ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

King Donald meets his media courtiers

மன்னர் டொனால்ட் தனது ஊடக துதிபாடிகளை சந்திக்கிறார்

Patrick Martin
23 November 2016

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இரண்டு டஜன் ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் ஒளிபரப்புத் துறை பிரபலங்களுக்கும் இடையில் திங்களன்று நிகழ்ந்த சந்திப்பானது முன்கண்டிராத, அசாதாரண மற்றும் வெறுப்பூட்டும் அடைமொழிகளுக்கு முழுத் தகுதியானதாகும்.

தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் —இத்தேர்தலில் அவர் மக்கள் வாக்களிப்பில் (popular vote) தோல்வி கண்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்வு சபையிலான (Electoral College) ஒரு பெரும்பான்மை மூலமாக வென்றிருந்தார்— ட்ரம்ப் கூடியிருந்த ஊடகப் பிரதிநிதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர்கள் இழைத்ததாகச் சொல்லப்படுகின்ற தவறுகளுக்காய் கீழ்த்தரமாய் பேசினார், அறையில் இருந்த சிலர் உள்ளிட குறிப்பிட்ட செய்தியாளர்களை கண்டனமும் செய்தார்.

அதில் பங்கேற்ற பெயர் கூற விரும்பாத சிலரை மேற்கோள் காட்டி நியூயோர்க் போஸ்ட்டில் வெளியான ஒரு செய்தியின் படி, “அது மரணதண்டனைக் கைதிகளை சுட்டு வீழ்த்தும் மோசமான ஒரு படையணி போல் இருந்தது... ட்ரம்ப், CNN இன் தலைமை அதிகாரி ஜெஃப் ஸக்கர் இல் இருந்து தொடங்கினார், அவர் கூறினார், “உங்கள் ஒளிபரப்பை நான் வெறுக்கிறேன், CNN இல் இருக்கும் ஒவ்வொருவருமே பொய்யர்கள், நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்றார். ஊடகங்கள் அனைத்துமே “பொய்யர்கள்” மற்றும் ”நேர்மையற்றவர்கள்” என்று கண்டனம் செய்யுமளவுக்கு அவர் சென்றார்.

“இந்த சந்திப்பு ஒரு முழுமையான வருத்தமளிக்கும் நிகழ்வாக இருந்தது” என்று ஒரு ஆதாரம் Post இடம் கூறியது. “தொலைக்காட்சியின் பிரதிநிதிகளும் தொகுப்பாளர்களும் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து தாங்கள் பெறவிருக்கும் அணுகல் குறித்து விவாதிப்பதற்கெனக் கருதியே சென்றிருந்தனர், ஆனால் அவர்களுக்கு ட்ரம்ப் பாணியில் வசவு மட்டுமே கிடைத்தது.”

ஐந்து ஒளிபரப்பு ஊடகங்களுமே குறைந்தது ஒரு தலைமை அதிகாரியையேனும் அனுப்பியிருந்தது, சில மூன்று அல்லது நான்கு பேரை அனுப்பியிருந்தது. எந்த ஊடகப் பிரதிநிதிக்கும் அல்லது செய்தியாளருக்கும் புறக்கணிப்பு செய்வதற்கோ, ட்ரம்ப்பை ஒரு வம்பிழுப்பவராக கண்டனம் செய்வதற்கோ, அல்லது ஒரு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு முதலாம் அரசியலமைப்பு திருத்தமானது தாக்குதலுக்குள்ளாக இருக்கிறது என்று எச்சரிப்பதற்கோ துணிச்சல் இருக்கவில்லை.”

சந்திப்பில் பங்குபெற்ற ஐந்து ஊடகங்களுமே —ABC, CBS, CNN, Fox மற்றும் NBC— ட்ரம்ப் இன் இடைமருவல் அணி அமைத்திருந்த கள விதிகளைக் கடைப்பிடித்து, மொத்த நிகழ்முறையையும் “பதிவில் இல்லாததாக” பராமரித்தன.

