ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பிரித்தானிய அமைச்சரை ஆதரவுக்கு அழைக்கின்றனர்

By W.A. Sunil 
17 November 2016

நவம்பர் 6 முதல் 9 வரை இலங்கைக்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்ட பொதுநலவாய நாடுகளின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமிடல் நடவடிக்கை தொடர்பான பிரிட்டிஷ் இராஜாங்க அமைச்சர் ஜோசிஸ் அனிலேவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்தனர். இதன் மூலம், “சர்வதேச சமூகத்தின்” ஆதரவு தமக்கு இருக்கிறது என பிரமைகளை விதைத்து, தமிழ் தொழிலாளர், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இன்னொரு வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

கொழும்பு அரசாங்கத்துடன் சேர்ந்து வடக்கு கிழக்கில் தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து ஏகாதிபத்தியத்தின் கைக்கருவியாக செயற்படும் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், பிரிட்டனின் நடவடிக்கைகளை பாராட்டியதோடு, அமைச்சரிடம் உதவியையும் கோரியுள்ளனர்.

இலங்கை சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஐக்கிய இராச்சியம் ஆற்றிய பாத்திரம் குறித்து "நன்றி" தெரிவித்த சுமந்திரன், எதிர்காலத்தில் அத்தகைய தலையீடுகளின் "முக்கியத்துவம்" குறித்து வலியுறுத்தினார். இந்த “நன்றி” தெரிவிப்பு, போர் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கப்படாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மீதான இன்னொரு அவமதிப்பாகும்.

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலான தீர்மானமானது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவது அல்லது அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் பற்றிய கவலையினால் கொண்டுவரப்பட்டதல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பெய்ஜிங் உடன் கொண்டிருந்த உறவுகளை தகர்த்து, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராஜதந்திர மற்றும் இராணுவ திட்டங்களுக்குள் இலங்கையை ஒருங்கிணைப்பதற்கே அமெரிக்கா முன்நின்று அந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இதற்கு ஆதரவை கொடுத்தது.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள், சர்வதேச அளவில் செய்யும் போர் குற்றங்களுக்கும், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் கூட்டாக பொறுப்புச் சொல்ல வேண்டும். அமெரிக்காவானது சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் இராணுவ தாக்குதல்களையும் மனிதப் படுகொலைகளையும் மேற்கொள்வதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நெருங்கிய உதவியாளராக உள்ளது.

அப்பிராந்தியத்தில், கடந்த 15 வருடங்களாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணிகளின் குற்றகரமான போர்களால் 4 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும், 25 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும், 5 ட்ரில்லியன் டாலர்கள் இதுவரை செலவளிக்கப்பட்டும் உள்ளது.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷவை அகற்றி மைத்திரிபால சிறிசேனவை பதிவியில் அமர்த்தும் ஆட்சி மாற்ற நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா நிறைவேற்றியது. சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு அவசியமான வகையில் மாற்றியமைத்ததை அடுத்து, இலங்கைக்கு அதன் போர் குற்றங்கள் மூடிமறைக்கக் கூடியவாறு ஒரு தீர்மானத்தை வாஷிங்டன் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிக் கொடுத்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் போர் மற்றும் புவிசார் அரசியல் நலன்களுடன் இலங்கையை கட்டிப்போடுவதற்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியவாறே, சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட கொழும்பு முதலாளித்துவ வர்க்கத்தின் தட்டினருடன் சேர்ந்து இந்த சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைத்தன.

எதிர்காலத்தில் "நல்லிணக்கத்தை" ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கை முயற்சித்துக் கொண்டிருப்பதால், விசேடமாக “ஐக்கிய இராச்சியமும்" பொதுவில் முழு "சர்வதேச சமூகமும்" அதற்கு ஆதரவு கொடுப்பது அவசியம் என சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின், “புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள்” தொடர்பாக அனிலே உடன் திரைமறைவு பேச்சுக்களை நடத்திய சம்பந்தன், பின்னர் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய பிரச்சினைக்கு "நிரந்தர தீர்வு" ஒன்று அவசியம் என்றும், போர் காலத்தில் அரசாங்கமும் இராணுவமும் கைப்பற்றிக்கொண்ட சில காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கையை இன்னும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது என்று, எதிர்க் கட்சி வரிசையில் இருந்து தான் பாதுகாத்து வரும் அரசாங்கத்திற்கு நற்சான்றிதழும் வழங்கினார்.

