ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump transition points to escalation of US militarism

ட்ரம்ப்பின் எதிர்கால பதவி நியமனங்கள் அமெரிக்க இராணுவவாதத்தின் தீவிரமயமாக்கலை காட்டுகிறது

By Bill Van Auken
16 November 2016

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள-ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் வெளியுறவுத்துறை செயலருக்கான விருப்பத்தேர்வின் முன்னிலையில் நியூயோர்க் நகர முன்னாள் நகர முதல்வர் ருடோல்ப் யூலியானி இருப்பதாக பல ஊடகங்களும் குறிப்பிடுவது, எதிர்வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தினது அதிதீவிர வலதுசாரி குணாம்சத்திற்கும் மற்றும் ஆக்ரோஷமான இராணுவ குணாம்சத்திற்குமான மேலதிக அறிகுறியை காட்டுகின்றது.

யூலியானியே அப்பதவிக்கு விருப்பத்திற்குரியவராக இருப்பதாக ட்ரம்ப் பிரச்சாரத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அசோசியெடெட் பிரஸ் க்கு தெரிவித்தார், அதேவேளையில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்க தூதராக இருந்தவரும், அதேபோன்ற வலதுசாரி மற்றும் இராணுவவாத நபருமான ஜோன் போல்டனும் போட்டியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால் நூற்றாண்டு அமெரிக்க போர் ஒவ்வொன்றிற்கும் விடாப்பிடியான ஆதரவாளர்களாக இருந்துள்ள இவ்விருவருமே, வரவிருக்கும் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் உயர்மட்ட வெளியுறவு கொள்கை பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்ற உண்மை, சமீபத்திய அமெரிக்க இராணுவ தலையீடுகளை ஏதோவிதத்தில் அவர் எதிர்க்கிறார் மற்றும் “தேசத்தைக் கட்டமைப்பார்" எனும் முன்னணி பிரச்சாரம் மீதான ட்ரம்ப் இன் பாசாங்குத்தனத்தினது பொய்களை எடுத்துக்காட்டுகிறது.

அவர் ஈராக் போருக்கு எதிராக இருந்ததாக கூறும் ட்ரம்ப் இன் போலிக்கூற்றுகள், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஹிலாரி கிளிண்டன் எதனுடன் மிகத் தெளிவாக அடையாளம் காணப்பட்டாரோ அந்த முடிவில்லா அமெரிக்க இராணுவ தலையீடுகள் மீதான மக்கள் எதிர்ப்பை சாதகமாக்கிக் கொள்வதற்காகவே இருந்தன. அதேநேரத்தில், எவ்வாறிருப்பினும், அவர் அமெரிக்க இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரிக்கவும் மற்றும் வாஷிங்டனின் அணுஆயுதங்களை நவீனப்படுத்தவும் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினார்.

அவரது "அமெரிக்கா முதலிடத்தில்" வாய்சவுடாலும் மற்றும் பொருளாதார தேசியவாதத்தின் ஊக்குவிப்பும், இந்த உலகத்தை முன்பினும் அதிகமாக ஒரு மூன்றாம் உலக போருக்கு நெருக்கத்தில் கொண்டு செல்லும் அமெரிக்காவினது ஆக்ரோஷமான உலகளாவிய இராணுவ நடவடிக்கையைக் கூடுதலாக தீவிரப்படுத்துவதுடன் கை கோர்த்து செல்கிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தியின்படி, முன்னாள் நியூ யோர்க் மேயர் அவரது சொந்த நியமனத்திற்கு பகிரங்கமாக அழுத்தமளித்து வருகிறார். அப்பத்திரிகை குறிப்பிடுகையில், வாஷிங்டனில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலைமை செயலதிகாரி குழுவிற்கு திங்களன்று வழங்கிய கருத்துக்களின் போது “தாம் [வெளியுறவுத்துறை செயலர்] பதவிக்கு ஆர்வமாக இருப்பதாக" யூலியானி "பல முறை முறையிட்டார்" என்று குறிப்பிட்டது. அக்கூட்டம் "வாஷிங்டனின் பல ஆண்டுகால மிகப் பெரிய எண்ணற்ற மாற்றத்தின் தாக்கங்களை புரிந்து கொள்ள வணிக தலைவர்களுக்கு இணையற்ற சந்தர்ப்பமாக" விளம்பரம் செய்யப்பட்டது.

