ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The background to the euro crisis

யூரோ நெருக்கடியின் பின்னணி

By Peter Schwarz
7 February 2012

இந்தக் கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் ஒரு உறுப்பினரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலருமான பீட்டர் சுவார்ஸ் பேர்லினில் ஜனவரி 7, 2012 அன்று நடந்த சோசலிச சமத்துவக் கட்சி (PSG) கூட்டத்தில் அளித்த ஒரு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் 1930களுக்கு பிந்தைய தனது ஆழமான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ஐரோப்பா மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. யூரோவும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து உயிர்வாழுமா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நெருக்கடியின் முக்கியத்துவத்தையும் பின்விளைவுகளையும் புரிந்து கொள்வதற்கு அதன் உடனடியான பொருளாதார வடிவங்களை மட்டும் ஆய்வது போதுமானதல்ல. இந்த வடிவங்களுக்குப் பின்னால் இருக்கின்ற சமூக உறவுகளையும் ஆராய்வது அவசியமாகும்.

பல ஐரோப்பிய நாடுகளின் தரப்பில் அளவுக்கு அதிகமாகக் கடன்பட்டதன் விளைவே இந்த நெருக்கடி என்று பொதுவாக சித்தரிக்கப்படுகிறது. இந்த நாடுகள் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கும் மீண்டும் நிதியாதாரத்தைப் பெற இயலாத அளவுக்குமான கட்டத்தை அவற்றின் கடன்கள் எட்டி விட்டன என்று வலியுறுத்திக் கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் இந்த அறிவிப்பை மிக நெருக்கமாய் ஆராயந்தால் அது உண்மையல்ல என்பது வெளிப்படும். இவ்வாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த கடன் நிலை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 80 சதவீதம்) அமெரிக்காவினுடையதை விடவும் (100 சதவீதம்) அல்லது ஜப்பானுடையதை விடவும் (220 சதவீதம்) கணிசமாய் குறைவாய்த் தான் உள்ளது. அமெரிக்காவின் கடன்நிலை என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்குக் கீழிருந்த நிலையில் இருந்து 100 சதவீதம் என்கின்ற நிலைக்கு திடீரென அதிகரித்துள்ளது. ஆயினும் அமெரிக்கா பெரிதான பிரச்சினைகள் ஏதுமின்றி இன்னும் தனது கடன்களுக்கு நிதியாதாரத்தைத் திரட்டிக் கொள்ள முடிகிறது.

கிரீஸ் தவிர்த்து (158 சதவீதம்) நெருக்கடியால் மிக அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளே கூட மிக அதிகமான கடன்நிலையில் இருப்பதாகச் சொல்ல முடியாது: ஸ்பெயினில் தேசியக் கடன் நிலைமை 68 சதவீதமாய் உள்ளது, போர்ச்சுகலில் இது 102 சதவீதம், அயர்லாந்தில் 112 சதவீதம், இத்தாலியில் 120 சதவீதம், இது ஏறக்குறைய அது ஐரோப்பிய மண்டலத்தில் சேர்ந்த போது இருந்த அதே அளவு தான். ஜேர்மனி (82 சதவீதம்), பிரான்ஸ் (85 சதவீதம்) மற்றும் பிரிட்டன் (80 சதவீதம்) அரசாங்கங்களின் கடன் நிலைமை என்பது பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு –OECD- நாடுகளின் சராசரி அளவை ஒட்டித் தான் இருக்கிறது.

ஐரோப்பா சர்வதேச நிதிச் சந்தைகளின் இலக்காகியுள்ளது என்கின்ற உண்மைக்கு மற்ற காரணங்களும் இருந்தாக வேண்டும். ஆழமாய் ஆய்வதற்கு கடந்த மூன்று தசாப்தங்களில் இங்கு நடந்திருக்கக் கூடிய சமூக மாற்றங்களை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

சமூகத் துருவப்படுத்தல்

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, மேற்கு ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதற்கு சமூகச் சலுகைகளை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். பாசிசத்திற்கும் போருக்கும் முதலாளித்துவம் எத்தகைய பொறுப்பு கொண்டிருந்தது என்பது மக்களின் நினைவில் அப்போதும் பசுமையாய் இருந்ததுடன், சோசலிசத்துக்கான ஆதரவு பரந்துபட்டு இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் மக்கள் உரிமைகள் இயக்கத்தினை அடியொற்றி ஒரு சர்வதேச வேலைநிறுத்த இயக்கம், சர்வதேச மாணவர் கிளர்ச்சிகள் மற்றும் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவை அபிவிருத்தி கண்ட சமயத்தில் கூட தொழிலாள வர்க்கம் கணிசமான ஊதிய உயர்வுகளையும் மற்ற சமூகச் சலுகைகளையும் பெற்று வந்தது.

ஆயினும், 1980ல் முதலாளித்துவம் ஒரு எதிர்தாக்குதலில் இறங்கியது, அது இன்று வரையும் கூடத் தொடர்கிறது. இந்த எதிர்தாக்குதல் மார்கரெட் தாட்சர் மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகிய மனிதர்களுடன் நெருக்கமாய் தொடர்புபட்டிருக்கிறது என்றாலும் இங்கிலாந்துடன் மற்றும் அமெரிக்காவுடன் மட்டும் மட்டுப்பட்ட விடயமாக இல்லை. அச்சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் PATCO வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கத்தை உடைத்தார், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களுடன் மோதினார். நிதிச் சந்தைகளின் கட்டுப்பாடுகளை விலக்குவதன் மூலமும் தத்தமது நாடுகளின் தொழிற்துறை அடித்தளத்தை விலையாகக் கொடுத்து நிதி மூலதனத்தின் மிக ஒட்டுண்ணித்தனமான கூறுகளை வலுப்படுத்துவதின் மூலமும் இருவரும் ஒன்றுசேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

விளைவு போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கணிசமாய் குறைந்து வந்திருந்த சமூக சமத்துவமின்மை அதிகரிப்பு கண்டது. இந்த அபிவிருத்தியை ஏராளமான புள்ளி விவரங்கள் உறுதி செய்திருக்கின்றன. 1910 முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலும் உலகெங்கிலும் பெரும் பணக்காரர்கள் தேசிய வருவாயில் கொண்டிருந்த பங்கு என்பது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது. இந்தப் போக்கு 1970 ஆம் ஆண்டு முதலாய் தலைகீழானது. இந்தப் போக்கு குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மிகவும் பட்டவர்த்தனமானதாய் இருக்கிறது. அமெரிக்காவில் மொத்த வருவாயில் மேலிருக்கும் ஒரு சதவீதம் பணக்காரர்களது வசம் இருக்கும் அளவின் விகிதாச்சாரம் 1910ல் 20 சதவீதமாக இருந்ததில் இருந்து 1950ல் 10 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. இன்று பெரும் பணக்காரர்களின் 1 சதவீதத்தினர் கொண்டிருக்கும் பங்கு 1910 ஆம் ஆண்டின் மட்டத்திற்கே திரும்பி விட்டது.

