ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US election campaign reveals mass alienation from two-party system

அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரமானது இருகட்சி அமைப்புமுறையில் இருந்து பாரிய மக்கள் அந்நியப்பட்டிருப்பதை வெளிக்கொணர்கிறது

By Patrick Martin
5 November 2016

வியாழனன்று வெளியான நியூயோர்க் டைம்ஸ்/CBS கருத்துக்கணிப்பு ஒன்று 2016 தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்க மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பையும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருக்கும் இருபெரும் கட்சிகளில் இருந்து அவர்கள் அந்நியப்பட்டிருப்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. கருத்துக் கூறியவர்களில், 82 சதவீத-13 சதவீத வித்தியாசத்தில், அதாவது ஆறுக்கு ஒன்று என்பதை விடவும் அதிகமாய், ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரது பிரச்சாரங்களுமே தங்களுக்கு வெறுப்பையே அளித்ததாகக் கூறினர்.

ைம்ஸ் வாசகங்கள் இவ்வாறு கூறின: “பத்துக்கு எட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தப் பிரச்சாரம் உற்சாகத்தை விட அதிகமாய் வெறுப்பையே தந்திருப்பதாக கூறியிருக்கும் நிலையில், அதிகரிக்கும் வெறுப்பானது இறுதியில் வெற்றி காணவிருப்பவரை அச்சுறுத்துகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான திருமதி. கிளிண்டனும், அத்துடன் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான திருவாளர் டிரம்பும் பெரும்பான்மையான வாக்காளர்களால் நேர்மையற்றவர்களாக பாதகமான விதத்தில் பார்க்கப்படுகின்றனர்.”

இரண்டு பிரச்சாரங்களுமே அமெரிக்க மக்களின் புத்திக்கூர்மையை அவமதிப்பவையாக இருக்கின்றன. ட்ரம்ப் பண்பாடற்ற கோபத்திற்கு விண்ணப்பம் செய்கிறார், தனது போட்டியாளரை ஒரு கிரிமினல் என்றும் அவர் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்றும் கண்டனம் செய்கிறார். கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்பை ஒரு பாலியல் வேட்டையாடும் மனிதராக சித்தரித்தும், ரஷ்யாவின் ஒரு கருவியாக அவதூறு செய்தும் மாறி மாறி வசைபாடுகின்றனர். இரு தரப்புமே அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மையின், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான வேலைத்திட்டத்தையும் வழங்கவில்லை.

அமெரிக்க அரசியல் அமைப்புமுறை - இதில் இரண்டு பெருநிறுவனக் கட்டுப்பாட்டுக் கட்சிகளுமே, பெரும் செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாத்து, ஒரு அரசியல் ஏகபோகத்தை அனுபவிக்கின்றதாய் இருக்கின்றது - ஆழமாய் செயலற்றுப் போயிருப்பதன் இன்னுமொரு கூடுதல் அறிகுறியாக இந்தத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இரண்டு கட்சி அமைப்புமுறையானது உழைக்கும் மக்களை அந்நியப்படுத்துகிறது என்று சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் நீண்ட காலமாய் வாதிட்டு வந்திருக்கக் கூடிய ஒன்றின் புள்ளிவிவரரீதியான நிரூபணமாகவே டைம்ஸ்/CBS கருத்துக்கணிப்பு அமைந்திருக்கிறது.

இரண்டு தரப்புப் பிரச்சாரங்களும் தனிமனித சேறடிப்புகளையும், ஊழல்குற்றச்சாட்டுகளையும் நோக்கி திரும்பியமையானது வாக்காளர் முகம்கொடுக்கின்ற அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்த - எல்லாவற்றுக்கும் மேல், மோசமடைந்து செல்லும் சமூக நெருக்கடி மற்றும் பெருகிச் செல்கின்ற மூன்றாம் உலகப் போரின் ஒரு அபாயம் - எந்த விவாதத்தையும் தவிர்ப்பதற்கான ஒரு வழிவகையாகவே இருக்கிறது.

இரண்டு பிரச்சாரங்களும் உதாசீனம் செய்த அபிவிருத்திகளுக்கு இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுவதென்றால்:

10 முதல் 14 வயதுக்குள்ளான சிறார் மரணங்களுக்கான காரணத்தில், வாகன விபத்தை விட தற்கொலை முந்தியிருப்பதாக வெள்ளியன்று செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 2016 இல் அமெரிக்கா, புதிய தலைமுறைக்கு எத்தனை அவநம்பிக்கையை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதனை விடவும் ஒரு உலுக்கும் விபரிப்பை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியாது.

