ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian defence minister urges jettisoning of “no first-strike” nuclear pledge

"முதல் தாக்குதல் இல்லை" என்ற அணுஆயுத உறுதிமொழியை கைவிடுமாறு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உந்துதல் அளிக்கிறார்

By Keith Jones 
14 November 2016

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியா ஒருபோதும் "முதலில் அணுஆயுதமேந்தியத் தாக்குதலை நிகழ்த்தாது" என்ற அதன் உறுதிமொழியை கைவிட வேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்புவிடுகின்றார்.

சென்ற வாரம் வியாழக்கிழமை அன்று புது தில்லி இல் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது, 1998ல் இந்தியா அதனை ஒரு அணுஆயுத நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டதில் இருந்து, அதன் கொள்கையான அணுஆயுத விவகாரத்தில் ஒருபோதும் இந்தியாவின் "முதல் பயன்பாடு இருக்காது" என்பதை கவனத்துடன் பின்பற்றி வந்திருக்கும் நிலையிலும், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு இருப்பது "பலத்தினை விட்டுக் கொடுப்பதற்கு" ஒப்பானது என்று விவாதித்தார்.

"திகைக்க வைத்தல்" மற்றும் "முன் கணிக்கமுடியாமை" ஆகியவை இராணுவ மூலோபாயத்தின் அத்தியாவசியக் கூறுகள் என விவாதிப்பதோடு, "நான் ஏன் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்?" என்றும் வாயடிப்புடன் வினவுகிறார்.

இந்தியா அதன் வசமுள்ள அணுஆயுதப் போருக்கான சாத்தியங்களை வெளிப்படையாக வைத்திருப்பதன் மூலம் மட்டுமே தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பாரிக்கர் தெரிவிக்கிறார். அதாவது, ஒருவேளை போர் வெடித்தாலும், எந்த நேரத்திலும் இந்தியா அதன் முதல் அணுஆயுத தாக்குதலிலேயே அவர்களை அழித்துவிட முனையும் என்பது போன்ற சக்திமிக்க அச்சுறுத்தல்களை, அதன் பிரதான மூலோபாய போட்டியாளர்களான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு விடுக்கவேண்டும். "முதல் பயன்பாடு இல்லை" என்பதை "ஒரு எழுதப்பட்ட மூலோபாயமாக" பின்பற்றுவோமானால், "உண்மையிலேயே நீங்கள் உங்களது பலத்தினை விட்டுக்கொடுத்து வருகிறீர்கள்" என்பதுதான் அர்த்தமாகிறது எனவும் தெரிவித்தார். புதிய அர்த்தசாஸ்திரம்: இந்தியாவிற்கான ஒரு பாதுகாப்பு மூலோபாயம்  (The New Arthashatra: A Security Strategy for India) என்ற நூல் வெளியீட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பின்வருமாறு கூறினார்: இந்தியாவிற்கான ஒரு பாதுகாப்பு மூலோபாயமான இது, இந்தியாவின் முதன்மை இராணுவ மூலோபாயவாதிகளில் ஒருவரான, ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் குர்மீத் கன்வால் என்பவரால் இந்த தொகுப்பு திருத்தப்பட்டுள்ளது. "முன் கணிக்கமுடியாமை" என்பது "குறிப்பிட்ட வகையான கொள்கைகளில்(க்கு) கட்டிஅமைக்கப்படவேண்டும்" எனவும் பாரிக்கர் அறிவித்தார்.