ISIS மீதான போர் என்றழைக்கப்படுவது அந்நிர்வாகத்தின் முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று அவரது கருத்துக்களில் யூலியானி வலியுறுத்தியதன் மூலமாக, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலுமான போர்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உலகளாவிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடரும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். தனது சொந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கும் மற்றும் அவரது நிர்வாகத்தை குணாம்சப்படுத்திய கட்டுங்கடங்கா ஊழலை மறைப்பதற்கும் 9/11 சம்பவத்தின் இரத்தந்தோய்ந்த அங்கியை போர்த்திக் கொள்ள ஒருபோதும் தயங்காத அந்த முன்னாள் நியூயோர் நகரசபை தலைவர், அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அவர் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்றபோதினும், அக்கொள்கையில் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளார்.

ஈரான் உடனான அணுஆயுத உடன்படிக்கையை கைவிடுவதற்கான ட்ரம்ப் இன் கோரிக்கைகள் குறித்து யூலியானியிடம் கேட்கப்பட்ட போது, “நீங்கள் முன்னுரிமைகளை அமைக்க வேண்டும். ஆகவே முன்னுரிமையில் ISIS அழிப்பது முதலில் இருந்தால், மற்றவற்றை விட்டுவிட்டு ISIS ஐ ஒழித்து விட்டு, பின்னர் இதற்கு திரும்ப வேண்டியிருக்கும்” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரவிருக்கும் நிர்வாகத்தின் திட்டநிரலில் ஈரான் உடனான ஒரு புதிய அமெரிக்க போர் உள்ளது. 2008 இல் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு யூலியானி போட்டியிட்ட போது, ஈரானின் அணுஆயுத திட்டத்திற்கு எதிராக தந்திரோபாய அணுஆயுதங்களை பயன்படுத்துவதை "பரிசீலனையில் இருந்து நீக்கக்கூடாது" என்று இவர் தெரிவித்திருந்தார்.

மேலும், ட்ரம்ப் ரஷ்யாவுடனான நல்லிணக்கம் குறித்து வெற்று வார்த்தைகளை பேசுகின்ற நிலையில் —ஜனநாயகக் கட்சியினரால் வலதிலிருந்து அவர் விளாடிமீர் புட்டினின் ஒரு கைப்பாவை என்று மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகின்ற போதினும்— யூலியானியோ மாஸ்கோவை நோக்கி மிகவும் அச்சுறுத்தும் தொனியை ஒலித்தார். மாஸ்கோவுடனான உறவுகளை மாற்றுவதற்கான ஒரு வழிவகையாக இராணுவ மோதலை அவர் அறிவுறுத்தினார்.

“ரஷ்யா தன்னை ஒரு இராணுவ போட்டியாளர் என்று கருதுகிறது, ஆனால் நிஜத்தில் அப்படியில்லை,” என்று யூலியானி தெரிவித்தார். “ஒபாமா நிர்வாகத்தின் கீழ், நமது இராணுவ பிரயோகம் கொண்டு அச்சுறுத்தக் கூட நாம் விருப்பமில்லாமல் இருந்தது தான் ரஷ்யாவை மிகவும் பலப்படுத்தி உள்ளது,” என்றார்.

