ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Poverty on the rise in Europe

ஐரோப்பாவில் வறுமை அதிகரித்துச் செல்கிறது

By Elisabeth Zimmermann
29 November 2016

சென்ற வாரத்தில் பேர்டெல்ஸ்மான் ஃபவுண்டேஷன் (Bertelsmann Foundation) 2016 ஆம் ஆண்டின் சமூக நீதிக் குறியீட்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த பல வருடங்களாய் நடத்தப்பட்டு வருகின்ற இந்த ஆய்வானது ஐரோப்பிய நிலைமைகள் மீதான ஒரு வருடாந்திர ஆய்வின் குறியீட்டை வெளியிட்டு வருகின்றது. 2008 உலக நிதி நெருக்கடி தொடங்கி, பரவலான எதிர்ப்புக்கு முகம்கொடுத்த நிலையிலும் ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மீதான ஒரு உலுக்கும் குற்றப்பத்திரிகையாக இந்த முடிவுகள் அமைந்திருக்கின்றன.

இந்த ஆய்வின் படி, குடிமக்கள் நான்குபேருக்கு ஒருவர் வறுமையால் அல்லது சமூகத்தில் இருந்து வெளித்தள்ளப்பட்டுள்ள நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்தம் 118 மில்லியன் மக்கள்தொகையாகும். ஒரு முழு-நேர வேலை இருந்தும் கூட ஏழைகளாக இருக்கும் மக்களின் சதவீதம் 2015 இல் 7.8 சதவீதமாக அதிகரித்தது, 2013 இல் இருந்த அளவில் இது 0.6 சதவீத அதிகரிப்பாகும். மேலும் மேலும் அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் மலிவூதிய வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதே இதன் பொருளாகும்.

இது ஜேர்மனிக்கும் பொருந்துவதாய் இருக்கிறது, ஜேர்மனி மிகப்பெரும் பொருளாதார சக்தியாக இருந்தும் கூட, சமூக நீதிக் குறியீட்டில் அது ஏழாம் இடத்தையே பிடித்துள்ளது. ஜேர்மனியில் முழு-நேர வேலை இருந்தும் வறுமையில் வாழ்வோரின் சதவீதம் 2009 இல் 5.1 சதவீதமாக இருந்ததில் இருந்து 2015 இல் 7.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது; திட்டநிரல் 2010 சீர்திருத்தங்கள் மற்றும் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜொஷ்கா பிஷ்ஷர்  இன் SPD-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஹார்ட்ஸ் நல உதவித் திட்ட மாற்றங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து உருவான பாரிய மலிவூதியத் துறையின் ஒரு பின்விளைவே இதுவாகும்.

உழைக்கும் ஏழைகள் -அதாவது, வேலை செய்தும் கூட வாழ முடியாத நிலையில் உள்ளவர்கள்- என்று அழைக்கப்படுகின்ற பிரிவின் எண்ணிக்கை வளர்ச்சி, மற்றும் ஒரு சமூக எழுச்சிக்கான சாத்தியம் ஆகியவையே இந்த ஆய்வின் ஆசிரியர்களை நிரப்பிய கவலைகளாகும். பேர்டெல்ஸ்மான் ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாகியான Art de Geus கூறியதைப் போல, “தங்கள் வேலையின் மூலமாக நிரந்தரமாக வாழ முடியாத மக்களின் சதவீதம் பெருகிச் செல்வதானது நமது பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கின் செல்தகைமையை பலவீனப்படுத்துகிறது.”

ஒரு சில குறைந்தபட்ச முன்னேற்றங்களை -ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் 2014 இல் 10.4 சதவீதமாக இருந்ததில் இருந்து அடுத்த ஆண்டில் 9.6 சதவீதத்திற்குக் குறைந்தமை மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் 64.8 சதவீதத்தில் இருந்து 65.8 சதவீதமாக உயர்ந்தமை போன்றவை- அடையாளம் காண இந்த ஆய்வின் ஆசிரியர்கள் முயற்சி செய்கின்றனர், என்றபோதும் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையின் எண்ணிக்கை மாறான வேறொரு போக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே, முடிவுகளின் ஒரு சுருக்கமான விபரிப்பில் இந்த ஆய்வு கூறியது: “ஐரோப்பாவில் 2016 இல் சமூக நீதி: முன்னேற்றங்கள் தடுமாறுகின்றன”.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக வறுமையின் அபாயம் மிக அதிக அளவில் தொடர்கிறது. 2008 இல் போலவே, 2015 இலும் இது 23.7 சதவீதமாக இருந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான நிலைமைகள், குறிப்பாக தெற்கு ஐரோப்பாவில், படுமோசமான நிலையில் இருக்கின்றன. ஆய்வு தெரிவிக்கிறது: “ஆயினும், உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்து ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், அநேக ஐரோப்பிய நாடுகளில் -சில விதிவிலக்குகள் தவிர்த்து- மக்களின் பங்கேற்பு நிலைக்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் நெருக்கடிக்கு முன்பை விடவும் மோசமாய் இருக்கின்றன.”