பின்னர் அவர், "பயங்கரவாதிகள்" மற்றும் அவர்களது பாகிஸ்தானிய "பாதுகாப்பாளர்களையும்" இலக்கு வைத்து செப்டம்பர் இறுதியில் இந்திய சிறப்பு படையினரால் நடத்தப்பட்ட "நுட்பமான தாக்குதல்கள்" குறித்தும் பாராட்டினார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, இதுவரையிலும் நிகழாத வகையில், புது தில்லி பாகிஸ்தானுக்கு உள்ளே பகிரங்கமாக தனது முதல் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. தந்திரோபாய அணுஆயுதங்கள் உடனான இந்தியாவின் படையெடுப்பினை தடுக்கும் விதமான, பாகிஸ்தானின் எஞ்சிய அச்சுறுத்தல்களுக்கும் முடிவுகட்டி உள்ளனர். இந்த தாக்குதல் "ஆச்சரியத்தின் சாதகமான தன்மையை" நிரூபிப்பதாக அவர் இறுமாப்புடன் பெருமைபேசிக் கொண்டார்.

இந்திய அரசாங்கம் தனது அணுஆயுத நிலைமையினை இன்னும் தீவிரமாக அச்சுறுத்தும் மற்றும் அதிரடி தன்மை கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை, என்பது தொடர்பான அவரது சொந்த "சிந்தனைகள்" மற்றும் "உணர்வு(கள்)" பற்றியே தான் கருத்து தெரிவிப்பதாகக் கூறினார்.

பாரிக்கரின் கருத்துக்களை மிகைப்படுத்தாது கூறினால் அவை பொறுப்பற்ற மற்றும் பெரிதும் ஆத்திரமூட்டும் தன்மை உள்ளதாகவே இருந்தன. அவர் இந்திய இராணுவத்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பது மட்டும் அல்லாது, இந்தியா அதன் பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள ஒரு போர் நெருக்கடிக்கு மத்தியிலும் இருக்கிறது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், கடந்த வாரம் முழுவதும் பெரும் அளவிலான எல்லை தாண்டிய பீரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கி தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இராஜதந்திரிகள் எனும் போர்வையின்கீழ், இரு நாடுகளிலும் வெளியுறவு அரசு பணியாளர்கள் வேவு பார்ப்பதாக ஒருவருக்கொருவர் சுமத்திக் கொண்ட பழிக்கு பழியான குற்றச்சாட்டுகள் என்ற ஒரு ஆக்ரோஷமான நிலைமை தொடர்ந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில், பாரிக்கர் அவரது போர் ஆக்ரோஷத் தன்மைக்குப் பேர்போனவராக இருக்கிறார்.

இந்திய இராணுவத்தின் "நுட்பமான தாக்குதல்கள்", இஸ்லாமாபாத் உடனான புது தில்லியின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கத்தை குறிக்கிறது. இந்தியாவிற்கு "போர் விருப்பம்"  இல்லை எனினும், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எந்தவொரு இராணுவ தளவாட உதவிகள் செய்வதையும் பாகிஸ்தான் நிராகரிக்கும் வரையிலும், இந்தியா தொடர்ந்து இஸ்லாமாபாத் மீதான அதன் இராணுவ அழுத்தங்களை அதிகரித்துவரும், மேலும் அதன் விளைவு ஒரு முழு அளவிலான போருக்கு முன் கூட்டியே வகை செய்யும் அபாயகரமான நிலைமையையும் கொண்டிருக்கும், என்று பாரிக்கர் சபதம் இடுகிறார்.

"ஒரு புத்தக வெளியீட்டின்போது, உயர் அதிகாரிகள் அணுஆயுத கோட்பாடுகள் தொடர்பான அவர்களது தனிப்பட்ட கருத்துக்களுக்காக குரல் எழுப்புவார்களா! என்று உண்மையான காரணத்தோடு வியப்பதோடு, அணுஆயுதங்களை வைத்திருப்பதானது பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுவிடும் என்பதால் அதன்மீது பெரிய அளவிலான கவனத்தையும் மற்றும் கட்டுப்பாட்டினையும் விதிப்பது அவசியமாகிறது" என்று சென்னையை தளமாக கொண்ட ஹிந்து நாளிதழின் ஒரு ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டு, இது "உலகில் எங்கும் காணமுடியாதது," ஆக உள்ளது என்றும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், "அக்கறை இன்றி இம்மாதிரியான வார்த்தைகளை பிரயோகிப்பவர்களை, கொஞ்சமும் சிந்திக்காமல் நடவடிக்கை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்" என்றும் விமர்சித்து, ஹிந்து நாளிதழ் ஆழ்ந்த கவனத்தை வெளிப்படுத்துகிறது.

பாரிக்கர் பேசியதைத் தொடர்ந்து சிறிது நாட்களிலேயே, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பானது அவர் வெளியிட்ட கருத்துக்கள் யாவும் அவரது "தனிப்பட்ட கருத்துக்களே" என மீண்டும் வலியுறுத்தியது. ஆனால், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமும் பாரிக்கரின் கருத்துக்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று கூற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதற்கு நேர்மாறாக, மோடி தனது மூன்று நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியதும், பாரிக்கரை அவரது அரசின் "திறமானவர்களில்" ஒருவர் என்று வழக்கமான முறையில் புகழ்ந்து தள்ளினார். மேலும், "பல வருடங்களுக்குப் பின்னர்", "40 ஆண்டு காலமாக நிலுவையாக இருந்து வந்த ஆயுதப் படைகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட ஒரு பாதுகாப்பு அமைச்சரை நாடு பெற்றுள்ளது, இதற்கு அவர் அயராது உழைத்து உள்ளார்." என்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பிஜேபி பேரணியின் போது தெரிவித்தார்.

இந்திய அணுஆயுத நிலைப்பாட்டில் மறைமுகமாக ஒரு மாற்றத்தை கொண்டுவரும் நோக்கத்துடன், பாரிக்கரின் இந்த "தனிப்பட்ட கருத்துக்கள்" என்பது உண்மையிலேயே மோடியின் ஒப்புதல் பெற்ற கருத்துக்களாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பிஜேபி அதன் 2014 தேசிய தேர்தல் அறிக்கைகளில், "இந்தியா தற்போதைய சூழ்நிலைச் சவால்களை எதிர்கொள்ளும் தகுதியினை அடைய" அதன் அணுஆயுத கொள்கைகளை "திருத்தியமைக்கவும் மற்றும் புதுப்பிக்கவும்" ஏற்றதான ஒரு வரியிலான உறுதிமொழியை உட்படுத்தி இருந்தது. இருந்தபோதிலும், ஊடகப்பிரிவுகள் இதுகுறித்து அவர்களது கவலைகளை எழுப்பிய பின்னர், பிஜேபி "எதிரிகளை அச்சுறுத்தி ஒடுக்குதல்" என்று இந்தியா அறிவித்திருந்த கொள்கையை கைவிடவே திட்டமிட்டது. அதாவது, இந்தியா அணுஆயுத தளவாடங்களை பராமரிப்பதன் ஒரே நோக்கம், இந்தியாவின் மீது பிற சக்திகள் ஏதும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்கு வைக்கும்பட்சத்தில், அவற்றை ஒடுக்கி பின்வாங்க வைப்பதற்காகவே ஆகும். 2014 ஆண்டு கோடை காலத்தில், இந்திய அணுஆயுத கொள்கைகளை திருத்தி அமைக்கும் திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்றே மோடி அரசாங்கம் அறிவித்தது.

பாரிக்கரின் கருத்துக்கள் ஆகக்குறைந்தது, இந்திய ஆளும் வட்டங்களில் நிலவும் போர் வெறிக்கு அழைப்புவிவதுடன் இணைத்துக்கொள்ளும் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையாகவே உள்ளன.

இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இரண்டும் நிச்சயமாக கவனத்தில் வைக்கப்படும்.

வாஷிங்டன், சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ மூலோபாயத் தாக்குதலில் இந்தியாவை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அதன் தீவிரமடைந்த பிரச்சாரத்தின் மூலம் ஒரு பெரும் தெற்கு ஆசிய ஆயுதப் போட்டியின் ஒரு அங்கமாக, கடந்த தசாப்த காலம் முழுவதும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே அவர்களது அணுஆயுத படைக்களத்தை துரிதமாக விரிவாக்கம் செய்துள்ளனர்.

தெற்கு ஆசியாவின் அணுஆயுதமேந்திய சக்திகளின் போட்டிகளுக்கு இடையில் "பயங்கரவாத சமநிலை" ஏற்படுவதற்கு இந்தியா அதன் மென்மைத் தன்மையை அகற்றவேண்டும் என்பது போன்ற பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக, அமெரிக்கா இந்தியாவின் மீது அதன் மூலோபாய உதவிகளை பொழிந்துள்ளது.

வாஷிங்டன் இந்தியாவை ஒரு பெரிய பாதுகாப்பு தளவாட பங்குதாரராக குறிப்பிட்டு, அதிநவீன அமெரிக்க ஆயுத முறைகளை இந்தியா இயக்குவதற்கு அனுமதியளிக்கிறது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) கையெழுத்து இடாத நாடாக இந்தியா இருந்தபோதிலும், புது தில்லி அணுசக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு அனுமதி பெறும் வகையில், உலக அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்புக்குள் இந்தியாவிற்கென ஒரு தனித்துவமான இடத்தையும் பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்கா பெற்றுத்தந்து உள்ளது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் மீதான அக்கறையினால் மட்டுமே, அமெரிக்கா இந்தியா உடனான அதன் 2008 அணுசக்தி ஒப்பந்தத்தினை நியாயப்படுத்துவதாக கூறும் அதேவேளையில், இந்தியா அதன் அணுஆயுத தளவாடங்களை மேம்படுத்த உள்நாட்டு அணுசக்தி திட்டத்திற்கான வளங்களின் மீது கவனம் செலுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்பதை வாஷிங்டன் நன்றாக தெரிந்து வைத்திருந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், ஜோர்ஜ். W. புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு குழுவின் ஒரு உறுப்பினரான ஆஸ்லே டெல்லிஸ், இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய பங்காற்றினார். சீனாவை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் "மதிப்பினை" வாஷிங்டன் அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் அணுஆயுத சக்தி வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அதன் அதிகாரபூர்வ கொள்கைகளை வாஷிங்டன் கைவிட வேண்டும் என்று சமீபத்தில் விவாதித்தார்.

அமெரிக்க ஆதரவுபெற்ற இந்தியாவுடன் எப்போதும் வளர்ந்து வரும் மூலோபாய சமநிலையின்மையினால் பாகிஸ்தான் எச்சரிக்கை அடைகிறது. சீனா உடனான அதன் நீண்ட கால உடன்படிக்கையை வலுப்படுத்துவதன் மூலமாகவும், மற்றும் குறிப்பாக வளர்ச்சி மற்றும் "தந்திரோபாயம்" அல்லது போர்கள அணுஆயுத பயன்பாடு என்ற வகையில் அதன் அணுஆயுத திட்டத்தை விரிவாக்குவதன் மூலமாகவும், பாகிஸ்தான் இதற்கு விடையிறுக்கிறது.

சமீபத்திய வருடங்களில், இந்தியாவோ அல்லது அதன் துருப்புக்களோ பாகிஸ்தான் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதன் தந்திரோபாய முறையில் ஆயுதங்களை பிரயோகிக்கும் என்று இஸ்லாமாபாத் மீண்டும் மீண்டும் எச்சரித்து உள்ளது. அதற்கு பதிலடியாக இந்தியா, "முதல் பயன்பாடு இல்லை" என்ற அதன் கொள்கை ஒருபுறம் இருந்தாலும், பாகிஸ்தான் நகரங்களை நிர்மூலமாக்கும் இலக்கினை முன்னிட்டு, இந்தியா அதன் "மூலோபாய" தாக்குதல் பயன்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக, ஏதேனுமொரு தந்திரோபாய அணுஆயுத தளவாடங்களை பயன்படுத்த தீர்மானிக்கும்.