ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Central Bank rejects request by Italy for more time to rescue ailing lender

நலிந்த வங்கியை மீட்பதற்கான இத்தாலியின் கூடுதல் அவகாச கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி நிராகரிக்கிறது

By Nick Beams
10 December 2016

இத்தாலியின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான Monte dei Paschi di Siena (MPS) ஐ மீட்க, சிறு முதலீட்டாளர்கள் மற்றும் கடன்பத்திரதாரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் அரசு பிணையெடுப்பை பெரிதும் அனேகமாக வழங்குவதற்கான தனியார்துறை தலைமையிலான உடன்படிக்கைக்கு இறுதி காலக்கெடுவைத் தள்ளிப்போட வேண்டுமென்ற கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி நிராகரித்துள்ளது.

ஐந்து பில்லியன் யூரோ மீட்சி நடவடிக்கையை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கும் விதத்தில், அந்த உடன்படிக்கை மீதான இறுதி காலக்கெடுவை ஜனவரி 20 க்கு நீடிக்க வேண்டுமென MPS வங்கி ஐரோப்பிய மத்திய வங்கியின் கண்காணிப்பு குழுவிற்கு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

கட்டாரின் அரசு நல நிதியத்திலிருந்து 2 பில்லியன் யூரோ வரையிலான நிதிகளைப் பாய்ச்சுவதையும் மற்றும் சிக்கலான பல்வேறு பங்கு பரிவர்த்தனை கடன்களையும் சார்ந்துள்ள இந்த உடன்படிக்கை, இந்த வாரத்திற்குள் தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் கடந்த ஞாயிறன்று இத்தாலிய சர்வஜன வாக்கெடுப்பில் அதிகளவில் பதிவான "வேண்டாம்" வாக்குகள் மற்றும் அதற்கடுத்து பிரதம மந்திரி மத்தேயோ ரென்சியின் இராஜினாமா ஆகியவையும், அத்துடன் ஒரு புதிய அரசாங்கம் அமைப்பதன் மீது தனக்கு தெளிவு கிடைக்கும் வரையில் முதலீடு செய்யப் போவதில்லையென கட்டார் நிதியம் கூறியதோடு சேர்ந்து, அந்த மீட்பு திட்டம் குழப்பத்தில் சிக்கியது.

ராய்டர்ஸின் ஓர் அறிக்கை மற்றும் அடுத்தடுத்து பைனான்சியல் டைம்ஸ் மற்றும் கார்டியனில் வெளியான அறிக்கைகளின்படி, ஐரோப்பிய வங்கியியல் விதிமுறைகளை ஏற்றுள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரே கண்காணிப்பு இயங்குமுறையின் பொதுக்குழு, நேற்றைய ஒரு கூட்டத்தில் இறுதி நாளைத் தள்ளிப்போடுவதற்கான கோரிக்கையை நிராகரித்தது.

MPS பங்குகள் அவற்றின் விலைகளில் கூடுதலாக 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால் அவற்றின் வர்த்தகத்தை நிறுத்தியிருப்பதைக் குறித்து ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இத்தாலிய நிதித்துறை இதுவரையில் கருத்துரைக்க மறுத்துள்ளன. இத்தாலிய ஊடக செய்திகளின்படி, MPS அவசர பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது மற்றும் வாரயிறுதி வாக்கில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

“கலந்துரையாடல்களைக் குறித்து கருத்து தெரிவித்தவர்களை" மேற்கோளிட்டு, பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில், “MPS இன் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே விடப்பட்டால், அது இத்தாலியின் வங்கியியல் அமைப்புமுறை முழுவதிலும் ஒரு அமைப்புரீதியிலான நெருக்கடிக்கு இட்டுச் செல்லுமென" அஞ்சியே அக்கோரிக்கையை கண்காணிப்பு குழு நிராகரித்ததாக குறிப்பிட்டது.

அரசு ஏதேனும் வடிவத்தில் ஒரு பிணையெடுப்பை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவு ஏறத்தாழ நிச்சயமாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இந்தாண்டு நடைமுறைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளின் கீழ், அரசு நிதியை எந்த வடிவத்தில் உள்செலுத்தினாலும் அது கடன்வழங்குனர்கள் மீது, குறிப்பாக சிறு சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்கள் மீது, இழப்புகளைத் திணிப்பதன் மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது.

