ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Obama’s parting shot at Russia

ரஷ்யா மீதான ஒபாமாவின் விடைபெறும் தருணத் தாக்குதல்

By Bill Van Auken
10 December 2016

வெள்ளை மாளிகையை டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஒப்படைப்பதற்கு முந்தைய தனது இறுதி முன்முயற்சிகளில் ஒன்றாக, ஜனாதிபதி பராக் ஒபாமா, 2016 ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்வதற்கு ரஷ்யா செய்ததாகக் கூறப்பட்ட முயற்சிகள் மீதான ஒரு “முழுமையான திறனாய்வை” நடத்துவதற்கு அமெரிக்க உளவு முகமைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஒபாமாவின் உயர்நிலை பயங்கரவாத-எதிர்ப்பு ஆலோசகரான லிசா மொனாக்கோ வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறினார்: “நாம் ஒரு புதிய எல்லைக்குள் பிரவேசித்திருக்கக் கூடும், என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும் கற்ற சில பாடங்களை படிப்பிப்பதற்காகவும் அது என்னவென்பதை அறிவதும், திறனாய்வு செய்வதும் சில பின்-நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எங்களது கடமையாகும்.”

இந்த விசாரணை “ஒரு பெரும் முன்னுரிமையுடையது” என்று பின்னர் ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“அமெரிக்க ஜனாதிபதிக்கு இது ஒரு முக்கிய முன்னுரிமை விடயமாகும்” என்றார் துணை ஊடகச் செயலரான எரிக் ஸ்கல்ட்ஸ். ”இதனை மேற்கொள்வதற்கு அவர் தனது உளவு சேவைகளையும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளையும் பணித்திருக்கிறார். அவர் பதவியில் இருந்து விடைபெறும் நாளுக்கு முன்பாக அந்த அறிக்கை அவருக்குக் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.”

“எந்த புதிய எல்லை” கடக்கப்பட்டிருக்கிறது? அமெரிக்க வரலாற்றின் மிகவும் வலது-சாரி அரசாங்கத்தின் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் பதவியில் அமர்வதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பாக இந்த விடயம் ஒரு “பெரும் முன்னுரிமை” பெற்ற பிரச்சினையாக ஆனது ஏன்?

அமெரிக்கத் தேர்தலில் செல்வாக்கு செலுத்த ரஷ்யா முனைந்ததான குற்றச்சாட்டு அமெரிக்க அரசாங்கத்தினால் அக்டோபர் மாதத்தில் மேற்கோள்ளப்பட்டது, ஆயினும் ரஷ்ய குறுக்கீடு குறித்த தனது கூற்றுகளுக்கான பின்புலமாக முற்றிலும் எந்தவிதமான ஆதாரத்தையும் அது வழங்கியிருக்கவில்லை.

அப்படியே அது உண்மையாக இருந்தாலும் கூட, வெளிநாட்டுத் தேர்தல்களில் தலையீடு செய்வதற்கான “எல்லை” அமெரிக்காவால் மிக நெடுங்காலத்திற்கு முன்னரேயே தாண்டப்பட்டு விட்டது. தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு போதுமான விசுவாசமாக இல்லாதிருப்பதாய் கண்டால் தூக்கியெறிவதற்காகவோ, கடந்த ஏழு தசாப்தங்களில் சிஐஏ எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தலையீடு செய்திருக்கிறது. ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy) என்ற அதன் பொதுவெளி அங்கம், ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் தொடங்கி வெனிசூலா, ஹோண்டுராஸ் மற்றும் ஹைத்தி வரையிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது.

