ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Human rights” propaganda campaign paves way for military escalation in Syria

“மனித உரிமைகள்" பிரச்சார நடவடிக்கை சிரியாவில் இராணுவ தீவிரப்பாட்டுக்கு வழிவகுக்கிறது

Bill Van Auken
19 August 2016

சிரியாவில் சிஐஏ ஆதரவிலான இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களைச்" சேர்ந்த ஒரு குழு, ஐந்து வயது ஓம்ரான் தக்னீஷ் (Omran Daqneesh) இன் புகைப்படங்கள் மற்றும் காணொளியை பரப்பி விட்டதும், அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் எங்கிலும் அவை வேகமாக பரவின.

ஒரு புதிய மற்றும் அதிநவீன ஆம்புலன்ஸ் இன் ஆரஞ்ச் நிற இருக்கையில் அக்குழந்தை சற்றே திகைப்புடன் அமர்ந்திருப்பதாக காட்டப்படுகிறது, அச்சிறுவனின் முகம், உலர்ந்த இரத்தம் போல தெரியும் சாயம் மற்றும் தூசியால் படிந்திருந்தது, இதை வைத்துத்தான் அச்சிறுவனின் மண்டை பிளந்திருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. புகைப்படக்காரர்களும் காணொளி பதிவாளர்கள் பலரும் உலகெங்கிலும் ஒளிபரப்புவதற்காக அச்சிறுவனைப் பதிவு செய்து கொண்டிருக்கையில், அச்சிறுவன் கவனிக்கப்படாமல் காத்திருப்பதைக் காணொளி காட்டுகிறது. கண்புருவம் வரை தலைமுடிக்கூட்டத்தால் மூடிவிடப்பட்டு கார்ட்டூன் டி-சர்ட்டில் இருந்த அச்சிறுவன் ஒரு சந்தைப்படுத்தும் புகைப்படத்தை வழங்குகிறான் என்பதை அதற்கு பொறுப்பானவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

அந்த குழந்தை "சிரிய உள்நாட்டு போரின் முகம்" என்று CNN அறிவித்தது, அதேவேளையில் அச்சிறுவனின் செய்தியை வாசித்து கொண்டிருந்த பெண்மணி செய்தி வாசிக்கையில் அரங்கிலேயே கண்ணீர் விட்டார். நியூ யோர்க் டைம்ஸ் அச்சிறுவனை "அலெப்போவின் அவலநிலைக்கு ஓர் அடையாளம்" என்று குறிப்பிட்ட நிலையில், “சிரியாவின் இச்சிறுவன் ஓம்ரான். இப்போதாவது நீங்கள் கவனிப்பீர்களா?” என்று குறிப்பிட்ட ஒரு சிறிய ஆசிரியர் குறிப்பை USA Today பிரசுரித்தது.   

பிரிட்டிஷ் நாளிதழ் Telegraph இன் அணுகுமுறை மிகவும் நேரடியாக இருந்தது. அது "அலெப்போ குழந்தைகளுக்காகவாவது, சிரியாவில் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை நடைமுறைப்படுத்த மீண்டும் நாம் முயல வேண்டும்,” என்று ஒரு கட்டுரைக்குத் தலைப்பிட்டிருந்தது.  

மிகவும் கீழ்த்தரமான கட்டுரைகளில் ஒன்று, அனுமானித்தக்க விதத்தில், நியூ யோர்க் டைம்ஸ் இன் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் ஆல் எழுதப்பட்டிருந்தது, அவர் சிரிய குழந்தைகளின் கதியை அவரது குடும்ப நாயின் மரணத்துடன் இணைத்திருந்தார். ISIS இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதற்கு காரணம், ISIS க்கு எதிராக சிரிய அரசாங்கம் சண்டையிட்டு வருகின்றதாலாகும். எனவே அதன் மீதும் கப்பற்படை ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்க அமெரிக்காவிற்கு ஒரு பொருத்தமான காரணமாகும் என்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டுமளவிற்கு அவர் சென்றார். மனித உரிமைகள் என்ற பெயரில் எவ்விதமான ஒரு நியாயமான கருத்தையும் இல்லாதொழிப்பது திகைப்பூட்டுவதொன்றாக இருக்கின்றது.

நாம் எதை காண்கின்றோம் என்றால், மக்களின் மனிதாபிமான உணர்வுகளை மத்திய கிழக்கில் புதிய ஏகாதிபத்திய வன்முறை தீவிரப்படுத்தலுக்குப் பின்னால் திருப்புவதற்காக மனிதாபிமான உணர்வுகளுக்கு அழைப்புவிடும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட, மிகவும் கவனமாக முடுக்கிவிடப்பட்ட போர் பிரச்சாரத்தைப் பார்த்து வருகிறோம். ஓம்ரான் சம்பந்தப்பட்ட சம்பவம், "கிளர்ச்சியாளர்கள்" மற்றும் அவர்களின் சிஐஏ செயல்பாட்டாளர்களால் நடத்தப்பட்டிருக்குமா அல்லது அது வாஷிங்டன் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் ஓர் அப்பாவி சிறுவனின் நிஜமான துயரத்தை எரிச்சலூட்டும் விதத்தில் சுரண்டி கொண்டிருகின்றதா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாகும்.