ஊடகத் தலைமைகள் இத்தகைய ஒரு “பதிவில் வராத” சந்திப்புக்கு ஒப்புக் கொண்டதே வெறுப்புக்குரியதாகும். அமெரிக்காவின் ஜனாதிபதி, ஊடகங்களின் “தலைமைத் தளபதி” அல்லவே. ஆனால் ட்ரம்ப், பெரும் ஊதியங்கள் பெறும் தொகுப்பாளர்களையும், அவர்களது இன்னும் பெரும் ஊதியங்கள் பெறும் பெருநிறுவன மேலதிகரிகளையும் அழைத்தவுடன், அவர்கள் ட்ரம்ப் தரப்பில் இருந்து வந்த ஏச்சுப்பேச்சுகளுக்கு அடிமைத்தனமாக தங்களை கீழ்ப்படியச் செய்து கொண்டனர்.

இந்த அமர்வில் ட்ரம்ப் உடன் ஊழியர் தலைவர் Reince Priebus, வெள்ளை மாளிகையின் தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானன், பிரச்சார மேலாளர் கெலியான் கான்வே, பிரச்சார செய்தித்தொடர்பாளர் ஜேசன் மில்லர், குடியரசுக் கட்சியின் தேசியக் குழு தகவல்பரிவர்த்தனை இயக்குநர் சீன் ஸ்பைசர், மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இருந்துள்ளனர்.

ஆகஸ்டில் ட்ரம்பின் பிரச்சாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஒப்பந்தமாகும் வரையிலும் பானன் நடத்தி வந்த அதிவலது இணைய தளமான Breitbart News ஐ ஆதரிக்கும் “வெள்ளை தேசியவாத” மற்றும் “மாற்றுவலது” கூறுகளின் ஒரு கூட்டாளியாக பானன் இருக்கிறார். ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை ஊழியர்களின் இணைத் தலைவராக, Priebus உடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்பவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் பிரதான நீரோட்டத்திற்குள்ளாக பாசிச வலதுகளின் நுழைவை சமிக்கை செய்கிறது.

Conway கூறுவதன் படி, திங்களன்றான ஊடக அமர்விற்குப் பின்னர், ஊடக பிரதிநிதிகளும் தொகுப்பாளர்களும் —இவர்கள் பிரச்சாரத்தின் சமயத்தில் திரைமறைவில் ஒரு பெரும் பாத்திரம் வகித்தவர்கள்— பானனுடன் பேசுவதற்கு வரிசை வகுத்திருந்தனர். ”பலரும் அவரைச் சந்திக்கவும் அவருடன் பேசவும், அவரின் பார்வையில் படவும், அவருடன் வணிக அடையாள அட்டைகளை பரிமாறிக் கொள்ளவும் விரும்பினர். இது வெறும் ஒரு தகவல் தான்” என்று MSNBC இன் “மார்னிங் ஜோ” நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப்புக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான திரைமறைவு சந்திப்பானது, ஊடகங்கள் ”நான்காவது தூணாக” அமைந்து அரசாங்கத்தின் நிர்வாக, சட்ட மற்றும் நீதிப் பிரிவுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பாக சொல்லப்படுவதான, இப்போது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாய் பழையதாகி விட்ட, நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியத்தின் ஒரு அப்பட்டமான மீறலாக இருக்கிறது.

ஒரு தலைமுறைக்கும் மேலான காலமாய், பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் தனது இந்தப் பாத்திரத்தில் இருந்து பெரும்பாலும் தவறி வந்திருக்கின்றன என்பதே உண்மை. வியட்நாம் போரின் விமர்சனரீதியான செய்திகளின் உச்சமாக பெண்டகன் ஆவணங்களின் வெளியீடு, வாட்டர்கேட் ஊழலில் வெள்ளை மாளிகை குற்றவியல்தன்மையை அம்பலப்படுத்தியதன் உச்சமாக ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமை எல்லாம் கடந்து 40 வருடங்களுக்கும் மேலாகி விட்டன.

