ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French National Assembly enshrines state of emergency in constitution

பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் அரசியல் சட்டத்தில் அவசரகாலநிலையை உறுதிப்படுத்துகிறது

By Kumaran Ira
17 February 2016

பிப்ரவரி 10, அன்று பிரெஞ்சு பாராளுமன்றத்தின் கீழ் அவை தற்போதைய அவசரகாலநிலையை அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தும் ஒரு திருத்தத்தை ஏற்றது, மற்றும் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல்களில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களின் பிரெஞ்சு குடி உரிமையைப் பறிக்கிறது. அது 317 ஆதரவு 199 எதிர்ப்பு என்ற வாக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது செனட் ஒப்புதலுக்காக அனுப்பபடவுள்ளது.

பாரிசில் நடந்த நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, பிரான்சுவா ஹோலண்ட்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) பிரான்சை ஒரு போலீஸ் அரசாக ஆளுவதற்கு தமக்குத்தாமே அசாதாரண அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. தாக்குதலுக்கு அடுத்த ஒருவாரத்திற்கு பின்னர், பாராளுமன்றம் பிப்ரவரி 26 வரைக்கும் மூன்றுமாத கால அவசரகால நிலைக்கு வாக்களித்தது, அரசியற்சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு PS க்கு கால அவகாசம் அளித்தது. அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்குப் பின்னர், போலீசானது கைதுஆணைகள் இல்லாமல் 3200க்கு மேற்பட்ட வீடுகளில் தேடுதல் வேட்டைகளை நடத்தி இருக்கிறது, 400 வீட்டுக்காவல் ஆணைகளை அமல்படுத்தி உள்ளது, பல மசூதிகளையும் வணிக நிறுவனங்களையும் மூடி இருக்கிறது.

திருத்தப்பட்ட வகையில், அரசியற்சட்டத்தின் புதிய ஷரத்து 36-1 அறிவிக்கிறது: “பொது ஒழுங்கின் மீது தாக்குதலின் காரணமாக உடனடி குந்தகம் விளையுமாயினும்; அல்லது சம்பவங்களின் தன்மையால் அல்லது கடுமையால், பொது சேதத்தின் தன்மையைக் கொண்டிருக்குமாயினும், குடியரசின் எல்லை அனைத்தின் மீதும் அல்லது பகுதிமீதும் அதிகாரம் கொண்டதாக அவசரநிலையானது  அமைச்சரவையில் முடிவெடுக்கப்படுகிறது.”

அவசரகால நிலையானது, ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்று காலவரையறை இன்றி புதுப்பிக்கப்பட முடியும். பிரதமர் மானுவெல் வால்ஸ் மிகஅண்மையில் பிபிசி –இடம் அவசரகால நிலையை “இஸ்லாமியவாத அரசை இல்லாமல் செய்யும் வரைக்கும்” தான் நீட்டிக்கப்போவதாக கூறினார், அதற்கு “ஒருதலைமுறை” எடுக்கும் என்று முன்னர் ஒருமுறை அவரே கூறி இருந்தார்.

திருத்தம் மேலும் கூறுகிறது, அவசரகால நிலையின்போது, "சம்பவங்களை கையாள அல்லது ஆபத்திற்கு எதிராக சிவில் அதிகாரிகள் என்ன போலீஸ் நடவடிக்கைகளை எடுக்கலாம் என சட்டம் தீர்மானிக்கிறது.”

ஆயினும், திருத்தப்பட்டவகையில், அரசியல் அமைப்பானது, தான்விரும்பும் எந்த அதிகாரத்தையும் போலீசுக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்திற்கு வெற்று காசோலை போல அனுமதி வழங்கும். இதன் பொருள், அவசரகால நிலையின் கீழ் போலீஸ் அதிகாரத்தை அரசியலமைப்பு சபையின் முன்னே இனியும் சவால் செய்யமுடியாது, போலீசுக்கு என்னென்ன அதிகாரங்கள் மகிழ்ச்சி அளிக்குமோ அவை அரசியற் சட்டத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குல்களுக்கு பின்னர், அதன் நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று தடுக்கப்படலாம் என அஞ்சியதால், அரசியற் சட்ட சபையின் முன் அவசரகாலநிலையை சவால் செய்யவேண்டாம் என  செனட்டைக் கேட்க வால்ஸ் நிர்பந்திக்கப்பட்டார்.