சர்ச்சைக்கு இடமின்றி இருப்பது என்னவென்றால் இந்த ஒரு குழந்தை மீதான பாசாங்குத்தனமான கரிசனம் மிகவும் தீர்க்கமான மற்றும் அறிவிக்கப்படாத அரசியல் மற்றும் புவிசார் அரசியல் உள்நோக்கங்களுடன் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது என்பது தான், இதற்கும் அப்பாவி குழந்தைகளது உயிர்களை அவர்கள் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க தலைமையிலான கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான படையெடுப்புகள், குண்டுவீச்சுக்கள் மற்றும் பினாமி போர்களில் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.    

ஓம்ரான் இன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் அது அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருந்து வருகிறது, அங்கே வடக்கு சிரியாவின் நகர மக்களில் சுமார் ஆறில் ஒரு பங்கினர் மட்டுமே அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களது மேலாதிக்கத்தின் கீழ் உள்ளனர். இத்தகைய போராளிகள் குழுக்களில் மிகவும் முக்கியமானது ஃபதெஹ் அல்-ஷாம் முன்னணி (Fateh al-Sham Front) ஆகும், கடந்த மாதம் வரையில், அல்-நுஸ்ரா முன்னணி என்று தன்னைத்தானே குறிப்பிட்டு வந்த இது, சிரியாவில் அல் கொய்தாவின் நியமிக்கப்பட்ட துணை அமைப்பாக இருந்தது.

அல்கொய்தா போராளிகள் குழுவின் "அசுர பீரங்கிகள்", அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு அலெப்போவின் அண்டைப் பகுதிகளுக்குள் கண்மூடித்தனமாக குண்டுவீசியதில் கொல்லப்பட்ட சிரிய குழந்தைகளுக்காக பத்திரிகை பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக உரையாளர்களின் கண்ணீர் நாளங்களில் இருந்து இதுபோன்ற விளைவு உண்டாகவில்லை. அல்லது,  அமெரிக்கா வினியோகித்த குண்டுகள் மற்றும் பெண்டகனின் இன்றியமையாத படைத்தளவாட வினியோகங்களைக் கொண்டு நடத்தப்பட்ட சவூதி விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட யேமன் குழந்தைகளின் புகைப்படங்கள் எதுவும் வெளி வரவில்லையே என்பது இதற்கு பொருத்தமாக இருக்கின்றது. அதேபோல அமெரிக்க ஆதரவிலான "மிதவாத" சிரிய "கிளர்ச்சியாளர்கள்" பத்து வயது பாலஸ்தீன சிறுவனின் தலையை வெட்டும் கொடூரமான காணொளி எந்தவித பெரிய சீற்றத்தையும் உண்டாக்கவில்லையே.

இந்த புதுப்பிக்கப்பட்ட பிரச்சார நடவடிக்கையின் அடியில் இரண்டு விதமான உந்துசக்திகள் உள்ளன. முதலாவதும் மற்றும் மிகவும் முக்கியமான விடயம், கிழக்கு அலெப்போ மீதான அரசு முற்றுகையை உடைத்து அந்நகரின் மேற்கில் உள்ள பொதுமக்களுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதற்கான, அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளது நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்றுள்ள "கிளர்ச்சியாளர்களது" அத்துமீறல் ஸ்தம்பித்துள்ளது, மற்றது ரஷ்ய விமானப்படை பலத்தால் ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய இராணுவம் மீண்டும் கணிசமான அளவிற்கு அம்மண்ணில் வெற்றி பெற்று வருகிறது. இது தான் ஓர் உடனடி போர்நிறுத்தத்திற்கான புதிய கோரிக்கைகளுக்குக் காரணமாகும்.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போர் சம்பந்தமாக ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் துருக்கிக்கு இடையே நெருக்கமான கூட்டுறவு வளர்ந்திருப்பது மிகவும் நீண்டகால அதன் தாக்கங்களைக் கொண்டுள்ளது. சிரிய இலக்குகளைத் தாக்க ஈரான் அதன் ஈரானிய தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த வாரம் ரஷ்யாவை அனுமதித்த நிலையில், பெய்ஜிங் டமாஸ்கஸ் க்கான இராணுவ உதவிகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் தோல்விகண்ட அமெரிக்க ஆதரவிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் இரண்டுடனும் ஒரு நல்லிணக்கத்திற்கு முயன்றுள்ளார்.