இன்று, இணங்கிச் செல்வதும் மெத்தனமும் தான் பெருநிறுவன ஊடகங்கள் பின்பற்றும் பாணியாக இருக்கிறது, வெள்ளை மாளிகையாலும், பெண்டகனாலும், வெளியுறவுத் துறையாலும் மற்றும் சிஐஏவினாலும் கரண்டியால் ஊட்டப்படுவது தான் “செய்திகளாக” கடந்து சென்று கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட சில செய்தியாளர்கள் இப்போதும் கூட ஆபத்துக்கஞ்சாமல் வேலை செய்கிறார்கள் அதிகாரத்தை சவால் செய்கிறார்கள் —இது அபூர்வமாய் நிகழ்கிறது— என்றாலும் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானதாகவும் அவற்றின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்ற முக்கிய செய்தி நிறுவனங்கள் அரசாங்க மற்றும் பெருநிறுவன பிரச்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் விதைப்பதிலும் ஈடுபடுகின்றன.

அமெரிக்க அரசாங்கத்தின் குற்றவியல்தன்மையை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியமைக்கு பதிலிறுப்பாக நியூ யோர்க் டைம்ஸ் முன்னாள் நிர்வாக ஆசிரியர் பில் கெல்லர் அளித்த ஒரு படுபயங்கரமான கருத்தில், இந்த வட்டாரங்களின் சிந்தனை, இரத்தினச்சுருக்கமாய் வெளிப்படுகிறது, அக்கருத்தில் அவர் ”பயங்கரவாதத்தின் மீதான போரை” ஆதரித்து பின்வருமாறு அறிவித்தார்: “வெளிப்படைத்தன்மை என்பது முற்றுமுதலான நல்ல விடயம் அல்ல என்பதை நாங்கள் முழுமனதுடன் ஏற்கிறோம். வெளியிடாமல் இருப்பதற்கான சுதந்திரமும் ஊடகங்களின் சுதந்திரத்தில் உண்டு, அந்த சுதந்திரத்தையே நாங்கள் அவ்வப்போது சீராக பயன்படுத்துகிறோம்.”

தொலைக்காட்சி பிரதிநிதிகளுடனான ட்ரம்ப்பின் அமர்வை தொடர்ந்து செவ்வாய்கிழமையன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியீட்டாளர் Arthur Ochs Sulzberger உடன் ஒரு மூடிய கதவுகளுக்குப் பின்னாலான சந்திப்பும், அதன்பின்னர் டைம்ஸ் செய்தியாளர்கள் மற்றும் பத்தியாளர்கள் உடனான ஒரு பதிவுசெய்யப்பட்ட நீண்ட விவாதமும் நிகழ்ந்தன, ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பவர் ஏராளமான பிரச்சினைகளில் தனது நிலைகளை “நாகரிகப்படுத்தி”க் கொண்டிருக்கிறார் என்பதாகக் கூறும் நிறைய செய்திகளுக்கு இது இட்டுச் சென்றது.

