ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The fracturing of the European Union

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு

Peter Schwarz
28 December 2015

இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் பாரிய அழிவினுள் இருந்தன. வல்லரசு அபிலாஷைகள், தேசியவாதம் மற்றும் பாசிசவாதம் அக்கண்டத்தை இரண்டு உலக போர்களின் குவிமையமாக மாற்றியது, அவ்விரு போர்களிலும் ஒருசேர அண்மித்து 100 மில்லியன் பேர் பலியானார்கள். இப்போதோ, அதே போக்குகள் மீண்டுமொருமுறை பரவி வருகின்றன.

ஐரோப்பாவில் எங்கெங்கிலும், ஆளும் உயரடுக்குகள் கூர்மையாக வலதிற்கு நகர்ந்து வருகின்றன. அவை இராணுவ செலவினங்களை அதிகரித்து, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க ஏகாதிபத்திய போர்களில் பங்கெடுத்து வருவதுடன், அகதிகளுக்கு எதிராக எல்லைகளை மூடியும் மற்றும் வெளிநாட்டவர் விரோத உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. அவை ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களை அபிவிருத்தி செய்வதுடன், அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கின்றன.

பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து, ஆயிரக் கணக்கான சிப்பாய்களை வீதிகளில் நிறுத்தியதுடன், சிரியா மீது குண்டுவீச பாரசீக வளைகுடாவிற்கு இராணுவத்தின் ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது. இக்கொள்கையிலிருந்து ஆதாயமடைந்தது வலதுசாரி தேசிய முன்னணியாகும், அது சமீபத்திய பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றில் மிகப் பலமான கட்சியாக உருவெடுத்தது.

ஹங்கேரி மற்றும் போலாந்தில், அரசாங்கங்கள், 1920 கள் மற்றும் 1930 களின் ஏதேச்சதிகார ஆட்சிகளுக்கு பகிரங்கமாக அவற்றின் புகழுரைகளை அளிக்கின்றன.

ஜேர்மனியில், முன்னணி அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும், அந்நாடு மீண்டும் ஐரோப்பாவில் ஓர் "ஆதிக்க சக்தி" மற்றும் "ஒழுங்குமுறையாளர்" பாத்திரத்தை ஏற்க வேண்டுமென கோருவதுடன், ஏதோ நாஜி ஆட்சி குற்றங்கள் ஒருபோதும் நடந்திராததைப் போல உலகின் ஒரு பிரதான சக்தியாக அது மாற வேண்டுமென விரும்புகின்றனர். பொருளாதாரரீதியில் பலவீனமான ஐரோப்பிய ஒன்றிய அங்கங்கத்துவ நாடுகள் மீது பல ஆண்டுகளாக பேர்லின் திணித்துள்ள சிக்கனத்திட்ட கொள்கைகள், ஐரோப்பா எங்கிலும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.

ஒருவிதத்தில் அரசியலில் ஜேர்மன் சான்சிலரைப் பின்பற்றுபவரான இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சியே கூட, ஜனரஞ்சகவாதத்திற்கு எரியூட்டும் மற்றும் அக்கண்டம் எங்கிலும் ஆளும் ஆட்சிகளுக்கு கேடுவிளைவிக்கத்தக்க பொருளாதார கொள்கைகளுக்கு அழுத்தமளிப்பதற்காக, மற்றும் இத்தாலிக்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் ஜேர்மனிக்கு ஆதரவான இரட்டை நிலைபாட்டு அடித்தளத்தில் இருப்பதாக இவ்வாரம் பைனான்சியல் டைம்ஸில் அங்கேலா மேர்க்கெலை விமர்சித்தார். வார்சோ, ஏதென்ஸ், லிஸ்போன் மற்றும் மாட்ரிட் அரசாங்கங்கள் வேலைகளை இழந்துள்ளன, ஏனென்றால் அவை உண்மையான வளர்ச்சியில்லாமலேயே நிதிய ஒழுங்குமுறை கொள்கையைப் பின்பற்றின என்று ரென்சி குறைபட்டுக்கொண்டார்.

ஊடகங்களில் வெளியான எண்ணிறைந்த சமீபத்திய கருத்துக்கள், அதிகரித்துவரும் முரண்பாடுகள் மற்றும் பதட்டமான அழுத்தத்தின் கீழ், சாத்தியமான ஐரோப்பிய ஒன்றிய உடைவின் மீது குவிந்துள்ளன.

ராய்டர்ஸின் செய்தியாளர் பௌல் டெய்லர், “நரகம் என்பதிலிருந்து வரவிருக்கும் இன்னும் மோசமானவற்றிற்கு ஐரோப்பாவின் இந்தாண்டு அறிகுறி காட்டுகிறது" என்ற தலைப்பில் எழுதுகையில்: “2015 நெருக்கடிகள், ஒன்றியத்தையே உடைத்து, அதை சின்னாபின்னமாக சிதறடித்து, சீரழித்து, பலவீனப்படுத்தி மற்றும் புதிய எல்லைகளுடன் பிளவுபட்டு போகுமாறு அச்சுறுத்தி உள்ளன,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ், “ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு இவ்விதத்தில் நிலைத்திருக்கும்" என்று யாராலும் கூற முடியாதென Die Welt இல் எச்சரித்தார். அதற்கான மாற்றீடு, “ஒரு தேசியவாத ஐரோப்பாவாக இருக்கும், எல்லைகள் மற்றும் சுவர்களைக் கொண்ட ஓர் ஐரோப்பாவாக இருக்கும். அது அழிவுகரமாக இருக்கும், ஏனென்றால் அத்தகையவொரு ஐரோப்பா கடந்த காலத்தில் நமது கண்டத்தை மீண்டும் மீண்டும் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது,” என்றவர் எழுதுகிறார்.

