ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Merkel to run for fourth term as German chancellor

ஜேர்மன் சான்சிலர் பதவிக்கு மேர்க்கெல் நான்காவது முறையாக போட்டியிட உள்ளார்

By Ulrich Rippert
23 November 2016

கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவர் அங்கேலா மேர்க்கெல் நான்காவது முறையாக ஜேர்மன் சான்சிலர் பதவிக்கு போட்டியிட உள்ளார். டிசம்பர் மாத தொடக்கத்தில் நடக்கவுள்ள கட்சி மாநாட்டில் CDU தலைமை நிர்வாகி பதவிக்கு அவர் மீண்டுமொருமுறை நிற்க போவதாக ஞாயிறன்று அறிவித்தார். அவரைப் பொறுத்த வரையில், கட்சி தலைவர் பதவி என்பது தானாகவே அவரை கட்சியின் சான்சிலர் பதவி வேட்பாளராக்கும் என்றும், அதன் காரணமாக அவர் அடுத்த ஆண்டு பெடரல் தேர்தலில் நிற்க முடியும் என்றும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மேர்க்கெல் அவரது மூன்றாவது சான்சிலர் பதவிக் காலத்தை கட்சி மற்றும் அரசாங்க தலைமை மாற்றத்திற்குத் தயாரிப்பு செய்ய பயன்படுத்த விரும்புவதாக நான்காண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்ததை ஊடக செய்திகள் குறிப்பிட்டன. ஆனால் ஐரோப்பாவில் அதிகரித்துவரும் நெருக்கடியானது, உபாய கையாளல்களுக்கான மிகச் சிறிய இடத்தையே அவருக்கு விட்டு வைத்துள்ளது. மேர்க்கெல் ஞாயிறன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், அவர் "நீண்ட காலமாக பலமாக யோசித்து வந்ததாகவும்", அவரது முடிவு அத்துணை எளிதானதல்ல என்றும் தெரிவித்தார்.

உண்மையில் நான்காவது முறையாக போட்டியிடுவதென்று அவர் முடிவெடுத்துள்ளமை, பிரிட்டன் வெளியேறுவதற்கு கிடைத்த வாக்குகளுடனும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகி இருப்பதுடனும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. ட்ரம்ப் இன் “முதலிடத்தில் அமெரிக்கா" எனும் தேசியவாத கொள்கை ஐரோப்பிய அரசியலின் உள்-மையத்தையே அசைத்துள்ளது.

ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றியானது ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஆளும் உயரடுக்கின் மீது ஏற்பட்ட நம்பிக்கையிழப்பின் வாக்குகளாக ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் ஜேர்மனியிலும் அதேபோன்றவொரு அபிவிருத்தி நடந்து வருவதாக பல கட்டுரைகள் குறிப்பிட்டுள்ளன. உத்தியோகபூர்வ கொள்கைக்கு இருக்கும் எதிர்ப்பு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து வருகிறது. பிரிட்டன் வெளியேறுவதென்பது ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடியினது ஒரு தீவிரப்பாட்டின் தொடக்கமாக மட்டுமே இருந்தது. வரவிருக்கும் காலத்தில், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் பிரான்சில் தீவிர வலது கட்சிகளது வெற்றிகளும் பட்டியலில் உள்ளன.

அமெரிக்காவில் ஆளும் உயரடுக்கு ட்ரம்ப் பின்னால் அணிதிரண்டு நிற்கின்ற அதேவேளையில், ஜேர்மனியில் அதேபோன்ற அபிவிருத்தி மேர்க்கெல் பின்னால் நடந்து வருகிறது. சகல ஸ்தாபக கட்சிகளும் மக்களுக்கு எதிராக ஒரு விதமான அரசியல் படையரணை உருவாக்க ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன.

மேர்க்கெலின் ஒரு புதிய சான்சிலர் பதவிக்காலம் என்பது CDU மற்றும் பவேரிய அடிப்படையிலான கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) ஆகிய "யூனியன்" கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தற்போதைய "பிரமாண்ட கூட்டணியை" தொடர்வதற்கான ஒரு முறையீடாகும். மேலும், அணிகளாக உருவாகி மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து இயங்குவதற்கு இது சகல கட்சிகளுக்குமான ஓர் அழைப்பாகும். சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரை SPD மற்றும் CDU/CSU இன் கூட்டு ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவதென்ற சமீபத்திய முடிவும் இதே நோக்கம் கொண்டுள்ளது.

