ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The international significance of the Berlin election

பேர்லின் தேர்தலின் சர்வதேச முக்கியத்துவம்

Peter Schwarz
17 September 2016

ஜேர்மனியில் பேர்லின் மாநிலத் தேர்தல் ஒரு அசாதாரணமான சர்வதேச நெருக்கடி நிலைமைகளின் கீழ் நடைபெறவிருக்கிறது. 2008 நிதிப் பொறிவின் விளைவுகள் இன்னும் தீர்வுகாணப்படாமல் தொடர்கின்றன; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பாவில் ஓரளவுக்கான ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையை வழங்கியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உயிர்வாழ்க்கை நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கிறது; ரஷ்யாவுடனான மோதலும் சிரியாவிலான போரும் தீவிரப்பட்டுச் செல்கின்றன; ஜேர்மனிக்குள்ளும் மேலும் மேலும் அதிகமான மக்கள் குறைந்த ஊதியங்களுக்கு மிகச் சிரமமான நிலைமைகளின் கீழ் வேலை செய்யும் நிலை இருப்பதால் சமூகப் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இராணுவவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமும் அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமும் இந்த நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம் பதிலிறுப்பு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அரசாங்கத்தின் முன்னிலைப் பிரதிநிதிகள் ”இராணுவரீதியான ஒதுங்கியிருப்பு முடிவுக்கு வந்தது” என அறிவித்தது முதலாகவே, ஜேர்மன் படையினர்களும், டாங்கிகளும், மற்றும் போர்விமானங்களும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதன்முறையாய் ரஷ்யாவுடனான நேட்டோவின் எல்லையில் நிறுத்தப்படுவதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஜேர்மன் இராணுவப் படைகள், ஈராக்கில் இருக்கும் குர்தீஷ் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கின்றன, ஆயுதமளிக்கின்றன என்பதுடன் சிரியா மீது பறந்து எதிரிகளின் விபரங்களை அறியும் வான் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கின்றன. இராணுவ மற்றும் பாதுகாப்பு வரவு-செலவு திட்ட கணக்கில் பில்லியன் கணக்கான யூரோக்கள் அதிகரித்திருக்கிறது.

போலிஸ் மற்றும் கண்காணிப்பு எந்திரத்தை அரசாங்கம் பாரிய அளவில் விரிவாக்கம் செய்திருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சுறுத்தலும், மற்றும் ஊடகங்களால் எரியூட்டப்படுகின்ற அகதிகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரமும், இதற்கான சாக்காக சேவைசெய்கின்றன.

இந்தக் கொள்கை அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. பாதுகாப்பு, கூடுதல் போலிஸ் மற்றும் அதிகரித்த கண்காணிப்பு ஆகியவற்றுக்கான அழைப்புத்தான் பேர்லின் தேர்தல் பிரச்சாரத்தின் குவியப்புள்ளியாக இருந்து வந்திருக்கிறது. இந்தக் கொள்கைக்கான பரவலான எதிர்ப்பு இந்த கட்சிகளை ஆழமாய் மதிப்பிழக்கச் செய்துள்ளது. ”மக்கள் கட்சிகள்” என சொல்லப்பட்டவை - கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) - 40 சதவீதம் அல்லது அதற்குக் கூடுதலான வாக்குகளைப் பெற முடிந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. SPD வலுவான கட்சியாக இருப்பதாக கருத்துக்கணிப்புகளில் தெரியவரும் பேர்லினில், அது வெறும் 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுகிறது. CDU, பசுமைக் கட்சி, இடது கட்சி மற்றும் ஜேர்மனிக்கான மாற்று (AfD) ஆகியவை 18 சதவீதத்துக்கும் 14சதவீதத்துக்கும் இடையில் வாக்குகளைப் பெறுகின்றன.

