ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump picks trusted go-between as ambassador to China

ட்ரம்ப் நம்பகமான இடைத்தரகரை சீனாவிற்கான தூதராக தேர்ந்தெடுக்கிறார்

By Peter Symonds
8 December 2016

குடியரசுக் கட்சியின் அயோவா மாநில ஆளுநர் டெர்ரி பிரான்ஸ்டாட் (Terry Branstad), சீனாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை ட்ரம்பின் எதிர்கால பதவி நியமன தேர்வுக்குழு நேற்று உறுதிப்படுத்தியது. ட்ரம்ப் அவரது தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் ஒரு ஆக்ரோஷமான சீன-விரோத நிலைப்பாட்டை ஏற்றிருந்தார். ஆனால் பிரான்ஸ்டாட் ஐ தேர்ந்தெடுத்ததன் மூலம், அவர் பெய்ஜிங் உடனான உயர்மட்ட உறவுகளுக்கு ஒரு நம்பகமான இடைத்தரகரை நியமித்துள்ளார்.

பிரான்ஸ்டாட் 1985 இல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை முதன்முதலில் சந்தித்தார், அப்போது ஜி 31 வயது அதிகாரியாக சீனாவின் ஹெபி மாகாணத்திலிருந்து அமெரிக்காவிற்கு முதல் விஜயம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்க விவசாய முறைகளைத் தெரிந்து கொள்ள வந்திருந்த ஜி, சிறிய நகரமான மஸ்கட்டினில் ஒரு குடும்பத்தினருடன் தங்கினார். 2013 இல் அவர் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் சீன துணை-ஜனாதிபதியாக அவர் 2012 இல் மஸ்கட்டினுக்கு மீண்டும் விஜயம் செய்த போது, அவர் பிரான்ஸ்டாட் உடன் ஆளுநர் மாளிகையில் தங்கினார்.

சீன வெளியுறவு கொள்கை விவகாரங்களுக்கான அமைச்சக செய்தி தொடர்பாளர் லு காங் நேற்று குறிப்பிடுகையில், பிரான்ஸ்டாட் ஐ "சீன மக்களின் ஒரு பழைய நண்பர்" என்று வர்ணித்ததுடன், “சீன-அமெரிக்க உறவுகளை ஊக்குவிப்பதில் ஒரு மிகப்பெரிய பாத்திரம் வகிக்க அவரை நாங்கள் வரவேற்போம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். பன்றி இறைச்சி மற்றும் சோளம் உட்பட அயோவாவின் வேளாண் உற்பத்திகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய பிரான்ஸ்டாட் உத்வேகத்துடன் ஊக்குவித்துள்ளார். அவர் ஏழு முறை சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார், மிக சமீபத்தில் கடந்த மாதம் தான் ஒரு வணிக பணிக்கா அங்கே சென்று வந்திருந்தார்.

பிரான்ஸ்டாட் அதேநேரத்தில் ட்ரம்ப் உடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவராவார். ட்ரம்பை ஆதரிப்பதில் ஒரு முக்கிய குடியரசுக் கட்சி பிரமுகரான அவர், தேர்தலின் போது அயோவாவில் அவருக்காக பிரச்சாரம் செய்தார். அந்த ஆளுநரின் மகன் எரிக், அயோவாவிற்கான ட்ரம்பின் பிரச்சார நிர்வாகியாக இருந்தார். நவம்பர் மாத ஆரம்பத்தில் அம்மாநில பிரச்சார பேரணி ஒன்றில், பிரான்ஸ்டாட் ஐ "சீனாவைக் கையாள்வதற்கான நமது பிரதான நபர்" என்று வர்ணித்து, அவரது நியமனம் மீது ட்ரம்ப் சமிக்ஞை செய்திருந்தார்.