பிரிட்டிஷ் கார்டியன் பத்திரிகையில் வெளியான இன்னுமொரு செய்தி, ஒருகாலத்தில் அமெரிக்காவின் நிலக்கரி சுரங்கத் துறையின் இருதயத்தானமாக இருந்த மேற்கு வெர்ஜினியாவின் மக்டவல் கவுண்டியில் வாழ்க்கை கால சராசரியானது எத்தியோப்பியாவை விடவும் குறைந்த எண்ணிக்கைக்கு சென்றிருப்பதாகத் தெரிவிக்கிறது. 2008 இல் ஏறக்குறைய முழுவதும் வெள்ளை இனத்தவர் கொண்ட இந்த கவுண்டி பராக் ஒபாமாவிற்கு வாக்களித்திருந்தது. 2016 இல், குடியசுக் கட்சியின் முதனிலை வாக்காளர்களில் 91.5 சதவீதம் பேர் ட்ரம்புக்கு வாக்களித்தனர் - இது அவமதிப்பு மற்றும் அவநம்பிக்கையின் வெளிப்பாடாய் இருந்தது.

இந்த வேட்பாளர்கள் இருவருமே, அவரவர் வழிகளில், அமெரிக்காவிற்குள்ளான சமூகப் பதட்டங்களை பிற்போக்கான பாதைகளில் மாற்றி விடுவதற்காய் முனைகின்றனர்.

கிளிண்டன் உள்ளபடியான நிலையின் வேட்பாளராக, வோல்-ஸ்ட்ரீட், இராணுவ-உளவு எந்திரம் மற்றும் அடையாள அரசியல் கோலோச்சுகின்ற மெத்தனமான மற்றும் சுய-திருப்தி வெளிப்படுத்துகின்ற உயர் நடுத்தர வர்க்கம் ஆகியவற்றின் கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். அவர் தனது வேலைத்திட்டத்தை நேர்மையாகக் கூறுவாரேயானால், சமூக நெருக்கடியை முதலில் மத்திய கிழக்கிலும், பின்னர் இறுதியாக அணுஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடிய ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராகவுமான அமெரிக்க இராணுவத்தின் வன்முறையை தீவிரப்படுத்துவதான வடிவத்தில் வெளிப்புறமாக திருப்புவது என்பதாகவே அது இருக்கும்.

ட்ரம்ப் சமூகப் பதட்டங்களை இனவாத மற்றும் பாசிச சக்திகளுக்கு விண்ணப்பம் செய்கின்ற அதீத தேசியவாதப் பாதைகளின் பக்கமாய் செலுத்துவதற்கான ஒரு முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். மத்திய கிழக்கிலான அமெரிக்க இராணுவத்தின் இராணுவத் தலையீடுகளை எதிர்ப்பதாய் அவர் மோசடியாய் கூறிக் கொள்கின்ற அதேநேரத்தில், அமெரிக்க இராணுவத்தை அவர் வியந்துபோற்றுவதோடு அமெரிக்கக் கோரிக்கைகளை எதிர்க்கின்ற எந்தவொரு நாட்டின் மீதும் எல்லையற்ற வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் வாக்குறுதியளிக்கிறார். ”அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” அவர் பூணுகின்ற சபதம் இறுதியில் “Deutschland Über Alles” (எல்லாவற்றுக்கும் மேல் ஜேர்மனி) என்ற ஹிட்லரின் சுலோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சற்று மேலானதாகவே வந்து நிற்கிறது.

இவைதான் நவம்பர் 8 அன்று வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகின்ற மாற்றுகளாய் இருக்கின்றன என்பது, அமெரிக்க அமைப்புமுறையின் நாட்பட்ட சிதைவின் ஒரு விளைபொருளாகும். வியட்நாம் போருக்கு எதிராகவும் குடியுரிமைகளின் நீட்சிக்காகவும் 1960களிலும் மற்றும் 1970களின் ஆரம்பத்திலும் நடந்த பாரிய சமூகப் போராட்டங்களுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளிலுமே வலதை நோக்கிய ஒரு கூர்மையான திருப்பம் தொடங்கி நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலாகி விட்டது.

