ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president orders arrest of “inciters of racism”

இலங்கை ஜனாதிபதி “இனவெறியைத் தூண்டுபவர்களை” கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்

By W.A. Sunil 
23 November 2016

கொழும்பில் வெளிவரும் டெயிலி மிரர் பத்திரிகையின் படி, ஞாயிறன்று நடந்த இலங்கையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "இனவெறியைத் தூண்டும் அனைவரையும் கைது செய்து தற்போதுள்ள சட்டத்தின் கீழ் அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு” உத்தரவிட்டுள்ளார்.

இந்த கட்டளைக்கு கூறப்பட்ட உடனடிக் காரணம் "இனவெறியைத் தடுப்பது" என்றாலும், அரசாங்கம் எதிர்க் கட்சிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு தயாராகின்றது என்பதை சமிக்ஞை காட்டுகிறது.

சிறிசேன ஜனாதிபதியாகி தனது இரண்டாவது ஆண்டு நிறைவை எட்டும் நிலையில், அவரது அமெரிக்க-சார்பு அரசாங்கம் ஆழமான அரசியல் நெருக்கடியில் உள்ளது. ஆளும் கூட்டணிக்கும் வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஒரு எதிர்ப்பு குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமாகி வருகிறது.

நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு சபையின் ஞாயிறு கூட்டத்திற்கு பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதிகளும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சகலா ரத்நாயக்க உட்பட பல முக்கிய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இனவெறியை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டங்களை மேம்படுத்தக் கூடிய சாத்தியம் பற்றி சிறிசேன விசாரித்ததாக டெய்லி மிரர் செய்தி கூறியது. "ஏற்கனவே புதிய சட்டத்தை வரைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று நீதி அமைச்சர் கூறியதோடு இப்போது இருக்கும் சட்டங்களின் கீழ் கூட, "இனவெறியைத் தூண்டுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்” என்றும் சுட்டிக் காட்டினார்." கடந்த மாதம் அமைச்சரவை, கடுமையான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதை ஒரு பாராளுமன்ற குழு இப்போது ஆய்வு செய்துவருகின்றது.

நவம்பர் 15, சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்திற்கு எதிரான "அரசியல் சதி" பற்றி எச்சரித்தனர். இந்த இருவரும், சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய ஒரு சிங்களம்-வார இதழான ராவய பத்திரிகையின் 30 வது ஆண்டு நிறைவுக்காக நடந்த கூட்டத்தில் உரையாற்றியிருந்தனர்.

சிறிசேன, அரசாங்கத்தை சீர்குலைக்க திட்டங்கள் நகர்த்தப்பட்டுள்ளதோடு "நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்திற்கு இடையூறு விளைவிக்க, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தகுந்தளவில் நிதியளிக்கப்பட்ட அரசியல் சதி" நடப்பதாக அறிவித்தார். "இனவாதக் குழுக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முயல்கின்றன," என்று விக்கிரமசிங்க கூறினார்.

சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் பெயர்களை குறிப்பிடாவிட்டாலும், "சதிகாரர்கள்" என சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் (ஸ்ரீ.ல.சு.க.) உள்ள இராஜபக்ஷ தலைமையிலான குழுவையே சுட்டிக்காட்டினர். இந்த கோஷ்டி விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடனான சிறிசேனவின் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை எதிர்க்கிறது.

அரசாங்கம் தனது கையைப் பலப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சிங்கள பேரினவாத குழுக்களின் ஆத்திரமூட்டல்களை சுரண்டிக்கொள்ள முயலுகிறது. சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இனவாதத்தை எதிர்க்கவில்லை. இந்த இருவரும், 2009ல் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை முன்னெடுத்து வந்த அரசாங்கங்களில் தலைவர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த இருவருமே பௌத்த மற்றும் சிங்களம் பெரும்பான்மை ஆதிக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

சிங்கள பௌத்த அதிதீவிரவாதிகளின் பேரினவாத பிரச்சாரத்ம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகியுள்ளது. கடந்த வாரம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில், பௌத்த பிக்குகளின் பாசிச அமைப்பான பௌத்த படை என்பதன் (பொதுபல சேனா அல்லது பி.பி.எஸ்.) ஆதரவளாரான ஒரு பௌத்த துறவி, சிங்கள மக்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்தால் சரீரத் தாக்குதல் நடத்துவதாக ஒரு தமிழ் அரசாங்க கிராம சேவையாளரை அச்சுறுத்தினார். மற்றொரு சம்பவத்தில், கொழும்பில் நடந்த பகிரங்க ஆர்ப்பாட்டமொன்றில், முஸ்லிம்களுக்கு எதிராக இதை ஒத்த அச்சுறுத்தலை விடுத்த ஒரு சிங்களப் பேரினவாதியை கடந்த வாரம் கைது செய்ய பொலிஸ் நிர்ப்பந்திக்கப்பட்டது.

சனிக்கிழமை, பொதுபல சேனா கண்டியில் ஒரு பெளத்த பிரார்த்தனை கூட்டத்தை நடத்தியது. இது "சிங்களவர்களை தொந்தரவு செய்வதற்கு" எதிராக நடத்தப்பட்டது. பொதுபல சேனா முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டல்களுக்கு பேர்போன அமைப்பாகும். அதன் ஆத்திரமூட்டல்களில், நான்கு பேர் கொலை செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்களவு சொத்து அழிவை ஏற்படுத்திய 2013ல் அளுத்கமவில் அரங்கேற்றிய ஒரு கலகமும் அடங்கும்.

இவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. பொதுபலசேனா உட்பட பல சிங்களம் பேரினவாத குழுக்கள் இராஜபக்ஷவை ஆதரிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை முன்னெடுத்த "யுத்த வீரர்களை" "காட்டிக் கொடுத்துவிட்டதாக" அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ராஜபக்சவை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை பொதுஜன கட்சி என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்துள்ளனர். ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பிரச்சாரம் செய்யும் இராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் தான் புதிய கட்சியின் தலைமையை எடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜபக்ஷவின் பிரச்சாரத்தை கீழறுக்கும் அதன் முயற்சிகளின் ஒரு பாகமாக, அரசாங்கம் அவருக்கு அனுதாபம் காட்டும் செய்தி ஊடகங்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அக்டோபரில், ஊடக அமைச்சானது இராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருக்கமானதாக கூறப்படும் சி.எஸ்.என். தொலைக் காட்சி ஒலிபரப்பு சேவையின் உரிமத்தை, உரிமம் மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இரத்து செய்தது. ஊடக அமைச்சின் செயலாளர், சிறிசேனவின் சமீபத்திய உரையை திரிபுபடுத்தியதாக குற்றம்சாட்டி, தெரண தொலைக்காட்சியையும் அச்சுறுத்தியுள்ளார்.

ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அரசாங்கம் தன்னை விமர்சிக்கின்றமைக்காக மீண்டும் மீண்டும் ஊடகங்களைத் தாக்கி வருகின்றது. விக்கிரமசிங்க, கடந்த வாரம், ஒழுங்காக நடந்துகொள்ளாத ஊடகங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். நேற்று, சிறிசேன, ஒரு மறைமுகமான அச்சுறுத்தலில், ஊடகங்கள் அரசாங்கத்தின் எந்தவொரு சாதகமான நடவடிக்கைகளையும் அவதானிப்பதில்லை என்று கூறினார்.

கடந்த வாரம், இராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள இனவாத மக்கள் ஐக்கிய முன்னணியின் (மகாஜன எக்சத் பெரமுன) தலைவர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் சதித்திட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எண்ணெய் வார்த்தார். "அரசாங்கம், நாட்டில் ஜனநாயகம் மிக மோசமாகி வருவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படலாம்," என குணவர்தன பாராளுமன்றத்தில் எச்சரித்தார்.

குணவர்தன மற்றும் இராஜபக்ஷவின் கவலை, "ஜனநாயகம் சீரழிவது" பற்றியது அல்ல. முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலின் பாகமாக, ஊடகங்களை நசுக்கியது.

அரசாங்கம் குணவர்தனவின் கருத்துக்களை கண்டனம் செய்ததோடு "அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு ஏற்படுத்தவும் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கவும்" முயல்வதாக எதிர்ப்புக் குழுவைக் குற்றம் சாட்டியுள்ளது.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், ராஜபக்ஷவுடன் அணிதிரண்டுள்ள எதிர்ப்பு குழு ஆகிய இரு தரப்புமே தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலான வெகுஜன அமைதியின்மை, முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தலாகும் என்று அஞ்சுகின்றன.

கடந்த ஆண்டு பூராவும் ஊதிய உயர்வும் சிறந்த வேலை நிலைமைகளையும் கோரி தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் மாதம், பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரியும் வேலைப் பளு அதிகரிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதற்காக வீதிகளுக்கு இறங்கினர்.

ஏற்றுமதி மற்றும் முதலீடு வீழ்ச்சியுடன் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு முதலீடு 5.8 சதவிகிதத்தால் குறைந்துள்ளதுடன் ஏற்றுமதி வருவாய் முந்தைய ஆண்டைவிட ஒரு மகத்தான அளவு, 4.5 பில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலரால், 52.5 சதவீதம் சரிந்துள்ளது. அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன் 65 பில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது. பொதுக் கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த மாதம், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) அமைத்த இலக்குக்கு அமைய, வரவு செலவுப் பற்றாக்குறையை குறைக்க பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவுகளை வெட்டியுள்ள அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மீது அதிக வரிகளை விதிக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. ஒரு வாரம் கழித்து, சர்வதேச நாணய நிதியம் அதன் தற்போதைய கடன் தொகுப்பின் இரண்டாவது தவணையை வழங்கியுள்ளது. நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசாங்கம் பொது நிறுவனங்களை மறுசீரமைத்து தனியார்மயமாக்குவதை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது. பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழப்பர். இத்தாக்குதல்கள் சமூக கொந்தளிப்புக்களை தூண்டிவிடும்.

உழைக்கும் மக்கள் ஒரு எச்சரிக்கையை புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டுவதானது, வர்க்கப் பதட்டங்கள் கூர்மையடைவதை எதிர்கொள்ளும் போதெல்லாம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தனது அடக்குமுறை ஆட்சியை பலப்படுத்தவும் ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் பல தசாப்தங்களாக பயன்படுத்தி வருகின்ற உத்தியாகும். சிறிசேன விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனவாதம் மற்றும் வகுப்புவாதத்துக்கு முடிவு கட்ட வடிவமைக்கப்பட்டவை அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளை ஒடுக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கே ஆகும்.