Süddeutsche Zeitung இல் வெளியான ஓர் தலையங்கம், ஐரோப்பிய ஒன்றியம் உடையக்கூடிய சம்பவத்திற்காக ஒரு "மாற்று திட்டத்தையே" (Plan B) கூட கோருகிறது. கிரேக்க நெருக்கடி மற்றும் அகதிகள் நெருக்கடியிலிருந்தோ அல்லது பிரிட்டன் வெளியேறுவதிலிருந்தோ வரும் முக்கிய அபாயத்தை விட, "நவ-தேசியவாதத்திலிருந்து" வரும் அபாயம் ஒன்றும் குறைந்ததில்லை என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.

இக்கருத்துக்களும் மற்றும் ஏனைய கருத்துக்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு மற்றும் அதனால் உண்டாகக்கூடிய விளைவுகளைக் குறித்து எச்சரித்தாலும், ஐரோப்பாவில் ஏன் தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் குறித்த கேள்விகளுக்கு அவை பதில் அளிப்பதில்லை. உண்மையில், அவை அத்தகைய கேள்விகளை முன்வைப்பதும் கூட இல்லை.

உத்தியோகபூர்வ பிரச்சார வாதங்களுக்கு முரண்பட்ட வகையில், இரண்டு உலக போர்களின் மையத்தில் ஐரோப்பாவைக் கொண்டு வந்த முரண்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் கடந்து சென்றிருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மக்களை ஒன்றிணைக்கவில்லை, மாறாக அது எப்போதுமே உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் வெளிநாடுகளில் சர்வதேச போட்டியாளர்களுக்கும் எதிராக மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நலன்களின் ஆயுதமாகவே இருந்துள்ளது. அது தேசியவாதம், சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போருக்குகான விளைநிலமாகவே அமைந்துள்ளது.

முதலாளித்துவ அடிப்படையில் கண்டத்தை ஒருங்கிணைப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழும் ஆதாரமாக விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளின் குவிமையமாக உள்ள முதலாளித்துவ தனிச்சொத்துடைமையைப் பாதுகாத்தல், மூலதன மற்றும் இலாபங்களின் சுதந்திரமான நகர்வு ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை அவற்றின் குரலை எழுப்பவும் மற்றும் பலமான அரசுகள் அவற்றின் விருப்பங்களைப் பலவீனமான நாடுகள் மீது திணிக்கவும் கூடிய விளைவுகளைத் தவிர்க்கவியலாதவாறு ஏற்படுத்தி உள்ளன. தேசிய மற்றும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பதற்கு மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் அவற்றை அதீத அளவிற்குத் தீவிரப்படுத்தி உள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கிழக்கு ஐரோப்பாவிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்கியமை, ஜனநாயகம் மற்றும் செல்வவளத்தைக் கொண்டு வரவில்லை. அந்த புதிய அங்கத்துவ நாடுகள் பிரதான ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு ஒரு மலிவு உழைப்பு ஆதாரமாக சேவையாற்றி உள்ளன. அவற்றின் மக்கள்நலத் திட்டங்கள் அழிக்கப்பட்டு, கூலிகள் குறைந்தளவில் வைக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, அதேவேளையில் ஒரு சிறிய ஊழல்பீடித்த உயரடுக்கு செல்வ வளங்களை அனுபவித்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம், முக்கியமாக ஜேர்மனி, நிதிநிலை பலப்படுத்தல் என்ற பெயரில் முன்னொருபோதும் இல்லா சமூக வெட்டுக்களைக் கட்டளையிட 2008 நிதியியல் நெருக்கடியை ஆதாயமாக்கிக் கொண்டுள்ளது. ஒரு முன்னுதாரணமாக்கப்பட்ட கிரீஸில், சராசரி வாழ்க்கை நிலைமை ஒரு சில ஆண்டுகளில் 40 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு இராணுவவாதம் மற்றும் அதிகரித்த ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுத்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களின் நிஜமான அபாயமும் மற்றும் ஏற்படலாம் என கருதப்படும் அபாயமும், மேற்கொண்டும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்குப் போலிக்காரணமாக சேவையாற்றுகின்றன.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க ஏகாதிபத்திய போர்களது விளைவுகள், அகதிகள் நெருக்கடியாக ஐரோப்பாவிற்குத் திரும்பியுள்ளது. அகதிகள் பிரச்சினை ஐரோப்பாவை கூடுதலாக துருவமுனைப்படுத்தி உள்ளது. மக்களின் பெரும்பான்மை பிரிவுகள் நல்லிணக்கத்துடன் பிரதிபலிப்பைக் காட்டிய போதினும், ஆளும் வட்டாரங்கள் அகதிகளுக்கு எதிராக ஒரு சீற்றமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, எல்லையோர முள்வேலிகளை கட்டமைத்து, ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய உடைவிலிருந்து எழும் அபாயங்கள் மிகவும் நிஜமானவை. புதிய போர்களும் மற்றும் சர்வாதிகாரங்களும், ஐரோப்பாவிற்குள்ளேயே கூட, முளைத்தெழும். அந்த அபாயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதன் மூலமாக தடுக்க முடியாது, மாறாக அதற்கு எதிராக மற்றும் அது எதன் மீது நிற்கிறதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும்.

ஐரோப்பாவை அதன் மக்களின் நலன்களுக்காக ஐக்கியப்படுத்துவதற்கு, அதன் பரந்த ஆதாரவளங்களை அனைவருக்குமான நலன்களில் பயன்படுத்த மற்றும் வரவிருக்கும் போர்களைத் தடுக்க ஒரே வழி, ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் மூலமாக மட்டுமே முடியும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலால் மட்டுமே வரவிருக்கும் பேரழிவுகளைத் தடுக்க முடியும்.