அமெரிக்காதான் உலகின் வேறெந்த நாட்டை விடவும் மிகப் பெரும் இணையப் போர் திறன்களைக் கொண்டிருப்பதாக ஒபாமாவே பெருமையடித்திருக்கிறார்; அத்துடன் அது ரஷ்யா, சீனா மற்றும் ஈரானின் குடிமை உள்கட்டமைப்புகளுக்கு எதிரான முடக்கும் தாக்குதல்களுக்கான திட்டங்களை அபிவிருத்தி செய்து வந்திருப்பதோடு அவற்றைத் தொடர்ச்சியாக பிரயோகம் செய்தும் வந்திருக்கிறது. ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் தொடங்கி பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி தில்மா ரூசுப் வரையிலுமான உலகத் தலைவர்களின் தொலைபேசிகளையும் மின்னஞ்சல்களையும் கூட அமெரிக்கா ஊடுருவி களவாடியிருக்கிறது.

அப்படி என்னதான் ரஷ்யா செய்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது?

தேர்தல் “இணையப் பாதுகாப்பு கோணத்தில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்திருந்தது” என்று சென்ற மாதத்தில் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அறிக்கை விடுத்திருந்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வாக்களிப்பில் ரஷ்ய குறுக்கீடு எதுவும் இருக்கவில்லை. தேர்தல் முடிவுகள் “அமெரிக்க மக்களின் விருப்பத்தைத் துல்லியமாக பிரதிபலிப்பதாக”வும் அவர் சேர்த்துக் கொண்டிருந்தார், இது ஒரு கொடூரமான பொய், ஏனென்றால் கிட்டத்தட்ட 3 மில்லியன் வாக்குவித்தியாசத்தில் மக்கள் வாக்களிப்பில் தோற்றுத்தான் டொனால்ட் ட்ரம்ப் பதவியில் அமரவிருக்கிறார். விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா ஆகிய முக்கியமான தொழிற்துறை மாநிலங்களில் ஒரு மறுவாக்குஎண்ணிக்கையை நிர்ப்பந்தம் செய்வதற்காக பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜில் ஸ்ரைன் முன்னெடுத்த முயற்சிகளுக்கு எதிராகவே இந்த அறிக்கை விடுக்கப்பட்டது.

ஆக ரஷ்ய குறுக்கீடு குறித்த குற்றச்சாட்டுகளில் எஞ்சியிருப்பது என்னவென்றால், ஜனநாயகக் கட்சி அதன் சொந்த வாக்காளர்களிடம் கூறாமல் காப்பாற்றி வந்திருந்த இரகசியங்களை -குறிப்பாக, பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்குக் குழிபறித்து ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி வேட்பாளராவதை உத்தரவாதம் செய்வதற்கு ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு மேற்கொண்ட மோசடியான முயற்சிகளை- அம்பலப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசாங்கம் உதவியது என்பது மட்டும் தான். வோல் ஸ்டிரீட்டின் வங்கியாளர்களுக்கு விசுவாசத்தை உறுதியளிக்கும் கிளிண்டனின் உரைகள் மற்றும் ஜனநாயகக் கட்சி மற்றும் கிளிண்டன் அறக்கட்டளை இரண்டின் ஊழலடைந்த செயல்பாடுகள் ஆகியவற்றை பகிரங்கமாக்குவதற்காக, கிளிண்டனது பிரச்சார மேலாளரான ஜோன் போடஸ்டாவின் மின்னஞ்சல்களைத் திருடியதாகவும் மாஸ்கோ மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஒபாமா உத்தரவிட்டிருக்கும் திறனாய்வு குறித்து வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் நாசூக்காக தெரிவித்ததைப் போல, “இந்த திறனாய்வின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.” ஆதாரம் ஏதும் அமெரிக்க மக்கள் முன்னால் வைக்கப்படப் போவதில்லை, ஏனென்றால் ஆதாரமே அங்கு இல்லை.

