ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Italian Prime Minister Renzi resigns after defeat in constitutional referendum

அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு தோல்விக்குப் பின்னர், இத்தாலிய பிரதம மந்திரி ரென்சி இராஜினாமா செய்கிறார்

By Alex Lantier and Mark Wells
5 December 2016

பாரியளவில் பிரதம மந்திரியின் அதிகாரங்களைப் பலப்படுத்தும் தேர்தல் விதிமுறைகளை திருத்தியமைக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான அவரது சர்வஜன வாக்கெடுப்புக்கு வாக்காளர்கள் அவமானகரமான தோல்வியை வழங்கியதும், நேற்று இத்தாலிய பிரதம மந்திரி மத்தேயோ ரென்சி அவரது இராஜினாமாவை அறிவித்தார்.

எதிர்பார்த்ததை விட அதிகமாக மிகப்பெரியளவில் 68 சதவீத வாக்களிப்புடன், ரென்சியால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் 41 வீதம் ஆதரவு 59 வீதம் எதிர்ப்பு என்ற விகிதத்தில் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டன.

சுமார் காலை 12.30 க்கு, ரென்சி தோல்வியை ஒப்புக் கொள்ள இத்தாலிய தேசிய தொலைக்காட்சியில் தோன்றினார். அவருக்கு எதிரான தீர்க்கமான வாக்களிப்பின் அளவை அவர் ஏற்றுக் கொண்டார். சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்ததற்கான "முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்று ஒரு சிறிய உரையில் தெரிவித்த அவர், இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லாவிடம் அவரது இராஜினாமாவை சமர்பிக்க இன்று அவர் குர்ரினாலெ (Quirinale) ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லவிருப்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த வாக்களிப்பானது, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இத்தாலியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ரென்சியின் ஜனநாயகக் கட்சி (PD) அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கான ஆழ்ந்த எதிர்ப்பை எதிரொலிக்கின்றன.

முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் ஐயத்திற்கிடமின்றி பிற்போக்குத்தனமாக இருந்தன. “ஆம்" வாக்குகள் வந்திருந்தால், பிரதம மந்திரியைப் பதவியிலிருந்து இறக்கும் செனட் சபையின் அதிகாரங்கள் இல்லாத மக்களால்-தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைப்பைக் கொண்டு அச்சபை மாற்றப்பட்டிருக்கும். பின்னர் பிரதிநிதிகள் சபை, சட்டமன்றத்தில் எந்தவித அர்த்தமுள்ள எதிர்க்கட்சியும் இல்லாமல் ஒரு சர்வாதிகார பலசாலியாக ஆட்சி செலுத்தும் ஒரு பிரதம மந்திரியை பெயரிட்டிருக்கும்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ செலாவணியின் கட்டமைப்பிற்குள் இத்தாலியின் வங்கியியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இத்தாலியின் பொருளாதார மற்றும் தொழில்துறை பிணைப்பு சிக்கனக் கொள்கை மற்றும் பாரிய வேலை வாய்ப்பின்மைக்கு இடையே பொறிந்து போயுள்ள நிலையில், இத்தாலிய வங்கிகள் பாரியளவில் 360 பில்லியன் யூரோ வாராக் கடன்களை முகங்கொடுக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள் கட்டளையிடும், "உள்-பிணையேற்பு" (bail-in) பற்றிய விவாதம் அங்கே அதிகரித்து வருகிறது, அதன்படி நலிந்த வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் இருந்தோ அல்லது இத்தாலிய வங்கி பத்திரங்களில் தங்களின் பணத்தை முதலீடு செய்துள்ள சிறு சேமிப்பாளர்களிடம் இருந்தோ பணத்தை எடுத்து அவற்றின் இழப்புகளை ஈடுசெய்யும்.

சர்வஜன வாக்கெடுப்பின் ஒரு வெற்றியானது, சமூக வெட்டுக்கள், பெருநிறுவன திவால்நிலைகள் மற்றும் இத்தாலிய ஆளும் உயரடுக்கு தயாரிப்பு செய்து வரும் "உள்-பிணையேற்பு" போன்ற ஏனைய தாக்குதல்கள் மீதான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஈவிரக்கமின்றி ஒடுக்க நகர்வதற்கு ரென்சியை அனுமதித்திருக்கும்.

இந்த வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியம் மீதான ஒரு புறக்கணிப்பும் ஆகும், அதன் ஆணைக்குழு ரென்சியின் சர்வஜன வாக்கெடுப்பை ஆமோதிக்கவும் மற்றும் "சரியான சீர்திருத்தங்களை" கொண்டு வருவதற்காக அவரை புகழவும் அதன் தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் மூலமாக தலையீடு செய்தது.