பல ஊடக கருத்துரையாளர்களும் மேர்க்கெலின் மறுதேர்வை ஒரு "மந்தநிலை கொள்கை" என்றும், "வழமையான வியாபாரம்" என்றும் வர்ணித்துள்ளனர். மேர்க்கலின் மந்திரிசபை 4.0 வெறுமனே ஏற்கனவே இருக்கும் ஒரு மந்திரிசபையின் தொடர்ச்சியாக இருக்காது. வேட்பாளராக புதுப்பித்துக் கொள்வதென்ற மேர்க்கெலின் முடிவானது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கை மாற்றங்களை ஆற்றலுடனும் ஆக்ரோஷத்துடனும் கையாளும் நோக்கில், நீண்டகாலத்திற்கு முன்னர் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஓர் அரசியல் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளது.

பிரமாண்ட கூட்டணியைத் தொடர்வதைக் குறித்து எச்சரிக்கும் விமர்சகர்களை பொறுத்த வரையில், அரசியல் ஏமாற்றம் மற்றும் கூடுதல்-நாடாளுமன்ற மோதல்களை மீளக் கொண்டு வரும், “அதை கொண்டு வாருங்கள்!” என்பதே மேர்க்கெல் ஆதரவாளர்களது மறுமொழியாக உள்ளது. புதிய வேட்பாளராகும் அவரது முடிவு, ஏற்கனவே பிரமாண்ட கூட்டணியின் வேலைத்திட்ட அடித்தளத்திற்கு நிலவுகின்ற சமூக எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக, அரசு அதிகாரங்களை விரிவாக்குவதற்கும் மற்றும் இராணுவவாத கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் தயாரிப்புகளைச் செய்வதுடன் பிணைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வேட்பாளராக மேர்க்கெல் நிற்பது ஓர் அச்சுறுத்தலாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதையே தற்போதைய பிரமாண்ட கூட்டணியின் முன்வரலாறைக் குறித்த ஒரு மீளாய்வு எடுத்துக்காட்டுகிறது.

2013 பெடரல் தேர்தலை அடுத்து, வெளியுறவுக் கொள்கையில் இராணுவவாதம் மற்றும் போருக்கு ஆதரவான அடிப்படை மாற்றங்கள் மீது ஆளும் கட்சிகளுக்குள் உடன்பாடு எட்டப்பட்டது தெளிவாகும் வரையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு அசாதாரணமாக நீடித்தன. வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர், பாதுகாப்பு மந்திரி வொன் டெர் லெயென், ஜனாதிபதி கௌவ்க் மற்றும் ஏனையவர்களும், ஜேர்மனி “உலக அரசியல் குறித்து பக்கவாட்டிலிருந்து" கருத்து தெரிவிப்பதை விட "மிகவும் பலமானதும், மிகவும் முக்கியத்துவம் மிக்கதுமாகும்" என்று அறிவித்தார்கள்.

இரண்டாம் உலக போர் முடிவு மற்றும் நாஜி சர்வாதிகார குற்றங்களுக்கு பின்னர் முதல் முறையாக, முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள் இராணுவ கட்டுப்பாட்டு காலக்கட்டம் முடிந்துவிட்டதாகவும், எதிர்காலத்தில், ஜேர்மனி நெருக்கடி பிரதேசங்களிலும் உலக அரசியலின் முக்கிய இடங்களிலும் —வெளிப்படையாகவே இராணுவ வழிவகைகளைக் கொண்டு— நிறைய சுதந்திரமாக தலையீடு செய்யுமென்றும் அறிவித்தார்கள்.

அதை தொடர்ந்து அங்கே தீவிர இராணுவ மறுஆயுதமயமாக்கும் நடைமுறை நடந்தது. அமெரிக்கா உடனான நெருக்கமான கூட்டணியில், ஜேர்மன் அரசாங்கம் பாசிசவாத சக்திகளைப் பயன்படுத்தி கியேவ் இல் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்து, மேற்கு-சார்பிலான ஆட்சி ஒன்றை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது, அது உக்ரேனை உள்நாட்டு போருக்குள் இழுத்து, அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் தூண்டியது.

அடுத்து நேட்டோவிற்கு ஆதரவாக சிரியாவில் ஜேர்மன் இராணுவ (Bundeswehr) நிலைநிறுத்தம் வந்தது. அதே நேரத்தில் ஆபிரிக்காவிலும் ஜேர்மன் இராணுவத்தின் தலையீடு இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி வொன் டெர் லெயென், மொத்தம் 130 பில்லியன் யூரோ கூடுதல் இராணுவ செலவினங்களை அறிவித்தார், மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஜேர்மன் இராணுவ நிலைநிறுத்தல்களை எதிர்நோக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு வெள்ளையறிக்கையை வெளியிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மேர்க்கெல் மற்றும் அவரது நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள அவர்களது கடுமையான பொருளாதார கொள்கையைக் கொண்டு சமூக நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் விளைவு ஐரோப்பாவில் 23 மில்லியன் பேர் வேலையின்றி உள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் குறைவூதிய துறைகளிலும், ஒழுங்குமுறையற்ற வேலைகளிலும் (informal jobs) வேலை செய்கின்றனர்.

போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் என பல நாடுகளில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பற்றோர், இளைஞர்கள், குறைவூதிய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் வறுமை அதிகரித்து வருகிறது. இந்த சமூக எதிர்புரட்சி, கிரீஸைப் பொறுத்த வரையில், ஒட்டுமொத்த நாட்டையும் சீரழித்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் போய் முடிந்துள்ளது.

ஜேர்மனியில், வறுமை வேகமாக அதிகரித்து வருகிறது. 12 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உத்தியோகபூர்வமாக ஏழைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எட்டு மில்லியன் பேர் படுமோசமான வேலை வடிவங்களில் வேலை செய்கின்றனர். தங்களது ஒட்டுமொத்த வாழ்நாளையும் வேலையிலேயே கழித்துள்ள மொத்த ஓய்வூதியதாரர்களில் 50 சதவீதத்தினர், 2030 இல், குறைந்தபட்ச ஹார்ட்ஸ்-IV சமூக கூலி வரம்புக்கு சமமான ஓய்வூதியத்தைப் பெற இருக்கிறார்கள். வணிக அமைப்புகள் ஏற்கனவே ஓய்வூதிய வயதை 73 ஆக உயர்த்த அழைப்பிட்டு வருகின்றன.

அதேநேரத்தில், ஒரு சிறிய சிறுபான்மையினர் ஆடம்பரத்தின் மடியில் வாழ்கின்றனர். பெரும்பான்மையினரை விலையாக கொடுத்து இந்த சிறுபான்மையினர் தன்னைத்தானே பாரியளவில் செல்வசெழிப்பாக்கிக் கொள்ளக்கூடிய நிலைமைகளை அரசாங்கம் உருவாக்கி உள்ளது. முதலீட்டு சொத்துக்கள் மற்றும் சொத்துக்களில் இருந்து வரும் வருவாய் கடந்த 15 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இத்தகைய கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க, அவசரகால நெருக்கடி நிலை மற்றும் சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகள் முன்நகர்த்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்களின் அடிப்படையில், ஒரு மிகப்பெரியளவிலான கண்காணிப்பு எந்திரம் உருவாக்கப்பட்டு வருகிறது. பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகள் நெருக்கமாக ஒருங்கிணைந்து வேலை செய்வதும், ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) நாட்டுக்குள்ளேயே செயல்பாட்டில் இருப்பதும் இரண்டுமே ஜேர்மனியின் அடிப்படை சட்டத்தை மீறுகின்றன என்றபோதினும், அவை நடத்தப்பட்டு வருகின்றன.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், அகதிகளுக்கு எதிரான வக்கிரமான பிரச்சாரத்தில் மிகவும் வெளிப்படையாக உள்ளது. தஞ்சம் கோருவதற்கான உரிமையே இல்லை என்றளவிற்கு அது முடக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க போர்களில் இருந்து தப்பி வரும் நிராதரவான மக்கள் அவமதிக்கப்பட்டு, சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் நூற்றுக் கணக்கானவர்கள் மத்தியத்தரைக் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.

அரசாங்கமும் ஊடகங்களும், யூதர்களுக்கு எதிரான நாஜி இனப்படுகொலைகளை நினைவூட்டும் விதத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு வெறுப்பு பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன. இதுவும் அதே நோக்கத்திற்குத் தான் சேவையாற்றுகிறது, அதாவது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கு, மேலும் தீவிர வலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுக்கு (AfD) சாதகமாகிவிடுகிறது.

அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அதுபோன்றவொரு கொள்கை முன்னுக்கு வருவதைத் தெளிவுபடுத்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந்த அபிவிருத்திக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்றாலும், அரசாங்கம் அதன் போக்கை பின்தொடர தீர்மானகரமாக உள்ளது. நான்காவது முறையாக பதவிக்குப் போட்டியிடும் அவரது அறிவிக்கப்பட்ட விருப்பத்துடன், சான்சிலர் மேர்க்கெல் மிகப்பெரிய வர்க்க போர்களுக்கு முன்னரே அவற்றை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்.