இந்நடவடிக்கைகள், போலீசுக்கு  கொடூரமான அதிகாரங்களை வழங்கியிருக்கிறது, அடிப்படை  ஜனநாயக உரிமைகளை கீழறுக்கிறது என்று ஏற்கனவே மனித உரிமைகள் குழுவால் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அண்மையில் மனித உரிமை கண்காணிப்பு மற்றும் சர்வதேச பொது மனிப்பு சபை அவசரகால நிலையை கண்டனம் செய்துள்ளன, போலீசானது தங்களின் விரிவுபடுத்தப்பட்ட அதிகாரங்களை தவறாகவும் பாரபட்சமாகவும் பயன்படுத்துகின்றன, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக என்று குறிப்பிட்டுள்ளன.

ஸ்ராஸ்பூர்க் பல்கலைக்கழக சட்டப்பேராசிரியர் Catherine Haguenaud-Moizard RFI வானொலி நிலையத்திடம் பின்வருமாறு கூறினார்: “பிரெஞ்சு மக்கள் சட்டத்தின் ஆட்சிக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள்  கவலைப்பட்டாக வேண்டும். ஏனென்றால் அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசரகால நிலை வழங்கப்பட்ட உடனேயே அரசாங்கமும் போலீசும் மிகுதியான அதிகாரங்களைப் பெறுவார்கள்.”

ஹோலண்ட் எகிப்தில் இஸ்லாமியவாத ஜனாதிபதி மொகம்மது மூர்சி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுவதை மேற்பார்வை செய்தவரான எகிப்திய இராணுவச் சர்வாதிகாரி அப்தெல் ஃபத்தா அல்-சிசி உடன் தனிப்பட்ட நட்பை வளர்த்திருக்கிறார். Haguenaud-Moizard கூறினார்: “பிரான்சானது கிட்டத்தட்ட எகிப்து மாதிரி போய்க்கொண்டிருக்கிறது, அது எல்லாவகையிலும் ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது மிகவும் கவலைக்குரியது.”

திருத்தமானது, இரட்டை குடியுரிமையுள்ளவர் “பயங்கரவாத குற்றங்களில்” குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டால் அரசே அவர்களின் பிரெஞ்சு குடியுரிமையை பறித்திடுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளதானது, நீண்டகாலமாகவே அதிவலது தேசிய முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட இக்கொள்கையை அங்கீகாரம் செய்வதாக உள்ளது. நாஜி ஒத்துழைப்பு விச்சி ஆட்சி இதனை 1940களின் பொழுது, யூதர்களை மரணமுகாம்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் பிரெஞ்சு குடியுரிமையை பறித்தபொழுது பயன்படுத்தியது.

பயங்கரவாத தாக்குதலாளர்களின் மீது எந்த தடுக்கும் பாதிப்பையும் அறவே கொண்டிருக்காது எனினும், PS அத்தகைய தீய நடவடிக்கைகளை முன்மொழிகிறது என்ற உண்மையானது, முழு அரசியல் நிறுவனமும் அதிவலதை நோக்கி கடும் திருப்பத்தை எடுத்திருக்கிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது. கடந்தகாலத்தில், முந்தைய பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பயங்கரவாத வழக்குககளில் குடியுரிமையைப் பறிக்கும் ஒரு கொள்கையை ஏற்க முன்மொழிந்தபோது, அது ஹோலண்ட் மற்றும் வால்ஸ் உட்பட PS ஆல் எதிர்க்கப்பட்டது.