இந்த சாத்தியமான கூட்டணியை வாஷிங்டன் அதிகரித்த கவலையுடன், மத்திய கிழக்கில் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கான அதன் இராணுவ உந்துதலுக்கு ஒரு தடையாக பார்க்கிறது. அமெரிக்காவினால் அத்தகையவொரு சவாலை ஏற்றுக் கொள்ள முடியாது, தவிர்க்கவியலாமல் ஓர் இராணுவ விடையிறுப்புக்கு தயாரிப்பு செய்யும். இந்த தேவைக்காகவே, சிரியாவின் "குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான" “மனிதாபிமான" பிரச்சாரமும் மற்றும் வாஷிங்டனின் அல் கொய்தா தொடர்புபட்ட பினாமிகளை பேரம்பேசி மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகள் மிகவும் மிகவும் அவலட்சணமானவை என்றுதான் கூற வேண்டும். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர், ஈராக்கிற்கு எதிரான முதலாம் வளைகுடா போர் சிலிர்ப்பூட்டும் கட்டுக்கதையோடு தயாரிக்கப்பட்டது, குவைத் மருத்துவமனைகளில் இருந்த பிறந்த குழந்தைகளின் உயிர்காக்கும் கருவிகளைத் (incubators) திருடி, மழலைகள் இறந்து போக செய்த ஈராக்கிய துருப்புகள் மீது படையெடுப்பதற்காக என்று அமெரிக்க காங்கிரஸிற்கு கூறப்பட்டது. அந்த அட்டூழியங்களை நேரில் பார்த்ததாக கூறிய ஒரு தாதியாக அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், அதற்குப் பின்னர் குவைத் தூதரின் மகளாக மற்றும் எமிரேட்ஸ் இன் அரச குடும்பத்தின் ஓர் உறுப்பினராக அம்பலமானார். அந்த ஒட்டுமொத்த கதையும் ஒரு பிரச்சார மோசடியாக இருந்தது.

அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், அமெரிக்கா ஈராக் மீது தண்டிக்கும் தடையாணைகளை விதித்தது, அதில் அரை மில்லியன் ஈராக்கிய குழந்தைகள் இறந்து போயினர், அது குறித்து ஐநா சபைக்கான அப்போதைய அமெரிக்க தூதர் மாட்டெலின் ஆல்பிரைட் (Madeleine Albright) ஈனத்தனமாக அறிவிக்கையில், “இந்த விலை அதற்கு மதிப்புடையதே" என்று அறிவித்தார். அதற்கடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க போர்களில் நூறாயிரக் கணக்கானவர்களுக்கு அதிகமாக கொல்லப்பட்டனர்.   

இத்தகைய 25 ஆண்டுகால வன்முறை மற்றும் இரத்த ஆறை மீளாய்வு செய்து, ஒரு கால் நூற்றாண்டு கால போர்: உலக மேலோதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதல், 1990-2016 என்ற புதிய நூலில் டேவிட் நோர்த் பின்வருமாறு அறிவிக்கிறார்: 

“இராணுவ நடவடிக்கைகளின் பரப்பெல்லை தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளது. பழைய போர்கள் தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே புதிய போர்கள் தொடங்கப்பட்டன. 2011 இல் லிபியாவிற்கு எதிராக போர் தொடங்கி, மௌம்மர் கடாபி ஆட்சி தூக்கியெறிவதற்கு எரிச்சலூட்டும் வகையில் மனித உரிமைகளே பயன்படுத்தப்பட்டன. அதே பாசாங்குத்தனமான சாக்குபோக்கு சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஒழுங்கமைக்க பயன்படுத்தப்பட்டது., மனித உயிர்கள் மற்றும் துன்பங்களைக் கருத்தில் கொண்டால், இத்தகைய குற்றங்களின் விளைவுகள் கணக்கிட முடியாதவை.

“அமெரிக்கா-தூண்டிய போர்களின் கடந்த கால் நூற்றாண்டை ஒன்றோடொன்று தொடர்புபட்ட தொடர்ச்சியான நிகழ்வுகளாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் மூலோபாய தர்க்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதன் நவகாலனித்துவ நடவடிக்கைகளையும் கடந்து விரிந்து செல்கிறது. நடந்துவரும் பிராந்திய போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் வேகமாக தீவிரமடைந்து வரும் அமெரிக்க மோதலின் உள்ளமைந்த கூறுபாடுகளாகும்.”

சிரியாவில் உடனடி அமெரிக்க தலையீட்டைத் தீவிரப்படுத்துவற்கான அறிகுறிகளாக வெள்ளமென பாயும் போர் பிரச்சாரம் அத்தகையவொரு மோதலையும், மற்றும் அதனுடன் சேர்ந்து, நிஜமான ஓர் உலகளாவிய அணுஆயுத போர் அபாயத்தையும் விரைவுபடுத்த அச்சுறுத்துகிறது.