இறுதியில், ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மக்களிடம் மறைத்துப் பாதுகாக்க விரும்பியிருந்த அசவுகரியமான அரசியல் உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காகதான் ரஷ்யா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இதை ஒரு “பெரும் முன்னுரிமை”யாகக் கொள்வது என்பது ஒபாமா நிர்வாகத்தின் அரசியல் குறித்து பெருமளவில் விளக்குவதாக இருக்கிறது. ஒபாமா பதவியில் அமர்ந்த முதல் வருடத்திலேயே தான் செய்வதாக வாக்களித்த ஒன்றான கியூபாவில் உள்ள குவாண்டானோமோ சிறை முகாமை மூடுவது என்ற ஒன்றை நிறைவேற்றும் எண்ணம் அவருக்கு கொஞ்சமும் இல்லை என்பதையும் இந்த விசாரணையை அறிவித்த அதே உரையில் பயங்கரவாதத்தடுப்பு ஆலோசகர் தெளிவாக்கி விட்டார். அவப்பெயர்பெற்ற இந்த சிறையை இவர், அதனை நிரப்புவதற்கும் சித்திரவதையை தொடர்வதற்கும் சபதமெடுத்திருக்கும் ட்ரம்ப்பிடம் ஒப்படைக்கவிருக்கிறார்.

இராணுவத்தின் மீதான குடிமக்கள் கட்டுப்பாட்டை பராமரிக்கும் பொருட்டு சமீபத்தில் இராணுவ சீருடை அணிந்து பணியாற்றியவர்கள் அமர முடியாத வண்ணம் இருக்கின்ற ஒரு சட்டத்தடையை மீறி முன்னாள் மரைன் ஜெனரலான “Mad dog” என அழைக்கப்படும் மாட்டிஸ் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற நிலையிலும் கூட, அதனை எதிர்க்கப் போவதில்லை என்பதை ஒபாமா நிர்வாகம் தெளிவாக்கி விட்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் ஒரு போரைத் தொடுக்க வரிந்துகட்டி நிற்கக்கூடிய வலது-சாரி பில்லியனர்கள் மற்றும் அரை-பாசிஸ்டுகளின் ஒரு கூட்டத்தை கொண்டு ட்ரம்ப் தனது அமைச்சரவையை நிரப்புவதைக் குறித்து ஒபாமா எதுவுமே கூறவில்லை. அதற்கு மாறாய், ட்ரம்ப் “தனது அணியை ஒன்றுதிரட்டுவதற்கு போதுமான விரிந்த சவுகரியம் அளிக்கப்பட வேண்டும்” என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் அறிவித்திருக்கிறார்.

ஒபாமா உத்தரவிட்டிருக்கும் உளவுத்துறை விசாரணையானது “தேர்தல் முடிவை சவால் செய்யும் ஒரு முயற்சி அல்ல” என்று கூறி நிர்வாகம் தேர்தல் முடிவின் மீது கேள்வி எழுப்பவில்லை என்பதை வெள்ளிக்கிழமை துணை ஊடகச் செயலர் ஷல்ட்ஸ் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். ”உண்மையில் ஒபாமா, ட்ரம்ப்புக்கு அதிகாரத்தை சுமூகமான வகையில் நாங்கள் கைமாற்றுவதை உறுதிசெய்வதற்காக தனது வழக்கத்திற்கும் அதிகமாகவே முன்சென்றிருக்கிறார்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

அப்படியானால் இந்த விசாரணை என்ன செய்யப் போகிறது? யூரோஆசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்க முனைப்புக்கான பிரதான முட்டுக்கட்டையாக அதனால் பார்க்கப்படுகின்ற ரஷ்யாவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்து வரும் இராணுவ மோதலுக்கான தயாரிப்புகளை ட்ரம்ப் தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, இப்போதுக்கும் அவர் பதவியேற்கின்ற நாளுக்கும் இடையிலான காலத்தில், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளில் முடிந்த அளவுக்கு நஞ்சைக் கலப்பதே இதன் நோக்கமாய் இருக்கிறது.

