ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Divisions erupt at EU summit over refugees, possible British exit

சாத்தியமான பிரிட்டிஷ் வெளியேற்றம், அகதிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிளவுகள் வெடிக்கின்றன

By Alex Lantier
19 February 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேற்றத்தை தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய சட்டமசோதாக்களில் பரந்த மாற்றங்களைக் கோரும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் கோரிக்கைகள் மற்றும் அகதிகள் நெருக்கடி மீது அதிகரித்த பிளவுகள் என்பவற்றிற்கு இடையே, புரூசெல்ஸில் நடந்த இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் முதல் நாள் பேச்சுவார்த்தைகள் நேற்று இரவு முடிவிற்கு வந்தன

.

ஒன்று பிரிட்டிஷ் வெளியேற்றத்தின் மூலமாகவோ அல்லது சிரியா மற்றும் ஈராக் உட்பட போர் பாதித்த நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கானவர்கள் தப்பியோடி வரும் நிலையில், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை கையாள்வதன் மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் முரண்பாடுகளாலோ, ஐரோப்பிய ஒன்றியம் உடைவின் விளிம்பில் இருக்கிறது என்ற ஓர் உணர்வு அந்நடவடிக்கைகளில் மேலோங்கி இருந்தது.

அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றிய குழுவின் உறுப்பினர்களுக்கு நேற்று அனுப்பிய அவரது அழைப்பிதழில், ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் மற்றும் போலந்து பிரதம மந்திரியுமான டோனால்ட் டஸ்க் பின்வருமாறு எழுதினார்: "கடைசி மணி நேர எனது கலந்தாய்வுகளுக்குப் பின்னர் இதை நான் வெளிப்படையாக கூற வேண்டியுள்ளது: நம்மால் ஓர் உடன்படிக்கையை எட்ட முடியும் என்பதற்கு அங்கே எந்த உத்தரவாதமும் இல்லை. நாம் சில அரசியல் பிரச்சினைகளில் வேறுபடுகிறோம், அவற்றை தீர்த்துக்கொள்வது மிகவும் சிரமம் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆகவே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமென உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். … ஒரு சமரசத்திற்கு வர இதைவிட சரியான தருணம் வேறு கிடைக்காது," என்றார்.

நேற்று மாநாட்டிற்கு வந்தடைந்த பின் டஸ்க் கூறுகையில், "ஒரு விடயம் எனக்கு தெளிவாக உள்ளது. இது உருவாக்கும் அல்லது உடைக்கும் மாநாடு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை," என்றார்.

பரந்த சமூக வெட்டுக்களுக்கான கோரிக்கைகளுடனும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டதிருத்தங்களுக்கான கோரிக்கைகளுடனும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்த கேமரூன் கூறுகையில், "நான் பிரிட்டனுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு உடன்பாடான நல்ல முடிவு கிடைத்தால் நான் அந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்வேன், ஆனால் எங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்யாத ஓர் உடன்பாட்டை என்னால் ஏற்க முடியாது," என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் அதிக திடமான நம்பிக்கையுடன் குறிப்பிடுகையில், “எங்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்படுமென நான் மிகவும் நம்புகிறேன்,” என்று கூறியதுடன், “சில புள்ளிகளில் இன்னமும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

"முக்கிய பிரச்சினைகளில் சிறிய முன்னேற்றம் இருக்கலாம் அல்லது முன்னேற்றமே இல்லாமலும் போகலாம்" என்று நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய ஆதார நபர்கள் பத்திரிகைக்கு தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேறுவதைத் தடுக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பாடு செய்ய, அகதிகள் நெருக்கடி மீதான விவாதங்கள் மீண்டும் கொண்டு வரப்படுகின்றன என்று செய்திகள் குறிப்பிட்டன.

ஆஸ்திரியாவின் நடவடிக்கையாக புரூசெல்ஸில் அகதிகள் நெருக்கடி குறித்து ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு இடையே மாநாட்டுக்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த ஒரு கூட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தது. அகதிகள் ஒதுக்கீட்டுக்கு ஏற்ப ஜேர்மனியிடமிருந்து அகதிகளை ஐரோப்பா எங்கிலும் பகிர்ந்து கொள்வதற்கு அவர் விடுத்திருந்த அழைப்பிலிருந்து ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தன்னைத்தானே தூரவிலக்கிக் கொண்ட பின்னர், அகதிகள் ஐரோப்பாவிற்குள் வராமல் தடுக்க இந்த நாடுகளை துருக்கிக்கு அழுத்தமளிக்க செய்ய பேர்லின் நோக்கம் கொண்டிருந்தது.