ஜனநாயகக் கட்சி, முன்னதாக உழைக்கும் மக்களின் பொருளாதார முன்னேற்றங்களுக்கு தான் கொண்டிருந்த உறுதிப்பாட்டைக் கைவிட்டு விட்டு வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியாக, கறுப்பினத்தவர், பெண்கள் மற்றும் ஓர்பால் விருப்பத்தாரின் புதிய சலுகைகொண்ட அடுக்குகளுக்கு விண்ணப்பிக்கும் அடையாள அரசியலின் கட்சியாக தன்னை மாற்றியமைத்துக் கொள்ளத் தொடங்கியது. அர்கன்சாஸ் ஆளுநராக இருந்த பில் கிளிண்டன் தலைமையின் கீழ் இருந்த ஜனநாயகக் கட்சியின் தலைமைக் குழுவானது, இந்த மாற்றத்திற்கான வாகனமாக ஆனது. இந்த வலதுநோக்கிய இயக்கமானது ஹிலாரி கிளிண்டனில் தனது உச்சத்தை எட்டியிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரே இரண்டு கட்சிகளிலுமே இருக்கின்ற அரசியல் ஸ்தாபகங்களது ஒருமித்த தெரிவாக ஆகியிருக்கிறார்.

குடியரசுக் கட்சி ஜிம் குரோ இன ஒதுக்கலின் முன்னாள் ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டு, பெருவணிகம் மற்றும் இராணுவத்துடனான தனது பாரம்பரியமான உறவுகளைப் பராமரித்த அதேநேரத்தில் தெற்கில் செல்வாக்கான கட்சியாக ஆனது. ரொனால்ட் ரீகன் தனது 1980 ஜனாதிபதி பிரச்சாரத்தை மிசிசிபி மாகாணத்தின் பிலடெல்பியா நகரத்தில் - 16 ஆண்டுகளுக்கு முன்பாய் அங்கு மூன்று குடியுரிமைப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர் - இருந்து தொடங்கி, ஜிம் குரோ தெற்கின் “மாநில உரிமைகள்” சுலோகத்திற்கு ஒரு பாதுகாப்பு மணியை ஒலித்தார். ட்ரம்பை KKK மற்றும் வெள்ளை தேசியவாத “alt-right” ஏற்றுக் கொண்டிருப்பதென்பது ஒரு தடம்மாறல் அல்ல, மாறாக அமெரிக்காவில் ஒரு முற்றுமுதலான பாசிசக் கட்சி எழுவதற்கு பாதை அமைத்துத் தந்திருக்கக் கூடிய ஒரு நிகழ்முறையின் தர்க்கரீதியான நிறைவே ஆகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதியவாறாக, பிற்போக்குத்தனம் ஆதிக்கம் செலுத்துவதென்பது “சமூக முரண்பாடுகள் எந்திரத்தனமாக ஒடுக்கப்படுகின்றன என்பதையே குறிக்கிறது” (”புத்திஜீவித முன்னாள்-தீவிரவாதிகளும் உலகப் பிற்போக்குத்தனமும்”, 1939). தொழிற்சங்கங்கள் தான் அமெரிக்காவில் சமூக முரண்பாடுகள் ஒடுக்கப்படுவதற்கான பிரதான பொறிமுறையாக இருந்து வந்திருக்கிறது. 1970களின் பிற்பகுதி தொடங்கியே, குறிப்பாக 1981 இல் PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டதற்கு பின்னர்,  வேலைநிறுத்தங்களுக்கு குழிபறிப்பதிலும் அவற்றை உடைப்பதிலும், ஊதிய வெட்டுகள் மற்றும் ஆலை மூடல்களில் முதலாளிகளுக்கு உதவுவதிலும், இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற வலது-சாரிக் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படியச் செய்வதிலும் AFL-CIO தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு செயற்பட்டன.

