ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass student protests against Trump election: The way forward

ட்ரம்ப் தேர்வுக்கு எதிரான பாரிய மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: முன்னோக்கிய பாதை

The Socialist Equality Party and the International Youth and Students for Social Equality
16 November 2016

டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதற்கு எதிராக நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தெழுவதை சோசலிச சமத்துவக் கட்சியும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் வரவேற்பதுடன், ஆதரிக்கின்றன.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மற்ற பிரிவுகள் பங்குபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள், ஒரு வருங்கால ட்ரம்ப் நிர்வாகம் எடுக்க விழையும் வலது-சாரி மற்றும் வெளிநாட்டவர்வெறுப்புக் கொள்கைகளுக்கும் அத்துடன் மக்களை நிறரீதியாக பிளவுபடுத்துவதற்கு செய்யப்படுகின்ற அத்தனை முயற்சிகளுக்கும் ஒரு ஆழமான குரோதத்தை வெளிப்படுத்துகின்றன.

தான் தேர்வானதற்குப் பிந்தைய வாரத்தில், ட்ரம்ப், கருக்கலைப்புகளை தடைசெய்வதற்கும், பாரிய குடியேற்றவாசிகளை திருப்பியனுப்புவதற்கும் அத்துடன் சகலதுறைகளிலும் அதி-வலதுசாரிக் கொள்கைகளை பின்பற்றுவதற்குமானது தனது தீர்மானமான உறுதியை மீண்டும் கூறியிருக்கிறார். வெள்ளை தேசியவாத மற்றும் நவ-பாசிசவாத குழுக்களுடன் நேரடித் தொடர்புகள் கொண்ட ஒரு மனிதரான ஸ்டீபன் பானனை, ட்ரம்ப், தனது தலைமை மூலோபாய ஆலோசகராக நியமனம் செய்திருப்பது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் முகம்கொடுக்கும் அபாயங்களை தெளிவுபடுத்துகிறது. ட்ரம்ப்பின் தேர்வானது சமூக எதிர்ப்புக்கு எதிராக எதேச்சாதிகாரம் மற்றும் அரச வன்முறையின் ஒரு கொள்கைக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் நகர்ந்திருப்பதையே குறிக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களை இயக்கும் மனோநிலைகள், ட்ரம்ப் “வெற்றிபெற” வாழ்த்துவதற்கும் அவருடன் இணைந்து வேலைசெய்வதற்கு தங்கள் தயார்நிலையை உறுதியளிப்பதற்கும் வரிசைகட்டி நிற்கும் ஜனநாயகக் கட்சியின் முன்னிலை நிர்வாகிகளின் பதிலிறுப்புக்கு கூர்மையான முரண்பாட்டுடன் இருக்கிறது. 

ஹிலாரி கிளிண்டனின் ஒப்புதல் அழைப்புக்கு அடுத்த நாளில், ஜனாதிபதி ஒபாமா, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது, “நமது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் வெற்றிபெறுவதை” உறுதி செய்வதுதான் “அடுத்த இரண்டு மாதங்களில் எனது முதன்மையான முன்னுரிமை” என்று தெரிவித்தார். திங்களன்றான செய்தியாளர் சந்திப்பில், ஒபாமா, அமெரிக்கர்கள் ட்ரம்ப் ஜனாதிபதிக் காலத்திற்கு “தங்களை இணக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தியதோடு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருடன், தான் “மனம்விட்டு விவாதித்ததை” புகழ்ச்சியுடன் கூறினார்.

இதில் குறிப்பாக வெறுக்கத்தக்கது செனட்டர் பேர்னி சாண்டர்ஸின் பதிலிறுப்பாகும், ட்ரம்ப்பை “நடுத்தர வர்க்க”த்தின் பாதுகாவலனாக நியாயப்படுத்த முனைந்த அவர், “ஜனாதிபதி ட்ரம்ப் உண்மையில் இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்திற்கும் உழைக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவாக வேலைசெய்யக் கூடிய பிரச்சினைகளில் அவருடன் இணைந்து வேலைசெய்ய” தான் விரும்புவதாக வார இறுதியில் வந்த நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில் அவர் எழுதுகிறார்.

