ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian elite rails against China for its ties to Pakistan

பாகிஸ்தானுடனான சீன உறவுகளை எதிர்க்கும் விதத்தில் இந்திய உயரடுக்கின் நகர்வுகள்

By Keith Jones 
5 November 2016

ஆசியாவிற்கும் உலகிற்கும் சாத்தியமான பிரளய பின்விளைவுகளை ஏற்படுத்தும் விரைவான கீழ்நோக்கிச் செல்லும் வளர்ச்சியே இந்திய சீன உறவுகளுக்கு இடையில் காணப்படுகிறது.

இந்தியாவை இராஜாங்க, பொருளாதார, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவிற்கு எதிரான இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கான ஒரு முன்னரங்கு நாடாக மாற்ற முயலும் அமெரிக்காவின் உந்துதலே புது டில்லி மற்றும் பெய்ஜிங் இடையே அதிகரித்துவரும் கருத்துவேறுபாடுகளுக்கான மூலகாரணம் ஆகும்.

வாஷிங்டன் உடனான புது டில்லியின் ஒரு தசாப்த கால "உலகளாவிய மூலோபாயக் கூட்டை", இந்தியாவின் இரண்டரை ஆண்டு கால பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமானது வியத்தகு அளவில் மேம்படுத்தி உள்ளது. இந்திய இராணுவத் தளங்களுக்கு பென்டகனின் வழக்கமான அணுகுதல் வழங்கியுள்ளதுடன், தென் சீனக் கடல் சச்சரவு பற்றிய வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் சீன-எதிர்ப்பை திரும்பதிரும்ப கூறுவதுடன், ஆசியா-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க முக்கிய நட்பு நாடுகளுடனான முத்தரப்பு இராணுவ-மூலோபாய ஒத்துழைப்பின் தொடக்கம் என அனைத்திற்கும் பிஜேபி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

புதன்கிழமையில் இருந்து, இந்திய சீன துருப்புகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) "நேரடி மோதலை" எதிர்நோக்குகின்றனர். இந்தியாவின் லடாக் பகுதி மற்றும் திபெத்திற்கு இடைப்பட்ட சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லை பகுதியில் இது அமைந்துள்ளது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்திய பகுதியில் ஒரு நீர்ப்பாசனக் கால்வாய் கட்டப்பட்டு வருவதை தடுக்க 50 சீன துருப்புகள் முயன்றபோதே இந்த மோதல் தொடங்கியது. உண்மையான கட்டுப்பாடு கோட்டிற்கு அருகாமையில் எந்த பக்கத்திலும் ஒருவர் மற்றவரின் ஒப்புதல் இன்றி உள்கட்டமைப்பை உருவாக்க இயலாது என்ற ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதாக அவர்கள் கூறுகின்றனர். இராணுவ உள்கட்டமைப்பிற்கு மட்டுமே அந்த ஒப்பந்தம் பொருந்தும் என்று இந்தியா பதில் அளித்துள்ளது.

இது அவ்வாறான முதல் எல்லை சம்பவத்திற்கு முற்றிலும் வேறுபட்டு உள்ளது. ஆனால், தெற்கு ஆசியாவின் அணு ஆயுத போட்டி நாடுகளுக்கு இடையில் பெருகிவரும் போர் நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானை திட்டமிட்டு தனிமைப்படுத்த இந்தியா முயன்று வருகிறது. இதனை எதிர்க்கும் சீனாவிடம் இந்திய அரசாங்கமும், ஊடகங்களும் தொடர்ந்து எதிர்ப்பினைக் காட்டிவரும் நிலையில் இம்மோதல்கள் அதிகபட்ச முக்கியத்துவத்தை பெறுகின்றன.

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியின் யூரி இராணுவ முகாமில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் தான் பொறுப்பு என இந்தியா முத்திரை குத்தியதிலிருந்து இந்த ஏழு வாரங்களில், அதிலிருந்து மேலும் மோதலை விரிவுபடுத்தாமல் இரு தரப்பினரும் பின்வாங்க வேண்டும் என பெய்ஜிங் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தது. ஆனால், சீனா பாகிஸ்தான் உடனான தனது பல தசாப்த கால உறவினை கைவிடாது என்பதனையும் இதன் மூலம் தெளிவு படுத்தியுள்ளது. வாஷிங்டனின் சீன-எதிர்ப்பு எனும் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்பதில் இந்தியாவை மோடி அரசாங்கம் ஒருங்கிணைத்துள்ளதற்கு பதிலடியாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கூட்டணியை கணிசமான அளவிற்கு சீனா விரிவு படுத்தியுள்ளது.