ஆயினும் இந்த நிகழ்முறையின் குறிப்பிட்ட வரம்பு ஒன்று இருக்கிறது. இன்று, தொழிற்சங்கங்கள் இற்றுப்போய் கிடப்பதோடு 1989-1991 காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை ஒட்டி ஸ்ராலினிச அதிகாரத்துவம் இருந்ததைப் போல மதிப்பிழந்து கிடக்கின்றன. ஒப்பந்த நிராகரிப்பு வாக்குகள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு தொடர்ச்சியான அலை மூலமாக அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி கண்டிருப்பதன் முதல் அறிகுறிகள், தொழிலாளர்கள் எதிர்த்துப் போராட வேண்டியது பெருநிறுவனங்களையும் அரசாங்கத்தையும் எதிர்த்து மட்டுமல்ல, மாறாக தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தான் என்பதை ஏற்கனவே விளங்கப்படுத்தியிருக்கின்றன. வர்க்கப் போராட்டம் தீவிரப்படும் நிலையில், தொழிலாளர்கள் வேலையிட மட்டத்தில் மட்டுமல்லாது, தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் தளத்திலும் ஒரு போராட்டத்தை சாத்தியமாக்கக் கூடிய வகையான ஒழுங்கமைப்பின் புதிய வடிவமைப்புகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அமெரிக்க மக்கட் தொகைக்கும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான இருகட்சி அமைப்புமுறைக்கும் இடையிலான பெருகிச் செல்கின்ற பிளவு என்ற, 2016 பிரச்சாரத்தின் மேலமர்வதாக இருக்கக் கூடிய அம்சத்தை டைம்ஸ்/CBS கருத்துக்கணிப்பு ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. உழைக்கும் மக்கள் இடது நோக்கி நகர்கின்ற அதேநேரத்தில் இரண்டு பெரிய கட்சிகளோ தொடர்ந்து வலது நோக்கி நகர்ந்த வண்ணமிருக்கின்றன.

இப்போதைய தேர்தல் சுற்றில், ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்குக் கிட்டிய பாரிய ஆதரவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படல் மிகப் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரு சோசலிஸ்டாகவும் பில்லியனர்களின் எதிரியாகவும் காட்டிக் கொண்ட ஒரு வேட்பாளருக்கு முதனிலைத் தேர்தலில் பங்குபெற்ற இளைஞர்களின் பரந்த பெரும்பான்மையினர் உட்பட்ட பதின்மூன்று மில்லியன் பேர் வாக்களித்தனர் என்பது அமெரிக்காவில் ஒரு முன்கண்டிராத அரசியல் அபிவிருத்தியாகும். இறுதியில், சாண்டர்ஸ் சரணாகதி அடைந்து, கிளிண்டனை வழிமொழிந்து, அரசியல் அமைப்புமுறை பெருநிறுவன மேலாதிக்கத்தின் கீழிருப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறியதெல்லாம் ஒரு மோசடி என்பதை விளங்கப்படுத்திக் காட்டினார்.

அவசியமான முடிவுகளுக்கு உழைக்கும் மக்கள் வந்தாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இருகட்சி அமைப்புமுறையைக் கொண்டே அதனை எதிர்த்துப் போராடுவதென்பது சாத்தியமில்லாததாகும். தொழிலாள வர்க்கம் தனது சொந்த வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கென தனது சொந்த அரசியல் கட்சியைக் கட்டியெழுப்பியாக வேண்டும். ஜனநாயகக் கட்சியுடன் மட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சியை பாதுகாக்கின்ற, அதற்கு வக்காலத்து வாங்குகின்ற மற்றும் அதனை மூடிமறைக்கின்ற அத்தனை அமைப்புகள் மற்றும் அரசியல் போக்குகளுடனும் அரசியல்ரீதியாக முறித்துக் கொள்வது இதற்கு அவசியமாக இருக்கிறது.

இந்த முன்னோக்கின் அடிப்படையிலேயே சோசலிச சமத்துவக் கட்சி 2016 தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளது. எங்களது ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வைட்டும் துணை ஜனாதிபதி வேட்பாளரான நைல்ஸ் நிமூத்தும், நிகழ்வுகள் சோசலிச வேலைத்திட்டத்தின் சரியான தன்மையை நிரூபணம் செய்யும் என்ற நம்பிக்கையுடன், தொழிலாள வர்க்கத்துக்கு உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர். நவம்பர் 8க்குப் பின்னர் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்க இருக்கும் போராட்டங்களுக்கு தேவையான புரட்சிகர அரசியல் தலைமையை தயாரிப்பு செய்வதற்காக நாங்கள் போராடுகிறோம்.