ஏகாதிபத்திய சக்திகளுடன் நேரடியாக அணிசேர்ந்துள்ள கொழும்பு அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் சொல்வது போல், கொழும்பு அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது, எந்தவிதத்திலும் தமிழ், சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகளின் ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள், வேலை, கல்வி போன்றவற்றை உத்தரவாதப் படுத்திக்கொள்வதற்கு அல்ல.

மாறாக அரசாங்கத்தின் ஏகாதிபத்திய போர்-ஆதரவு நடவடிக்கைகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக கிளர்ந்தெழ இருக்கும் தீவின் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக, இனவாத அரசின் கரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் ஒரு பொலிஸ் அரச சர்வாதிகார ஆட்சி வடிவத்தை உருவாக்கிக்கொள்வதற்கே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் அனிலேயை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வழமைபோல், போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் "உள்நாட்டு பொறிமுறையில் நீதி கிடைக்கும்" என தான் நம்பவில்லை என்றும், சர்வதேச நீதிபதிகளின் ஈடுபாட்டுடன் ஒரு "சர்வதேச விசாரணை" நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதிலிருந்து தெளிவாகுவது என்னவென்றால், தமிழ் வெகுஜனங்களின் மத்தியில் மதிப்பிழந்துபோன தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் வடமாகாண சபையும் வாஷிங்டனில் டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் ஆட்சியை பொறுப்பெடுக்கவிருக்கும் அதி-வலதுசாரி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பார்கள் என்பதையே.

வரவிருக்கும் நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ட்ரம்ப் தொடர்பாக என்னவகையான ஏமாற்று கருத்துக்களை வெளியிட்டாலும் சரி, அவர், வர்க்கப் போர், தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வன்முறையின் ஓர் அரசுக்கு ஜனாதிபதியாக தலைமை ஏற்றிருப்பார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த முன்னெடுப்பு பற்றியோ அல்லது நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் கட்டவிழ்த்து விட்டுள்ள அபாயங்கள் பற்றியோ தமிழ் தேசியவாதிகள் பொதுமக்களுக்கு ஒருவார்த்தை கூட கூறியது கிடையாது. மாறாக இத்தனை அழிவுகளுக்கும் பொறுப்பான “சர்வதேச சமூக”த்தின் மீதும், அதற்கு அவசியமான சிறிசேன அரசாங்கத்தின் மீதும், நம்பிக்கை வைக்குமாறு தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்களை தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகிறார்கள்.

ட்ரம்பின் ஆதரவுடன் “சர்வதேச விசாரணை” ஒன்றின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூட்டமைப்பு தலைவர்கள் வெட்கமின்றி சொல்வதற்கு இன்னும் அதிக மாதங்கள் எடுக்கப்போவதில்லை.

வட-கிழக்கு பிரதேசங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கொடுப்பதன் மூலம், அரசாங்கத்திற்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையில் சமரசத்தை பலப்படுத்தி, கொழும்பு ஆட்சிக்கு ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, மேற்குலக நாடுகளும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன.

போர் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்திருந்தாலும், எந்தவொரு அடிப்படை பிரச்சினையும் தீர்க்கப்படாததோடு மட்டுமன்றி, ஆளும் வர்க்கத்தின் அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் இனவாதமும் கிளறிவிடுவது தொடர்ந்து இடம்பெறுவதையே காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை அதன் அண்மைய உதாரணமாகும்.

எந்தவொரு சமூகப் பிரச்சினையும் தீர்க்கப்படாத நிலையில், கொழும்பு அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல, அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் தமிழ் முதலாளித்துவ கட்சிகள் மீதும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபமும் தீவிர சமூக அமைதியின்மையும் வளர்ந்து வருகிறது. அந்தக் கட்சிகளில் இருந்து அவர்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகவும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தேசியவாத பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராகவும், சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஏழைகள் மற்றும் இளைஞர்களின் ஒத்துழைப்பை அதைச்சூழ அணிதிரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே போராடி வருகின்றது.

நவம்பர் 20 அன்று யாழ்ப்பாண நூலக உணவக மண்டபத்தில் சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள, "ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பிலான கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.