இதுபோன்றவொரு நகர்வு அரசியல்ரீதியில் வெடிப்பார்ந்து இருக்கும். பெரும்பாலும் கையிருப்புகளை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளர்களே, சிறு பத்திரதாரர்களில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். சுமார் 400 குடும்பங்கள் MPS இன் 2 பில்லியன் மதிப்பிலான பத்திரங்களை வைத்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 2011 இன் ஐரோப்பிய வங்கியியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர்களது முதலீடுகள் வைப்பு நிதி போலவே அதேயளவிற்கு பாதுகாப்பானவை என்ற உத்தரவாதங்களுடன், அவர்கள் அத்தகைய முதலீடுகளைச் செய்ய தள்ளப்பட்டிருந்தார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் முறியும் நிலைக்குச் சென்ற நான்கு சிறு வங்கிகளில் அதுபோன்ற பத்திரதாரர்களின் ஒரு "உள்-பிணையேற்பு" (bail-in) அரசியல் மேலெழுச்சியை உண்டாக்கியது, அதில் ஒரு சிறிய முதலீட்டாளர் தற்கொலையே செய்து கொண்டார். MPS சம்பந்தமாக அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும், மிகப் பெரியளவில் நடந்தால், ரென்சி அரசாங்கத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து ஏற்படக்கூடிய இத்தாலிய தேர்தல்களில் அதுவொரு மிகப்பெரும் பிரச்சார பிரச்சினையாக மாறி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஓர் இயக்கத்திற்கும் வழிவகுக்கலாம்.

வலதுசாரி வெகுஜனவாத ஐந்து நட்சத்திர இயக்கத்தைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள், அந்த அமைப்பின் ஸ்தாபகர் பெப்பே கிறில்லோவின் வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகையில், ஓராண்டுக்கு முன்னர் நடந்ததைப் போல சிறிய சேமிப்பாளர்களை பாதித்த உள்-பிணையேற்பு விதிமுறைகளை தவிர்க்க, MPS ஐ அரசால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டது.

“இது ஐரோப்பிய ஒன்றியத்தை பயமுறுத்துவதற்கும் மற்றும் முறித்துக் கொள்ள சாத்தியமான நடைமுறையைத் தூண்டுவதற்கும் உரிய நேரமில்லை. சீர்குலைந்த உள்-பிணையேற்பின் விளைவுகள் குறைந்தபட்சமாக கூறுவதானாலும் பேரழிவுகரமாக இருக்கும். MPS இன் அளவை ஒருவர் கவனத்தில் கொண்டால், ஏறத்தாழ ஊழிக்காலப் பேரழிவாக இருக்கும்,” என்று குறிப்பிட்டது.

இது "பற்றாக்குறை குறித்து அதிர்ச்சியூட்டுவதற்கான நேரமில்லை… புரூசெல்ஸின் மேசையில் உரக்க குரல் கொடுக்க வேண்டிய நேரம்,” என்று கார்டியனில் வெளியான செய்தி குறிப்பிட்டது.

MPS மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு மீட்பு திட்டத்துடன் வருவதற்கான இறுதிகட்ட முயற்சியைக் கொண்டு வரலாம், ஆனால் புதிய அரசாங்கம் அமைப்பது மற்றும் அதன் கொள்கைகள் மீதான அரசியல் நிச்சயமற்றத்தன்மை அதை எட்ட முடியாமல் செய்து விடக்கூடும்.

இடர்களுக்கான ஆலோசனை அமைப்பான யுரேஷிய குழுமத்தின் ஐரோப்பிய பிரச்சினைகளுக்கான பிரிவின் தலைவர் முஸ்தபா ரஹ்மான் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், ஐரோப்பிய அமைப்புகள் எப்போதுமே அந்த தனியார்-துறை திட்டம் குறித்து "ஐயுறவுடன்" இருப்பதாக தெரிவித்தார். “அது மறுசீரமைப்பு திட்டம் மீது விருப்பம் குறைந்திருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல, ரென்சியின் இராஜினாமா மற்றும் ரோமில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றின் வெளிச்சத்தில், காப்பாற்றும் ஒரு முதலீட்டாளரை பெறுவதற்கான ஆற்றல் மிக குறைவாகவே இருக்கலாம் என்பதையும் காட்டுகிறது,” என்றார்.