இந்தச் செய்திகள் முழு அபத்தமானவை. காலநிலை மாற்றம் மனிதனின் நடவடிக்கையால் விளைவது என்றும், ஹிலாரி கிளிண்டனை விசாரணை செய்ய ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பது மோசமான யோசனை என்றும், வெள்ளை நிறவாத மற்றும் மாற்று-வலது குழுக்களிடம் இருந்தான ஆதரவு தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும் ட்ரம்ப் டைம்ஸிடம் கூறினார். இவையெல்லாம் உண்மையென்றே எடுத்துக் கொண்டாலும் —அப்படிச் செய்வதற்கான எந்த காரணமும் நிச்சயமாக இல்லை— ட்ரம்பை ஒரு மாறிவிட்ட மனிதராகக் கூறுவதற்கு இது ஒரு அபத்தமான கீழான நிர்ணயக்கோடு ஆகும்.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் வலது பக்கத்தில் தொடர்வதற்கு எந்த அளவுக்கு தொலைக்காட்சிகள் கவலை கொண்டிருந்தன என்றால், NBC, ட்ரம்ப்பின் கொள்கை மாற்றங்களாகக் கூறப்படுவது குறித்து செவ்வாயன்று வழங்கிய செய்தித் தொகுப்பில், இந்தக் கருத்துக்கள் நியூ யோர்க் டைம்ஸ் உடனான சந்திப்பில் எங்கே கூறப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை, முந்தைய நாளில் தனது சந்திப்பு குறித்து செய்தியளிப்பதை தவிர்ப்பதற்காக.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் பெரும்பகுதிக்கு இலவச ஊடக வெளிச்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தார் என்ற அதேவேளையில், ஊடகங்களை அவர் துச்சமாக மதிக்கிறார். ஜூலை முதலாக அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியதில்லை, நேர்காணல்களில் ஆதரவான ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர்களால் முகஸ்துதி செய்யப்படுவதையே விரும்பியிருந்தார். ஜனாதிபதியாக தேர்வானதற்குப் பின்னர் புதிய நிர்வாகத்திற்கு தான் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பையும் கூட இன்னும் நடத்தவில்லை, இன்னுமொரு ஜனநாயக மரபு கழுத்து நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஊடக ஸ்தாபகங்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போதான பெரும்பகுதியான செய்திகளில் அவரை அரசியல்ரீதியாகத் தீண்டத்தகாதவர் ஆகவும் அறநெறிரீதியாய் சைத்தானாகவும் சித்தரித்து சில நாட்கள் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் கடைப்பார்வையை பெறுவதற்காக அவை வெட்கம்கெட்டு முண்டியடிப்பதானது, பொதுவாக அமெரிக்க ஜனநாயகத்தின் நாட்பட்ட சிதைவை மட்டுமல்லாமல், இன்னும் குறிப்பாக, அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக இவர் உருவடிமாய் இருக்கும் அதி-தேசியவாத “அமெரிக்கா முதலில்” நோக்குநிலைக்குப் பின்னால் கைகோர்ப்பதை, வெளிப்படுத்துகிறது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தலைமையில் ஜனநாயகக் கட்சி ட்ரம்பின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்குவதிலும், செனட் ஜனநாயகக் கட்சி தலைவராகும் சார்ல்ஸ் சூமர் தொடங்கி ”இடதுகளாக” சொல்லப்படும் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் வரையிலுமான அதன் நாடாளுமன்றத் தலைமை மொத்தமும் ட்ரம்ப்பின் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் போரின் வேலைத்திட்டத்தின் பின்னால் அணிவகுப்பதிலும் இது தீங்கில் கொஞ்சமும் சளைக்காத ஒரு வெளிப்பாட்டைக் கண்டிருக்கிறது.

தன்னைப் போன்ற பில்லியனர்களுக்கு சொந்தமாக இருக்கக் கூடியதும், அத்துடன் முதலாளித்துவ அமைப்புமுறையை கேள்விகேட்பதை நினைக்கவும் போகாத மல்டி-மில்லியனர் பிரபலங்களை ஊழியர்களாகக் கொண்டு இயங்குகிறதுமான பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களையே ட்ரம்ப் இப்படி நடத்துகிறார் என்றால், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உண்மையான விமர்சனத்தையும் எதிர்ப்பையும் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும்போது அங்கிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், நியமனங்களும் ஜனநாயக உரிமைகளுக்கான ஆவேசமான குரோதத்தை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த பதிலிறுப்பை தயார் செய்தாக வேண்டும். சோசலிசத் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான ஊடகக் குரலான உலக சோசலிச வலைத் தளத்தைப் பாதுகாப்பதும் அதன் செல்வாக்கை அதிகரிப்பதும் இதில் அடங்கும்.