ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European powers criticize Trump’s threats against China

சீனாவிற்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை ஐரோப்பிய அதிகாரங்கள் விமர்சிக்கின்றன

By Alex Lantier
17 December 2016

ஒரு மாதத்திற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வரவேற்கப்பட்டதுடன் சேர்ந்து, அவரது "முதலிடத்தில் அமெரிக்கா" வேலைத்திட்டத்தால் ஏற்கனவே ஐரோப்பிய சக்திகளுக்குள் பதட்டங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இவ்வாரம், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அதிகாரிகள் பகிரங்கமாகவே 1970 களுக்குப் பின்னர் தாய்வான் மற்றும் சீனாவுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையிலான உறவுகளை வகைப்படுத்திய "ஒரே சீனா" கொள்கையை ட்ரம்ப் கேள்விக்குட்படுத்தியதில் இருந்து தங்களைத்தாங்களே தொலைவில் நிறுத்திக் கொண்டனர்.

புதனன்று, அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான அட்மிரல் ஹாரி ஹாரீஸ் தென் சீனக் கடலில் சீனாவை எதிர்க்க அச்சுறுத்தி இருந்த நிலையில், பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜோன்-மார்க் எய்ரோ France2 தொலைக்காட்சிக்குக் கூறுகையில், ட்ரம்பின் சீனக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். “சீனாவுடன் எச்சரிக்கையாக இருங்கள்” "அதுவொரு மிகப்பெரிய நாடு. சீனாவுடன் உடன்பாடின்மை இருக்கலாம், ஆனால் ஒரு பங்காளியுடன் இவ்விதத்தில் நீங்கள் பேசக் கூடாது,” என்றார்.

“ஒரே சீனா" கொள்கையை மறுத்தளிப்பதன் மூலமாக சீன பிராந்திய ஒருமைப்பாட்டை மறைமுகமாக அச்சுறுத்துவது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எய்ரோ எச்சரித்தார். “அபாயகரமான சுழற்சிக்குள் இறங்குவதை ஒருவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று கூறிய அவர், “அதன் ஒற்றுமை கேள்விக்குள்ளாகிறது என்று சீனா உணரும்போது, அது புத்திசாலித்தனமாக இருக்காது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது, ஆனால் வரவிருக்கும் நாட்களில் [ட்ரம்பின்] புதிய நிர்வாகக் குழு அமைதியோடும் பொறுப்போடும், மிகவும் உறுதியற்ற ஜனாதிபதி பதவிகாலத்தை நிர்வகிக்க போதுமானளவிற்கு பழகிவிடும் என்று நம்புகிறோம்,” என்றார்.

சீனாவிற்கு எதிரான ட்ரம்பின் ஆக்ரோஷத்தன்மை, தற்செயலானதோ அல்லது அனுபவமின்மையின் விளைவோ கிடையாது. அது "முதலிடத்தில் அமெரிக்கா" வேலைத்திட்டத்தின் மூலோபாய நிர்பந்தங்களில் இருந்து தவிர்க்கவியலாமல் பெருக்கெடுக்கிறது. 1979 இல் ஸ்ராலினிச ஆட்சி சீனாவை அன்னிய மூலதனத்திற்கு திறந்துவிட்டதற்குப் பின்னர் இருந்து தசாப்தங்களாக ஏற்பட்ட சீனாவின் பொருளாதார பலத்தின் வளர்ச்சியை ட்ரம்ப் தலைகீழாக்க விரும்புகிறார். அதன் நீடித்த பொருளாதார வீழ்ச்சிக்கு இடையிலும், பெய்ஜிங் உடனான ஒரு தீர்க்கமான பலப்பரீட்சை மூலமாக, உலக மேலாதிக்க சக்தியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தைப் பேணுவதற்கு அவர் விரும்புகிறார்.

இக்கொள்கை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே, குறிப்பாக வாஷிங்டன் சீனாவை நோக்கி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளை ஐரோப்பாவிற்கு எதிராக திருப்பினால், அழிவுகரமான மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் உணர்கின்றன.

