ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கையின் வடக்கில் தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் போலி வாக்குறுதியுடன் கைவிடப்பட்டது

By Subash Somachandran and I. Barathan
21 August 2016

ஆகஸ்ட் தொடக்கத்தில், மூன்று தசாப்த கால இனவாத யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வட மாகாணத்தில் கடமையாற்றும் சுமார் 600க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், இரண்டு நாட்களாக வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டமானது மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான அயூப் அஸ்வின், இம்மானுவல் ஆனோல்ட் ஆகியோர், டிசம்பர் இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கொடுத்த போலி வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்டது. இந்த ஆசியர்களுக்கு இத்தகைய வாக்குறுதிகள் வழங்கப்படுவது இது முதல் தடவை அல்ல.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் தொண்டர் ஆசிரியர் சங்கங்கள் கடந்த முதலாம் திகதி இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. “நிரந்தர நியமனம் தரும்வரை இடத்தை விட்டு நகரப் போவதில்லை” எனக் கூறி போராட்டத்தின் தலைமையை தமது கையில் எடுத்துக்கொண்ட  சங்கத்தின் தலைவர்கள், இறுதியில் ஆளும் தரப்பின் நோக்கங்களுக்கு ஏற்ப தொண்டர் ஆசிரியர்களை கட்டிவைத்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் என கூறிக்கொள்ளும் பா. சுபதீசன் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே கருங்காலி வேலையில் ஈடுபட்டார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவரான இவர், “யாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிச்சயம் நியமனம் கிடைக்கவுள்ளதால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தேவையில்லை” எனக் கூறி ஒரு தொகுதி ஆசியர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

வட மாகாணத்தில் சுமார் 1300க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் எதுவிதமான சம்பளமும் இன்றி 10 வருடங்களுக்கும் மேலாக அரசாங்கப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்பட்டு கல்வி வலயங்களில் பெயர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள  போதிலும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

வட மாகாணத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், பாடசாலை அதிபர்களாலும் உள்ளூர் கல்வி அதிகாரிகளினாலும் க.பொ.ப. உயர்தரம் கற்றவர்கள் தொண்டர் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். தமக்கு எதிர்காலத்தில் அரசாங்க நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே தொண்டர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களில் பலர் பட்டதாரிகள் ஆகியுள்ளதுடன் கற்பித்தல் அனுபவத்திலும் முன்நிலையில் உள்ளார்கள்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர், இந்த தொண்டர் ஆசிரியர்கள் பல தடவைகள் தமது கோரிக்கைக்காக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமோ இந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

 எல்லாவற்றுக்கும் மேலாக, வட மாகாண சபையின் ஆட்சி பொறுப்பை தாம் கையில் எடுப்பதனூடாக தமிழ் உழைக்கும் மக்கள் நாளாந்தம் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தேர்தல் வேளையில் உத்தரவாதங்களை கொடுத்து, வட மாகாண சபையை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த ஆசிரியர்கள் தொடர்பாக இதுவரை மூச்சுக் கூட விடவில்லை..

தொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதத்துக்கு வடக்கிலோ அல்லது தெற்கிலோ உள்ள எந்த அரசியல் கட்சியும் ஆதரவளிக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வஞ்சகத்தனமான முறையில் கூறிக்கொண்டு, அமெரிக்க சார்பு சிறிசேன அரசாங்கத்திற்கு “நிபந்தனையற்ற” ஆதரவை வளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையிட்டு கருத்து தெரிவிக்கையில், “எமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற அற்ப நம்பிக்கையில் கடந்த தேர்தல்களில் எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்தோம், ஆனால் எந்த நன்மையும் இல்லை,” என ஒரு தொண்டர் ஆசிரியர் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் அன்றி, கடந்த காலங்களில் போதனா வைத்தியசாலையின் தற்காலிக சுகாதார ஊழியர்களும் தற்காலிக மருத்துவ தாதிகளும் யாழ்ப்பாண மாநகர சபையின் தற்காலிக சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் தங்களுக்கு நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தி வந்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் வேலையற்ற பட்டதாரிகளும் தொழில் கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வட மாகாணத்தில் கல்வித் தகமையுடைய ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளும், அதேபோல “புனர்வாழ்வு அளிக்கப்பட்ட” முன்னாள் விடுதலைப் புலி போராளிகளும் அரச வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர் அல்லது அற்ப ஊதியத்துக்கு வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளனர். போரில் முடமான ஆநேகமானவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சிறுவர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் 5000 வரையில் சம்பளம் வழங்குகின்ற அதேவேளை, சிலர் பிள்ளைகளின் பெற்றோர்கள் சேகரித்து கொடுக்கும் சிறிய தொகையில்  தங்கியிருக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கும் மேலாக, போரின் போது இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலங்களை கைவிடக் கோரியும் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யுமாறும் மற்றும் யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடித்துத் தறுமாறு கோரியும் வடக்கில் மக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தையிட்டு எரிச்சலை வெளிப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், “பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்” என்றும் “அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை  எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்கின்றனர்,” எனக் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவில் கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களின் நலன்களைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் தமிழ் கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வறிய இளைஞர் யுவதிகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிர்பார்ப்பு கொண்டுள்ளது.

சிறிசேன–விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி அமுல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், வறிய விவசாயிகள் மற்றும் கல்வி தனியார்மயமாக்கத்துக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழ்நிலையிலேயே, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணா விரதத்தை தொடங்கினர்.

உலகப் பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டு இலங்கை பொருளாதார நெருக்கடியையும் ஏற்றுமதி வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ளது. இதில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறும் கடன் தொகைக்காக, அதன் சிக்கன நிபந்தனைகளை சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் திணித்து வருகின்றது. அதன் படி இலவசக் கல்வி இலவச சுகாதார சேவை உட்பட நலன்புரி சேவைகளை வெட்டித் தள்ளுவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஊழியர்களைக் குறைக்கும் திட்டத்தை அமுல்படுத்துகின்றது.

எனினும், தொழிற்சங்கங்கள், இந்த தாக்குதல்கள் மீதான எதிர்ப்பை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வெல்ல முடியும் என்ற மாயையை விதைத்து கரைத்து விடுவதற்கே செயற்படுகின்றன. பல்கலைக்கழக கல்விசரா ஊழியர்களின் போராட்டம் உட்பட கடந்த காலத்தில் இடம்பெற்ற பல போராட்டங்களை, அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை தொழிலாளர்களை நம்பவைத்து தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் காட்டிக்கொடுத்துள்ளன.

வேலையின்மையும் அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளும் இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும் உக்கிரமடைந்து வரும் நிலைமையாகும். இது, ஆட்சியாளர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அன்றி, உலக முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளே ஆன நெருக்கடியின் விளைவாகும் என்பது, உலகத் தொழிலாள வர்க்கம் தமது அனுபவத்தில் இருந்து பெறவேண்டிய படிப்பினையாகும். எனவே பேரழிவு மிக்க உலகப் போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் வேலையின்மைக்கும் காரணமாக இருக்கின்ற உலக முதலாளித்துவ அமைப்பு முறையை, சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் பதலீடு செய்வதன் மூலம் மட்டுமே, மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

தொண்டர் ஆசிரியர்கள், வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் அதே போல் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் கைகோர்த்துக்கொள்வதன் மூலமே அத்தகைய வேலைத் திட்டத்துக்காகப் போராட முடியும். இந்த வேலைத் திட்டத்துக்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியே போராடிவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றிய தொண்டர் ஆசிரியர்கள், உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் தமது நிலைமைகளை விளக்கினார்கள்.

