ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A Trump junta?

ட்ரம்ப்பின் ஒரு இராணுவ ஆட்சிக்குழு?

By Bill Van Auken
9 December 2016

அமெரிக்க தெற்கு கட்டளையகத்தின் முன்னாள் தலைவரான மரைன் ஜெனரல் ஜோன் கெல்லி உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கான தலைவராக புதனன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அடுத்து, ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் வரவிருக்கும் தனது அமைச்சரவைக்கு பயன்படுத்திக் கொள்ளவிருக்கும் சமீபத்தில் ஓய்வுபெற்ற ஜெனரல்களின் எண்ணிக்கை மூன்றாகியிருக்கிறது.

கெல்லி பரிந்துரைக்கப்படும் முன்பாக, பாதுகாப்பு உளவு முகமையின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைவரும் வெறிபிடித்த முஸ்லீம்-விரோத லெப்டினெண்ட் ஜெனரலுமான மைக் ஃபிளின்னை தனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

கொலை செய்வதன் மீது தனக்குள்ள ஒரு காதலை வெளிப்படுத்தும் அவரது தொடர்ந்த பேச்சுக்களுக்காக “Mad Dog” என்று பட்டப்பெயர் கொண்ட அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மரைன் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸை பாதுகாப்புத் துறைக்குத் தலைமை கொடுப்பதற்கான தெரிவாகவும் அவர் அறிவித்திருந்தார். மாட்டிஸ் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட, முந்தைய ஏழு வருடங்களில் இராணுவச்சீருடையில் சேவைசெய்திருக்கக் கூடிய இராணுவ அதிகாரிகள் இந்தப் பதவியில் அமர்வதற்கு தடுக்கும் ஒரு சட்டத்தில் இருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில், நாடாளுமன்ற ஒப்புதல் அவசியமாக இருக்கிறது. 2013 இல் ஓய்வுபெற்ற மாட்டிஸ் முக்கிய இராணுவ ஒப்பந்த நிறுவனமான General Dynamics இன் இயக்குநர் குழுவில் இடம்பிடித்தார்.

மூத்த அதிகாரிகளாகக் கூறப்படும் இன்னும் பலரும் வரிசையில் இருக்கின்றனர். அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் முன்னாள் தலைவரும் மத்திய உளவு முகமையின் இயக்குநராக சிறிதுகாலம் சேவை செய்தவருமான டேவிட் பெட்ரேயஸ், வெளியுறவுத் துறை செயலர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, அவருக்கும் விதிவிலக்கு அவசியமாக இருக்கும், ஏனென்றால் அவரும் கடந்த ஏழு வருடங்களுக்குள் இராணுவச் சீருடை அணியாதவராக இல்லை. அத்துடன் அவர் வாஷிங்டனில் வேலைசெய்வதற்கு அல்லது அமெரிக்காவுக்கு வெளியில் பயணம் செய்வதற்கு தனது மேற்பார்வை அதிகாரியின் அனுமதியையும் பெறவேண்டியதாய் இருக்கும். உயர் இரகசிய உளவு ஆவணங்களை தனது துணைவியிடம் ஒப்படைத்ததை அவர் ஒப்புக்கொண்டதன் பின்னர் சென்ற வருடத்தில் இரண்டு ஆண்டு மேற்பார்வைக்குட்பட்ட பணிக்கு அவர் பணிக்கப்பட்டார்.

நேட்டோவின் முன்னாள் உச்ச கூட்டுத்தளபதியாக இருந்த ஓய்வுபெற்ற அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் வியாழக்கிழமை அன்று ட்ரம்ப்பை நியூ யோர்க்கில் சந்தித்தார், வெளியுறவுச் செயலர் பதவிக்கு இவரும் பரிசீலிக்கப்படுவதாய் கூறப்படுகிறது. முன்னதாக, அவர் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் துணை ஜனாதிபதியாக போட்டியிடும் சாத்தியமாக பரிசீலிக்கப்பட்டவராவார். அத்துடன், இப்போது தேசியப் பாதுகாப்பு முகமையின் தலைவராக இருக்கும் அட்மிரல் மைக்கல் ரோஜர்ஸ், தேசிய உளவு முகமையின் இயக்குநர் பதவிக்கான பரிசீலிப்புகளில் ஒருவராக இருப்பதாய் கூறப்படுகிறது.

ட்ரம்ப்பின் அமைச்சரவையில் ஏராளமான மூத்த இராணுவ அதிகாரிகள் ஒன்றுதிரட்டப்படுவதானது வரவிருக்கும் நிர்வாகத்தை மேலும் மேலும் ஒரு இலத்தீன் அமெரிக்க இராணுவ ஆட்சிக்குழுவை ஒத்ததாய் ஆக்குகிறது. பாரிய அமெரிக்க போர் எந்திரத்தை மேற்பார்வை செய்யும் பாதுகாப்புத் துறை மற்றும் விரிந்து செல்லும் போலிஸ்-அரசு எந்திரத்தை ஒருங்கிணைக்கக் கூடிய உள்நாட்டு பாதுகாப்புத் துறை இரண்டையுமே இரண்டு சமீபத்தில் ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் ஜெனரல்களின் கரங்களில் ஒப்படைப்பது குறிப்பாக திகிலூட்டக்கூடியதாகும்; ஒரு இரகசியமான இராணுவ ஆலோசனைக் குழுவின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் போரையும் சொந்த நாட்டில் ஒடுக்குமுறையையும் பிசிறின்றி ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கம் நோக்கம் கொண்டிருப்பதாகவே இது சமிக்கையளிக்கிறது.