ட்ரம்பின் பிரான்ஸ்டாட் நியமனத்தில், அவரது நிர்வாக வேலைகளுக்கு தனிப்பட்டரீதியில் நெருக்கமாக அறிமுகமானவர்களை மற்றும் கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும் ஒரு வடிவம் தொடர்கிறது. ட்ரம்பின் எதிர்கால பதவி நியமன தேர்வுக்குழுவின் செய்தி தொடர்பாளர் ஜேசன் மில்லர் நேற்று உவகையோடு கூறுகையில், பிரான்ஸ்டாட் “குறிப்பிடத்தக்களவில் அரசு கொள்கை அனுபவம்" கொண்ட ஒருவராவார், “… வணிக பிரச்சினைகள், விவசாய பிரச்சினைகள் மீது [ஒரு] பலமான பிடியை வைத்திருக்கக்கூடியவர், [அவருக்கு] சீனா மற்றும் சீன மக்கள் குறித்து நல்ல புரிதல் உண்டு,” என்றார்.

யதார்த்தத்தில் ஒரு நீண்டகால அயோவா அரசியல்வாதியான பிரான்ஸ்டாட், மிகக் குறைந்த வெளியுறவு கொள்கை அனுபவமே கொண்டவர், மேலும் சீனாவைக் குறித்த அவரின் அறிவு, அவர் மாநிலத்திற்கு சிறந்த வணிக உடன்படிக்கைகளுக்காக அழுத்தமளிப்பதற்கு உயர்மட்ட சீன தலைவர்களுடன் அவர் அறிமுகமானவர் என்பதை ஊக்குவிப்பதற்கான அவரது முயற்சியிலிருந்து வருகிறது. வணிகங்களைப் பொறுத்த வரையில், அவர் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கைக்கு (TPP) வார்த்தையளவில் ஆதரவானவர், இந்த உடன்படிக்கையைத் தான் ட்ரம்ப் அவர் பதவியேற்பு முதல் நாளிலேயே தகர்ப்பதாக சூளுரைத்துள்ளார்.

பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையில் பிரான்ஸ்டாட் ட்ரம்புடன் வேறுபட்டிருப்பதும், அத்துடன் வட கொரியா பிரச்சினை, தென் சீனக் கடலில் அதிகரித்துவரும் பதட்டங்கள் மற்றும் சீனாவிற்கு எதிராக ஆசியா முழுவதிலுமான அமெரிக்காவின் இராணுவ கட்டமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் அவரின் பரிச்சயமற்றத்தன்மையும், அவர் பெய்ஜிங் நோக்கிய கொள்கை அல்லது மூலோபாயத்தை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்காமல் போகலாம் என்பதையே அறிவுறுத்துகிறது.

அந்த முடிவு ஏற்கனவே பெய்ஜிங்கில் எட்டுப்பட்டு வருகிறது. பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் ஒரு துணை பேராசிரியர் Jie Dalei வாஷிங்டன் போஸ்டிற்குக் கூறுகையில், பிரான்ஸ்டாட்டின் நியமனம் தொடர்புகளுக்கு வேண்டுமானால் உதவக்கூடும், “ஆனால் முடிவெடுக்கும் மட்டத்தில் பெரும் தாக்கத்தை அனேகமாக கொண்டிருக்காது,” என்றார்.

1979 க்குப் பின்னர் உயர்மட்ட அமெரிக்க மற்றும் தாய்வானிய தலைவர்களுக்கு இடையிலான முதல் தொலைபேசி உரையாடலாக தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென்னிடம் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்பதென்ற ட்ரம்பின் கடந்த வெள்ளிக்கிழமை முடிவின் மீது சீன அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த உரையாடல், தாய்வான் உட்பட சீனா முழுமைக்கும் ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக பெய்ஜிங்கை மட்டுமே அங்கீகரித்திருந்த அமெரிக்காவின் "ஒரே சீனா" கொள்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்த அதன் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தி உள்ளது.

