதழாளர்களது ஒரு கேள்வியை ஃபிய்யோன் சாடினார். அவர் பதிலுரைக்கையில், “அந்த பிரெஞ்சு சமூக முன்மாதிரி இப்போது கிடையாது. நாம் இப்போது 1945 இல் இல்லை, நாம் ஒரு திறந்த உலகில் இருக்கிறோம், அந்த முன்மாதிரி இன்னமும் நியாயமாக இருக்கும் வகையில் அதை நாம் ஆழமாக மாற்றியமைக்க வேண்டும்,” என்றார்.

பல்வேறு மருத்துவக் கவனிப்பு முறைகளது மானியங்களுக்கான பொறுப்புறுதியை சமூக பாதுகாப்பிலிருந்து தனியார் காப்பீட்டிற்கு மாற்றுவதற்கான அவரது முன்மொழிவையும் ஃபிய்யோன் நியாயப்படுத்தினார் —அவ்விதத்தில், "அதிகாரத்துவமயப்படுத்தலை குறைத்து" பிரான்சின் "புத்துயிரூட்டலை" செயற்படுத்துவதற்காக என்று கூறி, இது மருத்துவக் கவனிப்பைத் தனியார்மயப்படுத்துவதற்கு வழிவகுப்பதாகும்.

2008 நிதியியல் பொறிவின் அந்நேரத்தில் பிரெஞ்சு வலது அதிகாரத்தில் இருந்தபோது, அது ஒழுங்கமைத்த வங்கிகளுக்கான பிணையெடுப்பு திட்டங்களை, பின்னர் ஃபிய்யோன் மற்றும் யூப்பே, பலமாக நியாயப்படுத்தினார்கள். இது நிதியியல் பிரபுத்துவத்திற்கு மிகப்பெரும் தொகைகளை வழங்கியதை நியாயப்படுத்துகின்ற அதேநேரத்தில், அவர்கள் பாரிய வேலை வெட்டுக்கள், முன்னொருபோதும் இல்லாதளவிலான சிக்கன நடவடிக்கைகள், மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் தசாப்தகால போரட்டத்தில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சமூக சலுகைகளை அழிப்பதையும் வெட்கமின்றி முன்மொழிந்தனர்.

கருக்கலைப்பு மீதான ஃபிய்யோனின் பிற்போக்குத்தனமான கருத்துகள் மீது, யூப்பேயும் ஃபிய்யோனும் கருத்து வேறுபட்டிருந்தனர். ஃபிய்யோன் அவர் அதையொரு "அடிப்படை உரிமையாக" கருதவில்லை என்று தெரிவித்திருந்தார், அத்துடன் பிரான்ஸ் "அது குறிப்பிடுவதைப் போல பன்முக கலாச்சாரம் கொண்டதல்ல" என்பதும் அவரது அறிவிப்பாக இருந்தது.

அவ்விரு வேட்பாளர்களும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டும் சம்பந்தமாக, சுதந்திர கொள்கை எனக் கூறி, நேரெதிரான அவர்களது கருத்துக்களை உறுதி செய்திருந்தனர், அத்துடன் நேட்டோ மற்றும் அட்லாண்டிக் கூட்டணிக்கான அவர்களது ஆதரவிலும் அவ்வாறே இருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலாதிக்க சக்தியான ஜேர்மனிக்கு எதிர்ப்பை அறிவிப்பதை விட வேறெந்த முக்கியத்துவமும் இல்லை என்பதைப் போன்றவொரு பாவனையில், ஃபிய்யோன், பிரான்ஸ் விரைவிலேயே ஐரோப்பாவின் பிரதான சக்தியாக மாறும் என்று அனுமானித்தார், அவ்வாறானால் அதற்காக அவரது சிக்கனக் கொள்கைகளுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டியிருக்கும்.

உண்மையில் நாடுக்கு வெளியில் வெடிப்பார்ந்த போர் நெருக்கடிகள் மற்றும் பிரான்சில் உள்நாட்டில் பொலிஸ்-அரசு ஆட்சிக்கான நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு கூர்மையான மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதையே ஃபிய்யோன் மற்றும் யூப்பே இன் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஐக்கிய  இராச்சியத்தில் பழைமைவாத அரசாங்கத்தின் பிரெக்ஸிட்டிற்கு பின்னான வலது நோக்கிய சரிவில் தொடங்கி, அமெரிக்காவில் தீவிர வலதுசாரி வாய்ச்சவடால் பாசிசவாத பில்லியனர் தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னான உத்தியோகபூர்வ அரசியலின் வலது நோக்கிய சரிவு வரையான நிகழ்வுகள் பிரான்சிலும் தாக்கத்தை உண்டாக்கவிருக்கிறது.

