ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

François Hollande declines to run for re-election as French president

பிரெஞ்சு ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடவில்லை என பிரான்சுவா ஹாலண்ட் தீர்மானித்துள்ளார்

By Kumaran Ira
7 December 2016

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று சோசலிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் டிசம்பர் 1 அன்று அறிவித்தார். 1958 இல் ஐந்தாம் குடியரசின் தொடக்கத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்ட காலம் முதலாக ஒரு ஜனாதிபதி இரண்டாம் முறை போட்டியிட முனையாதது இதுவே முதன்முறையாகும்.

எலிசே ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஹாலண்ட் வழங்கிய ஒரு திடீர் தொலைக்காட்சி உரையில் அவர் அறிவித்தார்: “அடுத்த ஜனாதிபதி பதவிக் காலத்திற்கு போட்டியிடுவதில்லை என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.” சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான முதனிலைத் தேர்தலுக்கான களம் திறக்கப்பட்டதையொட்டி அவரது இந்த முடிவு வந்திருக்கிறது.

பிரான்சின் மக்கள் வெறுப்பை சம்பாதித்த ஜனாதிபதிகளில் ஹாலண்ட் முதலிடத்தில் இருந்தார் என்பதால் இரண்டாம் முறை போட்டியிடுவதில்லை என்ற அவரது முடிவு பரவலாக எதிர்பார்க்கப்பட்டதாகவே இருந்தது. கருத்துவாக்கெடுப்புகளில் அவர் தொடர்ந்து ஒற்றை இலக்க ஏற்பு மதிப்பீட்டையே பெற்று வந்தார் என்பதுடன், தேர்தல் இன்று நடத்தப்படுமானால், அவர் முதல்சுற்று வாக்கெடுப்பில் ஐந்தாம் இடத்திற்கே வருவார், இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறாமல் வெளியேற்றப்படுவார் என்றும் அவை கண்டறிருந்திருந்தன.

மக்கள்வெறுப்பை சம்பாதித்த தனது நிதிநிலை வெட்டுகளைக் குறிப்பிட்டு, தனது ஜனாதிபதி பதவியை நியாயப்படுத்துவதற்கும் ஹாலண்ட் முயற்சி செய்தார். “பிரான்சை மீள்கட்டுமானம் செய்வதற்கும் அதனை நீதிமிக்கதாக ஆக்குவதற்கும் [பிரதமர்கள்] ஜோன்-மார்க் ஏய்ரோ மற்றும் மானுவேல் வால்ஸ் ஆகியோரது அரசாங்கங்களுடன் சேர்ந்து செயல்பட்டேன். இன்று, நான் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், நிதிநிலை சரிசெய்யப்பட்டிருக்கிறது, சமூகப் பாதுகாப்பு சமநிலைப்படுத்தப்பட்டிருக்கிறது அத்துடன் நாட்டின் கடன்நிலை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.”

ஹாலண்டின் அறிவிப்பிற்கு பின்னர், வால்ஸ் PS முதனிலைத் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்தார், அத்துடன் பிரதமர் பதவியையும் இராஜினாமா செய்தார்; முன்னாள் உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸெனேவ் நேற்று அவரிடத்தில் அமர்த்தப்பட்டார். வால்ஸ் கூறினார்: “பயங்கரவாத அச்சுறுத்தல்கள், அதி வலதுகளின் எழுச்சி என ஒருகாலத்தில் இருந்தவாறாக இன்று இல்லாத ஒரு உலகத்தில் பிரான்ஸ் தனது முழு வலுவையும் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது என்பதால்தான் நான் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன்... சுதந்திரமான, தனது விழுமியங்களில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு பிரான்சையே நான் விரும்புகிறேன்.”

இப்போதைக்கு, வால்ஸ்தான் PS இன் ஜனாதிபதி வேட்பாளர்களில் முன்னிலையில் இருப்பவராக, முன்னாள் பொருளாதார அமைச்சரான ஆர்னோ மொந்தபேர்க் (Arnaud Montebourg) க்கும் முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

வால்ஸ் PS இன் மிக வெளிப்படையான வலது-சாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்; சோசலிஸ்ட் கட்சி தனது பெயரில் இருந்து “சோசலிஸ்ட்” என்ற வார்த்தையை அகற்றி விட வேண்டும், ஏனென்றால் “அதற்கு இனியும் எந்த அர்த்தமுமில்லை” என்று பலமுறை கூறியிருப்பவர். உள்துறை அமைச்சராக இருந்து 2014 இல் பிரதமரான இவர், சிக்கன நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதையும் அத்துடன் சென்ற ஆண்டில் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையையும் ஆதரித்தார். PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான சமூகப் போராட்டங்களுக்கு போலிஸ் மூலமான தடையைக் கொண்டு வர அச்சுறுத்தும் முன்கண்டிராத நடவடிக்கையை வால்ஸ் எடுத்திருந்தார் என்பதுடன் இச்சட்டத்தை தேசிய நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு இல்லாமலேயே திணிப்பதற்கு பிரெஞ்சு அரசியல்சட்டத்தின் 49.3வது பிரிவைத் தொடர்ந்தும் பயன்படுத்தினார்.

