ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
French President Hollande visits India to boost military ties, investment

இராணுவ உறவுகள், முதலீட்டை அதிகரிக்க பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் இந்தியா விஜயம் செய்கிறார்

By Sarath Kumara
3 February 2016

இந்தியாவிற்கு ரஃபால் (Rafale) போர் விமானங்களை விற்க ஜனவரி 24 அன்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் மூன்று நாள் இந்திய விஜயம், இந்திய இராணுவ தளங்களைச் சாத்தியமான அளவுக்கு அமெரிக்க துருப்புகளுக்குத் திறந்துவிடுவதன் மீது வாஷிங்டனுடன் புது டெல்லி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதற்கு அடுத்ததாக வந்துள்ள நிலையில், இது தெற்காசியாவை சூழ்ந்துள்ள இராணுவ தீவிரமயப்படுத்தலைக் குறித்தது.

பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, பொருளாதார மற்றும் கலாச்சாரத்துறை மந்திரிமார்கள் மற்றும் டஜன் கணக்கான உயர்மட்ட பெருநிறுவன தலைவர்கள் உள்ளடங்கலாக ஹோலாண்டின் பிரதிநிதிகள் குழு பிரெஞ்சு இராணுவ-தொழில்துறை கூட்டை அதிகரிக்கவும் மற்றும் இந்திய மலிவு உழைப்பை பிரான்ஸ் சுரண்டுவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. பிரெஞ்சு பிரதிநிதிகள் குழு இந்தியாவில் வரவிருக்கும் காலத்தில் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென அறிவித்தது. இது இந்தியாவில் பிரான்சின் இப்போதைய 19 பில்லியன் டாலர் முதலீட்டிற்குக் கூடுதலாக இருக்கும், இதனுடன் ஒப்பிடுகையில் பிரான்சில் இந்தியாவின் முதலீடு வெறும் 700 மில்லியன் டாலராக உள்ளது.

ஹோலாண்ட் ஹரியானா மாநில தலைநகர் சண்டிகருக்கு நேரடியாக பயணித்தார், இம்மாநிலத்தின் சுதந்திர-சந்தை கொள்கைகள் பிரெஞ்சு பிரதிநிதிகள் குழுவை ஈர்த்திருந்தது. பிரான்ஸ் 2.25 பில்லியன் டாலர் ரொக்கமல்லாத கடன் (Line of Credit) வழங்கி, ஏற்கனவே சுத்தமான குடிநீர் வினியோகம், சிறந்த கழிவு அகற்றும் முறை மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றுடன் சண்டிகர், நாக்பூர் மற்றும் புதுச்சேரியை மாற்றுவதற்கு உதவ வாக்குறுதி அளித்துள்ளது. ஹோலாண்ட் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இருவருமே சண்டிகரில் இந்திய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின் சுமார் 30 தலைமை செயலதிகாரிகள் பங்குபற்றிய ஓர் இந்திய-பிரான்ஸ் வியாபார மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அம்மாநாட்டில் மோடி பேசுகையில், “நாங்கள் பிரான்சுடன் நெருக்கமாக வேலை செய்ய விரும்புகிறோம். … உலகம் இந்தியாவை ஒரு சிறந்த முதலீட்டு இடமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் புத்திச்சாலித்தனமும் பிரான்சின் உற்பத்தி (திறமையும்) நிறைய சாதிக்க முடியும்,” என்றார். பிரெஞ்சு முதலீடுகள் பாதுகாப்பான கரங்களில் உள்ளன என்பதற்கு உத்தரவாதம் வழங்க, “இந்த அரசாங்கம் ஒரு நிலையான மற்றும் எதிர்பார்க்கக்கூடிய வரி முறைக்காக அறியப்பட்டுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இருதரப்பும் பிரதான உடன்படிக்கையை, அதாவது 36 ரஃபால் போர் விமானங்கள் வாங்குவதை இறுதி செய்யவில்லை. ரஃபால் போர்விமானம் உற்பத்தி செய்யும் Dassault கடந்த வாரம் அறிவிக்கையில் அடுத்த நான்கு வாரங்களில் ஓர் உடன்படிக்கையை இறுதிச்செய்ய அது ஒத்துழைப்பதாக அறிவித்தது. ஹோலாண்ட் ஐ சந்தித்தப் பின்னர், மோடி மட்டும், “36 ரஃபால் விமானங்கள் வாங்குவதன் மீது நிதி விவகாரங்களைத் தவிர்த்து, நாங்கள் அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையை நிறைவு செய்துள்ளோம்,” என்பதைத் தெரிவித்தார்.

இந்தியா அதன் போர் விமானங்களின் படைப்பிரிவைப் பலப்படுத்த மற்றும் ஒரு வல்லரசாக எழ ஆர்வத்துடன் இருந்தாலும், புது டெல்லியின் 126 போர் விமானங்களை வாங்கும் ஆரம்ப திட்டங்கள் செலவுகளைக் குறைப்பதற்காக பின்னர் 36 ஆக குறைக்கப்பட்டன.