போர் மற்றும் ரஷ்யா ஆகிய பிரச்சினைகளில் ஜனநாயகக் கட்சியும் ஹிலாரி கிளிண்டனும் தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்புக்கும் வலதுபக்கத்தில் இருந்தனர், நேட்டோ காலாவதி முறையிலானதாக இருக்கிறது என்றும் சிரியா விடயத்தில் ஒரு பொதுவான கொள்கை உள்ளிட்ட விடயங்களை ரஷ்யாவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் ட்ரம்ப் கூறியதை அடுத்து ”புட்டினின் கைப்பாவை”யாக அவர்கள் ட்ரம்பைச் சித்தரித்தனர்.

ஹிலாரி கிளிண்டன் வென்றிருந்தால், சிரியாவில் அமெரிக்க தலையீட்டை தீவிரப்படுத்துவதற்கும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோவின் ஆத்திரமூட்டும் இராணுவப் பெருக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதற்கும் மக்கள் உத்தரவு கிட்டியிருப்பதாகக் கூறியிருப்பார்.

ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் அறிவிக்கப்படாத பிரச்சார அங்கமாக செயல்பட்ட நியூ யோர்க் டைம்ஸ், தேர்தல் முடிவைத் தொடர்ந்து வந்த முதல் வாரத்தில் “ரஷ்யா விடயத்தில் மென்மையாக நடந்து கொள்வதின் அபாயம்” என்ற தலைப்பில் ஒரு முன்னிலைத் தலையங்கத்தை வெளியிட்டது.

தேர்தலில் செல்வாக்கு செலுத்த ரஷ்யா மேற்கொண்டதாக கூறப்படும் முயற்சிகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஒபாமா விவரிக்கக்கோரி இந்த வாரத்தில், பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினர். மேலவையைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியினரும் இணைய ஊடுருவல் குறித்து ஆய்வுசெய்ய ஒரு சுதந்திரமான ஆணையத்தை உருவாக்குவதற்கான ஒரு மசோதாவைக் கொண்டுவந்தனர்.

செனட்டின் குடியரசுக் கட்சியினர், தேர்தலில் ரஷ்யா குறுக்கீடு செய்ததாக சொல்லப்படுவது குறித்த தங்களது சொந்த விசாரணையைத் தொடக்குகின்றனர். அமெரிக்க ஆதரவு இஸ்லாமியப் போராளிகளுடனான சிரிய அரசாங்கத்தின் போரில் அதற்கு உதவிசெய்யக் கூடிய எந்த நாட்டின் மீதும் தடைகளைத் திணிப்பதற்கான -இது ரஷ்யாவுக்கு எதிராக ஏவப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவு- ஒரு சட்டமசோதாவை குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவை நிறைவேற்றியிருக்கிறது. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பகிரங்கமான ஆத்திரமூட்டல் நடவடிக்கையாக, பென்டகன் வரவு-செலவு திட்டத்தில் உக்ரேனுக்கு கொலைத்திறன்மிக்க இராணுவ உதவிக்கான மில்லியன் கணக்கான டாலர்களும் இடம்பெற்றிருக்கிறது.

அத்துடன் ட்ரம்ப் தனது அமைச்சரவைக்குள் கொண்டுவந்திருக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் -பாதுகாப்புச் செயலர் பதவிக்கு மாட்டிஸ் மற்றும் உள்நாட்டு பாதூகாப்பு செயலர் பதவிக்கு ஜோன் கெல்லி- இருவருமே ரஷ்யாவுக்கு ஏதிரான அமெரிக்க இராணுவப் பெருக்கத்திற்கு ஆதரவாக வலுவான குரல்கொடுத்திருக்கின்றனர்.

இறுதியில், அமெரிக்க வரலாற்றின் மிகவும் வலது-சாரி அரசாங்கம் ஆட்சியில் அமர தயாரிப்பு செய்துகொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் அத்தனை பிரிவுகளுமே உலகப் போருக்கு தயாரிப்பு செய்வதற்கான முனைப்பில் ஒன்றுபட்டு நிற்கின்றன.