கடந்த 30 வருடங்களில், அமெரிக்காவில் மிக ஏழ்மையான 20 சதவீதத்தினரது வருவாய் 4 சதவீதம் வரை சரிவு கண்டிருக்கிறது, அதேசமயத்தில் செல்வம் படைத்த மேல் ஒரு சதவீதத்தினரின் வருவாயோ 270 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த பெருநிறுவனத் துறையின் இலாபங்களில் நிதித் துறையின் பங்கு 10 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமூக சமத்துவமின்மை அதிகரிப்பு நிதித் துறையின் வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது.

முந்தைய புள்ளி விவரங்கள் வருமானம் பற்றி குறிப்பிட்டது. சொத்து விடயத்தில் இந்த சமூகத் துருவப்படுத்தல் இன்னும் கடுமையாக இருக்கிறது. இன்று உலகின் சொத்துக்களில் 40 சதவீதம் உலக மக்கள்தொகையில் செல்வம் படைத்த ஒரு சதவீதத்தினருக்கு உரிமையாக இருக்கிறது, 51 சதவீதம் செல்வம் படைத்த இரு சதவீதத்தினருக்கு உரிமையாகவும், 85 சதவீதம் செல்வம் படைத்த 10 சதவீதத்தினருக்கு உரிமையாகவும் இருக்கிறது. உலக மக்கள்தொகையில் ஏழ்மை படைத்த 50 சதவீத மக்கள் உலகச் சொத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உடைமையாய் கொண்டுள்ளனர்.

சமூகத் துருவப்படுத்தலின் இதே நிகழ்முறை ஐரோப்பியக் கண்டத்திலும் நடந்தது, ஆனால் சற்று தாமதமாக. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுச் செலவின விகிதத்தை எடுத்துப் பார்த்தால் இந்த தாமதம் வெளிப்படக் காணலாம். யூரோ மண்டலத்தில் இது சராசரியாய் 46 சதவீதமாக இருக்கிறது. இது 41 சதவீதம் என்கின்ற பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பின் சராசரியைக் காட்டிலும் மிக அதிகமாகும். அதனால் தான் சமீபத்திய தசாப்தங்களில் சமூக வெட்டுகளும் சம்பள வெட்டுகளும் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் கூட, ஐரோப்பா இன்னமும் சமூகநல அரசின் புகலிடம் என்பதாகவே சர்வதேச நிதி உயரடுக்கினால் கருதப்படுகிறது.

இந்த அம்சத்தில் ஐரோப்பாவின் தலைமையிடத்தில் குறிப்பிடத்தக்க நாடு பிரான்ஸ் ஆகும். இங்கு அரசாங்க செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 சதவீதமாக இருக்கிறது. அமெரிக்காவில் இதே விகிதம் வெறும் 39 சதவீதம் மட்டுமே, வங்கித் துறை சொர்க்கமான சுவிட்சர்லாந்தில் இது வெறும் 33 சதவீதம் மட்டுமே. ஜேர்மனியில் இந்த விகிதம் 43 சதவீதமாக இருக்கிறது, இது பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பின் சராசரியை விட சற்று அதிகம். ஹெகார்ட் ஷ்ரோடர் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட Agenda 2010 வேலைத்திட்டத்தின் காரணத்தால் இது கடந்த 10 வருடங்களில் ஐந்து சதவீதம் வரை சரிவு கண்டிருக்கிறது.

ஐரோப்பா ஏன் சர்வதேச நிதிச் சந்தைகளின் இடைத்தாக்குதலில் சிக்கிக் கொண்டுள்ளது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்தியம்புகின்றன. நிதி மூலதனத்தின் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை, ஐரோப்பிய அரசுகள் ஓய்வூதியங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சமூக சேவைகளிலும் மற்றும் உள்கட்டமைப்பிலும் செலவிடும் தொகை மிக மிக அதிகம். கடந்த ஆறு தசாப்தங்களின் பாதையில் தொழிலாளர் இயக்கத்தால் வென்றெடுத்த சமூக நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையுமே இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி பின்வாங்கச்செய்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் தீர்மானமாய் இருக்கின்றனர்.

கிரீஸ் அவர்களுக்கு ஒரு பரிசோதனைக் களமாய் சேவை செய்கிறது. பெரு நிதிப் பிரதிநிதிகள் இந்நாட்டை திவால்நிலையைக் காட்டி அச்சுறுத்தி ஒன்றன் பின் ஒன்றாக சிக்கன நடவடிக்கைத் தொகுப்பினைத் திணித்து வருகின்றனர். ஊதியங்கள் வெட்டப்படுகின்றன, சமூக சேவைகள் வெட்டப்படுகின்றன, பொதுச் சேவைகள் அகற்றப்படுகின்றன. ஒரு சராசரி கிரேக்க குடிமகனின் வாழ்க்கைத் தரம் சில ஆண்டுகளுக்குள்ளாக 30,40 அல்லது 50 சதவீதம் வரையும் கூட சுருங்கக் கூடும் என மதிப்பிடப்படுகிறது. போர்க்காலத்தை தவிர்த்துப் பார்த்தால் இது முன்னொருபோதும் கண்டிராத சரிவின் அளவாகும்.