28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், சமூக நீதிக் குறியீட்டில் கிரீஸ் தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கிறது. ருமேனியாவுக்கும் (27) பல்கேரியாவுக்கும் (26) இடையிலான இடைவெளி உண்மையில் இன்னும் அதிகரித்துள்ளது.

ஆனால், முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஸ்வீடன், பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. “2007-08 நிலைமைகளுடன் ஒப்பிட்டால், இந்த நாடுகள் சமூக நீதி விடயத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன” என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்கு இடையிலான சமூகப் பிளவு தொடர்ந்தும் பெருமளவில் இருக்கிறது. கிரீஸிலும் ஸ்பெயினிலும் நிலவக் கூடிய திகிலூட்டும் உயர்ந்த வறுமையளவுகளே இதற்கான எல்லாவற்றுக்கும் முதலான காரணமாய் இருக்கிறது. ஸ்பெயினில் வறுமை விகிதம் 28.6 சதவீதமாக இருக்கிறது கிரீசில் இது 35.7 சதவீதம். இந்த நாடுகளில் வறுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் சதவீதம் இன்னும் அதிகமாகும்.

இளைஞர்களில் வேலைவாய்ப்பின்மை மிக உயர்ந்த அளவில் இருப்பதானது இந்த ஆய்வின் ஒரு முக்கியமான கவனக் குவிப்பாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 4.6 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். 2015 இல், 20.4 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை, இது 2008க்குப் பின்னர் கிட்டத்தட்ட 5 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.

வறுமையாலும் சமூக வெளித்தள்ளலாலும் சிறார்களும் இளைஞர்களும் கூட கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 18 வயதுக்குக் கீழான 25 மில்லியன் சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இது பொருந்தும். “ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் பெரும்பான்மையானவற்றில், சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு 2007-08க்குப் பிந்தையதான வாய்ப்புகள் -சிலசமயம் மிக மோசமாக- மோசமடைந்துள்ளன” என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய தெற்கு ஐரோப்பாவின் நெருக்கடிமிக்க நாடுகளிலும் அதேபோல பல்கேரியா மற்றும் ரோமானியா ஆகிய தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நிலைமை தொடர்ந்து மிக மோசமான நிலையில் தொடர்கிறது” என்று அது மேலும் தெரிவித்தது.

18 வயதுக்குக் கீழான சிறார்களின் வறுமையில் ருமேனியா 46.8 சதவீதத்துடன் முன்னிலையில் இருக்கிறது; பல்கேரியா (43.7), கிரீஸ் (37.8 சதவீதம்) மற்றும் ஹங்கேரி (36.1 சதவீதம்) ஆகியவை அதனையடுத்து வருகின்றன. ஆயினும் ஸ்பெயின் (34.4 சதவீதம்), இத்தாலி (33.5 சதவீதம்), பிரிட்டன் (30.3 சதவீதம்) மற்றும் போர்ச்சுக்கல் (29.6 சதவீதம்) ஆகிய நாடுகளிலும் இந்த அளவு மிக அதிகமாய் இருக்கிறது. கிரீஸில் கடுமையான வசதிப் பற்றாக்குறைக்கு முகம்கொடுக்கும் சிறார்களின் எண்ணிக்கை 2007க்குப் பின்னர் கிட்டத்தட்ட மும்மடங்காகி இருக்கிறது. ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளின் காரணத்தால் இது 9.7 ஆக இருந்ததில் இருந்து 25.7 க்கு உயர்ந்திருக்கிறது.