கூட்டு ஒத்துழைப்பு, பசுமை பொருளாதாரம், சொகுசு நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், இந்தியாவின் ரயில் நிலையங்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் இந்தியாவிற்கு ஆறு அணுமின் உலைகள் கட்டமைப்பதை ஓராண்டுக்குள் இறுதி செய்வது என்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. அங்கே ஏர்பஸ் மற்றும் இந்தியாவின் மஹேந்திரா நிறுவனத்திற்கு இடையே குறிப்பிடப்படாத விமானத்துறை உடன்படிக்கையும் இருந்தது.

இருதரப்பும் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மீதான அதிகரித்த கூட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் விவாதித்தன. ஹோலாண்ட் கூறினார், “பிரான்ஸ் மற்றும் இந்தியா இரண்டும் மிகப்பெரிய ஜனநாயகங்கள் … ஆகவே சுதந்திரம், ஜனநாயகம் அல்லது கலாச்சாரத்தை அனுசரித்திருக்க முடியாத பயங்கரவாதிகளின் பிரதான இலக்குகளாக நாம் உள்ளோம்,” என்றார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடத்திவரும் பிரான்ஸ் மற்றும் இந்தியாவை "இரண்டு மிகப்பெரும் ஜனநாயகங்கள்" என்று கூறும் ஹோலாண்டினது வர்ணனை, படுமோசமான பாசாங்குத்தனமாகும். உண்மையில் மோடியும் ஹோலாண்டும் இந்தியா மற்றும் பிரான்ஸ் இரண்டிலும் உள்ள ஆளும் உயரடுக்குகளின் பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக-விரோத குணாம்சத்தின் உருவடிவமாக உள்ளனர்.

இந்திய மாநிலம் குஜராத்தில் முன்னர் முதலமைச்சராக இருந்த மோடி 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளுக்கு தலைமை வகித்தார், அதில் 1,200 க்கும் அதிகமான அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பத்தாயிரக் கணக்கானவர்கள் அவர்களது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். மே 2014 இல் மோடி பிரதம மந்திரியானதில் இருந்து, சிறுபான்மையினருக்கு எதிரான வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸைப் பொறுத்த வரையில், ISIS இன் நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், அது அவசரகால நெருக்கடிநிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பொது போராட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளன, அங்கே பத்திரிகை சுதந்திரம் அல்லது ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்திற்கு உத்தரவாதம் இல்லை, மற்றும் பொலிஸால் நடத்தப்படும் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளுக்கு நீதித்துறை மேற்பார்வை கிடையாது. அந்த அவசரகால நெருக்கடி நிலையை நிரந்தரமாக்க சூளுரைத்துள்ள ஹோலாண்ட், இஸ்லாமிய-விரோத வெறுப்பைத் தூண்டிவிட்டு வருகிறார். இது நவ-பாசிசவாத தேசிய முன்னணி தழைத்தோங்குவதற்கான ஓர் அரசியல் சூழலை உருவாக்கி உள்ளது.

ஹோலாண்டின் பயணம் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததன் அதன் ஜனவரி 26 குடியரசு தின விழாவுடன் ஒத்துப் போனது. குடியரசு தினத்திற்கு மேற்கத்திய நாடுகளின் முக்கிய தலைவர்களை அழைக்கும் மோடி அரசாங்கத்தின் பாரம்பரியத்திற்கு இணங்க, கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஆகியோரைத் தொடர்ந்து ஹோலாண்ட் முதன்மை விருந்தினராக இருந்தார்.

ஒரு பிரெஞ்சு இராணுவ படைப்பிரிவு குடியரசு தின அணிவகுப்பில் அணிவகுத்தது, சுதந்திரத்திற்குப் பின்னர் முதல்முறையாக வெளிநாட்டு படைகள் அணிவகுப்பில் பங்குபற்றியிருந்தன, இது பிஜேபி அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மண்டியிட்டிருப்பதை எடுத்துக்காட்டியது.

இந்திய ஊடகங்களின் பிரிவுகள் அந்நடவடிக்கையை மேற்கத்திய சக்திகளுடனான இந்தியாவின் அதிகரித்த இராணுவ உறவுகளுக்கு ஒரு சாட்சியாக வரவேற்றன. “இந்திய தனிமைவாத ஆவிகளை" விரட்டியடிக்க முயற்சித்ததற்காக சி. ராஜா மோகன் இந்தியன் எக்ஸ்பிரஸில் மோடியைப் புகழ்ந்துரைத்தார். “ராஜவீதியில் பிரெஞ்சு படைப்பிரிவு அணிவகுத்து சென்றமை விட்டுக்கொடுப்பதற்கான முயற்சி தொடங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஹோலாண்ட் உடனான புது டெல்லியின் உறவுகள் ஓர் ஏகாதிபத்திய-எதிர்ப்பு குணாம்சத்தைக் கொண்டதாக ஏதோவிதத்தில் பாசாங்கு செய்யும் முயற்சியில், இந்திய ஊடங்கங்கள், இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டு வந்த பிரிட்டிஷ்க்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் பிரெஞ்சு துருப்புகள் இந்திய நிலப்பிரபு திப்பு சுல்தான் உடன் இணைந்திருந்த உண்மையை உயர்த்திக் காட்டின.