இந்த சமூக எதிர்ப்புரட்சியை ஜனநாயக வழிமுறைகளின் மூலமாக அவர்கள் நடத்த முடியாது. ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் மூவர் கூட்டணி கிரேக்க வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டை கைப்பற்றிக் கொண்டுள்ளதோடு நாட்டின் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தொழில்நிபுணர்களைக் கொண்ட ஒரு சட்டவிரோத அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்த்துள்ளது. தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தும் பொருட்டு, பாசிசக் கட்சியான LAOS அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கிரேக்க மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஒரு சிக்கன நடவடிக்கை மண்டலமாக மாற்றுவதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஒரு கடன் கட்டுப்பாட்டுத் தடையை அனைத்து உறுப்பு நாடுகளின் அரசியல் சட்டத்திலும் நுழைப்பதற்கு டிசம்பர் 8-9, 2011ல் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதன் முக்கியத்துவம் இதுதான். வெகுஜன மக்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் சட்டரீதியாக தடையை கொண்டுவரக்கூடிய கடுமையான சேமிப்புக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் நிர்ப்பந்திக்கும் நிர்ணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த அணுகுமுறை வைய்மார் குடியரசின் இறுதிக் கட்டத்தில் ப்ரூனிங் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகரமான கொள்கையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. 1930ல் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே ஜேர்மன் சான்சலராக பதவிக்கு வந்த வலதுசாரி மத்திய கட்சி (Zentrum Party) அரசியல்வாதியான ஹென்றிக் ப்ரூனிங் நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் தலையில் மொத்தமாய் இறக்கினார். ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒரு பக்கத்திலும் சமூக ஜனநாயகக் கட்சியினரின் (SPD) ஆதரவை இன்னொரு பக்கத்திலுமாக தனது ஆட்சிக்கு அடித்தளமாகக் கொண்டார். அவசரநிலைப் பிரகடனத்தின் மூலம் ஆட்சி செய்த ப்ரூனிங் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் தனது முதுகை மறைப்பதற்கு சமூக ஜனநாயகக் கட்சியை நம்பியிருந்தார், அநேக வகையில் இன்று கிரீஸிலும் இத்தாலியிலும் இருக்கும் நிபுணர் அரசாங்கங்கள் செய்வதை ஒத்த வகையில்.

ப்ரூனிங் அரசாங்கம் மிகவும் ஸ்திரமற்றிருந்ததுடன் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன் சிக்கன நடவடிக்கையானது ஜேர்மனியை பொருளாதாரரீதியாக நாசமாக்கியதோடு கடுமையான வர்க்கப் போராட்டங்களை தூண்டியது. கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தோல்வியின் காரணத்தால் இந்தப் போராட்டங்களில் இருந்து தேசிய சோசலிஸ்டுகள் வெற்றியாளர்களாய் எழுந்தார்கள். 1932ல் ப்ரூனிங் அரசாங்கத்தைத் தொடர்ந்து அடோல்ஃப் ஹிட்லர் 1933 ஜனவரியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக ஜெனரல்கள் பிரன்ஸ் வொன் பாப்பன் மற்றும் குர்ட் வொன் ஸ்லைசர் ஆகியோரது குறைந்த வாழ்க்கைகாலத்தை கொண்டிருந்த சர்வாதிகாரங்கள் வந்தன.

இன்று இதை உணர்ந்து கொண்டு ப்ரூனிங் வகையில் சிக்கன நடவடிக்கை என்னும் நாசகரமான கொள்கையை மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் உயரடுக்கிற்கு விடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு இன்று பஞ்சமேதும் இல்லை. ஜேர்மன் இடது கட்சியின் மொத்தக் கொள்கையுமே இந்த வடிவத்தைத் தான் எடுக்கிறது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் “சமூக சந்தை பொருளாதாரத்திற்கு” (social market economy) திரும்ப இந்த கட்சி அழைப்பு விடுப்பதோடு தன் முன்மாதிரியாக கன்சர்வேடிவ் சான்சலரான கொன்ராட் அடினவரின் அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராய் இருந்த லூட்விக் ஏர்கார்டினை முன்மாதிரியாக பிரகடனம் செய்கிறது.

எப்படியிருந்தாலும் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் திரும்புவதென்பது ஒரு 80 வயது முதியவர் 20 வயது இளைஞனாக மாறுவதைப் போன்றே சாத்தியமில்லாததாகும். மேலே சுருக்கமாகக் காட்டிய சமூக மாற்றங்களால் இது ஏற்கனவே சாத்தியமில்லாததாகி விட்டது. வருவாய் மற்றும் சொத்துக்களின் இந்த மறுபகிர்வில் இருந்து எழுந்திருக்கும் நிதிய உயரடுக்கு பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் அத்தனை துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அது தனது சிறப்புரி சலுகைகளை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க தீர்மானகரமாக இருக்கிறது.

நிதிய உயரடுக்கின் சக்தி

உலகப் பொருளாதார நெருக்கடி இருந்தாலும் கூட சமீப வருடங்களில் ஒட்டுமொத்த ஐரோப்பிய அரசாங்கங்களின் கடன் தொகையைக் காட்டிலும் ஐரோப்பிய கோடீஸ்வரர்களின் மொத்தச் சொத்துகள் வேகமாய் வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த 3 மில்லியன் மில்லியனர்களின் செல்வம் கடந்த 13வருடங்களில் இருமடங்காகி இருக்கிறது, அரசாங்கக் கடன்கள் இதே சதவீத அதிகரிப்பைக் காண 15 வருடங்கள் பிடித்தது. ஐரோப்பிய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துகள் இப்போது 10 டிரில்லியன் டாலர்களாய் உள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் கடன்களையும் ஒரேதரத்தில் தீர்த்து விடுவதற்குப் போதுமான தொகையாகும்.