ஒரு 360 பில்லியன் யூரோ மதிப்பிலான வாராக் கடன்களால் சுமையேறி உள்ள அந்நாட்டின் ஒட்டுமொத்த வங்கியியல் அமைப்புமுறையில் ஒரு மறுசீரமைப்பை திணிப்பதற்கு, இத்தாலிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டின் நிதி அமைப்புகளை நிர்பந்திக்கும் ஒரு பரந்த திட்டத்தின் பாகமாக ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவுகள் இருக்கலாம் என்பதாக தெரிகிறது.

இத்தாலிய அரசால் MPS க்கான "முன்னெச்சரிக்கையான மீள்மூலதனமயமாக்கல்"—அதாவது ஒரு அமைப்பின் மீள்மூலதனமயமாக்கல் இப்போதும் பிரச்சினையைத் தீர்க்கும் புள்ளியாக கருதப்படுகிறது—வாராக் கடன்களில் மூழ்கியுள்ள ஏனைய இத்தாலிய வங்கிகளுக்குள் அரசு நிதிகளை இதேபோல பாய்ச்சுவதற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகாரிகள் வெளியிட்டிருப்பதாக ராய்டர்ஸ் குறிப்பிட்டது.

அந்த செய்தி நிறுவனம் மேற்கோளிட்ட ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரு அநாமதேய அதிகாரியின் கருத்துப்படி, MPS க்கு மீள்மூலதனமயமாக்கல் அவசியப்படுவதில் கருத்தொற்றுமை உள்ளது. “அது நடந்ததும், அது ஏனைய வங்கிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக சேவையாற்றும்.”

ஆனால் ராய்டர்ஸ் செய்தி குறிப்பிட்டதைப் போல, அதுபோன்றவொரு அரசு தலையீடு என்பது சிறிய பத்திர முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தனியார் முதலீட்டாளர்களும் முதலில் இழப்புகளை ஏற்ற பின்னர் மட்டுமே அதை நடத்த முடியும் என்பதாக புதிய ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள் இந்தாண்டு வரையறுக்கப்படுகையில், அது ஓர் "அரசியல் சம்பிரதாயமாக" மாறிவிடும்.

அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் மற்றும் பேரம்பேசல்களின் விளைவு என்னவாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த இத்தாலிய வங்கியியல் அமைப்புமுறையில் நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும். அடுத்து ஏற்படக்கூடிய சாத்தியமான நெருக்கடி, இத்தாலியின் மிகப்பெரிய வங்கியான UniCredit மற்றும் அதன் ஒரே முக்கியமான உலகளாவிய வங்கி அமைப்பு மீது மையம் கொண்டுள்ளது.

UniCredit அதன் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தும் ஒரு முயற்சியின் பாகமாக, அடுத்த செவ்வாயன்று 13 பில்லியன் யூரோ மூலதனத்தை உயர்த்தும் ஒரு திட்டத்தை அறிவிக்க உள்ளது. ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியால் கட்டளையிடப்படும் நிபந்தனைகளின் கீழ் MPS க்கு ஒரு பிணையெடுப்பை வழங்க அரசு முடிவெடுக்குமேயானால், அத்தகைய திட்டங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, MPS இன் "முன்னெச்சரிக்கையான மீள்மூலதனமயமாக்கல்" UniCredit இன் மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதை குறித்து அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று மூத்த வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

MPS நெருக்கடியை முகங்கொடுத்துள்ள போதினும் இதுவரையில் ஐரோப்பிய நிதியியல் சந்தைகள் ஸ்திரமாகவே உள்ளன. ஆனால் வங்கியியல் அமைப்புமுறையின் இடைதொடர்புகள் காரணமாக "தொற்றுதல்" (contagion) என்று அழைக்கப்படுவது ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. சான்றாக ஜேர்மனியின் நான்காவது மிகப் பெரிய வங்கியான Hypovereinsbank வங்கி UniCredit வங்கிக்கு சொந்தமானதாகும், அதேவேளையில் இத்தாலியின் எட்டாவது மிகப் பெரிய கடன் வழங்கும் நிறுவனமான Banca Nazionale del Lavro, பிரான்சின் மிகப் பெரிய வங்கியான BNP Paribas க்கு சொந்தமானதாகும், இத்தாலியின் ஏழாவது மிகப் பெரிய கடன் வழங்கும் அமைப்பான Cariparma ஒரு பிரதான பிரெஞ்சு வங்கியான Credit Agricole க்கு சொந்தமானதாகும்.