இவ்வாரம், பிரெஞ்சு தொழில்துறை அமைச்சர் கிறிஸ்தோப் சிரூக் (Christophe Sirugue) பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், ஐரோப்பிய பண்டங்கள் மீது ட்ரம்ப் தண்டிக்கும் வகையிலான வரிகளை விதித்தால் ஐரோப்பா ஒரு "பார்வையாளராக" இருக்காது, ஐரோப்பா வாஷிங்டனுடன் வர்த்தக போருக்கு தயாரிப்பு செய்ய வேண்டும் என்றார். “பிரச்சாரத்தின் போது அவர் சூளுரைத்திருந்த பாதுகாப்புவாதத்தை அவர் ஏற்றால், ஐரோப்பா அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கும்… அங்கே நிதிய வழிவகைகள் உள்ளன, அங்கே கண்காணிப்பு வழிவகைகள் உள்ளன, மொத்தத்தில்” அமெரிக்காவிற்கு எதிராக "நடைமுறைப்படுத்த கூடிய பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளன,” என்றார்.

எய்ரோ மற்றும் சிரூக் இன் கருத்துக்கள், அடுத்த ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் பதவியிழக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படும் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் கண்ணோட்டங்களை காட்டிலும் அதிகமானதைப் பிரதிபலிக்கின்றன. திங்களன்று, ட்ரம்ப் "ஒரே சீனா" கொள்கையை சவால்விடுத்த சற்று பின்னர், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் குறிப்பிடுகையில், ஐரோப்பாவின் முன்னணி பொருளாதார சக்தியான ஜேர்மனி ட்ரம்பின் கொள்கையோடு அணி சேர்த்துக் கொள்ளாது என்றார். “நாங்கள் தொடர்ந்து ஒரே சீனா கொள்கையோடு நிற்போம் மற்றும் எங்கள் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை,” என்றவர் தெரிவித்தார்.

ட்ரம்பின் கொள்கைகள் பத்திரிகைகளாலும் தாக்கப்பட்டன. அவரது சீன கொள்கை மற்றும் ரஷ்யா மீதான தடையாணைகளைத் தளர்த்துதல் குறித்து பேச்சுகள் மீது பிரெஞ்சு தினசரி லு மொண்ட் எழுதியது: “இத்தகைய தீவிர மாற்றங்களானது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரங்கள் மீது ஐரோப்பாவிற்கு முக்கிய நடைமுறை மாற்றங்களைக் கொண்டிருக்கும். மேற்கத்திய நிறுவனங்களை பொறுத்த வரையில், தவிர்க்கவியலாத சீன-அமெரிக்க பதட்டங்களின் தாக்கம் என்னவாக இருக்கும்?… அமெரிக்க வாக்காளர்கள் டொனால்ட் ட்ரம்பை தேர்ந்தெடுத்துள்ளனர். உலகின் ஏனைய இடங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆனால் இவர்களுடன் தான் ஒரு ஜனாதிபதி இணைந்து இயங்க வேண்டியிருக்கும். உங்கள் இருக்கை பட்டைகளை (seat belts) இறுக்கிக் கொள்ளுங்கள்,” என்றது குறிப்பிட்டது.

ஜேர்மன் அரசு வானொலி Deutsche Welle அறிவித்தது: “ட்ரம்பின் அத்துமீறல் ஓர் அபாயகரமான பிழையான கணக்கீடாகும். அவர் எவரும் வெற்றியாளராக முடியாத ஒரு விளையாட்டை தொடங்கி உள்ளார். அவற்றின் பரந்த பொருளாதார சார்புதன்மையால், அமெரிக்காவும் சீன மக்கள் குடியரசும் இரண்டுமே, வர்த்தக போர் ஒருபுறம் இருக்கட்டும், உறவுகள் நாசமாக்கப்பட்டு பாரியளவில் பாதிப்படையும் … உலகில் இப்போது போதுமானளவிற்கு தீர்க்கப்படாத நெருக்கடிகள் உள்ளன. ட்ரம்ப் ஏன் தேவையின்றி மேற்கொண்டு நெருக்கடிகளைத் தூண்டிவிடுகிறார் என்பது முற்றிலும் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது.”