யூலியானிக்கு எந்தவொரு வெளியுறவு கொள்கை அனுபவமும் இல்லை என்ற போதினும், அவர் ஒரு பிரதான ட்ரம்ப் விசுவாசியும் மற்றும் பொலிஸ் அரசு ஆட்சிமுறைகளின் ஒரு நீண்டகால ஆதரவாளரும் ஆவார். நகர முதல்வராக அவர் பதவி வகித்தபோது, ஒரு ஒடுக்குமுறையான "நின்று கைமாற்றி ஒப்படைக்கும்" (stop and frisk) திட்டத்துடன் அடையாளம் காணப்பட்டார் —பின்னர் அத்திட்டம் அரசியலமைப்புக்கு புறம்பானதாக தடுக்கப்பட்டது— அத்திட்டம் நடைமுறையளவில் அந்நகரின் ஒவ்வொரு சிறுபான்மையினரையும் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞரையும் சந்தேகத்திற்குரியவராக மாற்றியதுடன், விடாப்பிடியாக இருந்த Amadou Diallo மற்றும் Patrick Dorismond போன்ற அப்பாவி இளைஞர்களைப் பலி கொண்ட மூர்க்கமான தொடர் பொலிஸ் படுகொலைகளில் போய் முடிந்தது.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை தொடர்ந்து நியூயோர்க் நகரசபை தேர்தல்களை இரத்து செய்ய பரிந்துரைத்த அவர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு தகைமை கொண்ட ஒரே மனிதராக தனக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரு புதிய பதவி காலத்தை வழங்க வேண்டுமென முன்மொழிந்தார். மிக சமீபத்தில் அவர் குறிப்பிடுகையில், நாடுதழுவிய ட்ரம்ப்-விரோத ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு எதிர்க்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கான அவரது வெளிப்படையான பிரதான போட்டியாளர் ஜோன் போல்டன், ஒவ்வொரு விதத்திலும் அதேயளவிற்கு பிற்போக்குத்தனமானவரும் மற்றும் ஒருதலைபட்சமான அமெரிக்க இராணுவ ஆக்ரோஷத்தின் தீவிர ஆதரவாளரும் ஆவார். வெறுமனே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான், போல்டன் நியூ யோர்க் டைம்ஸ் இல் "ஈரானின் குண்டுகளைத் தடுக்க, ஈரான் மீது குண்டுவீசுங்கள்" என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரை கட்டுரை எழுதியிருந்தார். அவரது குறிப்புரை, “ஆட்சி மாற்றத்தை" தொடர்ந்து கடுமையான குண்டுவீச்சை கோரியது.

புளோரிடா வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்ட ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பிரச்சாரத்தின் வெற்றிகரமான நடவடிக்கையில் ஒரு வழக்கறிஞராக சேவையாற்றிய பின்னர், போல்டன் குடியரசு கட்சி வட்டாரங்களில் முக்கிய நபராக உயர்ந்தார்.

அவர் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போருக்கு குறைந்தபட்சம் 1998 இல் இருந்து வக்காலத்து வாங்குபவராக இருந்தார். சதாம் ஹூசைன் "பேரழிவுகரமான ஆயுதங்களை" தயாரித்து வருகிறார் என்றும், அல் கொய்தாவிடம் அவற்றை ஒப்படைக்க தயாரிப்பு செய்து வருகிறார் என்றும் கூறப்பட்ட பொய்கள் ஊக்குவிக்கப்பட்ட அந்த ஆண்டைத் தொடர்ந்து, ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போரைத் தயார் செய்வதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து, 2002 இல், அவர் வெளியுறவுத்துறையின் ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான துணை செயலராக இருந்தார்.

வெளியுறவுத்துறையில் அவரது முன்னாள் சக பணியாளர்களில் ஒருவரால் "அணைத்த பின்னர் உதைந்து விடும் ஒருவித நபர்" என்று வர்ணிக்கப்பட்ட போல்டன், புஷ் நிர்வாகத்தால் இடைக்கால நியமனமாக ஆகஸ்ட் 2005 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு தூதராக பெயரிடப்பட்டார், அது ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாக சேவையாற்றுவதற்காக இருந்தது, இதற்காக போல்டன் அவரது வெறுப்பை மீண்டும் மீண்டும் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் போலவே யூலியானி மற்றும் போல்டன் இருவருமே, குவாண்டனாமோ, பக்ராம் விமானத் தளம் மற்றும் உலகின் ஏனைய நிழலுலக தளங்களில் பெண்டகன் மற்றும் சிஐஏ இன் சித்திரவதையை பயன்படுத்துவதை நியாயப்படுத்தி உள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு முக்கிய நபராக யூலியானி அல்லது போல்டன் இருவரில் ஒருவரை நியமிப்பதன் சாத்தியம் பற்றிய விவாதம், ட்ரம்ப் இன் தலைமை வெள்ளை மாளிகை மூலோபாயவாதியாக முற்றிலும் பாசிசவாதியான ஸ்டீபன் பானனை ஞாயிறன்று பெயரிட்டதில் எடுத்துக்காட்டப்பட்டதை போலவே அதேயளவிற்கு ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளது. Breitbart News இல் பானனின் பராமரிப்பில் குணாதிசயப்படுத்தப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத அரசியலில் அவர்கள் இருவரும் பகிரங்கமாக ஈடுபடாவிட்டாலும், அவர்கள் அமெரிக்க அரசியலில் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் மதிப்பிழந்த பிரமுகர்களாக உள்ளார்கள் என்பதில் எவ்விதமான கேள்வியும் இல்லை.

செவ்வாயன்று மாலை வரை ஒரு நியமன அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது தெளிவாக இல்லை என்றாலும், ட்ரம்ப் இன் இடைக்காலக்குழு முற்றிலும் குழப்பத்திலும் மற்றும் கடுமையான உள்கட்சி கருத்து முரண்பாடுகளிலும் குழம்பி போயிருப்பதைக் குறித்து செய்திகள் வெளியாயின. தேசிய பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் க்கு ஆலோசனை வழங்க அழைக்கப்பட்டிருந்தவரும் மற்றும் சிஐஏ இயக்குநராக அனேகமாக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுபவருமான குடியரசு கட்சியைச் சேர்ந்த மிச்சிகனின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மைக் ரோஜர்ஸ், முன்னதாக நியூ ஜெர்ஸி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி இன் வெளியேற்றத்தை தொடர்ந்து, பதவி நியமன நடைமுறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பதவி நியமன நடவடிக்கையின் தலைவராக இருந்த கிறிஸ் கிறிஸ்டியின் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவசர அவசரமாக பிரதியீடு செய்யப்பட்டார்.

“[ட்ரம்ப் இன் மருமகன் ஜாரெட்] குஷ்னரின் தந்தையை சிறைக்கு அனுப்புவதில் ஓர் அமெரிக்க வழக்கறிஞராக [அப்போது பெடரல் வழக்கறிஞராக இருந்த] கிறிஸ்டி வகித்த பாத்திரத்திற்கு பழி வாங்குவதற்காக" கிறிஸ்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வெளியேற்றம் நடத்தப்பட்டதாக செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.

அந்த நியூ ஜேர்ஸி ஆளுனர், வழக்கின் கட்டமைப்பை ஸ்தாபிப்பத்த ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டவர் என்பதால், ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், கிறிஸ்டியை வெளியேற்றியது நடைமுறையளவில் நியமன நடைமுறைகளை முடக்குவதாக உள்ளது.

முன்னர் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் என்று அவரை குற்றஞ்சாட்டியவர்களுக்கு தலைமை கொடுத்த குடியரசுக் கட்சியின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரியின் உண்மையான முகத்தில், ட்ரம்ப் முகாமிற்குள் நிலவும் குழப்பமும் பிளவுகளும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. கடந்த வாரம் American Interest இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் அவர் வாதிடுகையில், ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்காலம் "நாம் நினைப்பதை விட சிறப்பாக இருக்கக்கூடும்,” மற்றும் ஒன்றையொன்று கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரத்துவ செயலின்மை வரவிருக்கின்ற நிர்வாகத்தில் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

செவ்வாயன்று காலை ட்வீட்டர் குறிப்பில் கோஹன் எழுதுகையில், “ட்ரம்பின் இடைக்கால குழுவுடனான கருத்து பரிவர்த்தனைகளுக்கு பின்னர், ஒதுங்கி இருத்தல் என்ற எனது பரிந்துரையை மாற்றிக் கொண்டேன். அவர்கள் கோபமும், அகங்காரமும் கொண்டு 'நீங்கள் தோற்றுவிட்டீர்!' நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்காது என்ற கூப்பாடும் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப் முகாமிற்குள் நிலவும் இந்த குழப்பம், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பில்லியனிய ஜனாதிபதிக்கு “முற்போக்காளர்களாக" காட்டிக்கொள்ளும் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் உட்பட ஜனாதிபதி ஒபாமா மற்றும் முன்னணி ஜனநாயக கட்சியினர் பணிவாக வளைந்து கொடுப்பதுடன் கூர்மையாக முரண்படுகிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் தேசியளவிலான போராட்ட நிலைமைகளின் கீழ், பெரும்பான்மை வாக்காளர்களால் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்திற்கு எதிராக அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட, அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரி நிர்வாகமாக வடிவமெடுத்து வரும் ஒன்றுக்கு அவர்கள் [ஜனநாயக கட்சியினர்] நடைமுறையளவில் எந்த எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள்.