இத்தகைய கூற்றுகள், ஆர்ப்பாட்டங்களில் பெங்குபெறுவோர் உட்பட நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நன்கு வெளிப்பட்ட விடயமாக இருக்கும் ஒன்றுடன் முரண்பட்டு ஒலிக்கின்றன. உழைக்கும் மக்களின் நலன்களுக்கு சேவை செய்ய ட்ரம்ப் எதுவொன்றையும் செய்யப் போவதில்லை. மாறாக சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஒரு முழுவீச்சிலான தாக்குதல் நடத்துவதற்கே அவர் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக, ஆர்ப்பாட்டங்கள் பெருகிச் செல்வதை உணர்ந்து கொண்டு, சாண்டர்ஸ், ஒரு கூடுதல் விமர்சனத் தொனியை எடுத்துக் கொண்டு, மீண்டும் தன்னை ஒரு ஸ்தாபக-எதிர்ப்பு மனிதராகக் காட்டிக் கொள்வதற்கு எத்தனிக்கிறார். அரசியல் ஸ்தாபகத்திற்கு பெருகிச் செல்லும் எதிர்ப்பினை ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள் முடக்கி வைத்திருக்கும் நோக்கத்துடன் ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் “பில்லியனர் வர்க்க”த்தை கண்டனம் செய்தும், தன்னை ஒரு சோசலிஸ்டாக காட்டிக் கொண்டும் அவர் வகித்த அதே பாத்திரத்தை மீண்டும் நடத்துவதற்கு நோக்கம் கொண்டுள்ளார். நிலவும் ஊழலடைந்த நிலையின் உருவடிவமான ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவை அளித்ததன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு உந்துசக்தி அளிப்பதாக இருந்த வாழ்க்கைத் தரங்களின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்துச் செல்லும் சமத்துவமின்மை ஆகியவை குறித்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் வலதுகள் தமது கையில் எடுத்துக்கொள்ளவும் மற்றும் அதன் மூலம் ட்ரம்ப் வெற்றி பெறுவதையும் சாண்டர்ஸ் உறுதிசெய்திருந்தார்.

கிளிண்டனோ அல்லது ஒபாமாவோ, ட்ரம்ப் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வாக்குகளில் தோல்வி கண்டிருந்தார் என்ற உண்மையை குறிப்பிடவும் கூட இல்லை. அதேபோல, மக்கள் வாக்குகளுக்கும் (popular vote) ஜனாதிபதி தேர்வு சபை (Electoral College) முடிவுக்கும் இடையில் வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கான வித்தியாசம் இருப்பதானது ட்ரம்ப் தனது அதி வலது-சாரி திட்டநிரலை முன்னெடுப்பதற்கான மக்கள் உத்தரவு கிட்டியிருப்பதாகக் கூறுவதை மறுக்கிறது என்பதையும் அவர்கள் குறிப்பாகவும் கூடக் கூறவில்லை.

ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பு, ஜனநாயகக் கட்சி அல்லது அதன் எந்தக் கன்னையின் மூலமாகவோ அல்லது அவற்றுடன் இணைந்தோ நடத்தப்பட முடியாது என்ற ஒரு அடிப்படையான அரசியல் உண்மையை, தேர்தல் முடிவுகளுக்கு ஜனநாயகக் கட்சியின் பதிலிறுப்பு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த நீண்டகால கட்சியானது மாற்றப்படவோ, சீர்திருத்தப்படவோ அல்லது “முன்னைய நிலைக்கு திருப்பவோ” முடியாது. அத்தகைய ஒரு முன்னோக்கை வைக்கும் அனைவருமே, புறநிலை அரசியல் வார்த்தைகளில் சொன்னால், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் எழுவதைத் தடுப்பதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஒபாமா, தேர்தலை “அணிக்குள்ளான போட்டிச்சண்டை” என்று வருணித்தபோது, தான் கூறநினைத்ததை விடவும் அதிகமாவே வெளிப்படுத்திவிட்டார்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக —வோல் ஸ்டீரிட், சிஐஏ மற்றும் பெண்டகன் உடன் இணைந்து— ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒன்றாகவே நிற்கிறார்கள் என்பதை. தாங்கள் சேவைசெய்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறையையும் ஆளும் வர்க்கத்தையும் அச்சுறுத்துவதாக இருக்கும் சமூக எதிர்ப்பு பெருகிச் செல்வதைக் கண்டு ஜனநாயகக் கட்சியினர் நடுங்குகின்றனர். ஒரு ட்ரம்ப் நிர்வாகத்தின் பின்விளைவுகளை விடவும் அதிகமாக வெகுஜன ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிப்பது மற்றும் நியாயப்படுத்துவதன் விளைவுகளைக் கொண்டு அவர்கள் அதிகமாக அஞ்சுகின்றனர்.  