வியட்நாம் போரின் போது கட்டாய இராணுவ சேவையில் இருந்து ஐந்து முறை தப்பித்த இந்த ஏமாற்றுக்காரரான பில்லியனர் ட்ரம்ப், தன்னைச் சுற்றி இராணுவப் பெருந்தலைகளை நிறுத்திக் கொள்வதிலும், பேரணிகளில் “Mad Dog” மாட்டிஸ் என்று —ஃபலூஜா படுகொலைகளின் இந்த வடிவமைப்பாளருடனான நெருக்கம் தனது பிம்பத்தை ஏதொவொரு வகையில் வலுப்படுத்தும் என்பதைப் போல— முட்டாள்தனமாகக் கூக்குரலிடுவதிலும் குதூகலமடைவதாகத் தென்படுகிறது. ஆயினும், அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இராணுவத்தின் எழுச்சிக்கு ஒரு புறநிலையான மூலமும் அங்கே இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் மூத்த கூட்டணித் தளபதியாக இருந்திருந்த, ஜனாதிபதி ட்வைட் டி.ஐஸ்னோவர், ”ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாநிலத் தலைமைச் செயலகத்திலும், கூட்டரசாங்கத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும், பொருளாதார, அரசியல் மற்றும் இன்னும் தார்மீகப் பாதிப்பையும்” கூட கொண்டிருக்கக் கூடியதான “தீவிரமான இராணுவ ஸ்தாபகம் மற்றும் மிகப்பெரும் ஆயுதத் துறை ஆகியவற்றின் நெருக்கத்திற்கு” எதிராக எச்சரிக்கை விடுக்கும் தனது பதவியில் இருந்து விடைபெறும் உரையை நிகழ்த்தி இப்போது 55 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாய் ஆகிறது.

ஐசனோவர் எச்சரித்தார்: “எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாராமலோ, இராணுவத்-துறை வளாகத்தில் இருந்து முகாந்திரமற்ற பாதிப்பைப் பெற்று விடுவதில் இருந்து நாம் தடுத்துக் கொள்ள வேண்டும். அழிவுகரமான வகையில் அதிகாரம் இடம்மாறி அமரும் ஆபத்துக்கான சாத்தியம் இருக்கிறது; தொடர்ந்தும் இருக்கும்.”

வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளிப்படுத்தப்படுகிறவாறு “அழிவுகரமான வகையில் அதிகாரம் இடம்மாறியிருக்கும்” இந்தமட்ட அளவையோ அல்லது அமெரிக்க இராணுவ எந்திரத்தின் மிகப்பரந்த பெருக்கத்தையோ ஐசனோவர் தனது மிகக்கொடும் கனவுகளிலும் கூட அநேகமாக கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்.

580 பில்லியன் டாலராக, பென்டகனின் வரவு-செலவு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டரசாங்கத்தின் ஒதுக்கீட்டு செலவினத்தில் பாதிக்கும் மேலாய் முழுங்கி விடுகிறது. முடிவில்லாத வெளிநாட்டுப் போர்களுக்கு அளிக்கப்படும் நிதியுடன் சேர்த்து, அணுஆயுதப் போர்த் தயாரிப்பு மற்றும் பிற இராணுவச் செலவினங்களுமாய் சேர்த்து, அமெரிக்காவின் போர் எந்திரத்தின் உண்மையான செலவு ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர்களை தொடுகிறது.

குறிப்பாக கடந்த காலாண்டு கால முடிவற்ற போர்களின் சமயத்தில், பென்டகன் வரவு-செலவு திட்டத்துடன் சேர்த்து, இராணுவப் பெருந்தலைகளின் அதிகாரமும் இடைவிடாது வளர்ச்சி கண்டு சென்றிருக்கிறது. ஒரு தொழில்முறை “முழுத் தன்னார்வலர்” இராணுவப் படைகளின் உருவாக்கமானது பெருமளவில் இராணுவத்தை குடிமை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி, அரசின் விவகாரங்களில் தனது சுயாதீனமான அரசியல் நலன்களை முன்னினும் மூர்க்கமாக திட்டவட்டம் செய்யக் கூடிய ஒரு தனித்துவமான சமூக சாதியை உருவாக்கியிருக்கிறது. மாட்டிஸ், கெல்லி, பெட்ரேயஸ் மற்றும் ஸ்ட்ராவிடிஸ் போன்று “ஒன்றிணைக்கப்பட்ட போர்த் தளபதிகள்” என்று அழைக்கப்படுவோர், அமெரிக்க அரசாங்கத்தின் எந்தத் தூதரையோ அல்லது மற்ற குடிப் பிரதிநிதியையோ விஞ்சும் வகையில், உலகின் ஒட்டுமொத்தப் பிராந்தியங்களின் மீதும் பரந்த அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்.