தெற்கு ஐரோப்பா எங்கிலும் சிக்கன நடவடிக்கைகளை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஜேர்மனியின் வலதுசாரி நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள, “அவர் வேறொரு அரசியல் முகாமைச் சேர்ந்தவர் என்றாலும் கூட, நான் வாக்களிப்பதாக இருந்தால், நான் அவருக்கே வாக்களிப்பேன். … அவரது வெற்றிக்காக வாழ்த்துகிறேன்,” என்று கூறி, ரென்சியின் சர்வஜன வாக்கெடுப்பை ஆமோதித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி ஒரு மாதத்திற்குப் பின்னர் அது உலகையே அதிர்ச்சியூட்டி உள்ளதுடன், ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தை உலுக்கியுள்ள நிலையில், ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவ அமைப்புகளது ஆழ்ந்த நெருக்கடியை இத்தாலிய சர்வஜன வாக்கெடுப்பு அடிக்கோடிடுகிறது.

ஐரோப்பா எங்கிலும் பாரிய பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவற்றின் தேசிய அரசாங்கங்கள் மீது ஆழ்ந்த கோபம் மற்றும் அரசியல் ஏமாற்றம் நிலவுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென பிரிட்டன் வாக்களித்து வெறும் ஆறு மாதங்களுக்கு பின்னர் நடந்துள்ள இத்தாலியின் சர்வஜன வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தங்கியிருப்பதற்கான பழமைவாத-தலைமையிலான அரசாங்கத்தின் அழைப்பை நிராகரிப்பதாக உள்ளது. பிரிட்டன் அளவுக்கு இல்லையென்றாலும் பொதுவான யூரோ செலாவணியின் இதயதானத்தில் உள்ளதும், மற்றொரு பிரதான ஐரோப்பிய பொருளாதாரமுமான ஒன்று இப்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய-ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.

ஆனால் இத்தாலிய சர்வஜன வாக்கெடுப்பிற்கான எதிர்ப்பு, இதுவரையில், பிரதானமாக ஆக்ரோஷமான தேசியவாத முறையீடுகளை வழங்கும் சக்திகளால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லா இன்று ரென்சியின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகளின் வெளிச்சத்தில் மறுபரீசிலனை செய்ய ரென்சியை அனேகமாக மத்தெரெல்லா வலியுறுத்தமாட்டாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பின்னர் ஒரு புதிய பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முடியுமா என்பதைக் குறித்து பல்வேறு அமைப்புரீதியிலான மற்றும் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிப்பார். எவ்வாறிருப்பினும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியே (PD) பெரும்பான்மையில் இருப்பதால், இது நிச்சயமின்றி உள்ளது. சமீபத்திய மாதங்களில் ஜனநாயகக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு பிரச்சினையாக உள்ளது.

ஜனநாயகக் கட்சிக்குள் உள்ள பிளவுகள் இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக முழுமையாக வெளிப்பட்டிருந்தன. முன்னாள் ஸ்ராலினிசவாதியும் மற்றும் முன்னாள் பிரதமருமான Massimo D’Alema ரென்சியின் அரசியலமைப்பு திருத்தங்களை எதிர்த்தார். ஆனால் அவரது கருத்து வேறுபாடுகள் முற்றிலுமாக தந்திரோபாயமானதாகும், அதாவது எவ்வாறு சமூக அதிருப்தியைக் கட்டுப்படுத்தி, இன்னும் சிறப்பாக தொழிலாளர்-விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பதில் தான் கருத்து வேறுபட்டிருந்தார்.

மத்தரெல்லா ஒரு புதிய ஜனநாயகக் கட்சி பிரதமரை நியமிக்கக்கூடும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ச்சியாக மக்கள் மதிப்பிழந்த தொழில் உத்தியோகர்களை கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்கள் இருந்து வந்துள்ளதால், அதுபோன்றவொரு நகர்வு சமூக கிளர்ச்சிகளை தூண்டிவிடும் அபாயத்தை கொண்டுள்ளது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதாயங்களுக்காக தொழிலாளர்களை தாக்குவதே அவர்களது பொதுவான திட்டநிரலாக உள்ளது.

மத்தரெல்லாவின் கலந்தாலோசனைகளை தொடர்ந்து ஒரு பெரும்பான்மை எட்டப்படவில்லையானால், ஜனாதிபதி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டையும் கலைக்க அழைப்பு விடுக்கக்கூடும், அது முன்கூட்டிய தேர்தல்களைக் கொண்டு வரும். "வேண்டாம்" வாக்குகளுக்குப் பின்னால் திரண்டிருந்த பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இதைத்தான் கோரி வருகின்றன, மற்றும் அவற்றின் பிற்போக்குத்தனமான திட்டநிரல்களை முன்னெடுக்க சுரண்டுவதற்கு இதை சாதகமாக்கிக் கொள்ள விரும்புகின்றன.

ஜனநாயகக் கட்சிக்கு உண்மையான இடதுசாரி எதிர்ப்பு இல்லாதிருப்பது, வலதுசாரி சக்திகள் உணர்ச்சிகரமாகவும் பொய்யாகவும் ஒடுக்கப்படுபவர்கள் மற்றும் சுரண்டப்படுபவர்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ள அனுமதிக்கிறது.