அரசியல் ஸ்தாபகத்தின் வெறுப்பு விரிந்து செல்வதற்கு மத்தியில், ஸ்தாபகக் கட்சிகள் மீதான பெருகும் கோபம் மற்றும் அவநம்பிக்கையினால் பிரதானமாக ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சி தான் ஆதாயமடைந்திருக்கிறது. கடந்த ஒன்பது மாநிலத் தேர்தல்களில், பழைய கட்சிகளின் நெருக்கடியை இன்னும் மோசமாக்கி, AfD தனது முதல் முயற்சியிலேயே இந்த ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்குள்ளும் நுழைய இயன்றிருக்கிறது. அரசியல் நெருக்கடியின் காலங்களில், ஸ்திரமான பெரும்பான்மைகளை உறுதிசெய்வதற்கு ஆளும் வர்க்கமானது முன்பெல்லாம் SPD மற்றும் CDU இன் ”மகா கூட்டணி” மீது நம்பிக்கை வைக்க முடிந்திருந்தது; ஆனால் இனியும் அத்தகைய ஒரு ஆளும் பெரும்பான்மையை ஈட்ட திறனற்றதாகும் அளவுக்கு இந்தக் கட்சிகள் மிகப் பரந்த வெறுப்புடன் பார்க்கப்படுகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், தனது அதிகாரத்தைப் பாதுகாக்கவும் இராணுவவாதம் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பை ஒடுக்கவும் ஆளும் வர்க்கம் புதிய அரசியல் முட்டுத்தூண்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே தான் இந்த தேர்தலின் முடிவில் ஒரு “சிவப்பு-சிவப்பு-பச்சை” அரசாங்கம், அதாவது சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி கொண்ட அரசாங்கம் உருவாகக் கூடும். மாநில அளவிலான இந்தக் கூட்டணி கூட்டரசாங்க மட்டத்திலும் SPD, இடது கட்சி மற்றும் பசுமைக்கட்சி கூட்டணி உருவாவதற்கான ஒரு சோதனை ஓட்டமாகவும் நிரூபணமாகலாம். CDU உடனான கூட்டணியில் பேர்லினின் ஆளும் மேயராக இருக்கும் பேர்லின் SPD தலைவரான மிக்கையில் முல்லர் இத்தகைய ஒரு “சிவப்பு-சிவப்பு-பச்சை” கூட்டணிக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்னும் ஒரு வருடத்தில், 2017 செப்டம்பரில், அடுத்த கூட்டரசாங்க நாடாளுமன்றம் (Bundestag) தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. ஜேர்மனியிலான மாநிலத் தேர்தல் எப்போதும் கூட்டரசாங்கத் தேர்தலுக்கான ஒரு சோதனை ஓட்டமாக பார்க்கப்படுகிறது. இதுவரையிலும், SPDயும் பசுமைக் கட்சியும் கூட்டரசாங்க மட்டத்திலும் மற்றும் மேற்கு மாநிலங்களிலும் இடது கட்சியுடன் ஒரு கூட்டணிக்குச் செல்ல மறுத்து வந்திருக்கின்றன. கிழக்கில் மட்டும் தான், முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் பழைய ஆண்ட மாநிலக் கட்சியின் தொடர்ச்சியாக அது பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது என்ற காரணத்தால், மாநில அரசாங்கத்தின் மட்டத்தில் அது சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஆழமைடையும் நெருக்கடியின் விளைவாக இதுவும் இப்போது மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. இத்தகையதொரு அரசாங்கத்திற்கு தயாராய் இருப்பார் என்பதை SPD தலைவரான சிக்மார் காப்ரியல் ஏற்கனவே சுட்டிக்காட்டி விட்டார்.

பேர்லின் மாநிலத் தேர்தலில், ஆளும் வர்க்கத்திற்கு தனது நம்பகத்தன்மையையும் அரசு அதிகாரங்கள் அதிகரிப்பு மற்றும் இராணுவவாதத்திற்கான தனது ஆதரவையும் நிரூபணம் செய்வதற்கு இடது கட்சி இயன்ற அத்தனையையும் செய்திருக்கிறது. பேர்லின் தேர்தல் அறிக்கையில், போலிஸ் ஊழியர்களின் எண்ணிக்கையில் ஒரு பாரிய அதிகரிப்புக்கும் போலிஸ் அதிகாரங்களை விரிவாக்குவதற்கும் அது அழைப்புவிடுக்கிறது. சென்ற வாரத்தில், கூட்டரசாங்க நாடாளுமன்றத்தில் இடது கட்சியின் நாடாளுமன்றத் தலைவராய் இருக்கும் Dietmar Bartsch, இதுவிடயத்தில் மேர்க்கெல் அரசாங்கத்தை வலதின் பக்கத்தில் இருந்து தாக்கினார். “செயல்படும் திறன் கொண்ட ஒரு அரசு”க்கு அழைப்பு விடுத்த அவர் இப்போதைய கூட்டரசாங்கம் “போலிஸை பலவீனப்படுத்தியிருக்கிறது, சிறுமைப்படுத்தியிருக்கிறது மற்றும் உதாசீனப்படுத்தியிருக்கிறது” என குற்றம்சாட்டினார். SPD ஐக் குறிப்பிட்ட Bartsch மேலும் சேர்த்துக் கொண்டார்: “ஆம், இடது கட்சி, அரசாங்கத்திலான இந்த அரசியல் மாற்றத்திற்கு பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புகிறது.”