ஜேர்மனியில் இருக்கும் சுமார் 830.000 கோடீஸ்வரர்களின் நிதிச் சொத்தாக மட்டும் சுமார் 2.2 டிரில்லியன் டாலர் உள்ளது. இது நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூராட்சி சபைகளின் மொத்தத்தின் கூட்டுக் கடன் தொகையை விடவும் அதிகமானதாகும். கிரேக்கத்தின் கோடீஸ்வர தனிநபர்கள் வெளிநாட்டுக் கணக்குகளில் 560 பில்லியன் யூரோவை பதுக்கி வைத்துள்ளனர் என ஜேர்மனியின் முன்னணி வணிகப் பத்திரிகைகளில் ஒன்றான Handelsblatt தெரிவித்திருக்கிறது. இத்தொகை கிரேக்கத்தின் தேசியக் கடனை விட ஏறக்குறைய இரு மடங்காகும்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தியமையும் பெருவணிகங்களுக்கும் அதியுயர் சம்பளம் பெறுவோருக்குக்கும் பெருமளவு வரி வெட்டுகளை வழங்கியதும் தான் இத்தகைய வகையில் சொத்துகளின் அதீத வளர்ச்சிக்குக் காரணமாகும். ஜேர்மனியில் கடந்த தசாப்தத்தில் வணிக நிறுவனங்களுக்கும் நிதி அமைப்புகளுக்கும் கொடுத்த வரி விலக்குகள் திரும்பப் பெறப்படுமானால், இந்த அரசின் திறைசேரி 100பில்லியன் யூரோவுக்கும் அதிகமாய் கூடுதலாய் நிரம்பும்.

இந்த பெரும் சொத்துகள் எல்லாம் ஊக வணிகத்தின் மூலமாக “அதாவது வெளிமூலதனத்தால் ஊதிப்பெருக்கப்பட்டவை. இது விஷயமாகவும் சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டனின் மூன்று பெரிய வங்கிகளின் மொத்த சொத்துகள் பிரிட்டிஷ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7சதவீதமாய் இருந்தது. நூற்றாண்டின் முடிவில் அவற்றின் சொத்துகள் 75 சதவீதமாக உயர்வு கண்டு, 2007 இல் 200 சதவீதத்தை எட்டி விட்டிருந்தது.

இவ்வாறாக மூன்று மிகப் பெரிய பிரிட்டிஷ் வங்கிகளின் மொத்த சொத்துகளின் அளவு இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட இருமடங்காக இருக்கிறது. . அதேபோல் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த நிதித் துறையின் மொத்த சொத்துகளின் அளவு பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் ஐந்து மடங்கு என்ற அளவில் இருக்கிறது. அந்தந்த வங்கிகளது சொந்த பங்கு மூலதனத்துடன் ஒப்பிட்டால் பிரிட்டிஷ் வங்கிகள் இப்போது அவை நூறு வருடங்களுக்கு முன்பு கொடுத்ததை விட பத்து மடங்கு தொகையை கடன்களுக்கு ஒதுக்கின்றன. அன்று ஒட்டுமொத்த கடன் தொகைகளின் கூட்டுத்தொகை வங்கியின் மூலதன ஆதாரங்களைப் போல் மூன்று மடங்காய் இருந்தது. இன்றோ அது 30மடங்கு அதிகரித்துள்ளது.

ஐரோப்பா கண்டம் (பிரிட்டன் மற்றும் இன்னும் சில பகுதிகள் தவிர்த்த ஐரோப்பா) இங்கும் அதே போக்கைத் தான் சற்று இடைவெளியுடன் பின் தொடர்கிறது. ஜேர்மனியிலும் பிரான்சிலும் அந்தந்த நாடுகளின் நிதித் துறை சொத்துகளின் கூட்டுத்தொகை முறையே அந்தந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாய் உள்ளது. சுவிட்சர்லாந்தில் சாதனை அளவாய் இது ஆறு மடங்கு பெரிதாய் உள்ளது.

நாம் ஏற்கனவே கண்டதைப் போல மூலதனத்தின் இந்த பெரும் தொகைகள் சமூகத்தின் ஒரு சிறு பகுதியின் கரங்களில் குவிந்து கிடக்கிறது. ஆனால் பெரும் பணக்காரர்கள் தங்களது செல்வத்தை வெறுமனே பணவறைகளில் வைத்திருக்க முடியாது. மார்க்ஸ் கூறியதைப் போல “மூலதனம் என்பது உயிரற்ற உழைப்பு, அது இரத்தக்காட்டேரியை போல வாழும் உழைப்பினை உறிஞ்சித் தான் உயிர்வாழ்கிறது” இது தொடர்ந்து வட்டியையும் இலாபத்தையும் துரத்திக் கொண்டிருக்கிறது. பொருளாதார சுழற்சியில் இருந்து அகற்றப்படுகையில் மூலதனம் துரிதமாய் தனது மதிப்பை இழந்து விடுகிறது.

இதுதான் நடப்பு சிக்கன நடவடிக்கைக்கான பிரசாரத்தின் உந்துசக்தியாகும். ஜேர்மன் சான்சலர் ப்ரூனிங்கின்(1930-1931) வரலாற்று அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் இது பைத்தியக்காரத்தனத்தின் விளிம்பில் நிற்பதாய்த் தோன்றுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுகாதாரம், ஓய்வூதியங்கள், பொதுச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கம் செலவிடுவதை நிதிய சிலவரணி (financial oligarchy) தங்களது சொத்துக் குவிப்பின் ஒரு பகுதி முறையற்ற வகையில் திருப்பி விடப்படுவதாகக் கருதுகிறது. ஊதிய விகிதங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் விடயத்திலும் இதே நிலை தான். ஆழமான சமூக நெருக்கடியிலும் கூட நிதி உயரடுக்கானது தனது செல்வத்திலும் சிறப்புச் சலுகைகளிலும் ஒரு துணுக்கைக் கூட விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இந்த விடயத்தில் 1789க்கு முந்தைய பிரெஞ்சு பிரபுத்துவத்தைப் போலத் தான் இது இருக்கிறது. அச்சமயத்தில் அங்கு பிரபுத்துவத்தை இறுதியாய் ஒழித்துக் கட்ட ஒரே ஒரு வழியான புரட்சிதான் இருந்தது.

இந்த உள்ளடக்கத்தில், எல்லா பிரதானக் கட்சிகளும், அவை பழமைவாதக் கட்சிகளாயினும் சரி, சமூக ஜனநாயகக் கட்சிகளாயினும் சரி, பசுமைக் கட்சிகளாயினும் சரி, இடது கட்சிகளாயினும் சரி அவை நடப்பு சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களை ஆதரிக்கின்றன என்பதும் வேறு எந்த மாற்றுகளையும் வழங்குவதில்லை என்பதும் முக்கியமானதாகும்.