அமெரிக்க இராணுவத்தின் சாமானிய துருப்புகள் தேர்தலில் பெரிதும் ட்ரம்ப்புக்கு சாதகமாகவே இருந்ததாக தெரிகிறது —ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கிலுமான முடிவில்லாத  போர்களை அவர் வந்து நிறுத்துவார் என்று தவறாக வழிநடத்தப்பட்ட நம்பிக்கையும் இதில் பாதிக் காரணம்— என்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தின் தலைமைகளிடத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனே ஆதரவைப் பெற்றவராய் இருந்தார், அவரை இராணுவவாதத்தின் ஒரு நீண்டநாள் ஆதரவாளராகவும் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான தங்களின் மூலோபாயத் தயாரிப்புகளுக்கு நம்பத்தகுந்த ஒரு ஆதரவாளர் என்றும் அவை கருதின.

ஃபிளின்னைத் தாண்டி, உயர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற அல்லது பரிசீலிக்கப்படுகின்ற முன்னாள்-இராணுவத் தளபதிகளில் எவரும் ட்ரம்பை வழிமொழிந்திருக்கவில்லை. இவர்களில் சிலர் ஒபாமா நிர்வாகத்துடன் மோதியிருந்தனர், உதாரணமாக மாட்டிஸ் ஈரான் விவகாரத்திலும், கெல்லி குவாண்டனாமோ விவகாரத்திலும் மோதியிருந்தனர்.

ட்ரம்ப் முன்னாள் தளபதிகளை தேர்வுசெய்வதைப் பொறுத்தவரையில், இத்தளபதிகள், இறுதியில் கொள்கையை உத்தரவிடும் நம்பிக்கையில், அவரது நிர்வாகத்தில் சேரும் முடிவுக்கு தாமாகவும் வந்துசேரலாம்.

ஒபாமா நிர்வாகமும், காங்கிரஸின் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் மாட்டிஸை பாதுகாப்புச் செயலராக நியமிப்பதன் பாதையில் தாங்கள் எந்த முட்டுக்கட்டையும் இடப் போவதில்லை என்பதை வியாழனன்று சமிக்கையளித்தனர். காங்கிரஸ் இந்த வார இறுதியில் தள்ளிவைக்கப்படுவதற்கு முன்பாக அதில் ஒப்புதல் பெறுவதற்காக இடைக்கால செலவின மசோதா தாக்கல் செய்யப்படவிருந்ததுடன், சமீபகாலத்தில் இராணுவப்பணியில் இருந்த அதிகாரிகள் அரசின் பதவிகளில் அமர்வதற்கான சட்டரீதியான தடையைத் தளர்த்துவதை துரிதப்படுத்தும் ஒரு நடவடிக்கை சேர்த்துக் கொள்ளப்படவிருக்கிறது. 60 ஆண்டுகளில் இத்தகையதொரு விதித்தளர்வு இப்போதுதான் முதன்முறையாக கொண்டுவரப்படுகிறது என்ற போதும் கூட, செனட்டில் இந்த விதித்தளர்வின் மீதான விவாதம் 10 மணி நேரங்களுக்குள் மட்டுப்படுத்தப்படுவதாக இருக்கிறது.

ட்ரம்ப் “அவர் தனது அணியை உருவாக்குவதில் பரந்த சவுகரியம் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் “இது ஒரு முக்கியமான கோட்பாடு” என்று ஒபாமா நம்புகிறார் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ஜோஸ் இயர்னஸ்ட் தெரிவித்தார்.

இராணுவத்தின் மீதான பொதுமக்களின் கட்டுப்பாட்டைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவமான கோட்பாடாய் ஒபாமாவுக்கு தெரிகிறது போலும். இந்த அடித்தளமான அரசியல்சட்டக் கோட்பாடு ஒரு முகவரியற்ற கடிதமாக, அரசியல் ஸ்தாபகத்தின் எந்த முக்கியமான பிரிவின் ஆதரவும் இன்றி அல்லாடுகிறது என்பதானது, ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் அமர்வதில் தங்களது பூரணமான அரசியல் வெளிப்பாட்டைக் காணக் கூடியதாக இருக்கின்ற அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயக ஸ்தாபனங்களின் சிதைவு மற்றும் உருக்குலைவின் மிகவெளிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது.

பில்லியனர்களையும் தளபதிகளையும் கொண்ட வர்க்கப் போரின் ஒரு அரசாங்கமே நியூயோர்க் நகரின் ட்ரம்ப் டவர்ஸ் இல் நடந்து வருகின்ற அமர்வுகளில் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகும். சொந்தநாட்டில் சமூகப் பிற்போக்குத்தனமான கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் வெளிநாடுகளில் போருக்கும் அது தயாரிப்பு செய்கின்ற நிலையில், இந்த கொள்கைகள் தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் மற்றும் இளைஞர்களாலும் தூண்டக்கூடிய பாரிய மக்கள் எதிர்ப்புக்கு முகம்கொடுப்பதற்கு அது இராணுவத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது.