ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

FBI wins court order forcing Apple to install backdoor in iPhone security systems

iPhone பாதுகாப்பு முறைகளில் அனுமதியற்ற உள்நுழைவினை நிறுவுவதற்கு, ஆப்பிள் நிறுவனத்தை நிர்பந்திக்கும் நீதிமன்ற உத்தரவை பெறுவதில் FBI வெற்றிபெற்றுள்ளது

By Thomas Gaist
18 February 2016

ஐபோனின் iOS 9 இயங்குதளத்தில் இணைக்கப்பட்டுள்ள குறியீட்டு பாதுகாப்பு அம்சங்களை விட்டுக்கொடுக்கும் சிறப்பு மென்பொருளை அபிவிருத்தி செய்வதற்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை நிர்பந்திக்க, செவ்வாயன்று கலிபோர்னியாவை மையமாக கொண்ட மத்திய நீதிபதியிடமிருந்து ஒபாமா நிர்வாகம் ஒரு நீதிமன்ற உத்தரவாணையைப் பெற்றது.

18 ஆம் நூற்றாண்டில் இருந்து தெளிவின்றி ஜனநாயக விரோதமாக உள்ள ஒரு சட்டத்தைப் பயன்படுத்திய அந்த நீதிமன்ற உத்தரவு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவும் மற்றும் அரசாங்கத்தின் பொலிஸ்-அரசு உளவுபார்ப்பு அதிகாரங்களை விரிவாக்கவும் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் கடந்த ஆண்டு நடந்த தாக்குதலைப் பயன்படுத்தும் முயற்சிகளின் பாகமாக இருந்தது.

மத்திய விசாரணையாளர்கள் சையத் ரிஜ்வன் பரூக்கிற்குச் சொந்தமான ஐபோன் மூலமாக அவரைத் தேடுவதற்கு உதவ புதிய மென்பொருள் அவசியமாகும் என்று FBI மற்றும் நீதித்துறை வாதிடுகிறது. இந்த சையத் ரிஜ்வன் பரூக் சான் பெர்னார்டினோவில் உள்நாட்டு பிராந்திய மையத்தில் நடந்த பாரிய துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பான தாக்குதல்தாரர்களில் ஒருவராவார்.

எவ்வாறிருப்பினும் பரூக் கைத்தொலைபேசியின் தரவுகளை விட இன்னும் அதிகமானவை ஆபத்தில் உள்ளது. அரசாங்கம் தற்போது அதனால் கண்காணிக்க முடியாமல் இருக்கும் எந்தவொரு தகவல்தொடர்பின் மீதும் குறியீட்டு இயங்குமுறைகளைக் கைவிடுவதற்கான பரந்த அதிகாரத்தைக் கோருகிறது.

ஆப்பிள் கைத்தொலைபேசியில் உள்கட்டமைந்த "தானியங்கி-அழிப்பு" வசதி இருப்பதால், பரூக்கின் கைத்தொலைபேசியினை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் அணுக முடியாமல் உள்ளது. கைத்தொலைபேசியில் உள்ள இந்த வசதி பத்து அல்லது அதற்கு அதிகமான முறை தவறாக கடவுச்சொல்லை கொடுக்க முயற்சித்தால் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழித்துவிடுகிறது. இந்த கைத்தொலைபேசியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், ஒவ்வொரு சாத்தியமான கடவுச்சொல்லை முயற்சிக்கும் "முரட்டுத்தனமான முயற்சி" (brute forcing) என்ற உளவுத்துறை அமைப்பின் விருப்பமான அணுகுமுறையை அது பயன்படுத்துவதைத் தடுக்கிறது.

பரூக் தொலைபேசியின் பாதுகாப்பு அம்சங்களை "மீறி செயலிழக்கச் செய்ய" ஆப்பிள் நிறுவனம் ஒரு வழியைக் காண வேண்டுமென மத்திய கலிபோர்னியா மாவட்டத்திற்கான பெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி Sheri Pym தீர்ப்பு வழங்கினார். ஆப்பிள் நிறுவனம் அத்தீர்ப்பின் மீது ஒருசில நாட்களில் மேல்முறையீடு செய்ய உள்ளது, அந்த வழங்கு உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும்.

அந்த தீர்ப்பு ஐபோனின் தகவல் பாதுகாப்பு முறைகளை ஊடுருவும் மென்பொருளை வடிவமைக்க ஆப்பிள் நிறுவனத்தை நிர்பந்திக்கிறது என்று அரசு வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர், அவர்கள் All Writs சட்டம் என்று அறியப்படும் ஒரு சாசனத்தை மேற்கோளிடுகின்றனர், இது நீதிபதிகளை "அவசியமாகவோ அல்லது உரிய விதத்திலோ அவர்களின் உரிய சட்ட அதிகாரங்களுக்கு உதவியாகவும் மற்றும் சட்ட கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகளுக்கு உதவியாக அனைத்து தீர்ப்புகளையும் வழங்க" அனுமதிக்கிறது. அரசு அதிகாரங்கள் மீதான அரசியலமைப்பு வரம்புகள் மீற நடைமுறைரீதியில் நீதிமன்றங்களை அனுமதிக்கும் ஒரு பரந்த சட்ட பொருள்விளக்கத்தை நிர்வாகம் ஏற்றுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகையின் ஆதரவிருப்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், செய்தி தொடர்பாளர் ஜோஸ் ஏர்னஸ்ட் புதனன்று கூறுகையில், நீதித்துறைக்கும் FBI க்கும் ஒபாமா நிர்வாகத்தின் "முழு ஆதரவு" உள்ளது என்றார்.

எட்வார்ட் ஸ்னோவ்டனின் NSA இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தல்களைத் தொடர்ந்து உள்நாட்டு உளவுபார்ப்பு வேலைகளுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை எதிர்கொள்ள சான் பெர்னார்டினோ தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒபாமா நிர்வாகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகளில் இந்த தீர்ப்பு சமீபத்திய கட்டம் மட்டுமே. பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுடன் சேர்ந்து, தெற்கு கலிபோர்னியாவின் சம்பவங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் பாரிய உளவுபார்ப்பு திட்டங்களின் ஒரு புதிய விரிவாக்கத்திற்கு முக்கிய போலிக்காரணமாக மாறியுள்ளது.

புதனன்று ஸ்னோவ்டன் குறியீட்டு முறை மீதான FBI தாக்குதல்களுக்கு எதிராக பேசியிருந்தார். அந்த சம்பவங்களை அவர் "ஒரு தசாப்தத்தில் மிக முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த வழக்காக" விவரித்தார்.

“பிரஜைகள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஆப்பிள் நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் ஓர் உலகை FBI உருவாக்கி உள்ளது,” என்று ஸ்னோவ்டன் ட்வீட் செய்தார்.

2013 இன் கோடைகால ஆரம்பத்தில் ஸ்னோவ்டனால் வெளியிடப்பட்ட NSA ஆவணங்கள் அம்பலப்படுத்துவதைப் போல, ஆப்பிள், கூகுள், யாகூ, பேஸ்புக் மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்கள், அவற்றின் சர்வர்களில் சேகரிக்கப்பட்ட மின்னணு தொலைதொடர்பு தரவுகளை NSA அணுகுவதற்கு வசதி செய்தளித்து, 2000களின் மத்தியிலிருந்து தொடங்கி அமெரிக்க அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களுக்குள் வந்தன. அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அனைத்து தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய தொலைதொடர்புகளைக் கண்காணிக்க முயலும் எண்ணற்ற சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான திட்டங்களை NSA ஏற்படுத்தி இருந்ததையும் அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டின.

புதனன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் அந்த தீர்ப்பின் பரந்த தாக்கங்களை சுட்டிக்காட்டி, ஆப்பிள் தலைமை செயல் நிர்வாகி டிம் குக் அரசாங்கத்தின் கோரிக்கையை "முன்னுதாரணமற்றது" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் FBI ஆல் கோரப்பட்ட தொழில்நுட்பம் நூறு மில்லியன் கணக்கான சாதனங்களில் பயன்படுத்த கூடியதாக இருக்கும் என்று கூறினார்.

“அது ஒரு அனைத்தையும் திறக்கும் சாவிக்கு (master key) இணையானதாக இருக்கும்,” குக் எழுதினார். “மிகக் குறிப்பாக, பல முக்கிய பாதுகாப்பு அம்சங்களைத் தந்திரமாக கையாளும் வகையில் நாங்கள் ஐபோனின் ஒரு புதிய இயங்குத்தள பதிப்பை உருவாக்க வேண்டுமென FBI விரும்புகிறது.”

“அரசாங்கம் எமது சொந்த பயனர்களின் தகவல்களைத் திருடுமாறு ஆப்பிளைக் கோருகிறது,” என்று குக் எழுதினார். "உங்கள் செய்திகளை ஊடுருவ, உங்களின் மருத்துவ விபரங்களை அல்லது நிதியியல் தகவல்களை அணுக, அல்லது உங்கள் போனின் மைக்ரோபோன் அல்லது கேமிராவை உங்களுக்கு தெரியாமல் அணுகுவதற்கும் கூட" இந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.” அந்த மென்பொருள் ஊடுருவல் "ஸ்தூலமாக யாருக்கு சொந்தமான எந்த ஐபோனுக்குள்ளும் உள்நுழையும் சாத்தியகூறைக்" கொண்டிருக்கும்.

எவ்வாறிருப்பினும் உளவுத்துறை ஸ்தாபகத்துக்கும் மற்றும் அதன் "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கும்" ஆப்பிள் நிறுவனம் காட்டும் விசுவாசம் குறித்து அங்கே எந்த சந்தேகமும் விட்டு வைக்காமல், குக் தெரிவிக்கையில் ஆப்பிள் நிறுவனம் "எங்களின் அதிகாரத்திற்குட்பட்டு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு [FBI க்கு] உதவ அனைத்தும் செய்துள்ளோம்" என்று வலியுறுத்த சென்றார்.

“எங்கள் வசமிருக்கும் தகவல்களை FBI கேட்கும்போது நாங்கள் அதை வழங்கியுள்ளோம்,” என்று குக் எழுதினார். “FBI வல்லுனர்கள் மீது நாங்கள் நிறைய மரியாதை வைத்துள்ளோம் மற்றும் அவர்களின் நோக்கங்கள் நல்லதுக்கே என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

FBI இன் குறியீட்டுமுறைக்கு எதிரான முனைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்ப்பானது, அதன் பங்குதார்களின் சடரீதியிலான நலன்களிலிருந்து பெருக்கெடுக்கிறது. ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய அளவில் சந்தை பங்குக்காக போட்டி நிறைந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அமெரிக்க உளவு எந்திரத்தால் முழுமையாக ஊடுருவப்பட்டதாக அது உணரப்படுகையில், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் இரண்டின் இரண்டு தரப்பிலிருந்தும் அது வியாபாரங்களை இழக்கும் நிலையில் நிற்கிறது.

நியூ யோர்க் டைம்ஸின் ஒரு கட்டுரையின்படி, ஆப்பிள் நிறுவனம் "அவர்களது சொந்த குறியீட்டு முறை மென்பொருளை திருத்தி எழுதாமலேயே இந்த முட்டுச்சந்தை தீர்க்க முடியுமென நம்பி இருந்தது.” “அந்த வழக்கைக் குறித்து அறிந்திருந்த ஒரு தொழில்துறை நிர்வாகியின் கருத்துப்படி, அதன் கோரிக்கைகளைப் பகிரங்கமாக அல்லாமல் இரகசியமாக பதிவு செய்வதற்கு நீதிமன்றம் நீதித்துறை மறுத்ததால்" அந்நிறுவனம் "செயல் குலைந்து போனது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த கோரிக்கை பகிரங்கமாக அறியப்படும் என்பதால், அந்நிறுவனம் அத்தீர்ப்பை எதிர்த்து ஓர் அறிக்கை வெளியிட நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தது.

உளவுத்துறை அமைப்புகள் சான் பெர்னார்டினோ தாக்குதல்களுக்கு முன்பிருந்தே குறியீட்டு முறை இயங்குமுறைகளைத் தவிர்க்கும் சட்ட மசோதாவிற்கு அழுத்தமளித்து வருகின்றன. குறியீட்டுமுறை தொழில்நுட்பத்தை "அனுமதியற்ற உள்நுழைவினை" அணுகும் வசதியை ஏற்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்களுக்காக FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமெ ஏறத்தாழ அவர் பதவியேற்றத்திலிருந்து தொடர்ந்து போராடி வருகிறார். எவ்வாறிருப்பினும் அந்த தாக்குதல்கள் உடனடியாக "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடவடிக்கையைத்" தீவிரப்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் வலதிற்கு நகர்த்தவும் பயன்படுத்தப்பட்டன.

ஆப்பிள் நிறுவனத்துடனான சர்ச்சையின் சாத்தியமான விளைவுகளில் ஒன்று காங்கிரஸில் சட்டமசோதாவை நிறைவேற்றியதாகும், இது கைத்தொலைபேசிகளில் உள்ள சேதிகள் மற்றும் ஏனைய குறியீட்டு தரவுகளை அரசாங்கம் அணுகுவதற்கு நிறுவனங்களை நிர்பந்திக்க வெளிப்படையாக அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கும். முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் வேகமாக நீதிமன்ற முடிவை ஆதரிக்கவும் மற்றும் அதை எதிர்க்கும் ஆப்பிள் நிறுவனத்தை விமர்சிக்கவும் நகர்ந்தனர்.

ஒட்டுமொத்தமாக பொலிஸ்-அரசு உளவுபார்ப்பு எந்திரத்துடனான இத்தகைய நகர்வுகளின் அடிப்படை இலக்கு, இஸ்லாமிய அரசோ அல்லது அல் கொய்தாவோ அல்ல, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பும் ஆகும். அமெரிக்கா இராணுவ வன்முறையை பாரியளவில் தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகின்ற அதேநேரத்தில் அது உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.