வலதுசாரி ஐந்து நட்சத்திர இயக்கத்தின் (M5S) தலைவர் பெப்பே கிறில்லோ வெளியிட்ட ஓர் அறிக்கையில், “ஜனநாயகம் வென்றுள்ளது… இத்தாலியர்கள் சாத்தியமான அளவிற்கு உடனடியாக புதிய தேர்தல்களுக்கு அழைக்கப்பட வேண்டும்,” என்று ஆர்ப்பரித்தார். ஒரு புதிய சட்டமன்றம் மற்றும் அரசாங்கத்தை தாமதிக்காமல் இருக்க, கிறில்லோ, “மாரியோ மோன்டி இன் பாணியிலான ஒரு தொழில்சார் வல்லுனர்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதை" தடுக்க தற்போதைய தேர்தல் விதிமுறை (Italicum) குறித்த அவர் விமர்சனத்தை அவர் திரும்ப பெற்று கொள்வதாக வாதிட்டார். முன்கூட்டிய தேர்தல்களில் M5S நிறைய வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அது 40 சதவீத வாக்குகளை எட்டினாலே, அது பிரதிநிதிகள் சபை ஆசனங்களில் 54 சதவீதத்தை வென்றுவிடும்.

பாசிசவாத Fratelli d’Italia இன் தலைவர் ஜோர்ஜியா மிலோனி, ஜனரஞ்சகவாத வாய்சவுகளுடன் அதேபோன்ற கோரிக்கைகளைக் கலந்து கூறினார்: “குறுகிய காலத்தில் புதிய தேர்தல் நடத்த வேண்டும்… மிகப் பெரிய பெருநிறுவனங்களுடன் பின்னறை உடன்படிக்கைகளது விளைவாய் அல்ல, மாறாக மக்கள் ஆலோசனையின் விளைவாய் வந்த ஓர் அரசாங்கத்தை இத்தாலியர்கள் விரும்புகிறார்கள். இத்தாலியர்களால் தேர்ந்தெடுக்கப்படாத 4வது அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.”

இதேபோல பேரினவாத லீகா நோர்ட் (Lega Nord) கட்சியின் தலைவர் மத்தேயோ சல்வீனி (Matteo Salvini), “உலகின் நான்கில் மூன்று பங்கு அதிகாரங்களுக்கு எதிரான வெற்றியைக்" குறித்து பெருமை பீற்றியதோடு, “கைப்பாவை அரசாங்கங்கள் கூடாது, உடனடியான தேர்தல்கள் வேண்டும்,” என்றார்.

ஃபோர்ஸா இத்தாலியாவின் றெனாட்டோ புறுனேட்டா (Renato Brunetta) இதற்கு இன்னும் சமரசமான தொனியை ஒலித்தார்: “ஜனநாயகக் கட்சிக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை உள்ளதால் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கும் கடமை அதற்கு உள்ளது, ஆனால் ரென்சி இல்லாமல் அதை செய்ய வேண்டும்,” என்றார்.

போலி-இடதும் "வேண்டாம்" வாக்குகளை கொண்டாடின, ஆனால் இது மக்கள் எதிர்ப்பின் மீது அது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதையும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அணிதிரள்வை தடுத்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இருந்தது.

பிரதமாக அவரது போட்டியிட்டதை ஆதரித்த பின்னர் அவரது தொழிலாள வர்க்க விரோத கொள்கைக்காக ரென்சியை பாசாங்குத்தனமாக விமர்சித்து, இடது சுற்றுச்சூழல் சுதந்திர கட்சி (Sinistra, Ecologia e Libert à – SEL) தலைவர் நிக்கி வென்டோலா (Nichi Vendola), எதிர்ப்பை போலி இடதின் முட்டுச்சந்துக்குப் பின்னால் அணிதிரட்ட அவர் தயாராக இருப்பதை சமிக்ஞை செய்தார்: “ரென்சியிசத்தை முன்னோக்கி தள்ளுவது முடிந்துவிட்டது. இடது மீண்டும் தொடங்குவதற்கு இன்றைய நாள் சரியான நாளாகும்,” என்றார்.

இத்தாலிய வங்கிகளின் பலவீனமான நிலைமை தான் சர்வதேச சந்தைகளது கவனத்தில் உள்ள மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிறிய வங்கிகளை நீக்கிவிடும் நோக்கில் கடுமையான மறுசீரமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மற்றும் இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளைத் தாக்கும் ஒரு முயற்சி தோல்வி அடைந்திருப்பதையே "வேண்டாம்" வாக்குகள் எடுத்துக்காட்டுகின்றன.

உலகின் மிகவும் பழமையான வங்கியான Monte dei Paschi di Siena (MPS) மிகப்பெரும் அபாயத்தில் உள்ளது. “காப்பாற்றும் முதலீட்டாளர்களாக" (anchor investors) ஆவதற்கு, அதாவது 1.5 பில்லியன் யூரோ மூலதன பாய்ச்சலுக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு நகர்வுக்கு, பொறுப்பேற்பதற்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக கட்டார் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்கள் அறிவித்திருந்தனர். MPS இன் பொறிவு என்பது இத்தாலிய வங்கியியல் அமைப்புமுறை அத்துடன் ஒட்டுமொத்த யூரோ மண்டலத்தின் ஒரு பரந்த நெருக்கடியை உருவாக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.