ஆனால் துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் அங்காராவில் பயங்கரவாத குண்டுவெடிப்பின் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டி, ஆஸ்திரிய அதிகாரிகள் அக்கூட்டத்தை இரத்து செய்தனர்.

எவ்வாறிருப்பினும், ஆஸ்திரிய அதிகாரிகள் அவர்கள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்த அகதிகளின் எண்ணிக்கையை அவர்கள் மட்டுப்படுத்த இருப்பதாக அறிவித்த பின்னர், மேர்க்கெலின் கொள்கையான கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா வழியாக அகதிகளை ஜேர்மனிக்குப் பயணிக்க அனுமதிப்பது தோல்வியடைந்து வருகிறது. தாம் "அந்த முடிவை விரும்பவில்லை" என்று ஜூங்கர் தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரிய சான்சிலர் வெர்னெர் ப்யேமேன் "நாங்கள் அதிலே உறுதியாக இருப்போம் என்பதை அரசியல்ரீதியில் நான் கூறுவேன்,” என்று செய்தியாளர்களிடையே கூறி ஜூங்கரின் விமர்சனத்தை உதறித் தள்ளினார்.

ப்யேமேனின் அறிக்கை, இந்த வாரயிறுதியில் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் Visegrad குழுமம் (போலாந்து, செக் குடியரசு, செலோவேகியா மற்றும் ஹங்கேரி) என்றழைக்கப்படுவதன் அதிகாரிகளிடமிருந்து வந்த விமர்சனங்களோடு சேர்ந்து, பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் மேர்க்கெலினது அகதிகள் கொள்கையை அசாதாரண முறையில் பகிரங்கமாக தாக்கிய பின்னர் வந்திருந்தது.

எவ்வாறிருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கம் கோரும் பிற்போக்குத்தனமான விட்டுக்கொடுப்புகளின் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள ஆழ்ந்த பிளவுகளே அந்த மாநாட்டின் மத்திய கவனத்தில் இருந்தது. வங்கியியல் தொழில்துறை இலாபங்களை எப்படி பங்கு போடுவது, வெவ்வேறு தேசங்களின் தொழிலாளர்களது சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்பதில் ஐரோப்பிய அரசுகளுக்கு இடையே கடுமையான போட்டி உருவெடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய சட்டமசோதா மற்றும் உடன்படிக்கைகளை பரந்தளவில் மீள்பேரம்பேசலுக்கு உட்படுத்த கேமரூன் அழைப்புவிடுக்கிறார், இதை அவர் தற்போது ஜூனில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு வேண்டும்/வேண்டாம் என்ற வெகுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இருப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கான அடித்தளத்தில் கோரி வருகிறார். அவருக்கு ஒரு பரந்த விட்டுக்கொடுப்புகளை வழங்க கேமரூன் ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் தலைவர்களை கோருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன, அத்தகைய உடன்படிக்கையை பிரிட்டன் மக்களிடம் சந்தைப்படுத்தி, "வேண்டும்" என்ற வாக்குகளுக்கு அவரால் அழைப்புவிடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

கேமரூன் முன்மொழியும் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது பரந்த தாக்குதல்களையும் பிரிட்டிஷ் வங்கிகளுக்குப் பரந்த கையளிப்புகளையும் கொண்டுள்ளது. இத்தகைய கோரிக்கைகளில் உள்ளடங்குபவை:

“பிரிட்டன் வெளியேற்றத்தை" ஜேர்மன் எதிர்ப்பதாக தெரிவித்த மேர்க்கெல், கேமரூனின் கோரிக்கைகளுக்கு பரந்த ஆதரவைச் சுட்டிக்காட்டினார். “ஒரு பலமான மற்றும் வெற்றிகரமான ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் ஓர் ஆக்கபூர்வமான அங்கத்தவராக நீடிக்க வேண்டும் என்று எங்களின் தேசிய நலனில் இருந்து நான் நினைக்கிறேன்,” என்றவர் தெரிவித்தார். “சமூக அமைப்புமுறையைப் பொறுத்த வரையில் இங்கிலாந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையே அங்கே எந்த கருத்து வேறுபாடும் இல்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறாயினும் கேமரூனின் சில முன்மொழிவுகளின் பாரபட்சமான தாக்கத்தைக் குறித்தும் மற்றும் நிதியியல் நெருக்கடிகளுக்கான ஒருங்கிணைந்த விடையிறுப்புகளுக்கு யூரோ மண்டலத்தின் ஆற்றலைச் சிதைக்கும் சாத்தியக்கூறு குறித்தும் மேர்க்கெல் கவலைகளைச் சுட்டிக்காட்டினார்.

