ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Stop the German government’s preparations for war!

ஜேர்மன் அரசாங்கத்தின் போர் தயாரிப்புகளை நிறுத்துவோம்!

Socialist Equality Party of Germany
25 August 2016

புதனன்று ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டி மஸியர் உத்தியோகபூர்வமாக முன்வைத்த "குடிமக்கள் பாதுகாப்பு திட்டத்திற்கு" (Konzept Zivile Verteidigung - KZV) பலர் ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் பயத்துடன் தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளனர். 69 பக்கங்களுக்கும் அதிகமாக நீண்ட அந்த திட்ட அறிக்கை போருக்கு மக்களை தயார்ப்படுத்தும் வழிவகைகளை விவரிக்கிறது.

“இந்த 69 பக்கங்களை வாசித்த பின்னர் ஒருவர் நீண்ட பெருமூச்சு விடுவார்" என்று அந்த ஆவணம் மீதான ஒரு ஆரம்ப அறிக்கையை திங்களன்று Frankfurter Allgemeine Zeitung எழுதியது, அது ஒருவர் மறைக்க விரும்பும் பிரச்சினைகளை பற்றி அணுகுவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டது.

“நுண்ணுயிரிகள் சார்ந்த அல்லது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? ரேடியோ-கதிரியக்க அலை பரவினால் மக்களை எவ்வாறு பாதுகாப்பது? ஒரு தாக்குதல் அச்சுறுத்தலாக இருந்தால் மத்திய அரசாங்கம் எங்கே மறைந்திருக்கும்? போர் சமயத்தில் கலாச்சார பொக்கிஷங்களை எங்கே பாதுகாப்பது? 'வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்கான அத்தியாவசிய துறைகளில்' பணியாற்றுவதற்கு ஆண்கள் மற்றும் பெண்களை எவ்வாறு வரவழைப்பது?” “படுமோசமான நிலைமை ஒன்றுக்குத் தயாராக இருக்க" வேண்டியிருப்பதால் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும் என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.

“பாதுகாப்பு கொள்கை மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் எதிர்காலம் மீதான வெள்ளையறிக்கை 2016” எனும் இராணுவத்தை மிகப்பெரியளவில் பலப்படுத்த முன்மொழியும் ஆவணத்திற்கு சமாந்தரமாக இந்த "குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்" வெளியாகியுள்ளது. இது வெளிநாடுகளில்தான் இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கப்படும் என்று நினைத்தவர்கள் இப்போது, ஜேர்மன் அரசாங்கம் போர்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதையும் மற்றும் ஊகிக்கக்கூடியளவிற்கு அது எதிர்காலத்தில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை ஒரு போர்க்களமாக மாற்றும் என்பதையும் தெளிவாக காணலாம்.

“குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்" ஆனது, பத்து நாட்களுக்கான குடிநீர் மற்றும் உணவைத் தனிப்பட்டரீதியில் சேமித்து வைக்க மக்களுக்கு அழைப்புவிடுக்கிறது. முதலுதவி பெட்டி, போர்வைகள், நிலக்கரி, மரம், மெழுகுவர்த்திகள், டார்ச் லைட்கள், பாட்டரிகள், தீப்பெட்டிகள், மின்னேற்றம் செய்யப்பட்ட பேட்டரிகள் மற்றும் பண கையிருப்புகளை தயாராக வைத்திருக்க அது பரிந்துரைக்கிறது.

பொதுத்துறை மற்றும் தனியார் கட்டிடங்களின் கட்டிடபொருட்களை “பலப்படுத்துதல்”, வானொலி, தொலைக்காட்சி, சைரன்கள், ஒலிபெருக்கிகள், சேதி அனுப்பும் முறைகள் மற்றும் இணையம் மூலமாக "நம்பகமான எச்சரிக்கை அமைப்பை" ஸ்தாபித்தல்; அணு, நுண்ணுயிரி அல்லது இரசாயன தாக்குதலின்போது "தொற்றுநீக்கும் மருத்துவ மையங்களை" உருவாக்குதல் ஆகியவை "பாதுகாப்பு நிலைமைக்கு" தயார் செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளாகும்.