1971 இல் PS ஸ்தாபிக்கப்பட்டதற்கு பிந்தைய மிக ஆழமான நெருக்கடியை அக்கட்சி முகம்கொடுக்கின்ற நிலையில்தான், இரண்டாம் முறை போட்டியிடுவதில்லை என்ற ஹாலண்டின் முடிவு வந்துசேர்ந்திருக்கிறது. 2017 ஜனாதிபதி தேர்தலில் ஒரு பெரும் பின்னடைவை, முதல் சுற்றில் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) வெற்றி பெற்று, PS வேட்பாளர் வெளியேற்றப்படுகின்ற ஒரு நிலையை, PS எதிர்பார்க்கிறது. தேர்தலில் FN அல்லது வலது-சாரி குடியரசுக் கட்சி (LR) வெற்றிபெறுமானால் PS பிரதான எதிர்க்கட்சியாக அமர முடியுமா என்பதும் கூட தெளிவின்றி இருக்கிறது.

ஆகவேதான் ஜனவரி22-29 அன்று நடக்கவிருக்கும் PS இன் முதனிலைத் தேர்தலில் வால்ஸ் போட்டியிட வசதியாக ஹாலண்ட் ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.

ஜூனில் பிரெக்ஸிட் வாக்களிப்பு மற்றும் நவம்பரில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை ஆகியவற்றை தொடர்ந்து ஐரோப்பாவெங்கும் ஸ்திரமின்மை பெருகிவருவதன் மத்தியில், ஆளும் உயரடுக்கு வலது நோக்கி நகர்ந்து செல்வதையே 2017 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்து நிற்கிறது. ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது தேசியவாதக் கட்சிகள் வலுப்பெற்று வருகின்றன; ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களுக்கு எதிராக பெருகும் சமூகக் கோபத்தை சுரண்டிக் கொள்ளும் இக்கட்சிகள் அக்கோபத்தை பேரினவாதப் பாதைகளில் திசைதிருப்பி விடுகின்றன. பிரான்சில் PS மதிப்பிழப்பதில் FN ஆதாயமடைந்து கொண்டிருக்கிறது; பிரெஞ்சு ஸ்தாபகத்தின் வழக்கமான கட்சிகளான PS மற்றும் LR ஆகியவற்றுக்கான ஒரு மாற்றாக அது தன்னைக் காட்டிக் கொள்கிறது.

PS இன் தொழிலாளர்-விரோத செயல்வரலாற்றை கண்டு பரந்த மக்களிடையே அந்த கட்சி குறித்த பிரமை விலகல் ஆழமடைந்திருப்பதன் விளைவே PS இன் பொறிவு ஆகும். ஒவ்வொருமுறையும் அது அதிகாரத்தைப் பிடித்தபோதும் -பிரான்சுவா மித்திரோனின் ஜனாதிபதி பதவிக்காலத்தின் கீழ் (1981-1995), பிரதமர் லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான பன்மை இடது அரசாங்கத்தின் சமயத்தில் (1997-2002), மற்றும் 2012 முதல் ஹாலண்டின் கீழ்- அது தனது தேர்தல் வாக்குறுதிகளை தூக்கிப் போட்டு விட்டு தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தி வந்திருக்கிறது.

2012 இல், ”சிக்கன நடவடிக்கை என்பது பிரான்சின் மாற்றமுடியாத தலைவிதி அல்ல” என்று அறிவித்து, தனக்கு முன்னால் பதவியில் இருந்த, மக்களிடம் அவப்பெயர் பெற்றிருந்த வலது-சாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கொள்கையை விமர்சனம் செய்து ஹாலண்ட் பதவிக்கு வந்தார். ஆயினும், தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான சிக்கன நடவடிக்கைகளையும், அத்துடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில், எல்லாவற்றுக்கும் மேல் சிரியா மற்றும் மாலி ஆகிய முன்னாள் பிரெஞ்சு காலனிகளில், ஏகாதிபத்தியத் தலையீடுகளையும் நடத்தினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழித்து வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கச் செய்த பாரிய அளவிலான சிக்கன நடவடிக்கைகளையும் வணிக-ஆதரவு சீர்திருத்தங்களையும் ஹாலண்ட் அமலாக்கினார். ”பொறுப்புடைமைச் சட்டம்” என்று அழைக்கப்பட்டதான ஒன்றின் கீழ், PS 50 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான அளவுக்கு சமூக வெட்டுகளையும் பெருநிறுவன வரிகளில் 40 பில்லியன் யூரோ வெட்டுகளையும் திணித்தார். தனது வணிக-ஆதரவு செலவின வெட்டுக்களுடன் சேர்த்து, ஹாலண்ட் PSA-Aulnay மற்றும் Goodyear-Amiens ஆகியவற்றின் தொழிற்சாலைகள் உள்ளிட ஆலை மூடல்களையும் மேற்பார்வை செய்தார், இது ஆயிரக்கணக்கான வேலைகளை ஒழித்தது.

தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீது தாக்குதல் நடத்திய அதேநேரத்தில், ஜனநாயக உரிமைகள் மீதான தனது தாக்குதலையும் ஹாலண்ட் அரசாங்கம் ஆழப்படுத்தியது; FN இன் வாக்குவங்கிக்கு விண்ணப்பம் செய்யும் பொருட்டு, ரோமாக்களை வெளியேற்றுவதற்கும் பிரான்சிலுள்ள அவர்களது வசிப்பிடங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மிகப் பயங்கர சம்பவமாக, லியோனார்டா டிப்ரனி என்ற 15 வயது ரோமா பள்ளிச்சிறுமி பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்க உத்தரவிடப்பட்டு கொசோவோவுக்கு திருப்பியனுப்பப்பட்டதாகும். புலம்பெயர்ந்தவர்கள் மீதான ஹாலண்ட்டின் ஒடுக்குமுறையைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரான்ஸ் எங்கிலும் பேரணிகள் நடத்தினர்.

அவரது ஜனாதிபதி பதவிக்காலம் முன்செல்ல செல்ல, ஹாலண்ட் தனது இராணுவவாதக் கொள்கைகளையே தொடர்ந்து பராமரிக்க முனைகிறார் என்பதும், அதி-வலதுகளுக்கும் தேசியவாத மனோநிலைக்கும் விண்ணப்பம் செய்வதன் மூலமும் போலிஸ்-அரசு ஆட்சியை நோக்கி நகர்வதன் மூலமும் 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் பெற்றிருந்த சமூக தேட்டங்கள் அனைத்தையும் மறுதலித்தார் என்பதும் மேலும் மேலும் தெளிவாகியது.

சிரியாவில் நேட்டோவின் போரில் அணிதிரட்டப்பட்டிருந்த இஸ்லாமிய வலைப்பின்னல்களால் நடத்தப்பட்ட 2015 பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களை சாக்காகக் கொண்டு, PS, காலவரையற்று நீட்சி செய்யத்தக்க அவசரகால நிலையைத் திணித்து, பயங்கரவாதத்தை தடுப்பதற்காய் என்ற பேரில் போலிசுக்கும் உளவு சேவைகளுக்கும் மலையளவான அதிகாரங்களைக் கொடுத்தது. சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகியவற்றைத் திணிப்பதற்கு வசதியான ஒரு அரசியல் தளத்தை உருவாக்கிக் கொள்ளும் முனைப்பில் FN இன் வேலைத்திட்டத்தின் பெரும்பகுதியை -அவசரகாலநிலை திணிப்பு, தேசிய காவற் படையை உருவாக்குவது, குடியுரிமை பறிப்பு என்ற நாஜி ஆக்கிரமிப்பு சகாப்த கொள்கையை நியாயப்படுத்த முனைவது- ஹாலண்ட் எடுத்துக் கொண்டு விட்டிருந்தார்.

பிற்போக்கான “எல் கொம்ரி” தொழிலாளர் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராய் பாரிய எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் இருந்தும் கூட, அரசாங்கம், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமலேயே, பிரெஞ்சு அரசியல்சட்டத்தின் பிரிவு 49.3 இன் மூலமாக அதனைத் திணித்தது. மக்கள்வெறுப்பை சம்பாதித்த இச்சட்டமானது தொழிலாளர்களை வேலையில் இருந்து அகற்றுவதற்கும், வேலைவாரத்தை நீட்டி ஊதியங்களைக் குறைப்பதற்கும், அத்துடன் மிகப் பரந்த விதத்தில் பிரான்சின் தொழிலாளர் சட்டத்தை மீறிய வகையில் தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் -அதன்மூலம் பிரெஞ்சு தொழிலாளர்கள் வழக்கமாய் அனுபவித்து வரும் தொழிலாளர் பாதுகாப்பின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விடும்- நிறுவனங்களுக்கு கூடுதல் சவுகரியத்தை வழங்குகிறது.

வால்ஸ் இப்போது PS இன் முன்னிலை வேட்பாளராக எழுந்திருப்பது என்பது, முதலாளித்துவ அரசியலில் இன்னும் அதிகமாய் வலது நோக்கி நகர்வது என்ற ஹாலண்டினால் மேற்பார்வையிடப்பட்டு வந்திருந்த ஒன்றை தொடர்வதற்கே PS நோக்கம் கொண்டுள்ளது என்பதன் அறிகுறியே ஆகும்.