பத்திரிகைகளில் PS இன் பிற்போக்கு சட்டம்–ஒழுங்கு நிகழ்ச்சிநிரல் பரந்த மக்களின் ஆதரவைப் பெறுவதாக காட்டிக்கொள்ள விழைந்தாலும், ஹோலண்ட் மற்றும் PS இன் உயர் அதிகாரிகள் அனைவரும் மீண்டும் கருத்துவாக்கெடுப்பில் சரிந்துபோனார்கள். ஹோலண்ட் இந்தவார Ipsos- Le Point- அங்கீகார கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் இதுவரை இல்லாத கீழ்நிலையாக 20 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தார், இது நவம்பர்13 தாக்குதல்களுக்கு முந்தையதைவிட நான்கு புள்ளிகள் குறைவானது, மற்றும் வால்ஸ் 35 சதவீத ஆதரவு பெற்று வீழ்ச்சியுற்றார்.

அதிவலதுக்கு நகர்வதன் மூலம், PS ஆளும் வர்க்கத்தில் அதன் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது. சந்தேகத்திற்கிடமின்றி, FN தலைவர் Marine Le Pen அடுத்த ஆண்டு ஜனதிபதி தேர்தலில் அதிகம் வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கும் கருதிப்பார்த்தல் ஒன்றும் நிலவுகிறது. PS மற்றும் ஹோலண்ட் ஆளும் தட்டிலும் பாதுகாப்பு படையினர் மத்தியிலும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், குறிப்பாக முஸ்லிம் விரோத இனவாதத்திற்கு வேண்டுதல் விடுப்பதன் மூலம்  FN உடன் போட்டியிட நோக்கம் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், PS இன் அதிவலதுக்கான வேட்கை பரந்த அரசியல் மற்றும் வரலாற்றுக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை கிழித்தெறிவதற்கு PS தாமே பொறுப்பெடுத்துக் கொள்கின்றவகையில், வெடித்துவரும் பொருளாதார இராணுவ பதட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அது தம்மைத்தாமே எதேச்சாதிகார ஆட்சிவடிவத்தை புணருத்தாரனம் செய்வதை நோக்கி நகர்வதைக் கண்டுகொள்கிறது.

கடந்த மாதம் அரசியற்சட்ட மாற்றங்கள் மீதான விவாதத்தின்பொழுது, அரசாங்க பேச்சாளர் Stéphane Le Foll கூறினார், “ஜனாதிபதியும் அரசாங்கமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையில் பரந்த பெரும்பான்மையை பெறுவதில் அக்கறை கொண்டுள்ளனர், ஆகையால் அது வழக்கமான பிளவுகளுக்கும் அப்பால் கட்டாயம் செல்ல வேண்டும்.” சொல்ல வேண்டியது யாதெனில், PS இன், பழமைவாதிகள் மற்றும் நவ பாசிசவாதிகள் அவர்கள் எல்லோரும் போலீஸ் அரசு ஆட்சி வடிவத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டுவருவதால் அவர்களுக்கு இடையிலான “வழக்கமான பிளவுகள்” ஐ கடந்துவர இருக்கின்றனர்.

PS மற்றும் அதன் தொழிற்சங்கங்க கூட்டாளிகள், சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும் சமூக செலவினங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டிக்குறைப்பதற்கும் முன்கண்டிராத மட்டத்திலான தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர். PS ஆனது தொழிலாள வர்க்கத்தை பலியிட்டு வர்த்தக போட்டித்தன்மையை திடீரென்று ஊக்குவிக்குவிப்பதற்கு, தொழிலாளர் விதி சீர்திருத்தம் உள்ளடங்கலாக, கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்திக்கொண்டு வருகையில், பரந்த போலீஸ் அரசு நடவடிக்கைகள், சமூக எதிர்ப்பின் மீது தாக்குதல் நடத்துவதற்கும் ஆத்திரமூட்டுவதற்கும் ஒரு முன்னோடியை வகுக்கிறது.

அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் தொழிலாளர் விதி சீர்திருத்தமானது, தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் நிறுவன ஒப்பந்தங்களில் மற்றும் உழைக்கும் நேரம், சம்பளங்களில் பேரம் பேசுவதற்கு தொழிற்சங்கங்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகின்றது. சுருங்கச்சொன்னால், சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் எழும் சமூக கோபங்களை எதிர்கொள்கையில் தொழிலாளர் விதி பாதுகாப்புக்கள் சக்திமிக்க வகையில் துடைத்தழிக்கப்பட இருக்கின்றன.