அந்த ஆவணம், கட்டாய இராணுவ சேவையை மறுஅறிமுகம் செய்வதையும் மற்றும் இராணுவத்தினருக்கு அழைப்புவிடுத்து அணிதிரட்டுவதற்கான ஒரு பாதுகாப்பு அமைப்பை நடைமுறைப்படுத்துவதையும் பரிசீலிப்பது அவசியமென அறிவிக்கிறது. "வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்கான அத்தியாவசிய துறைகளில்" வேலை செய்ய ஆண்கள் மற்றும் பெண்களை நிர்பந்திக்கும் அதிகாரம் மத்திய தொழில் அமைப்புக்கு (Bundesagentur für Arbeit) இருக்க வேண்டும் என்று அது வாதிடுகிறது.

பசுமைக் கட்சியினரும் மற்றும் இடது கட்சியும் கூறுவதைப் போல இந்த நடவடிக்கைகள் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ சமூக யூனியனின் (CDU/CSU) "தேர்தலை நோக்கமாக கொண்டதோ" அல்லது "அச்சத்தை பரப்புவதற்கான" ஒரு முயற்சியோ கிடையாது. அல்லது சில ஊடக நிறுவனங்கள் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டும் ஒரு முயற்சியில் வாதிடுவதைப் போல, "குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்" என்பது வெறுமனே பேரிடர் நிலைமைகளுக்குரிய வழமையான அறிக்கைகளை மறுவரைமுறை செய்திருக்கவில்லை. மாறாக இந்த ஆவணம், இரசாயன மற்றும் அணு ஆயுத தாக்குதல்கள் மற்றும் போரை மீண்டும் வெளிப்படையாக மேற்கோளிட்டு காட்டுகிறது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய மண்ணில் அணுஆயுத போர் ஒரு நிஜமான அபாயமாக மாறியுள்ளது. நேட்டோ திட்டமிட்ட வகையில் ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றி வளைத்து அச்சுறுத்துகிறது. மேற்கத்திய கூட்டாளிகள் மிக பகிரங்கமாக போருக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர். டேனிஷ் நேட்டோ அதிகாரி ஜாகோப் லார்சென், “ஒரு முழுமையான போரில் எவ்வாறு போராடுவதென நாம் மீண்டுமொருமுறை பயில வேண்டும்" என்று கூறியதை கடந்த ஜூலையில் Der Spiegel மேற்கோளிட்டது.

இதில், உலகை ஏற்கனவே இரண்டு முறை படுகுழிக்குள் மூழ்கடித்துள்ள ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. 2014 ஆரம்பத்தில் "இராணுவ கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக" ஜேர்மன் அரசாங்கம் அறிவித்ததில் இருந்து, ஜேர்மன் வெளியுறவு கொள்கை முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்னர் இருந்ததைப் போன்ற ஓர் ஆக்ரோஷமான பாதையை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் ஐ 2014 இன் ஆரம்பத்தில் பதவியிலிருந்து தூக்கியெறிந்து, மேற்கத்திய ஆதரவிலான செல்வந்தர் பெட்ரோ பொறோஷென்கோ தலைமையிலானதும் நேரடியாக பாசிசவாத போராளிகள் குழுக்களின் அடிப்படையில் அமைந்ததுமான ஓர் ஆட்சியைக் கொண்டு, அவரை பிரதியீடு செய்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் வாஷிங்டனுடன் சேர்ந்து பேர்லினும் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தது. அப்போதிருந்து அதிதீவிர தேசியவாத, ரஷ்ய-விரோத அரசாங்கங்களான போலாந்து, பால்டிக் நாடுகள் மற்றும் உக்ரேனுடன் சேர்ந்து நேட்டோ நெருக்கமாக வேலை செய்து, ரஷ்ய எல்லைகளில் அதன் இராணுவ படைகளைப் பலப்படுத்தி உள்ளது.