கிளிநொச்சியில், 2006 தொடக்கம் தொண்டர் ஆசிரியராக இருக்கும் ம. கேதீஸ்வரன், 30 வயது, இதுவரைகாலமும் ஒரு சதம் கூட சம்பளமாக கிடைக்கவில்லை என்றார். “எனது அப்பாவின் வருமானத்தில் தான் 5 பேர் கொண்ட எங்கள் குடும்பம் சீவித்து வந்தது. அப்பாவும் இறந்தவிட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளோம். மாலையில் தனியார் வகுப்புக்களை நடத்தி  பெறும் வருமானத்திலேயே இப்போது சமாளிக்கின்றோம். பாடசாலையில் நிரந்தர ஆசிரியரைவிட எமக்கு கடும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுகின்றன. உங்களுக்கு நிரந்தர நியமனம் வரப்போகிறது, அடிக்கடி லீவு எடுக்க முடியாது, என்று கூறுவாரகள். இவ்வாறு சொல்லிச் சொல்லியே 10 வருடங்கள் கடந்துவிட்டன. வகுப்பாசிரியர்களாகவும் மற்றும் விடுமுறை காலத்திலும் நாங்கள் வகுப்புக்கள் எடுக்க வேண்டியுள்ளது.”

கேதீஸ்வரன் மேலும் கூறியதாவது: “பாடசாலைகளில் எமக்கும், நிரந்தர ஆசிரியர்களுக்கும் இடையில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. நாங்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மிடம் படித்த மாணவர்கள் கூட சிலர் தமது படிப்புக்களை முடித்து அரச வேலைகளில் சேர்ந்து விட்டார்கள். நாங்கள் மட்டும் அதே இடத்தில் நிற்கின்றோம். நாங்கள் ஆசிரியத் தொழிலை நம்பி வந்தபடியினால் வேறு வேலை கூட எமக்கு விருப்பமற்ற தொழிலாக மாறிவிட்டது.

“நான் யுத்த காலத்தில் கூட கற்பித்தேன். இறுதிச் சண்டையில் முகாமில் அடைபட்டிருந்த போது கூட, அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பித்தோம். எமக்கான திருமண வாழ்வு கூட நிறைவேறாமல் உள்ளது. வருமானமற்ற ஒருவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்.”

ஏ. ஜெயராஜ், நிரந்தர நியமனத்துக்காக பல அரசியல்வாதிகளையும் சந்தித்தும் பயனில்லை என்றார். “நிரந்தர நியமன ஆசையை காட்டி தொண்டர் ஆசிரியர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட பயன்படுத்திக்கொண்டார்கள். ஆசிரியர்கள் கூடுதலாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள். பத்து வருடங்கள் கடந்த நிலையில் நாங்கள் தொண்டர் ஆசிரியராக கடமையாற்ற முடியாது. எமக்கு அடுத்த கட்ட வாழ்க்கை இல்லாமல் உள்ளது. எமது சில ஆசிரியர்கள் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று கற்பிக்கின்றார்கள். சம்பளமும் இல்லை பிரயாணச் செலவும் இல்லை. நிரந்தர நியமனத்தினை நம்பியே செல்கின்றார்கள்.”

மன்னார்  மாவட்டத்தில் இருந்து வந்த அ. பாக்கியராஜா தெரிவித்ததாவது: “எனது இரண்டு பிள்ளைகளும் நான் கற்பிக்கும் பாடசாலையிலேயே கற்கின்றனர். ஆனாலும் எனக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை. இப்போது நான் குடும்பமாகிவிட்டேன். எனது குடும்ப வருமானத்துக்காக, இரவில் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு, பகலில் கற்பிக்கின்றேன். எமது பாடசாலை பின்தங்கிய பிரதேசத்தில் இருப்பதால் பல பிரச்சினைகளுடன் இயங்கிவருகின்றது. ஆரம்ப காலத்தில் அங்கு நிரந்தர ஆசியர்கள் இல்லாதபோது நாங்கள்தான் கொண்டு நடத்தினோம். பாடசாலை உயர்தர வகுப்புக்கள் இருந்தபோதிலும் அங்கு கணித விஞ்ஞானப் பிரிவுகள் கிடையாது. கலைப்பிரிவு மட்டுமே உள்ளது. எங்களுடைய நீண்டகால சேவைகளை அரசாங்கம் உதாசீனம் செய்ய முடியாது. எமக்கு நிரந்தர நியமனம் தரவேண்டும்.”