ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French prime minister calls for extension of state of emergency

பிரெஞ்சு பிரதம மந்திரி அவசரகால நெருக்கடி நிலையை நீடிக்க அழைப்புவிடுக்கிறார்

By Alex Lantier
14 November 2016

ஞாயிறன்று பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் பிபிசி பேட்டி ஒன்றில், ஏப்ரல்-மே 2017 ஜனாதிபதி தேர்தல்கள் முடியும் வரையில் பிரெஞ்சு அவசரகால நெருக்கடி நிலையின் மற்றொரு நீடிப்புக்கு அழைப்புவிடுத்தார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சற்று பின்னர் வந்திருக்கும் வால்ஸ் இன் அறிவிப்பானது, அட்லாண்டிக்கிற்கு இருபுறமும் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் தீவிரமாக பொறிந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சற்று பின்னர் வால்ஸ் இன் சோசலிஸ்ட் கட்சி (PS) இந்த அவசரகால நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியதில் இருந்து, தேசிய நாடாளுமன்றம் அதன் நான்கு நீடிப்புகளுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதை வால்ஸ் குறிப்பிட்ட போதினும், அது நீக்கப்படுமா அல்லது எப்போது நீக்கப்படும் என்பதைக் குறித்து எந்த குறிப்பும் வழங்கவில்லை.

“இன்றைய நிலையில் அவசரகால நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வருவது கடினமாக இருக்கும்,” என்று வால்ஸ் பிபிசி இன் HARDtalk நிகழ்ச்சியில் தெரிவித்தார். “ஒருசில வாரங்களில் சந்திப்புகள் மற்றும் பொதுக்கூட்டங்களுடன் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க இருப்பதால் அது இன்றியமையாததாகும். ஆகவே நாம் நமது ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது,” என்றார்.

“அதற்கு அப்பாற்பட்டு,” அவர் தொடர்ந்து கூறுகையில், “அவசரகால நெருக்கடி நிலை என்ற இயங்குமுறை கைது செய்வதற்கும் மற்றும் நடைமுறையில் நிர்வாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் எங்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. … ஆகவே ஆம், நாங்கள் இந்த அவசரகால நெருக்கடி நிலையோடு அனேகமாக சில காலம் வாழ்வோம்,” என்றார். நீஸ் இல் ஜூலை 14 பாஸ்டி தின (Bastille Day) தாக்குதலை சுட்டிக்காட்டிய அவர், அந்த வகையான தாக்குதலை எதிர்கொள்ள அவசரகால நெருக்கடி நிலை அவசியமென தெரிவித்தார். அத்தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் ஒரு லாரியை கூட்ட நெரிசலுக்குள் ஓட்டிச் சென்றதில் 86 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 434 பேர் காயமடைந்தனர்.

அவசரகால நெருக்கடி நிலை குறித்த வால்ஸ் இன் வாதங்கள் ஒரு பிற்போக்குத்தனமான அரசியல் மோசடியாகும். அவசரகால நெருக்கடி நிலையானது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கை அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை இலக்கில் வைத்திருக்கும் ஒரு பொலிஸ் அரசு ஆட்சிமுறையாகும். அது தீவிர-வலது சக்திகளை முடுக்கிவிடவும், இராணுவவாதம் மற்றும் முஸ்லீம்-விரோத வெறுப்பு மனப்பான்மையை தூண்டிவிடவும், மற்றும் வெறுப்புக்குரிய சோசலிஸ்ட் கட்சியினது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான இந்த வசந்தகாலத்தில் எழுந்த பாரிய எதிர்ப்பியக்கம் போன்று அதன் சிக்கன கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிசை அனுப்பவும் நோக்கம் கொண்டுள்ளது.

அவசரகால நெருக்கடி நிலையை எவ்விதத்திலேனும் முடிவுக்குக் கொண்டு வருவதை வால்ஸ் எதிர்நோக்கவில்லை என்ற உண்மையானது, ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த கன்னைகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறை நிரந்தரமாக இருக்க வேண்டுமென விரும்புகின்றன என்பதை மட்டுமே அடிக்கோடிடுகிறது.

