ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

பகிரங்க விரிவுரை

முதலாளித்துவ நெருக்கடியும் உலக யுத்தமும் சோசலிசத் தீர்வும்

16 February 2016

இருபதாம் நூற்றாண்டில் மனித குலத்தை இரண்டு உலகப் போர்களுக்குள் இழுத்துச் சென்ற உலக முதலாளித்துவ அமைப்பு முறை, மீண்டுமொருமுறை மூன்றாம் உலக போர் பேரழிவுக்குள் மூழ்கடிக்க நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இந்த பேரழிவு போர் ஏற்கனவே மூண்டுவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச சட்டத்தை மீறி, 2001ல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பின்னர் ஈராக், லிபியா, சிரியா, ஏமன் உட்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செய்த ஆக்கிரமிப்பின் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று, 60 மில்லியனுக்கும் மேலானவர்களை அகதிகளாக்கி, பிராந்தியத்தில் சமூக வாழ்க்கையையே சீர்குலைத்துள்ளது.

போர் மத்திய கிழக்குக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதுமான முழு யூரேசிய நிலப்பகுதியிலும் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கமாகும். ஒபாமா நிர்வாகத்தினால் சீனாவை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்டு, 2011ல் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வரும் "ஆசியாவில் முன்னிலை" வேலைத் திட்டத்தின் கீழ் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இராணுவ கூட்டுக்களின் மூலம், பிராந்தியம் முழுவதும் போர் பதட்டங்கள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஊடாக ரஷ்யா நோக்கி நேட்டோ துருப்புக்களை விரிவாக்கிக்கொண்டிருப்பது, வளங்கள் நிறைந்த ரஷ்யாவை காலனியாக்கிக்கொள்ளும் நோக்குடனேயே ஆகும். இதன் கீழ், உக்ரேன் மற்றும் சிரியாவுக்குள் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டுவரும் இராணுவத் தலையீடுகளின் காரணமாக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு அணு ஆயுதப் போர் வெடிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

சீனாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை கொண்டிருந்த இராஜபக்ஷவின் ஆட்சிக்குப் பதிலாக, தமக்கு முழுமையாக சரணடைந்த சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தை ஆட்சி கொண்டுவர திரைக்குப் பின்னால் இயங்கிய அமெரிக்கா, அதன் "ஆசியாவில் முன்னிலை" யுத்த நீர்ச்சூழிக்குள் இலங்கையையும் இழுத்துப் போட நெருக்கமாக செயற்படுகின்றது.

ஒன்றுக்கொண்டு விரோதமான தேசிய அரச அமைப்பு முறைக்கும், உலகப் பொருளாதார முறைக்கும் நடுவில், உற்பத்திச் சக்திகளின் தனியார் உரிமைக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் இடையில் நிலவும் பரஸ்பர முரண்பாடுகளே போர் மற்றும் சமூகத் துருவப்படுதலின் தோற்றுவாய்களாகும்.

தனி சொத்துடைமையையும் தேசிய அரச அமைப்பு முறையையும் உலக சோசலிச அரசுகளின் ஒன்றியத்தின் மூலம் பதிலீடு செய்வதற்காகப் போராடுவதன் மூலமே ஏகாதிபத்தியவாதிகளின் காலனித்துவ மூலோபாயத் திட்டத்திலிருந்து ஊற்றெடுக்கும் உலகப் போரை தோற்கடிக்க முடியும். இந்த பணிக்காக வரலாற்று ரீதியில் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரே வர்க்கம், சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தினை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சர்வதேச போர் எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகின்றன.

அந்தப் போராட்டத்தின் பாகமாக நடைபெறும் இந்த விரிவுரை மூலம், ஏகாதிபத்திய உலகப் போர் மூலோபாயத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மூலோபாயம் மேலும் விவரிக்கப்படும். விரிவுரையிலும் அதன் பின்னர் இடம்பெறும் கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதி மற்றும் நேரம்: பெப்பிரவரி 24, புதன், மாலை 3.30

இடம்: குளியாபிடிய (மீகஹகொடுவ) ஜனாதிபதி ஷில்ப ஷாலிகாவ மண்டபம்