இத்தகைய அறிக்கைகள், “முதலிடத்தில் அமெரிக்கா" கொள்கை உலகளாவிய அளவில் பேரழிவுகரமான வர்த்தக போரை அல்லது ஒரு பயங்கரமான வெடிகுண்டு போரை தூண்டிவிட அச்சுறுத்துகின்றது என்ற, ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் அதிகரித்துவரும் புரிதலையே பிரதிபலிக்கின்றன. ட்ரம்ப் அவரது பிரச்சாரத்தின் போது அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே நேட்டோ இராணுவ கூட்டணியின் நிலைக்கும்தன்மை மீது ஐயத்தை ஏற்படுத்துவதோடு, உலக முதலாளித்துவத்தின் முக்கிய அரசியல் அமைப்புகள் தெளிவாக பொறிந்து போகும் விளிம்பில் உள்ளன.

ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் சோவியத் அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, நேட்டோ கூட்டணியை அதன் பொதுவான எதிரி என்பதிலிருந்து அகற்றி, நேட்டோ சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீவிரப்படுத்தியது. “பலதுருவ" உலகத்திற்கு அழைப்புவிடுத்து, பிரான்சும் ஜேர்மனியும் 2003 இல் அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத ஈராக் படையெடுப்பை எதிர்த்தன.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு முந்தைய ஆண்டுகளில் அவர்கள் இந்த எதிர்ப்பை கைவிட்டு, பின்னர் லிபியா, சிரியா, மாலி மற்றும் அதற்கு அப்பாலும் புதிய போர்களின் ஓர் அலையைத் தொடங்குவதில் அவை வாஷிங்டனுடன் சேர்ந்த போதினும், பிரதான சக்திகளுக்கு இடையே அடியிலிருந்த முரண்பாடுகள் தீவிரமயப்பட்டு மட்டுமே உள்ளன.

சீனாவிற்கான சமிபத்திய ஒரு குறிப்பில், வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சில் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் அதிகரித்துவரும் மூலோபாய நிச்சயமற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டியது. “ஐரோப்பா இன்னமும் அமெரிக்காவிற்கு அவசியப்படுகிறது, ஆனால் பாதுகாப்பு அர்த்தத்தில் அது ஆசியாவை விட குறைவாகவே முக்கியமானது, அது சமீபத்திய தசாப்தங்களில் மொத்த பளுவையும் அமெரிக்கா தன்மீது சுமத்தியுள்ளது. அதனிடம் ஒரு ஒத்துப்போகும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை இல்லை, இரண்டு பிராந்திய சக்திகளான ரஷ்யா மற்றும் துருக்கியுடன் அது சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்த உள்ளடக்கத்தில், சீனாவின் அபிலாஷைகளை அடக்குவதற்காக ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்றவற்றுடன் ஒரு கூட்டணியை கட்டமைப்பது" ஐரோப்பாவை விட "ட்ரம்பின் அமெரிக்காவிற்கு மிகவும் மதிப்புடையதாக இருக்கக்கூடும்" என்றது குறிப்பிட்டது.

2014 இல், சிரிய உள்நாட்டு போர் மற்றும் உக்ரேன் விவகாரங்களில் ரஷ்யாவுடன் அமெரிக்க தலைமையிலான மோதலால், மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கி முன்னெடுப்பால்" ஏகாதிபத்திய போர் முனைவு தீவிரமடைந்ததும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. தொழிலாள வர்க்கத்தை இலக்கில் வைத்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடையாணைகளை ஆகியவற்றால் ஐரோப்பிய பொருளாதாரம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரங்கள் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இல் இணைய வேண்டாமென்ற வாஷிங்டனின் அழைப்புக்கு கீழ்படிய மறுத்தன.

பெய்ஜிங் அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை (OBOR) திட்டத்தின் கீழ் முதலீடுகளையும் ஒப்பந்தங்களையும் வழங்குகின்ற நிலையில், அவை மேசையில் ஒரு முக்கிய இடத்தை பெற நோக்கம் கொண்டன. இத்திட்டம் யுரேஷிய பெருநிலத்தை இணைக்கும் வகையில் துறைமுகம், இரயில், சாலை மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புகளை அடுத்த தசாப்தத்தில் 1 ட்ரில்லியன் டாலரும், மொத்தத்தில் 3 ட்ரில்லியன் டாலரும் செலவிட உள்ளது. இந்த முதலீடானது பணவீக்கத்திற்கு நிகராக மாற்றப்பட்டால் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பாவைக் கட்டமைப்பதற்கான அமெரிக்காவின் மார்ஷல் திட்டத்தின் அளவை விட 12 மடங்கு பெரியதென்று Fortune இதழ் மதிப்பிடுகிறது.