சீனாவை ஒரு செலாவணி மோசடியாளர் என்று கண்டித்தும், தென் சீனக் கடலில் "ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பை" கட்டமைக்கும் அதன் நில சீரமைப்பு நடவடிக்கைகளைச் சாடியும் ட்ரம்ப் ட்வீட் செய்ததன் மூலம், தசாப்தகால இராஜாங்க நடைமுறையை அவர் மீறியதை ஆக்ரோஷமாக நியாயப்படுத்துகிறார். பிரச்சாரத்தின் போது, அவர் சீன இறக்குமதிகள் மீது 45 சதவீத வரிவிதிக்க அச்சுறுத்தினார்—இந்நடவடிக்கை உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தக போரைத் தூண்டிவிடக்கூடியதாகும்.

போஸ்டிற்கு Jie கூறுகையில், “அதனுடன் ஒப்பிடுகையில், சீனாவிற்கான ஒரு தூதரின் நியமனம், மிகவும் சிந்திக்கத்தக்கதாக இருந்தாலும், அவரது ட்வீட்கள் மற்றும் தாய்வான் அழைப்பின் நிச்சயமற்றத்தன்மையால் ஏற்பட்ட பாதிப்பை அனேகமாக சீர்படுத்தாது,” என்றார்.

தாய்வானுடன் முழுவதுமான இராஜாங்க உறவுகளைக் கொண்டுள்ள நிக்கரகுவா, குவாத்தமாலா மற்றும் எல் சால்வாடோருக்கு தாய்வான் ஜனாதிபதி ஜனவரியில் விஜயம் செய்கையில், இடைத்தங்கல் வழியில் நியூ யோர்க்கிற்கு வந்து செல்ல அமெரிக்கா அவரை அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டதன் மூலமாக, சீன அரசாங்கம் ட்ரம்ப் தொலைபேசி அழைப்பிற்கு விடையிறுத்துள்ளது. அமெரிக்கா வழியாக சாய் வருவதை தடுக்க முடியாதென அமெரிக்க வெளியுறவுத்துறை நிராகரித்துவிட்டது.

தாய்வானுடன் நீண்டகால தொடர்பு வைத்துள்ள ட்ரம்பின் தலைமை தளபதி ரியன்ஸ் பிரைபஸ் உட்பட அவரது குழுவின் அங்கத்தவர்களை சாய் பிரதிநிதிகள் குழு சந்திக்க விரும்புவதாக தாய்வானின் Liberty Times குறிப்பிட்டுள்ளது. அதுபோன்றவொரு நகர்வு சீனாவிற்கும் மற்றும் வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான பதட்டங்களை பெரிதும் தீவிரப்படுத்தும்.

ட்ரம்பின் ஆலோகசர்கள், சீனாவுடனான போருக்கு தயாராக ஆசியா எங்கிலும் ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பு மற்றும் கூட்டணிகளை பலப்படுத்துவதை உள்ளடக்கிய ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" தொடங்கி வைக்கப்பட்ட சீனாவுடனான அமெரிக்க மோதலின் ஒரு தீவிரப்பாட்டிற்கு ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளனர்.

தாய்வான் உடனான ட்ரம்பின் ஆத்திரமூட்டும் தொலைபேசி அழைப்பானது, புதிய நிர்வாகம் பெய்ஜிங்கிடம் இருந்து விட்டுக்கொடுப்புகளை பெறவும் மற்றும் ஆசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்கும் முயல பிரயோகிக்கும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கான வெறும் ஒரு சமிக்ஞையாக மட்டுமே உள்ளது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், அவரது பொறுப்பற்ற அதிக-அபாயகரமான சூதாட்டங்களை முன்னெடுக்கையில் உயர்மட்ட சீன தலைமையுடன் ஒரு நம்பகமான தொடர்பு வழியை வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கே பிரான்ஸ்டாட் ஐ நியமித்துள்ளார்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

தாய்வான் உடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்: சீனாவிற்கு எதிரான ஓர் ஆத்திரமூட்டல்
[6 December 2016]