அவசரகால நெருக்கடி நிலை பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கவில்லை என்பது, அரசியல் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு பிரிவுகளும் ஒப்புக் கொள்வதைப் போல, இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நீஸ் தாக்குதலை தடுக்க அது தகைமையற்றிருந்தை தெளிவாக நிரூபித்தது, அவசரகால நெருக்கடி நிலை ஒரு பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையாக "மட்டுப்பட்ட வாய்ப்பையே" கொண்டுள்ளது என்று பழமைவாத கட்சி துணை தலைவர் ஜோர்ஜ் ஃபெனெக் மேற்பார்வை செய்த இக்கோடைகால நாடாளுமன்ற அறிக்கை ஒன்று கண்டறிந்தது. உண்மையில், அவசரகால நெருக்கடி நிலை பயங்கரவாத வலையமைப்புகளை துண்டிக்கவில்லை, ஏனென்றால் அவை பிரெஞ்சு மற்றும் நேட்டோ போர் கொள்கையினது ஒரு முக்கிய கருவியாக உள்ளன.

அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் பாரிய பெரும்பான்மை பொலிஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பெப்ரவரி 2016 குறித்து, உள்துறை அமைச்சக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மனித உரிமைகளுக்கான தேசிய கலந்தாய்வு ஆணைக்குழு (la Commission nationale consultative des droits de l’homme - CNCDH) ஒரு கணக்கு விபரங்களை வெளியிட்டது. 3,824 தேடல் மற்றும் பறிமுதல்கள், 392 வீட்டுக்காவல் நடவடிக்கைகளை CNCDH கணக்கிட்டது, ஆனால் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட தாக்குதல்களில் வெறும் 29 விசாரணைகள் மட்டுமே இருந்தன. அதிலும் 23 குற்றச்சாட்டுக்கள் "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அனுதாபம் காட்டியதற்காக", அதாவது இஸ்லாமிய குழுக்களை வார்த்தைகளில் ஆதரித்ததற்காக என்று தேவையின்றி வரையறுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை உள்ளடங்கி இருந்தன, 6 வழக்குகள் மட்டுமே பயங்கரவாத-தடுப்பு வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இதற்கிடையே சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் போரில் அதன் பிரதான பினாமிகளாக உள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களில் இணைவதற்கு, ஆயிரக் கணக்கான ஐரோப்பிய முஸ்லீம்கள் மத்திய கிழக்கிற்கு பயணித்துள்ளனர். ஒரு தனியார் உளவுத்துறை நிறுவனமான Soufan குழுமத்தின் மதிப்பீடுகளின்படி, சிரியாவின் போராளிகள் குழுக்களில் இணைய பிரான்சில் இருந்து மட்டும் ஏற்கனவே சுமார் 1,700 பேர் பயணித்துள்ளனர். இந்தளவிற்கான போராளிகள் பாய்ந்திருப்பது ஐரோப்பிய உளவுத்துறை முகமைகளுக்கு தெரியாமலும் மற்றும் அவை உடந்தையாய் இல்லாமலும் நடந்திருக்க சாத்தியமில்லை.

கடந்த ஆண்டு பாரீசில் நடந்த சார்லி ஹெப்டோ மற்றும் நவம்பர் 13 தாக்குதல்கள், மற்றும் இந்தாண்டு புரூசெல்ஸ் இல் நடந்த மார்ச் 22 தாக்குதல் ஆகிய ஐரோப்பாவின் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை குறித்த ஓர் ஆய்வு, தெளிவாக இந்த உடந்தைத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. அந்த பயங்கரவாத அதிரடிப்படைகளின் தலைவர்களை, பெரும்பாலும் உயர்மட்ட நடவடிக்கையாளர்களாக உளவுத்துறை முகமைகள் நன்கறிந்திருந்தன. இருந்தபோதும் எல்லைகளைக் கடந்து செல்ல, ஆயிரக் கணக்கான யூரோக்களை அணுக, மற்றும் சிரமம் ஏதுமின்றி ஆயுதங்களைப் பெற அவர்களால் முடிந்தது.

* சார்லி ஹெப்டோ தாக்குதல்களை நடத்திய கௌச்சி சகோதரர்கள், அரேபிய தீபகற்பத்தின் அல் கொய்தாவின் (AQAP) உயர்மட்ட தலைவர்களுடன் தொடர்பில் இருந்த போதும் கூட, அவர்கள் அத்தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்னதாக கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

* நவம்பர் 13 பயங்கரவாத நடவடிக்கையின் அதிரடிப்படை தலைவர் அப்தெல்ஹமீத் அபாவூத் சமூக ஊடகங்கள் மூலமாக இஸ்லாமிய அரசு போராளிகள் குழுக்களுக்கு நியமனங்கள் செய்யும் பொதுவில் அறியப்பட்ட முகமாக உளவுத்துறை சேவைக்கு நன்கறியப்பட்டவர் என்றபோதினும் கூட, அவர் ஐரோப்பா எங்கிலும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