ஜோஸே சோக்ரடீஸ்(போர்ச்சுகல்) ஜோர்ஜ் பாப்பான்ட்ரூ (கிரீஸ்) மற்றும் ஜோஸே லூயி ஸபதேரோ (ஸ்பெயின்) போன்ற சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் தமது சொந்த வாக்காளர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே நாசகரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் பொருட்டு தமது சொந்த அரசியல் வாழ்க்கைகளையும் தமது கட்சிகளின் தேர்தல் வாய்ப்புகளையும் கூட தியாகம் செய்துள்ளனர். அங்கேலா மேர்க்கெல் (ஜேர்மனி), நிக்கோலோ சார்க்கோசி (பிரான்ஸ்) மற்றும் டேவிட் கேமரூன் (இங்கிலாந்து) போன்ற பழமைவாதத் தலைவர்கள் ஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சிக்கான குரலை எழுப்புகின்றனர். பசுமைவாதிகள் வரவுசெலவு கட்டுப்பாடுகளை உணர்ச்சி பொங்க ஊக்குவிக்கின்றனர். தொழிற்சங்கங்கள் முறையே தங்கள் நாட்டு அரசாங்கங்களுடன் நெருங்கி வேலை செய்கிற அதேநேரத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கான எந்த எதிர்ப்பையும் நசுக்கிவிடும் வேலையைச் செய்து வருகின்றன.

ஆளும்வர்க்கத்தின் அரசியல்வாதிகளில் தனிஒருவர் கூட நடப்பு பொருளாதாரப் பாதைக்கான ஒரு தீவிரமான மாற்றினை முன்வைப்பதில்லை என்ற உண்மையே இந்த நெருக்கடிக்கு நடப்பு சமூக அமைப்பின் உள்ளடக்கத்தினுள் எந்தத் தீர்வும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

யூரோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும்

தேசிய ஆளும் உயரடுக்கின் பல்வேறு பிரிவுகளும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவசியத்தை ஒப்புக் கொள்கின்ற அதே சமயத்தில் நெருக்கடி ஆழமடைவது அவர்களுக்கு இடையில் கடுமையான தேசிய மற்றும் அரசியல் மோதல்களைத் தூண்டுகிறது.

ஒரு மூர்க்கமான சிறுபான்மையினர் யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கைவிட அழைப்பு விடுக்கின்றனர். இந்த சிறுபான்மை எண்ணிக்கையினரில் வலதுசாரி தேசியவாத கூறுகளும் உள்ளன. பிரான்சில் தேசிய முன்னணி, இத்தாலியில் வடக்கு கூட்டணி,  பிரிட்டனில் இங்கிலாந்து சுதந்திரக் கட்சி மற்றும் ஜேர்மன் தொழிற்துறைக் கூட்டமைப்புக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஹென்ஸ் ஓலாஃப் ஹெங்கல் போன்றோர் மற்றும் போலி இடது குட்டி முதலாளித்துவப் போக்குகளும் இதனுள் உள்ளன.

பிந்தைய போக்கின் ஒரு எடுத்துக்காட்டான பிரதிநிதி தான் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கீழைதேச மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளியின் பேராசிரியர் கோஸ்டாஸ் லபாவிட்சாஸ். இவர் கார்டியன் பத்திரிகையிலும் இண்டர்னேஷனல் வியூபாயிண்ட் மற்றும் மார்க்ஸ்21 போன்ற வெளியீடுகளிலும் தொடர்ந்து எழுதுகிறார். கிரீஸ் டிராக்மாவுக்கு (பழைய கிரேக்க நாணயத்திற்கு) திரும்ப அவர் ஆலோசனையளிக்கிறார். இதன் மூலம் அந்த நாடு அதன் சொந்த நிதிக் கொள்கையின் மீது தன்னுடைய இறையாண்மையைக் கொண்டிருக்க முடியும், நாணய மதிப்பைக் குறைக்க முடியும், ஏற்றுமதியைக் கூட்ட முடியும், பொருளாதார மீட்சியைச் சாதிக்க முடியும் என்று வாதிட்டு தனது முன்மொழிவை நியாயப்படுத்துகின்றார்.

இவ்வாறாக பேராசிரியர் லபாவிட்சாஸ் மூவர் கூட்டணியின் (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) சிக்கன நடவடிக்கை உத்தரவுகளின் மூலம் உண்மையான ஊதியங்கள், ஓய்வூதியங்கள், மற்றும் சேமிப்புகளில் வெட்டு ஏற்படுத்தக் கூடிய ஒரு பணவீக்கக் கொள்கையைக் கொண்டு கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தை ஏழ்மையாக்குவதை இடம்பெயர்த்து விட்டு அதே வகை ஏழ்மைப்படுத்தலை ஒரு வேறுபாதையின் வழியாக இட்டுச் செல்வதற்கு ஆலோசனையளிக்கிறார்.

லபாவிட்சாஸ் முன்வைக்கும் பரிந்துரை பொருளாதாரரீதியாக நெருக்கமாகப் பிணையச் சென்றிருக்கும் ஐரோப்பாவைத் துண்டாடுவதற்கான ஒரு திட்டத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. அத்தகையதொரு அபிவிருத்தியின் பின்விளைவுகள் 1990களில் யூகோஸ்லேவியா கலைக்கப்பட்டதைப் போன்ற அதே பேரழிவூட்டும் விளைவுகளைக் கொண்டிருக்கும். அது எல்லைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக வன்முறை ஆயுத மோதல்களையும் மற்றும் இனப் படுகொலைகளையும் உள்நாட்டு யுத்தங்களையும் தூண்டும். கிரீஸ் யூரோ மண்டலத்தில் இருந்து திரும்பப் பெறுமானால் அதனால் விளையக் கூடியவை பற்றி சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய வங்கியான UBS பின்வருமாறு கூறி எச்சரித்தது.“எதேச்சாதிகார அல்லது இராணுவ ஆட்சியின் ஏதோவொரு வடிவம் எழுச்சியுறாமலோ, அல்லது உள்நாட்டுப் போர் வெடிக்காமலோ எந்த நவீன நிதி ஒன்றியமும் உடைந்ததென்பது அபூர்வம் தான் என்பது கவனிக்கத்தக்கது”.