உலக முதலாளித்துவத்தின் ஓர் ஆழ்ந்த பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நெருக்கடியானது அரசியல் உயரடுக்கை அதிர்ச்சியூட்டி, மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் போக்குகளுக்குப் புத்துயிரூட்டி வருகிறது. பிரான்சில், பிரதான பொறுப்பு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி மீதும், 2012 இல் ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்த புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற போலி இடது கட்சிகள் மீதும் விழுகிறது. சோசலிஸ்ட் கட்சியினது அவசரகால நெருக்கடி நிலை, சிரியாவில் அதன் போர் முனைவு, மற்றும் ஹோலாண்டின் சிக்கனக் கொள்கை ஆகிய அனைத்தும் பிரான்சின் வர்க்க உறவுகளிலும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திலும் ஓர் ஆழ்ந்த ஸ்திரமின்மையை உருவாக்கி உள்ளது.

வலதை நோக்கிய சோசலிஸ்ட் கட்சியின் கூர்மையான திருப்பம் மற்றும் அவசரகால நெருக்கடி நிலையையும் குடியுரிமை பறிப்பு கொள்கையையும் அரசியலைப்பில் வரைந்து வைக்கும் அதன் முயற்சி போன்ற தீவிர வலதை நோக்கிய அதன் முறையீடு ஆகியவை பிரெஞ்சு வலதை சிக்க வைக்கிறது. உண்மையில் அது போர், சிக்கனக் கொள்கை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றில் சோசலிஸ்ட் கட்சியுடன் உடன்பட்டுள்ள அதேவேளை, சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் போலி இடது கட்சிகளும் அவற்றின் நடவடிக்கைகளது மையத்தில் வைத்துள்ள வாழ்க்கை முறை பிரச்சினைகள் மீது தீவிர-வலது நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சோசலிஸ்ட் கட்சியிலும் பார்க்க வலதாக நிற்க அது பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகிறது.

புதனன்று Europe1 இல் பேசுகையில், ஃபிய்யோன் முஸ்லீம் மற்றும் யூத சமூகங்களைத் தாக்கினார்: “முஸ்லீம் தீவிரவாதிகள் முஸ்லீம் சமூகத்தைப் பிணையாளியாக எடுத்து வருகின்றனர்,” என்றார். “இந்த அடிப்படைவாதத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும், கடந்த காலத்தில் செய்ததைப் போல நாம் அதை எதிர்க்க வேண்டும், எனக்கு நினைவிருக்கிறது, நாம் கத்தோலிக்க அடிப்படைவாத வடிவங்களுக்கு எதிராகவும் மற்றும் பிரெஞ்சு குடியரசின் அனைத்து விதிகளையும் மதிக்காத ஒரு சமூகத்தில் வாழ விரும்பிய யூதர்களின் விருப்பத்தையும் எதிர்த்து நாம் போராடினோம்,” என்றார்.

பிரெஞ்சு யூத-இன எதிர்ப்பின் காரணமாகவே பிரான்சில் யூதர்கள் சேரிப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர், சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவினால் அல்ல என்பதை நினைவூட்ட பிரான்சின் தலைமை யூத குரு Haïm Korsia ஃபிய்யோனைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் "ஆரம்ப காலகட்டத்தில் நிலவி இருக்கக்கூடிய ஒதுங்கி வாழும் யூத போக்கு, யூத குடிமக்களது நம்பிக்கையின் காரணமாகவோ அல்லது அவர்களது நம்பிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டதோ கிடையாது, மாறாக அந்நேரத்தில் அதன் சகவாசிகளை பிரெஞ்சு சமூகம் ஏற்க மறுத்ததன் விளைவினால் ஆகும் என்பதை எடுத்துரைத்தார்,” என்று Korsia இன் பணியாளர் தெரிவித்தார்.