கடந்த மாதம் கோவாவில் நடந்த பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) மாநாட்டுக் கூட்ட அரங்கினை பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் களமாக மாற்ற மோடி முயன்றபோது சீனா அதிலிருந்து பின்வாங்கியது. மாநாட்டின் வார இறுதியில், பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் "பிறப்பிடம்" ஆக உள்ளது என்பதை மோடி மீண்டும் மீண்டும் விவரித்தார். ஆனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஊடகங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், பயங்கரவாத எதிர்ப்பினை மிகவும் அதிகரிக்க வேண்டிய தேவையை யூரி தாக்குதல் உணர்த்திய நிலையிலும், கோவா மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பாகிஸ்தான் அல்லது யூரி தாக்குதல் தொடர்பான எவ்வித குறிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

சீன ஜனாதிபதி ஜி கோவாவிலிருந்து பெய்ஜிங்கிற்கு திரும்பியவுடன், பாகிஸ்தானுக்கு எட்டு நீர்மூழ்கி கப்பல்கள் விற்பதற்கான ஓர் ஒப்பந்தத்தினை சீனா வெளியிட்டது.

இஸ்லாமாபாத் உடனான "விளையாட்டு விதிகளை" மாற்ற முனையும் புது டெல்லியின் ஒருங்கிணைந்த பிரச்சாரத்திற்கு தடை ஏற்படுத்தும் விதமாகவே பெய்ஜிங் நிலைப்பாடு இருக்கிறது. அமெரிக்கா உடனான இந்தியாவின் வளர்ந்துவரும் கூட்டணியை கருத்தில்கொண்டு பாகிஸ்தானை பின்வாங்கச் செய்துள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிகளுக்கு கொடுக்கும் எந்தவொரு ஆதரவினையும் இஸ்லாமாபாத் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த மோடி அரசாங்கம் முனைந்து வருகிறது.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் காணப்படும் பாகிஸ்தான் மனித உரிமை மீறல்கள் பற்றி புது டெல்லி வெளிப்படுத்தும் எனவும் மற்றும் இந்தியாவில் வசிக்கும் பலோச்சி பிரிவினைவாதிகளுக்கு "கூடுதல் அரசியல் வாய்ப்பு" அளித்தல் குறித்து மோடி அரசாங்கம் ஆகஸ்டில் அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவும் மற்றும் அதனை துண்டாடவும் பலோச்சி பிரிவினைவாதிகளின் கிளர்ச்சியை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது என்ற விதத்திலான அதிகம் மறைப்பில்லாத அச்சுறுத்தல்களை உள்ளடக்கியே இந்த கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்தன.

யூரி தாக்குதல் நடந்து 11 நாட்களுக்கு பின்னர், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக முதல் முறையாக பாகிஸ்தான் உள்ளே, இந்தியா இராணுவ நடவடிக்கை எடுத்து உள்ளது. இனிமேலும் "பாகிஸ்தான் அனுமதி" பெற்ற எந்தவொரு தீவிரவாத தாக்குதலுக்கும் இதேபோன்ற எல்லை தாண்டிய தாக்குதலே பதிலடியாக கொடுக்கப்படும் எனவும் இந்தியா பகிரங்கமாக அறிவித்தது.