ஆயினும், ஐரோப்பாவைத் துண்டாடுவதன் அழிவுகரமான விளைவுகளை எண்ணி நாம் யூரோவையோ ஐரோப்பிய ஒன்றியத்தையோ(EU) பாதுகாக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பாவின் ஐக்கியப்படுத்தல் என்ற கூற்றே எப்போதும் ஒரு பொய்யாகவே இருந்திருக்கிறது. பொருளாதார, சமூக மற்றும் தேசிய முரண்பாடுகளைத் தீர்ப்பதென்பது ஒருபோதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமையாக இருக்கவில்லை. மாறாக ஐரோப்பிய பெரு வணிகங்களை அவற்றின் உலகப் போட்டியாளர்களுக்கு எதிராய் வலுவூட்டுவதுதான் அதன் கடமையாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில், அது ஐரோப்பாவின் மிகப் பெரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக் குழுமங்களது சக்தியைப் பெருக்கியிருக்கின்ற அதே சமயத்தில் ஊதியங்களையும் சமூக வாழ்க்கைத் தரங்களையும் குறைத்திருக்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்திருக்கிறது, ஒட்டுமொத்த நாடுகளையும் திவால் நிலைக்குள் தள்ளியிருக்கிறது. இறுதியாய் இது ஐரோப்பாவின் உடைவு நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கிறது.

ஐரோப்பிய மூலதனத்தின் உலகளாவிய போட்டித்திறனை வலுப்படுத்தும் பிரச்சினை தான் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அத்தனை விவாதங்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. புதிய ஆயிரமாண்டு தொடக்கத்தில் லிஸ்பனில் நடந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஐரோப்பிய ஒன்றியத்தை “உலகில் மிகவும் போட்டித்திறன் மிக்க மற்றும் இயக்கமிக்க அறிவுசார் பொருளாதாரமாக” ஆக்குவதே இலக்கு என்று வகுத்தளித்தது. ஜனநாயகம் மற்றும் ஐரோப்பிய ஒத்திசைவையும் நோக்கிய ஒரு நீண்ட பரிணாமத்தின் உச்சம் தான் ஐரோப்பிய ஒன்றியம் என்று சித்தரித்துக் காட்டும் பொறுப்பு ஜேர்மன் தத்துவாசிரியர் யூர்கன் ஹாபர்மாஸ் வரலாற்றாசிரியர் ஹென்ரிச் அகஸ்ட் விங்க்லர் மற்றும் பசுமைக் கட்சியின் ஜொஷ்கா பிஷ்ஷர் ஆகியோரிடம் விடப்பட்டது.

ஒரு பொதுவான நாணயத்தின் அறிமுகம் தன்னளவில் ஐரோப்பாவிற்குள்ளாக நிலவும் குரோதங்களைத் தணிப்பதற்கு தானாகவே இட்டுச் செல்லும் என்கின்ற பரவலாய் விளம்பரப்படுத்தப்பட்ட சிந்தனையும் ஒரு நப்பாசை என்பதும் நிரூபணமாகி உள்ளது. உண்மையில் அதற்கு நேரெதிரான விடயம் தான் நடந்திருப்பதுடன் மற்றும் மோதல் அதிகரித்துள்ளது.

ஜேர்மன் பொருளாதாரம் யூரோவினால் மிக அதிகமான இலாபமடைந்திருக்கிறது. அது தனது மேலாதிக்க நிலைக்கு வலுவூட்டியிருக்கிறது என்கிற அதேசமயத்தில் பலவீனமான அரசுகள் இன்னும் பலவீனமுற்றிருக்கின்றன. யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஜேர்மனி இருமடங்குக்கும் அதிகமாய் தனது ஏற்றுமதியைப் பெருக்கியிருக்கிறது. 2007இல் அது சுமார் 200பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தக உபரியை சாதித்தது. அதேசமயத்தில் 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் 19 நாடுகள் அந்நிய வர்த்தகத்தில் பற்றாக்குறையை சந்தித்தன.

ஐரோப்பிய அளவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி ஜேர்மன் நாணயம் ஸ்திரம் பெற்றுத் திகழ்வதையும் மதிப்புரீதியாக ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதையும் யூரோ உறுதி செய்தது. இது ஜேர்மன் ஏற்றுமதித் துறைக்கு மிகப் பெரும் அனுகூலமாய் வாய்த்தது. ஜேர்மன் மார்க் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருந்தால் அதன் பரிவர்த்தனை மதிப்பு கணிசமாய் உயர்வு கண்டிருக்கும். யூரோவின் அறிமுகம் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பொருளாதாரரீதியாகப் பலவீனமான நாடுகளில் இதற்கு நேரெதிர் விளைவை உருவாக்கியது. அவற்றின் வர்த்தகமும் தொழிற்துறையும் வலிமையான அங்கத்துவநாடுகளில் இருந்து வந்திறங்கிய இறக்குமதிப் பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை. விலைகளும், ஒரு குறைந்த மட்டத்திற்கு ஊதியங்களும், அதிகரித்து போட்டித்திறனை பலவீனப்படுத்தின. கடந்த காலத்தில் போலல்லாது, இந்தச் சூழ்நிலையானது இனியும் தேசிய நாணய மதிப்பை மதிப்புக் குறைப்பதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாத நிலையாகிப் போனது.

இந்த அதிகரித்துவரும் இடைவெளி உடனடியாக புலப்படாததாக இருந்தது. யூரோவின் அறிமுகமானது பலவீனமான நாடுகளுக்கு சாதகமான விகிதங்களில் கடன்களை பெற்றுக்கொள்ள அனுமதித்தது. இது ஸ்பெயினிலும் அயர்லாந்திலும் கட்டுமானத் துறை மற்றும் ஊகத்துறை எழுச்சிகளைத் தூண்டியது. ஆயினும் உயரடுக்கும் நடுத்தர வர்க்கங்களின் குறிப்பிட்ட பிரிவுகளும் மட்டுமே இதனால் ஆதாயமடைந்தன. யூரோ என்பது தொழிலாள வர்க்கத்தைப் பொருத்தவரை விலையேற்றம் என்றும் சிறு வணிகங்களைப் பொருத்தவரை மிதமிஞ்சிய போட்டிநிலை என்றுமே அர்த்தமானது. இறுதியாக சர்வதேச நிதி நெருக்கடியின் வெடிப்புடன் இந்த பொருளாதார எழுச்சி வெடித்துச் சிதறியது.

யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவினைகள் எவ்வளவு பாரியதாக ஆழமுற்றுள்ளன என்பதை ஏராளமான புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 2006 ஆம் ஆண்டு புள்ளிவிவரம் ஒன்று காட்டுவதன் படி ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு தொழிலாளியின் சராசரி ஆண்டு வருமானம் ஏறக்குறைய 20 மடங்கு இடைவெளியில் டென்மார்க்கில் 43.000 யூரோவுக்கும் பல்கேரியாவில்1.900 யூரோவுக்கும் இடையில் வேறுபடுகிறது. கிரீசும் ஸ்பெயினும் 20.000 யூரோ என்கிற அளவில் நடுவிலுள்ள இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அடித்தளத்திலுள்ள இந்த முரண்பாடுகளை 2008ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி மேற்பரப்புக்குக் கொண்டுவந்தது. ஐரோப்பிய வங்கிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. அமெரிக்க பெறுமதியற்ற பத்திரங்களில் அவை ஏராளமாய் முதலீடு செய்திருந்தன. ஸ்பெயினில் நிலச் சொத்துக் குமிழ் உடைந்தது, அயர்லாந்தில் வங்கி அமைப்புமுறை உருக்குலைந்தது. வங்கிகளை மீட்கவும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பொது நிதிகளில் பெரும் தொகைகளை ஒதுக்கி ஐரோப்பிய அரசாங்கங்கள் தமது பதிலிறுப்பை காட்டின.

அரசாங்கக் கடனிலான அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று. அயர்லாந்து அரசின் மொத்தக் கடன் குறுகிய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25சதவீதமாக இருந்ததில் இருந்து 100சதவீதமாக அதிகரித்தது என்றால் அதற்குக் காரணம் வங்கிகளின் ஊக வணிக இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பேற்கும் ஒரு உத்தரவாதத்தை வழங்க அந்த அரசாங்கம் தீர்மானித்ததே ஆகும்.

இப்போது, நிதிச் சந்தைகள் வங்கிப் பிணையெடுப்புக்கு வழங்கப்பட்ட பொதுப் பணத்தினை பெரும் கடனில் தத்தளிக்கும் பல்வேறு அரசுகளுக்கு எதிராக ஊக வணிபத்திற்கு உட்படுத்தி முதலாவதாய் வங்கிகளை பாதுகாப்பதற்கு பயன்படுத்துகின்றன. உள்முகமான முரண்பாடுகளும் ஒப்பீட்டளவில் உயர்ந்த பொதுச் செலவின விகிதங்களும் குறிப்பாக ஐரோப்பாவை பாதிப்பிற்கு சுலபமான இலக்காக ஆக்கியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் யூரோவை மீட்சி செய்யவும் தொழிலாள வர்க்கம் தியாகங்கள் புரிய வேண்டும் என்று அனைத்து ஆளும்கட்சிகளும் அதேபோல் தொழிற்சங்கங்களும் இப்போது கோரிக்கை வைக்கின்றன. நாம் இந்த நிலைப்பாட்டை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அமைப்புகளில் முற்போக்கானதென்றோ பாதுகாக்கப்பட தகுதிபடைத்ததென்றோ எதுவும் அல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோல்வி மிகப் பயங்கரமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதான அச்சுறுத்தலால் நம்மை பயமுறுத்தமுடியாது.

துண்டாடுதல் (ஐரோப்பிய ஒன்றியத்தை தனித்தனி உறுப்பு நாடுகளாய் உடைப்பது) மற்றும் சிக்கன நடவடிக்கைகள் (சமூக செலவினங்களை வெட்டுவது மற்றும் ஊதியங்களைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தை “மீட்பது”) ஆகிய இரண்டுமே தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு நிதி மூலதனத்தால் செயல்படுத்தப்படும் இரண்டு வேறுபட்ட மூலோபாயங்கள் தான். இந்த மோதலில் முதலாளித்துவ முகாம்களில் இதை அல்லது இன்னொன்றை ஆதரிப்பது நம் வேலை அல்ல. ஆயினும் அதுதான் மிகத் துல்லியமாய் போலி-இடது அமைப்புகளின் கொள்கையாக உருவாகிவருகின்றது. ஆளும் வர்க்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்கள் பக்கத்திலா அல்லது எதிர்ப்பாளர்கள் பக்கத்திலா எந்தப் பக்கத்தில் சேர வேண்டும் என்பது குறித்து இவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள்.

அரசியல் நிகழ்வுகளில் தொழிலாள வர்க்கம் தனக்காக தான் சுயமாகப் பிரதிநிதித்துவம் செய்து தலையீடு செய்ய அனுமதிக்கின்ற ஒரு சுயாதீனமான முன்னோக்கின் பக்கமே நாங்கள் நிற்கிறோம். ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது தான் எங்களது முன்னோக்கின் மத்திய அம்சமாகும்.

உலகப் பொருளாதாரத்தின் சகாப்தத்தில் ஐரோப்பியக் கண்டம் எண்ணற்ற சிறு அரசுகளாக தான் பிளவுபட்டுக் கிடப்பதை தாண்டிவராமல் தனது பொருளாதார மற்றும் கலாச்சார சாத்தியவளங்களை அது அபிவிருத்தி செய்யமுடியாது. ஆனால் அத்தகையதொரு ஐக்கியம் முதலாளித்துவத்தின் கீழ் எண்ணிப்பார்க்க முடியாததாகும். முதலாளித்துவம் இயல்பாகவே ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் திறனற்றதாகும் என்பதை லியோன் ட்ரொட்ஸ்கி ஏற்கனவே கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தார். முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை பலவீனமான நாடுகளை பலமான நாடுகள் வசப்படுத்துவது தான் “ஐக்கியத்திற்கான” ஒரே சிந்திக்கத்தக்க வடிவம். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இதைத் தான் ஜேர்மனி செய்ய முயன்று தோற்றது.