அமெரிக்க சுதந்திர போர், பிரெஞ்சு புரட்சி மற்றும் நெப்போலிய போர்களின் போது பிரிட்டிஷ் முடியாட்சியுடன் பிரெஞ்சு துருப்புகள் சண்டையிட்டதை ஒப்பிடுவது ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். இத்தகைய போர்கள் பரிபூரண முடியாட்சிகளுக்கு எதிராக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பெருந்திரளான மக்களின் புரட்சிகர மேலெழுச்சிகளிலிருந்து உருவானதாகும். இன்றோ பிரான்ஸ் ஆபிரிக்க மற்றும் மத்தியக் கிழக்கு எங்கிலும் ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பைப் பாதுகாக்க இரத்தந்தோய்ந்த போர்களை நடத்தி வருகிற அதேவேளையில், உள்நாட்டில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைத் திணித்து வருகிறது.

முதல்முறையாக இந்தியாவிற்கான ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியின் விஜயத்தில் சிஐஏ சம்பந்தப்பட்டிருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன. சிஐஏ, ஜனவரி 23 அன்று ஹரியானா மாநில பொலிஸிடம், குற்றகர நடவடிக்கைகளின் தன்மை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும், குர்கானில் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நடந்த சகல குற்றகர நடவடிக்கைகளின் தகவல்களை வழங்குமாறும் கோரியிருந்தது. மோடி மற்றும் ஹோலாண்ட் ஜனவரி 25 அன்று குர்கானுக்கு விஜயம் செய்தனர், இது முறையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் பாகமாக இருந்ததாக கூறப்பட்டது.

சிஐஏ விசாரணைகள் ஆரவல்லி மலைத்தொடரில், அத்துடன் மீவட் மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மற்றும் இதர நடவடிக்கைகளையும் தொட்டிருந்தன, அங்கே சந்தேகத்திற்குரிய அல் கொய்தா நபர்கள் உட்பட பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்படும் பலர் கடந்த மூன்றாண்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிஐஏ இன் பாத்திரம் அமெரிக்கா உடனான பிரான்சின் நேசமான உறவுகளைப் பிரதிபலிப்பதாக முன்வைக்கப்பட்ட போதும், ஆசியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கை ஒத்திசைந்ததல்ல. உண்மையில், அவர்கள் இராணுவ கொள்கையில் வாஷிங்டனுடன் ஒத்துழைத்தாலும், இந்தியாவும் பிரான்சும் இரண்டுமே ஆசியாவில் அமெரிக்க வெளியுறவு கொள்கை விடயத்தில் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளைக் கொண்டுள்ளனர்.

முக்கியமாக மோடி மற்றும் ஹோலாண்ட், சீனாவைத் தனிமைப்படுத்தும் நோக்கங்கொண்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலை" குறித்து அந்த விஜயத்தின் போது ஒன்றும் பேசவில்லை. வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், ஹோலாண்ட் சீனாவுடன் நிதியியல் உறவுகளை ஆழப்படுத்த அந்நாட்டுக்கு விஜயம் செய்தார். புது டெல்லியும் சரி பாரிஸூம் சரி இரண்டுமே ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் புறக்கணிக்குமாறு வாஷிங்டனின் அழைப்புகளுக்கு இடையிலும் சீனாவின் அந்த 50 பில்லியன் டாலர் வங்கியில் இணைந்தன.

குர்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோலாண்ட் மற்றும் மோடி இருந்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திற்கு சிறப்பு ஆயுதந்தாங்கிய மற்றும் உபாய (SWAT) அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர், 144 சட்டப்பிரிவு அமுலாக்கப்பட்டிருந்தது. இச்சட்டம் 10 க்கு அதிகமான ஆட்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க மற்றும் அபராதம் விதிக்க மற்றும் பொலிஸ் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது மூன்றாண்டு கால சிறை தண்டனை விதிக்க அதிகாரிகளை அனுமதிக்கிறது. சட்டப்பிரிவு 144 ஜனவரி 24 இல் இருந்து 26 வரையில் முக்கிய வணிக வளாகங்கள், கடைகள், மூலோபாய இடங்கள் மற்றும் நெரிசலான பகுதிகளுக்கும் பொருந்தி இருந்தது.

குடியரசு தினத்தில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தன. “மத்திய டெல்லி நடைமுறையில் ஒரு கோட்டை அரணாக மாற்றப்பட்டது,” என்பதை NDTV குறிப்பிட்டது. டெல்லி பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளின் 50,000 அங்கத்தவர்கள் திரட்டப்பட்டிருந்தனர், அது குறிப்பிட்டது: “இலகுரக எந்திர துப்பாக்கி ஏந்திய அதிரடி படையினர் 10 மூலோபாய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர் மற்றும் விமான-எதிர்ப்பு துப்பாக்கிகள் தலைநகரின் சாதகமான இரண்டு இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.” ஹோலாண்ட் மற்றும் மோடியைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமுலாக்கப்பட்டிருந்தது.