இந்த ஆய்வு விளக்கியது: “வசதி பற்றாக்குறை என்பதன் பொருள், பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட வாழ்வின் அடிப்படை அத்தியாவசியங்களை (அதாவது, பொருத்தமான வெப்பநிலைப் பராமரிப்பு வீடு அல்லது தொலைபேசி போன்றவை) இனியும் பெறமுடியாத அளவுக்கு நிதிரீதியான பற்றாக்குறைக்குள் சென்றுள்ளனர் என்பதாகும்”. பலசமயங்களில் குடும்பங்கள் இனியும் போதுமான ஊட்டச்சத்துக்களையும் மருந்துகளையும் பெற முடியவில்லை என்ற அர்த்தத்தையும் இது வழங்குகிறது.

இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய யூரோ நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில், வறுமை அல்லது சமூக வெளித்தள்ளலுக்கு முகம் கொடுக்கும் சிறார்களின் எண்ணிக்கை 2008க்குப் பின்னர் 1.1 மில்லியன் வரை அதிகரித்திருக்கிறது.

ஆய்வின் இன்னொரு பகுதி NEET (கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி எதிலும் இடம்பெறாமை) என்று அழைக்கப்படுகின்ற ஒன்றின் மீது கவனம் செலுத்தியது. கல்வி பயிலாத, வேலைவாய்ப்பும் இல்லாத அத்துடன் தொழில்முறைப் பயிற்சியிலும் இல்லாத 20 முதல் 24 வயது வரையான இளைஞர்களும் இதில் அடங்குவர். ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக இதன் சராசரி வீதமானது 17.3 சதவீதமாக இருக்கிறது, இது 2008 இல் 15 சதவீதமாக இருந்தது. இத்தாலியும் (31.1 சதவீதம்) ஸ்பெயினும் (22.8 சதவீதம்) ஐரோப்பிய ஒன்றிய சராசரிக்கு மிகவும் மேலிருக்கின்றன.

ஸ்பெயின் மற்றும் கிரீசில் இருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது மொத்த எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கு அருகிலாகும். இத்தாலியில், இது இலேசாக குறைந்திருந்தும், இன்னும் 40.3 சதவீதத்தில் இருக்கிறது.

எந்த வருங்கால நம்பிக்கைகளும் அற்றநிலையிலான வேலைவாய்ப்பற்ற மற்றும் வறுமைப்பட்ட இளைஞர்களின் மிகப் பெரும் எண்ணிக்கைகள் இருப்பது பல ஆண்டுகளாய் பின்பற்றப்பட்டு வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் மீதான ஒரு உலுக்கும் குற்றப்பத்திரிகை ஆகும். கட்சி வித்தியாசம் இல்லாமல் ஐரோப்பிய அரசாங்கம் ஒவ்வொன்றுக்குமே பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் சுமத்துவதைத் தவிர்த்த வேறெந்த கொள்கையும் தெரிவதில்லை. வேலைகளை அழித்தும், ஊதியங்களை வெட்டியும் சமூக உதவிகளை வெட்டியும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைப் பிணையெடுப்பதற்குப் பயன்படுத்த நூறுபில்லியன் கணக்கான யூரோக்களை அவை மீண்டும் திரட்டி வருகின்றன.

பேர்டெல்ஸ்மான் ஃபவுண்டேஷன் ஆய்வு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான வறுமையின் மட்டங்களை கூறியதே அன்றி, அதன் மூலங்களையோ, யார் அதற்கு அரசியல் பொறுப்பானவர்கள் என்பது குறித்தோ எதுவொன்றையும் கூறவில்லை. அதற்குப் பதிலாய், மேம்பட்ட சமூக நீதியை உறுதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடமும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கங்களிடமும் அது விண்ணப்பம் செய்கிறது. ஆனால் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களிடம் ஒரு கூடுதல் சமூகரீதியான கொள்கையை எதிர்பார்ப்பதை விடவும் பிரமையளிக்கிற வேறொன்று இருக்க முடியாது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அரசு எந்திரத்தைக் கட்டியெழுப்புவதும் புதிய போருக்குத் தயாரிப்புகள் செய்வதும்தான் அவர்களது கொள்கைகளது பிரதான திசையாக இருக்கிறது. இதுதான் சமூகப் பதட்டங்களுக்கும் சமூக சமத்துவமின்மையின் மீதான கோபத்திற்கும் அவர்கள் பதிலளிக்கும் விதமாக இருக்கிறது.