* மார்ச் 22 தாக்குதல்தாரிகளும் மற்றும் அவர்களது இலக்குகளும் அத்தாக்குதல்களுக்கு முன்னரே துருக்கிய, இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய உளவுத்துறையால் பெல்ஜியம் அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டப்பட்டிருந்தன. இருந்தபோதும் அவர்கள் தடுக்கப்படவில்லை, அல்லது அவர்களது இலக்குகளைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. புரூசெல்ஸ் இல் மறைந்திருந்தவரும் மற்றும் "ஐரோப்பாவில் தேடப்படும் முக்கிய நபராக" ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டவருமான நவம்பர் 13 தாக்குதலுக்கு உடந்தையாய் இருந்த சலாஹ் அப்தெஸ்லாம் மார்ச் 22 தாக்குதலுக்கு சற்று முன்னர் பிடிபடும் வரையில், அவரது இருப்பிடம் குறித்து எல்லா நேரமும் பெல்ஜியம் பொலிஸ் படைகளுக்கு தெரிந்திருந்தது என்பதும் அத்தாக்குதலுக்குப் பின்னர் வெளியானது.

மக்களின் எந்தவொரு அடித்தளத்திலும் ஆதரவில்லாத போர் மற்றும் சிக்கனக் கொள்கைகளைத் தொடர்ந்து திணிப்பதற்காக, பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஊடகங்களும் உத்தியோகபூர்வ அரசியலின் நோக்குநிலையை வலதிற்கு மாற்ற சிரிய போர் குறித்தும், பாரீஸ் மற்றும் புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் குறித்தும் பொய்களை பயன்படுத்தியுள்ளன.

இத்தாக்குதல்கள் அரசியல்ரீதியில் குற்றகரமான சிரியப் போரின் விளைவுகள் என்பதாக அல்லாமல் மாறாக முஸ்லீம் கொடூரம் என்பதாக காட்டி, அண்மித்து இரண்டு ஆண்டுகளாக, பெருந்திரளான மக்கள் மீது தீவிர வலதின் ஆயுதக்கிடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பொய்கள் குண்டுமழையென பொழியப்பட்டுள்ளன. உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தவும், பொலிஸ் மற்றும் இராணுவத்தை ஊக்குவிக்கவும், பில்லியன் கணக்கிலான யூரோக்களை இராணுவ செலவினங்களில் அதிகரிக்கவும், அதன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மீண்டும் மீண்டும் நடத்திய பொலிஸ் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், சோசலிஸ்ட் கட்சி இந்த நஞ்சார்ந்த சூழலை பயன்படுத்தியது.

அது நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பிரெஞ்சு கடற்கரைகளில் "புர்க்கினி" நீச்சல் உடைகள் மீதான தடையை அமுல்படுத்தியமை, மற்றும் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக இக்கோடையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது அமைதியான போராட்டங்களை தடுக்கும் வால்ஸ் இன் முயற்சி போன்று, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாதளவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் இன்னும் அதிக கடுமையான வர்க்க போராட்டங்களுக்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன. சிரியா விவகாரத்தில் நிலவும் ஒரு நிரந்தர நேட்டோ-ரஷ்ய போர் அபாயத்திற்கு இடையே, வலதுசாரி குடியரசுக் கட்சியும் (LR) மற்றும் நவ-பாசிசவாத தேசிய முன்னணியும் கருத்துக்கணிப்புகளில் முன்னேறி வருவதுடன் சேர்ந்து, இன்னும் அதிக கொடூரமான வலதுசாரி ஆட்சி ஒன்று எளிதாக பிரான்சில் அதிகாரத்திற்கு வந்துவிட முடியும். அது, சிக்கனக் கொள்கை மற்றும் போருக்கான தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு எதிராக அணிதிரட்டுவதற்காக சோசலிஸ்ட் கட்சியால் கட்டமைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அரசின் நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேற்பார்வையில் வைக்கும்.

பிரெஞ்சு அவசரகால நெருக்கடி நிலையின் பிற்போக்குத்தனமான ஏமாற்றுத்தனத்தை எதிர்ப்பதே, போருக்கு எதிரான மற்றும் தொழிலாளர்களது அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு கடுமையான போராட்டத்திற்கும் முன்நிபந்தனையாக உள்ளது.