இந்த கோடைகால ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவில் முன்பில்லாதளவில் மிகப்பெரிய நேட்டோ ஒத்திகை நடந்தது. 31,000 சிப்பாய்கள், 3,000 வாகனங்கள், 105 போர்விமானங்கள் மற்றும் 12 போர்க்கப்பல்களை உள்ளடக்கிய அனகொண்டா நடவடிக்கை (Operation Anaconda) என்ற அது, ரஷ்யாவுடனான ஒரு போரை அனுமானமாக கொண்ட ஒத்திகையாகும். அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், வார்சோவில் நடந்த நேட்டோ உச்சி மாநாடு, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளில் பல படைப்பிரிவுகளை நிலைநிறுத்தவும் மற்றும் ஏவுகணை தகர்ப்பு முறையை உருவாக்கவும் ஒப்புக் கொண்டது.

எவ்விதமான ஒரு நோக்கத்தை கொண்டிருந்தாலும் அல்லது கொண்டிருக்காவிட்டாலும், கட்டுப்பாடற்ற சங்கிலித் தொடர் போன்ற எதிர்விளைவுகளை தூண்டும் என்றளவிற்கு இப்போது இராணுவ சூழ்நிலை பதட்டமடைந்துள்ளது.

ரஷ்யாவுடன் ஓர் இராணுவ மோதலுக்கு அழுத்தமளித்து வரும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் பலமடைந்து வருகின்றன. அந்த போர்வெறியர்கள் பெரும்பாலும் அரை-பாசிசவாதியான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் இன் முகாமிற்கு ஆதரவானவர்களாக இல்லாது, ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சி ஹிலாரி கிளிண்டனின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

ரஷ்யாவிற்கு எதிரான தூண்டுதல் ஜேர்மனியில் மிரட்சியூட்டும் பரிமாணங்களை எடுத்து வருகிறது. ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கு பாதை அமைத்தவரும் உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தவருமான வெளியுறவு அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கூட பெரும்பாலான ஊடங்களுக்கு ஒரு இளகிய போக்குடையவராக தெரிகிறார்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை விட "மாஸ்கோ இன் நோக்கங்களை அடிப்படையிலேயே வேறுவிதமாக" பார்ப்பதாக கடந்த வாரம் Frankfurter Allgemeine Zeitung அவரைக் குற்றஞ்சாட்டியது. “மேர்க்கெல் மாஸ்கோவின் நடவடிக்கைகளை ஆத்திரமூட்டுவதாக குறிப்பிட அனுமதிக்கின்ற நிலையில், ஸ்ரைன்மையரோ ஓர் உரை பற்றி கனவுகாண ரஷ்யாவின் நான்காவது பெருநகரமான Ekaterinburg க்கு பயணித்தார்,” என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது. “ரஷ்யா மீதான புரிதலும் அமெரிக்கா மீது மனமார்ந்த அவநம்பிக்கையும் எப்போதுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கருதுபவர்களை" நோக்கி திரும்பியதற்காக அது ஸ்ரைன்மையரை குற்றஞ்சாட்டுமளவிற்குச் சென்றது.

வெளியுறவு கொள்கைகளுக்கான ஜேர்மன் குழு (DGAP) மற்றும் அரசியல் விஞ்ஞானத்தின் அமைப்பு (SWP) ஆகிய இரண்டு முக்கிய ஜேர்மன் வெளியுறவு கொள்கை சிந்தனைக் குழாம்களும் ரஷ்யாவை வலிந்து சண்டைக்கு வரும் நாடாக, சர்வதேச தேச விதிகளை மீறும் மற்றும் ஐரோப்பாவை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் நாடாக குற்றஞ்சாட்டும் ஆவணங்களை வெள்ளமென தொடர்ந்து வெளியிடுகின்றன.

பசுமைக் கட்சிக்கு ஆதரவான Heinrich Böll அமைப்பிலிருந்து ஜானா புக்லீரின் என்பவர் DGAP இற்கு எழுதிய ஆவணம் ஒன்று, நேட்டோ, ரஷ்யாவை நோக்கி "அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்ட" வேண்டும் என்ற மற்றும் "பலமான நிலைப்பாட்டிலிருந்து நடவடிக்கை" எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் நிறைவடைந்திருந்தது. அது விளக்கமளிக்கையில், இதன் அர்த்தம், “'கட்டுப்படுத்துவதன்' மூலம் மோதலை மட்டுப்படுத்துவதாகும்" மற்றும் இராணுவத்தை நோக்கி திரும்புதல் என்றால் “பொருளாதார மற்றும் அரசியல் தடையாணைகளை பேணுவதுடன்” சேர்ந்து "ரஷ்யாவை உறுதியாக மண்டியிடச் செய்யக்கூடிய பலமான நேட்டோவை" பயன்படுத்துவதாகும் என்றது.