ஆயினும், இடது கட்சிக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. தன் வலது-சாரிக் கொள்கைகளால் இக்கட்சியும் பாரிய அளவில் தனது மதிப்பை இழந்து விட்டிருக்கிறது. 2002 முதல் 2011 வரை மாநில நிர்வாகத்தில் இது பங்கெடுத்திருக்கும் பேர்லினில் சமூக சிக்கன நடவடிக்கைக் கொள்கை ஒன்றை அமல்படுத்தியதன் விளைவாக இது பெருமளவில் மதிப்பிழந்து இருக்கிறது. இந்தக் காரணத்தால், SAV மற்றும் Marx21 போன்ற போலி-இடது குழுக்களுக்கு முக்கியமாக இடது கட்சியில் உறைவிடமும் வாழ்க்கைவசதிகளும் கிடைத்திருக்கிறது. இக்குழுக்கள் அதன் தேர்தல் பிரச்சாரத்தில் கள வேலைகள் செய்திருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி ஆகிய இவற்றின் சகசிந்தனைக்குழுக்கள் அனைத்துமே ஜேர்மனியின் இடது கட்சிக்காக செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அதை ஊக்கத்துடன் விளம்பரப்படுத்துவதுடன் அதற்கு ஒரு இடது மறைப்பை வழங்குவதற்கும் முனைந்து வருகின்றன.

நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் பிற வசதியான அடுக்குகளை அடித்தளமாகக் கொண்ட இந்தக் குழுக்கள் தமது உண்மையான முகத்தை, அதாவது முதலாளித்துவ ஆட்சியின் ஒரு இன்றியமையாத முட்டுத்தூண் என்பதை, மேலும்மேலும் அதிகமாய் வெளிக்காட்டி வருகின்றன.

அமெரிக்காவில், இந்த அரசியல் அமைப்புகள் தன்னை ஒரு சோசலிஸ்டாக வருணித்துக் கொண்ட பேர்னி சாண்டர்ஸினை ஆதரித்து விளம்பரம் செய்தன. முதனிலைத் தேர்தலில் 13 மில்லியன் வாக்குகளை வென்ற அவர், பின்னர் வோல் ஸ்டீரீட் மற்றும் இராணுவத்தின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஆதரிக்கச் சென்றார். பிரிட்டனில், தொழிற் கட்சியை இடது நோக்கி நகர்த்துவதற்கான நம்பிக்கைகளை ஊக்குவிக்கின்ற ஆனால் அவரை பதவியிறக்க சதி செய்கின்ற அதன் வலது-சாரி நாடாளுமன்றக் கன்னைக்கு எதிராய் போராட மறுக்கின்ற தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு ஊக்குவிப்பாளர்களாக இவை செயல்படுகின்றன.

பேர்லினில் சோசலிச சமத்துவக் கட்சியால் (PSG) நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக, போருக்கு எதிராய் ஒரு சர்வதேச இயக்கத்தை, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட அத்துடன் போருக்கான எதிர்ப்பை முதலாளித்துவத்திற்கு எதிரானதும் ஒரு சோசலிச சமூகத்திற்கானதுமான போராட்டத்துடன் ஒன்றுபடுத்துகின்ற ஒரு இயக்கத்தை, கட்டியெழுப்புவதை தனது பிரச்சாரத்தின் மையமாக இருத்தி வந்திருக்கிறது.

SPD, பசுமைக் கட்சி, இடது கட்சி மற்றும் அவற்றின் போலி-இடது கும்பல் ஆகியவற்றுடன் முறித்துக் கொள்ளாமல் தொழிலாள வர்க்கம் ஒரு அடியையும் கூட முன்னால் எடுத்து வைக்க முடியாது என்று PSG வலியுறுத்தி வந்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதையும், தொழிலாள வர்க்கத்தின் அதிகமான பகுதிகள் ஆளும் கட்சிகளுடன் கூர்மையான மோதலுக்குள் வரவிருக்கின்ற எதிர்வரும் காலத்திற்கு தயாரிப்பு செய்வதையுமே PSG இன் பிரச்சாரம் நோக்கம் கொண்டுள்ளது.