அதன் பின்னர், இந்தியா பாகிஸ்தான் இருதரப்பினரும் எக்கணத்திலும் போர் தொடங்கலாம் என்ற நிலையை நெருங்கி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீண்டும் மீண்டும் எல்லை தாண்டிய பீரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கி குண்டு வீச்சுக்களும் அங்கு நிகழ்ந்து வருகின்றன. இரண்டு டஜனுக்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதல்களுக்கு பலியாகினர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களே. மேலும் நூற்றுக்கணக்கில் காயமடைந்தும் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக கோவா பிரிக்ஸ் மாநாட்டிற்கு பின்னர், சீனாவை பாரிய அளவில் எதிர்க்கும் உபாயத்துடன், இந்திய உயரடுக்கின் பாகிஸ்தான்-விரோத பிரச்சாரங்கள் இணைந்துள்ளது. பெரும்பாலும் ஒரு வார்த்தைஜால தன்மையுடன் உலகின் முக்கிய "போக்கிரி நாடுகள்" ஆன பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவிற்கு ஆதரவு அளிப்பதில் இருந்து சீனாவை பின்வாங்கவைக்க இந்திய ஊடகங்களில் பலமுறை அவ்வாறான கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால், தொடர்ந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளினால் மோடி அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு எதிரான தாக்குதலை மீண்டும் நிகழ்த்தியது.

சீன உரிமை கோரப்படும் இந்திய கட்டுப்பாட்டுப் பிரதேசமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கில் நடைபெறும் ஆண்டு விழாவில் இந்தியாவின் அமெரிக்கத் தூதர் ரிச்சார்ட் வேர்மாவை சிறப்பு விருந்தினராக அழைப்பதும் இதில் அடங்கும். தவாங் விழாவில் ஓர் வெளிநாட்டு இராஜாங்க அதிகாரி, அதுவும் "ஒரு அமெரிக்க தூதர் மட்டும் தனியாக சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது" இதுவே முதல்முறை என இந்திய இணைய தளம் வயர் (Wire), செய்தி வெளியிட்டு உள்ளது.

சீனாவில் இருந்து திபெத் பிரிவினைக்கான பிரச்சாரத்தின், பொது முகமான தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு விஜயம் செய்ய அனுமதியளிக்கப்படும் என நியூடெல்லி அறிவித்து உள்ளது. அடுத்த மார்ச்சில் இருந்து பெய்ஜிங் இதனை தெற்கு திபெத் என அழைக்கவுள்ளது.

பாகிஸ்தானின் புதிதாக கட்டப்பட்ட அரபிக் கடல் துறைமுகமான குவாடாருடன் மேற்கு சீனாவை இணைப்பதை முன்னிட்டு ஓர் தொடரான இரயில் பாதை, சாலை மற்றும் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கு காரணமாக உள்ள சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (Chinese Pakistan Economic Corridor-CPEC) இந்தியா அதன் வாய்மொழி பிரச்சாரங்கள் மூலம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. CPEC ஐ இந்தியா எதிர்ப்பது ஏனெனில், இந்தியா தனது பிராந்தியங்கள் என உரிமைகோரும் பாகிஸ்தான் பகுதிகள் ஊடாகவே CPEC செல்கின்றது. இந்த 50 பில்லியன் டாலர் திட்டங்கள் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு தேவையான ஊட்டத்தினை அளிக்கும், மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடனடி சீன அணுகுதலுக்கு வழிவகுக்கும், அதன்மூலம் சீனாவின் மூலோபாய ஆதிக்கத்திற்கு புது டெல்லி உட்படுத்தப்படும் போன்றவையே இந்தியாவின் உண்மையான ஆட்சேபங்களுக்கு காரணமாகும். 

நவம்பர் 11-12ல் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்வார் என கடந்த மாதம் இறுதியில் இந்தியா அறிவித்து இருந்தது. வாஷிங்டனின் பிரதான ஆசிய-பசிபிக் நட்புநாடும், ஆசியாவில் சீனாவின் மிகுந்த சக்திவாய்ந்த மூலோபாய போட்டியாளனுடன் இராணுவ-மூலோபாயங்களை கூடுதலாக வலுப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கம் ஆகும்.