ரஷ்யா உடனான மோதல் மட்டுமே போருக்கு அச்சுறுத்துகின்ற ஒரு மூலகாரணம் அல்ல. போர்முனைகளை அடையாளம் காண்பதே அதிகரித்தளவில் சிக்கலாக உள்ள சிரியப் போரில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடனான மோதலாக விரிவடையக்கூடியளவிற்கு இராணுவ தீவிரப்பாட்டிற்கு தயாரிப்பு செய்து வருகின்றனர். ஜேர்மனியும் இங்கே போர்முனையில் உள்ளது. இது, மத்திய கிழக்கின் ஏனைய பாகங்கள் மற்றும் ஆபிரிக்காவில் நடக்கும் ஏகாதிபத்திய போர்களுக்கும் பொருந்தும்.

ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடியோடு, மீண்டுமொருமுறை ஐரோப்பாவில் தேசிய விரோதங்கள் கட்டவிழ்ந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் "ஆதிக்க சக்தியாக" மற்றும் "முன்னணி சக்தியாக" ஜேர்மன் திமிர்த்தனமாக உரிமைகோருகின்ற நிலையில், ஏனைய ஐரோப்பிய சக்திகளும் மீள்ஆயுதமேந்திவருவதுடன் தேசியவாதத்தை தூண்டிவிட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் போர் உந்துதலுக்கு, ஸ்தாபக கட்சிகளிடையே எந்த எதிர்ப்பும் கிடையாது. அதற்கு எதிர்விதமாக, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) உள்ள இரண்டு எதிர்கட்சிகளான இடது கட்சி மற்றும் பசுமை கட்சியினர் அதை மேலும் கிளறி விட்டு வருகின்றன.

இடது கட்சியின் நாடாளுமன்ற குழு பெண்தலைவர் சாரா வாகன்கினெக்ட் (Sahra Wagenknecht), சிரியாவில் அமெரிக்க தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட அச்சுறுத்தப்பட்டிருக்கும் துருக்கிய ஜனாதிபதி “பயங்கரவாதத்தை பாதுகாக்கும் எர்டோகனுக்கு" விட்டு கொடுப்பதற்காகவும் மற்றும் அவரது "வெளியில் கூறாத கொள்கைகளை" ஆதரிப்பதற்காகவும் செவ்வாயன்று அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்ற குழுவிற்கான பசுமை கட்சியின் வெளியுறவு விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் ஒமிட் நொறிபுவர் (Omid Nouripour), முட்டாள்தனமான வெளியுறவுக் கொள்கை என்று அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினார். “மத்திய அரசாங்கம் ஒரே குரலில் பேசவில்லை என்றால் அது ஜேர்மனியின் மேலாளுமையை பலவீனப்படுத்தி, நடவடிக்கைகளுக்கான நமது வாய்ப்புகளை குறைத்துவிடுகிறது,” என்றவர் அறிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit) மட்டுமே போர் ஆபத்தை எச்சரித்து, அதற்கெதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டும் ஒரே கட்சியாகும். சோசலிச சமத்துவக் கட்சி போருக்கு எதிரான போராட்டத்தை பேர்லின் மாநில தேர்தல்களில் அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியஸ்தானத்தில் வைத்திருப்பதுடன், போர் அபாயத்திற்கு காரணமான உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியைத் தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளது.

“ஜேர்மன் ஆளும் உயரடுக்கு உலகின் புதிய மறுபங்கீட்டில், மூலப்பொருட்களுக்கான மற்றும் சந்தைகளுக்கான போராட்டத்தில் வெறுங்கையோடு செல்ல விரும்பாது,” என்பதை PSG அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒரு "புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேச ரீதியில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு, போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்தால் மட்டுமே வெற்றியடைய முடியும்,” என்பதையும் அதன் தேர்தல் அறிக்கை அறிவித்துள்ளது.