தற்போதைய நெருக்கடியின் மூலம் ட்ரொட்ஸ்கியின் ஆய்வு நிரூபணம் பெற்றிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் உழைக்கும் மக்களின் வாழ்க்கைகளை அழிக்கின்ற ஒன்றிற்குச் சமானமானது என்று ஆகியிருக்கிறது. அதன் கொள்கைகள் எல்லாம் எல்லா இடங்களிலும் கோபம், வெறுப்பு மற்றும் எதிர்ப்புடன் எதிர்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பா உண்மையிலேயே ஒன்றுபட முடியுமென்றால் அது ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற வடிவத்தில் மட்டுமே சிந்திக்கப்படக் கூடியதாகும். பெரு வங்கிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து இந்த ஆதாரவளங்களை தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் பதிலாக சமூகத் தேவையின் சேவைக்கென வைக்கிற தொழிலாளர்களின் அரசாங்கங்களின் கூட்டமைப்பாகும் இது.

நிதிய கட்டுப்பாடா அல்லது நிதிபாய்ச்சலை திறந்து விடுவதா

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்த முரண்பாடுகளுடன், ஆளும் வர்க்கங்கள் நிதிக் கொள்கை விஷயத்திலும் பிளவுபட்டு இருக்கின்றன. குறிப்பாக ஜேர்மன் அரசாங்கம் கடுமையான நிதியகட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது. அதே சமயத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் குறிப்பிட்ட மட்டத்திற்கு பிரெஞ்சு அரசாங்கமும் ஒரு கூடுதல் தாராளமான நிதிக் கொள்கையைக் கோருகின்றன. யூரோ பத்திரங்களை விநியோகிப்பதன் மூலமாக கடுமையான கடனில் தத்தளிக்கும் நாடுகளுக்கான வட்டி விகிதங்கள் மீதான நெருக்குதலைத் தணிக்கவும் ஐரோப்பிய மத்திய வங்கியை பணத்தை அச்சடிக்க அனுமதிப்பதன் மூலமாக வங்கிகளின் பணப்புழக்கப் பிரச்சினையைத் தீர்க்கவும் அவை விரும்புகின்றன.

1930களில் புதிய உடன்பாட்டு (New Deal) திட்டத்தின் பகுதியாக பிராங்க்ளின் டி- ரூஸ்வெல்ட்டின் அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டதைப் போல வேலை உருவாக்கத் திட்டங்களையோ, உள்கட்டமைப்புத் திட்டங்களையோ அல்லது பிற நடவடிக்கைகளையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அதற்குப் பதிலாக வங்கிகளுக்கு கூடுதலாக பணத்தை விநியோகிக்கக் கோருகின்றனர். ஒரு கூடுதல் தாராளமான நிதிக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் அனைவருமே அதே சமயத்தில் பொதுச் செலவினத்தில் வெட்டுக்களைக் கோருகின்றனர்.

இந்த விடயத்திலும் நாம் இந்த அல்லது அந்த முதலாளித்துவ முகாமின் பின்னிற்க மறுக்கிறோம். ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் இடது கட்சி அனைவருமே யூரோ பத்திரங்களையும் ஐரோப்பிய மத்திய வங்கி ஒரு கூடுதல் ஊக்கமளிக்கும் நிதிக் கொள்கையைப் பின்பற்றுவதையும் கோருகின்றன. 1930களில் இதுபோன்றதொரு பிரச்சினையில் ட்ரொட்ஸ்கி தனது “பிரான்சிற்கான செயல்திட்டம்” (Program of Action for France) என்ற கட்டுரையில் தீர்மானகரமாய் எழுதினார். அவர் பின்வருமாறு கூறினார்:

பிரெஞ்சு முதலாளித்துவம் நாட்டை அது அமிழ்த்தியிருக்கும் குழப்பங்களில் இருந்து எழுந்திருக்க முயல வேண்டுமானால் முதலில் நிதிப் பிரச்சினைக்கு அது தீர்வு கண்டாக வேண்டும். ஒரு பிரிவு இதை பணவீக்கத்தின் மூலமாக, அதாவது காகிதப் பணத்தை அதிகரிப்பது, ஊதியங்களை குறைப்பது, வாழ்க்கைச் செலவுகளை அதிகரிப்பது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து பறிப்பது ஆகியவற்றின் மூலமாக செய்ய ஆசைப்படுகிறது. இன்னொரு பிரிவோ செலாவணியை தளர்த்தும் மூலமாக, அதாவது தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னாலான செலவுக் குறைப்புகள் (ஊதியங்கள் மற்றும் கூலிகளைக் குறைப்பது) வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பது, சிறு விவசாய உற்பத்தியாளர்களையும் நகரங்களின் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும் இல்லாதொழிப்பது ஆகியவற்றின் மூலமாக செய்ய ஆசைப்படுகிறது.

இந்த இரண்டு வெவ்வேறு வழிகளுமே சுரண்டப்படும் மக்களுக்கு துயரம் அதிகரிப்பதையே குறிக்கிறது. இந்த இரண்டு முதலாளித்துவ வழிமுறைகளுக்கு இடையே எதாவதொன்றை தெரிவு செய்வதென்பது தொழிலாளர்களின் கழுத்தறுக்க தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் சுரண்டல்தாரர்களின் இருவேறு வெட்டுக் கருவிகளுக்கு இடையே ஒன்றை தெரிவு செய்வதாகும். (....)

செலாவணியை தளர்த்தும் வேலைத்திட்டத்திற்கு அதாவது தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வேலைத்திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள் நாட்டைச் சுரண்டுகின்ற அவுஸ்ட்ரிக்குகள் மற்றும் ஸ்டாவிஸ்கிக்கள் [ஊக வணிகர்கள்] கும்பலின் சிறப்புச்சலுகைகள் மற்றும் இலாபங்களை முற்றிலுமாய் ‘சுருக்கம்’ செய்வதன் மூலமாக சமூக உறவுகளை அடிப்படையாய் உருமாற்றுகின்ற தங்களது சொந்த வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இது தான் விடுதலைக்கான ஒரே பாதையாகும்.

இன்று, இந்த வார்த்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கான போராட்டம் என்பது பிரிக்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகள் அனைத்தையும் பாதுகாப்பதற்கு அதனை அணிதிரட்டுவதுடன் பிரிக்கவியலாமல் தொடர்புபட்டுள்ளது. இதற்கு முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்ற அத்தனை கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒரு அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான முறிவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டுவதும் அவசியமாயுள்ளது.