ட்ரம்ப் மற்றும் அதிவலதுகளின் முன்பாக ஜனநாயகக் கட்சியினரின் இந்த கோழைத்தனமானது, தேர்தல் பிரச்சாரத்திலான அவர்களது பாத்திரத்தின் ஒரு தொடர்ச்சியாகும். ஹிலாரி கிளிண்டன் ஊழல்கள் மற்றும், குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிராக செலுத்தப்பட்டதாய் இருந்த போர்க்கூச்சல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வலது-சாரிப் பிரச்சாரத்தை நடத்தினார். எட்டு ஆண்டுகளாக இராணுவ வன்முறைக்கும், பெருகும் சமூக சமத்துவமின்மைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்த தாக்குதல்களுக்கும் தலைமை தாங்கியிருந்த ஒபாமா நிர்வாகத்தின் தொடர்ச்சியாக அவர் முன்நின்றார்.

தேர்தல் முழுமையிலுமே, ஜனநாயகக் கட்சியினர், போர் மற்றும் பிற்போக்குத்தனத்தின் ஒரு வேலைத்திட்டத்துடன் சேர்த்து, உயர்நடுத்தர வர்க்கத்தின் சலுகைபெற்ற அடுக்குகளின் நலன்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு சேவை செய்கின்ற இனவாத மற்றும் பாலின அரசியலை ஊக்குவிப்பதையும் கலந்து தங்களை “அடையாள அரசியலின்” ஒரு கட்சியாகவே விளம்பரம் செய்தனர். உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் தருவதற்கு ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் அத்தனை இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் மத்தியிலும் கிளிண்டனுக்கு வாக்களிப்பு வீழ்ச்சி கண்டிருந்தது.

உலகெங்கிலும் மரண நெருக்கடியில் இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையை அவர்கள் பாதுகாப்பதே இதன் காரணமாகும். அந்த முதலாளித்துவ அமைப்புமுறைதான் ட்ரம்ப்பை உருவாக்கியிருக்கிறது.

பல தசாப்த காலமாய் நீளும் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சமூக பிற்போக்குத்தனமானது, ஜனநாயக நிகழ்ச்சிப்போக்குகளை அழிவுகரமாக கீழறுத்துள்ளதோடு நிதி ஒட்டுண்ணித்தனம் மற்றும் அரசியல் ஊழல் ஆகியவற்றால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. இதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் உருக்குலைவின் பாசிச உருவடிவமாய் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்பட்டிருப்பதற்கான நிலைமைகள் ஆகும்.

ஆகவே ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அத்தனை இனங்களையும் பாலினங்களையும் கொண்ட உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவது என்பதே அதன் பொருளாகும். இது ஒரு தனி மனிதரை எதிர்ப்பதைக் குறித்த பிரச்சினை அல்ல, மாறாக உற்பத்தியின் நெம்புகோல்கள் தனியார் உடைமைகளாக இருப்பதையும் பெருநிறுவன மற்றும் நிதிப் பிரபுத்துவங்கள் முன்பினும் பிரம்மாண்ட அளவில் சொத்துக்களைக் குவிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையை எதிர்ப்பதைக் குறித்ததாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் முன்முனையாக இருக்கின்றன. அத்தனை தொழிலாளர்களும் மாணவர்களும் SEP ஐ தொடர்பு கொள்ள வேண்டும், IYSSE இல் இணைய வேண்டும், இந்தப் போராட்டத்தை இன்றே கையிலெடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். தவறவிடுவதற்கு கொஞ்சமும் அவகாசமில்லை!

இந்தக் கட்டுரையை அச்சிடவும் விநியோகிக்கவும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.