சீனாவுடனான மிகப் பெரிய அமெரிக்க வர்த்தக மோதலுக்கான சாத்தியக்கூறு, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை தீர்க்கவியலாத ஊசலாட்டத்தில் நிறுத்துகிறது. சீனா கடந்த ஆண்டு 482 பில்லியன் டாலர் பண்டங்களை அமெரிக்காவிற்கும், 350 பில்லியன் டாலர் பண்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஏற்றுமதி செய்திருந்த நிலையில், இது ஒரு பேரழிவுகரமான வர்த்த மோதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது.

ஒருபுறம், அது ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பணிந்து சீனாவை தனிமைப்படுத்தி திணறடிக்க உதவலாம். எவ்வாறாயினும் இது ஏற்கனவே மரணப்படுக்கையில் கிடக்கும் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய விலை கொடுக்க செய்யும். அது சீன முதலீட்டை அணுகுவதில் இருந்து தடுத்து, எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய-சீன கூட்டு திட்டங்களையும் தொடர்வதன் மீது அமெரிக்க நெறிமுறை அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கும். ஏற்கனவே, அமெரிக்க நெறிமுறை அமைப்புகள் தேசிய பாதுகாப்பு அடித்தளங்களில் எண்ணற்ற பல செயல்பாடுகளை முடக்கி உள்ளன—மிக சமீபத்தில், ஜேர்மன் மின்னணு சிப் உற்பத்தி சாதன தயாரிப்பு நிறுவனமான Aixtron க்கு Fujian Grand சிப் முதலீட்டு நிதியத்தின் முயற்சியைத் தடுத்தது.

அதுபோன்றவொரு சூழலை அனுமானித்து, சில ஐரோப்பிய அதிகாரிகள் சீனாவிற்கு எதிரான ஐரோப்பிய வர்த்தக போர் நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்து வருகின்றனர். “ட்ரம்ப் சீனாவிற்கு எதிராக தண்டிக்கும் வகையிலான வரிகளை விதித்தால், அது பாரியளவில் வர்த்தக ஓட்டத்தை ஐரோப்பாவை நோக்கி திரும்புவதற்கு இட்டுச் செல்லும்,” என்று ஜேர்மனியின் இயந்திர பொறியியல் தொழில்துறை அமைப்பின் Ulrich Ackermann தெரிவித்தார். சீன நிறுவனங்கள் "ஏனைய சந்தைகளை பார்க்கக்கூடும், அவற்றின் கவனம் ஐரோப்பாவை நோக்கி திரும்பக்கூடும். பின் நாம் நமது சந்தைகளைப் பாதுகாக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

மறுபுறம், பிரதான ஐரோப்பிய சக்திகள் சீனாவுடனான அமெரிக்க மோதல்களை எதிர்க்க முயலும். எவ்வாறிருப்பினும் பென்டகன் பசிபிக்கில் அதன் பிரசன்னத்தை தீவிரப்படுத்துகையில், இது அமெரிக்க படைகளுடனான ஓர் இராணுவ மோதலைத் தூண்டிவிடும் அபாயத்திற்கு செல்கிறது. இதற்காக ஐரோப்பிய சக்திகள் மக்கள்விரோதமான வரவு-செலவு திட்டக் கணக்கை அதிகரிப்பதில் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகின்றன என்றாலும், அவை இன்னும் இதற்கு தயாராகவில்லை.

இவ்விரு நடவடிக்கையின் போக்குமே, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே கையாள்வதற்கான எந்தவொரு முயற்சியும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டன் வாக்குகளால் ஏற்கனவே ஆழ்ந்த நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை ஆழமாக ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கி ஐரோப்பாவில் வர்க்க பதட்டங்களைக் கூர்மையாக்கும்.