பல முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளும் அதேபோன்ற கவலைகளை எழுப்பினர். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற ஜனாதிபதி மார்ட்டீன் சூல்ஸ், ஜேர்மன் சமூக ஜனநாயகவாதியான இவரும், கேமரூனின் நடவடிக்கைகளை தாக்கினர். அவை "ஐரோப்பிய ஒன்றிய இரண்டு தேசங்களைச் சேர்ந்த, ஒரே மாதிரியான வரி செலுத்தி வரும், ஒரே மாதிரியான வேலை செய்து வரும், இரண்டு தொழிலாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே மாதிரியாக வருமானம் பெற முடியாமல் போகும். இதை இன்னும் தெளிவாக கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள்: ஐரோப்பிய நாடாளுமன்றம் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு இடையிலான பாகுபாடுகளுக்கு எதிராக போராடும்" என்றவர் கூறினார்.

சூல்ஸ் பரிந்துரைத்த தீர்வும் ஆழமாக பிற்போக்குத்தனமானது, இதுவரையில் அவர் பிரிட்டன் அதன் சொந்த சமூக நல சலுகைகளை வெட்ட அதை அனுமதிக்க வேண்டுமென வாதிட்டு வந்திருந்தார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் ஐரோப்பிய நிதியியல் சந்தைகள் ஒருங்கிணைந்து இருக்கும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் மரியோ திராஹி தெரிவித்தார். பிரிட்டன் உட்பட அனைத்து 28 அங்கத்துவ நாடுகளின் நிதியியல் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் அதன் அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் பேணும் என்று அவர் வலியுறுத்தினார்.

வங்கியியல் நெறிமுறைகளின் பிரச்சினை மற்றும் வங்கி இலாபங்களுக்கான மோதல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகியவை குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சிற்கு இடையே கூர்மையான பிளவுகளைத் தூண்டிவிட்டுள்ளது. இவ்வார ஆரம்பத்தில் கேமரூன் உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், எலிசே ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் கூறுகையில் அங்கே "இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது, முக்கியமாக பொருளாதார ஆட்சிமுறை பிரச்சினை மீது,” என்றுரைத்தார்.

கேமரூனின் முன்மொழிவுகள் மீதான கவலைகளை வெளிட்டு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டுக்கு எழுதிய கடிதத்தில், Société Générale வங்கியின் தலைமை செயலதிகாரி Frédéric Oudéa, “அதன் தற்போதைய நிலையிலேயே அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், நிதியியல் நடவடிக்கையாளர்களுக்கு இடையே நியாயமான போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் [மற்றும்] 'மிகக்குறைந்த பொதுவான அடித்தளத்தில் ஒழுங்குபடுத்துவதை' அபாயத்திற்குள்ளாக்கும் என்று எச்சரித்தார். அதாவது பிரிட்டிஷ் வங்கிகள் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளில் இருந்து விதிவிலக்காக இருக்கும் என்பதுடன் அதேவேளையில் யூரோ மண்டல நிதியியல் சந்தைகளைத் தொடர்ந்து அணுகி குதூகலத்தில் இருக்கும்.

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பிரிட்டனும், சாத்தியமான அளவுக்கு ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், திணித்த சமூக சலுகைகளில் ஆழ்ந்த வெட்டுக்கள் மீதான பேச்சுவார்த்தைகளில் Visegrad நாடுகள் ஓரங்கட்டப்பட்டு இருந்ததாக நேற்று மாலை வெளியான செய்திகள் குறிப்பிட்டன.

எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, அவை அந்த நடைமுறையை எதிர்த்தன. அத்துடன் செக் பிரதம மந்திரி Bohuslav Sobotka அறிவிக்கையில்: “அங்கே சிரமமான முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. … குழந்தைகளுக்கான சலுகைகளைச் சீரமைத்தல் மற்றும் 'அவசரகால தடை' என்றழைக்கப்படுவதற்கான நிலைமைகளின் கூறுபாடுகளை நாங்கள் விமர்சனபூர்வமாக பார்க்கிறோம்,” என்றார்.