பிஜேபி அரசியல்வாதிகள், விஷ்வ ஹிந்துபரிஷத் (VHP) போன்ற இந்து மேலாதிக்கவாத அமைப்புகள், மற்றும் பிற தீவிர பேரினவாத அமைப்புக்கள் போன்றவை சீன பொருட்களை புறக்கணிக்கும் பிற்போக்கு பிரச்சாரங்களை பெரிய அளவில் நடத்தி வருகிறார்கள். இதன்மூலம் தங்களது மறைமுகமான மற்றும் சில விஷயங்களில் வெளிப்படையான ஆதரவினை காட்டி வருகிறார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாகாணமான அசாமின் பிஜேபி முதல் அமைச்சர் சர்பானந்தா ஸோனோவல், சீன-எதிர்ப்பு புறக்கணிப்புக்கு ஆதரவு அளிக்க தனது மாகாண மக்களை வலியுறுத்தி வருகிறார். உலக வர்த்தக அமைப்பு (WTO) விதிகளுக்கு புறம்பாக அரசாங்கம், சீன புறக்கணிப்புக்கு அழைப்பு விட இயலாது, ஆனால் "தனிமனித அளவில் சீன பொருட்கள் புறக்கணிப்பை மேற்கொள்ள இயலும்" என்பதை, மும்பையில் இந்திய வெளியுறவுக் கொள்கை வல்லுனர்கள் மற்றும் பிற உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது உரையின் போது தெரிவித்து பலத்த கரவொலியினைப் பெற்றார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மத்தியில் பெருகிவரும் பதட்டமான சூழ்நிலைகளை வாஷிங்டன் அதன் பங்கிற்கு சுரண்ட வழி தேடுகிறது. இதன் மூலம் அதன் சூறையாடும் மூலோபாயத் திட்டநிரலுக்கு இந்தியாவை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் முயலுகிறது.

"எச்சரிக்கையை" வலியுறுத்தி நிதானமாக செயல்பட ஆலோசனை கூறும் அதேவேளையில், செப்டம்பர் 28-29ம் தேதி பாகிஸ்தானுக்குள் நிகழ்த்தப்பட்ட இந்திய சிறப்பு படைகளின் எல்லை தாண்டிய "நுட்பமான தாக்குதல்" இந்தியாவின் சட்ட விரோத மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டும் போக்கிற்கு ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிராந்திய உரிமைகளில் மறைமுக ஆதரவை கொண்டிருப்பது போல, தவாங்கிற்கு வேர்மாவின் வருகையும் ஒரு உயர்ந்த திட்டமிட்ட சூழ்ச்சியே. வேர்மாவின் இந்திய வருகையை இட்டு சீனா கோபம் அடைந்ததன் விளைவாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் "சீன இந்திய எல்லைப் பிராந்தியத்தில் கடின உழைப்பிற்கு பின்னர் பெற்ற அமைதியை வேர்மாவின் வருகை சீர்குலைக்கும்" என்று அறிவித்ததைக் கண்டு வாஷிங்டன் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக பெய்ஜிங் பொதுவாக அதன் பதிலடியை அடக்கியே வாசித்தது. ஏனெனில், புது டெல்லி அமெரிக்காவின் நெருங்கிய பிடிக்குள் தள்ளப்பட்டுவிடும் என்ற பயத்தினை முன்னிட்டும், சீனா தனது சொந்த மூலோபாய சுற்றிவளைப்பினை முன்னெடுக்கவும் திட்டமிட்டே அதன் கடுமையான எதிர்ப்பினை காட்டாமல் விட்டது. எனினும், சமீப காலங்களில் சீன ஊடகங்களில் அதன் நடைமுறை மாற்றங்கள் வெளிப்படுகின்றது. உதாரணமாக, சீன அரசு பத்திரிகை குளோபல் டைம்ஸ் பிரசுரித்துள்ள பல கட்டுரைகளில் இந்தியா மீதான சீன எதிர்ப்பு போக்கின் தன்மை இழையோடுகிறது.

அதிகரித்துவரும் அமெரிக்க-சீன பிளவை பிரதானப்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் மற்றும் சீன-இந்தியா மூலோபாய போட்டிகள் சிக்கவைக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய மேலாதிக்கத்தை தக்கவைக்கும் உந்துதலுடன் சீனாவை கட்டுப்படுத்தி அடிபணியவைக்க முனைவது, இன்னும் புதிதாக மூன்று நாடுகள் மீதும் வெடிப்புதன்மை உடைய குற்றச் சாட்டுக்களை உயர்த்திவருவதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லாவிடின், மனித குலத்தை மூன்றாம் உலகப் போரில் மூழ்கடிக்கவும் அச்சுறுத்துகின்றது.